ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், "நோ பீஸ் ஆப் மைண்ட்" - என்று சிவாஜி ஞான ஒளி படத்தில் வசனம் பேசுவார். கிட்டத்தட்ட நம்ம தோனியும் அந்த கேஸ் தான். நட்சத்திர வீரர்கள் புடை சூழ இருந்தும் அடி வாங்கிக்கிட்டே இருக்காரு. எப்படியாச்சும் இந்த உலகக் கோப்பையில் கொஞ்சம் சுமாரா ஆடி நல்லபேரோட ஒரு நாள் போட்டிகளிலேர்ந்தும் விலகிடணும்னு அவர் நினைக்கராறோன்னு நமக்கு ஒரு சந்தேகம் வராம இல்லை. அதுக்காக அவர் சில பேர் கிட்ட டிப்ஸ் கேக்கப் போறாரு. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.
பிரபல ஜோசியர் (டிவி புகழ்):
என்னப்பா இது? உன் ஜாதகத்தில் சனி ஏழில் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருக்காரே?
தோனி, "ஏழு மட்டுமா? 8, 9 10, 11 வரைக்கும் சனி தான் சுவாமி"
"3ல அங்காரகன் இருக்கு. இதனால சமீபத்தில் உனக்கு பெரிய பிரச்சினை வந்திருக்கணுமே?"
"அட, கரெக்டா சொல்லிட்டீங்களே? உண்மை தாங்க, வளர்த்த கடா, மார்பில் பாய்ஞ்சிடுச்சுங்க"
"ஹ்ம்ம். ஆனா உனக்கு 5/6 ல குரு பார்வை இருக்கு. அதனால தான் நீ இன்னும் இருக்கே"
"ஐயா, நீங்களும் எங்க கமெண்டரி டீம் மாதிரி ஆராய்ச்சி பண்றீங்களே ஒழிய தீர்வு சொல்ல மாட்டேங்கறீங்களே? இதுக்கு எதாச்சும் பரிகாரம் இருக்குங்களா?"
கூடிய சீக்கிரம் 1 மற்றும் 2ல சுக்ரன் பார்வை பட பிரகாசமான வாய்ப்புகள் இருக்கு அதற்குப் பிறகு உனக்கு ஏற்றம் தான். பரிகாரமெல்லாம் தேவையில்லை."
வைரமுத்து:
தோனி,
ராய்னா எனும் தோணி பற்றி
அஷ்வின் எனும் காலை ஊன்றி
விராட் எனும் சரக்கை ஏற்றி
மைதானத்தில் பயணிக்கும்போது
ஷமி/உமேஷ் எனும் பாறை தாக்கி
மறியும்போது அறியவொண்ணா
துணையுனும் உணர்வை நல்காய்
ராஞ்சியூர் உடைய கோவே.
தோனி திருதிருவென்று விழிக்க, வைரமுத்து "உன்னை நம்பு, மற்றவர்கள் நீ சுழற்ற வேண்டிய வெறும் கம்பு"
அடுத்து அவர் சென்றது சூப்பர் ஸ்டாரிடம்:
கண்ணா, வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் எல்லாம் சகஜம். ஊர் என்ன சொல்லும்னு யோசிக்காதே, உனக்கு எது ரைட்டுன்னு படுதோ அதை டக்குனு செய். நீ முன்னாடியெல்லாம் யோசிக்காம பேசமாட்டே. ஆனா இப்பல்லாம் பேசின பிறகு யோசிக்கறே. 5ம் எட்டில் சேர்க்க வேண்டிய செல்வத்தை சேர்த்துட்டே, ஆனால் 4ம் எட்டில் பெற வேண்டிய குழந்தையை இன்னும் பெத்துக்கலையே? முதல்ல அதுக்கு வழியை பாரு.
"இவருக்கு நான் கேட்ட கேள்வி புரிஞ்சுதா, இல்லை இவர் சொன்ன பதில் எனக்கு புரியலையா?" என்ற குழப்பத்துடனே அங்கிருந்து வெளியேறுகிறார்.
இயக்குனர் ஷங்கர்:
முதல்ல உலககோப்பை லொகேஷனை மாத்தச் சொல்லுங்க ஜி. ஆஸ்திரேலியா நியூசிலாந்து எல்லாம் ஏற்கனவே பார்த்த லொகேஷன்கள். உஸ்பெகிஸ்தான் பக்கத்துல 200 ஏக்கர்ல பெரிய குதிரை லாயம் இருக்கு. அங்கே ஒரு 4 ஸ்டேடியம் செட் போட்டு எல்லா மேட்சையும் நடத்துவோம். ட்ரிங்க்ஸ் ப்ரேக்கில் குதிரைகள் தான் தண்ணி பாட்டில் கொண்டு வரும். ஒவ்வொரு இன்னிங்க்ஸ் பிரேக்கின் போதும் 200 டான்சர்ஸ் மைதானத்தில் லைவ் பெர்பார்மன்ஸ் பண்ணுவாங்க. ஏன்னா ஆடியன்சுக்கு போரடிக்கும்ல, அவங்களுக்கு புதுசா எதாவது காட்டிக்கிட்டே இருக்கணும். இதுபோக வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசும்போது பந்தைசுற்றி நெருப்பு வளையம் லைவ் CG பண்ணப் போறோம். இது யாரும் பண்ணாதது. அதே மாதிரி நீங்க சிக்ஸ் அடிக்கும்போது பால் அப்படியே ஆறா பிரியும், பௌண்டரி அடிச்சா நாலா பிரியும். அமெரிக்காவிலேர்ந்து ஸ்பெஷல் CG டீம் வரச்சொல்லிடலாம். அப்புறம்...
தோனி குறுக்கிட்டு, "தலைவரே, நீங்க சொல்றதை செய்யணும்னா ICC கஜானாவை கொள்ளையடிச்சாத்தான் உண்டு, ஆளை விடுங்க.."என்று கூறி எழுந்திருக்கவும்,,
ஷங்கர்,"இருங்க ஜி, எங்கே போறீங்க? இப்போ தான் பாதி சொல்லியிருக்கேன், இன்னமும் இருக்கு"
"இன்னமுமா? அது சரி, கதையே இல்லாம 3 மணி நேரம் படம் எடுத்த ஆள் தானே நீங்க, உங்ககிட்ட வந்தது என் தப்பு தான்" என்று எஸ்கேப் ஆகிறார்.
அடுத்து "உழைப்பாளி" விக்ரம்:
அதாவது ஜி, டீம்ல முதல் மூணு பேரு பயங்கர மாஸ் பாடி பில்டரா இருக்கணும். அடுத்த 4 பேரு சாதாரண பாடியோட இருந்தா போதும். ஆனால் கடைசி 4 பேரு கூனன் மாதிரி பார்க்கவே டெரரா இருக்கணும். அப்போதான் எதிராளிங்க பயப்படுவாங்க - நான் சொல்றது புரியுதுல்ல?
"பாவம், இந்தாளுக்கு நிஜமாவே "I" வைரஸ் ஏறிடுச்சு போல" என்று கவலையுடன் வெளியேறுகிறார்.
VK ராமசாமி:
"டீம்ல எல்லாம் இள ரத்தம், அப்படித்தான் இருப்பாங்க, அதுல பாருங்க தம்பி, நம்ம பயலுவ எல்லார்கிட்டேயும் பொம்பள சமாச்சாரத்தை இங்கேயே விட்டுட்டு வரச் சொல்லுங்க. எவனாச்சும் ஹோட்டலுக்குப் போகும்போது சோத்துமூட்டையை கூடவே கட்டிக்கிட்டு போவானா? அதிலும் குறிப்பா இந்த விராட்டு பய, அந்த சினிமாக்காரி பின்னாடி ரொம்ப சுத்தறான். அவ ஆளும், மூஞ்சியும். நல்லா இருந்த வாயை ஆபரேஷன் பண்ணி குரங்கு மாதிரி ஆக்கிக்கிட்டு.. புரியுதுல்ல? இதுக்கெல்லாமா அலட்டிக்கறது? நீ பார்க்காத பேட்டா, பந்தா?
Chef வெங்கடேஷ் பட்:
பார்க்கறதுக்கு நல்லா இருக்கு, நல்ல கலர், நல்ல ப்ளேவர், ஆனால் உள்ளே இன்னும் கொஞ்சம் வேகணும். குறிப்பா அந்த லெக் பீஸ் சுத்தமா வேகலை. அந்த டெக்ஷர் இன்னும் நல்லா வந்திருக்கணும். அதனால சாப்பிடும்போது கடைசியில் பல்லில் மாட்டிக்குது. அதை தவிர்க்கணும். உப்பு ஒரே சீரா இல்லை. தூக்கலா, குறைவா, இப்படி மாறி மாறி வருது. கடிக்கும்போது அதிலேர்ந்து எண்ணெய் தெறிக்குது. சில்லி பௌடர் சரியா மாரினேட் ஆகலை. ஆனால் இந்த பெருங்காயத்தை மேலோட்டமா தூவியிருக்கீங்க. வித்யாசமா இருக்கு. அதே சமயம் டிபிகல் மசாலா யூஸ் பண்ணாம புதுசா எதையோ ட்ரை பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கறேன். அதான் எதிர்பார்த்த ரிசல்ட் வரலை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
தோனி அவர் அருகில் சென்று "ஏண்டா, ஏன்?" என்று அழாத குறையாக சொல்லிவிட்டு கிளம்புகிறார் .
தலைவர் ஸ்ரீனிவாசனிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று அவர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவர் இல்லை. போனில் தொடர்பு கொள்கிறார்.
"இதோ பார் தோனி, நானே CSKவா பிசிசிஐயான்னு குழப்பத்தில் இருக்கேன். உனக்கும் சேர்த்துத் தான் கோவில் கோவிலா போய் பரிகாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். இப்போ கூட சிருங்கேரி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ண வந்திருக்கேன். ஏதோ முடிஞ்ச வரைக்கும் ஆடு. முடியலேன்னா ஓடு. இனிமே என்னை அடிக்கடி தொடர்பு கொள்ளாதே. விஜிலன்ஸ் 24 மணி நேரமும் என்னை ஒட்டுக் கேட்டுக்க்கிட்டிருகாங்க. போனை கட் பண்ணு"
கடைசியாக, "அவரிடமும்" அட்வைஸ் கேட்டுக்கலாம் என்று செல்கிறார். அந்த "அவர்" நரேந்திர மோடி":
"ஹ்ம்ம், பெரிய பிரச்சினை தான். "தூய்மை இந்தியா" திட்டத்தை முதல்ல கிரிக்கெட் டீம்ல தான் அறிமுகம் பண்ணியிருக்கணும்". அருகிலிருந்த அமித் ஷாவிடம், "பிசிசிஐ ஆண்டு வருமானம் எவ்ளோ?"
அமித் ஷா "அது இருக்கும் தலைவரே, 3000 கோடி"
"அடடா, இது தெரியாம நான் ஜப்பான், சைனா இவங்க கூட நிறைய ஒப்பந்தம் போட்டுட்டேனே!. 3000 கோடின்னா 5 மங்கல்யான், காஷ்மீர் டு கன்யாகுமரி புல்லட் ரயில், 10 ஸ்மார்ட் சிட்டி, 20 டெக்னாலஜி யூனிவர்சிட்டி, இப்படி நிறைய பண்ணியிருக்கலாமே? மிஸ் ஆயிடுச்சே? அமித், இன்னிக்கே பிசிசிஐ கமிட்டியை மீட்டிங் வரச் சொல்லுங்க. முழு விபரங்கள் பவர் பாயிண்ட்ல வேணும் எனக்கு. கூடவே எகானமி கமிஷன் டீமையும் வரச் சொல்லுங்க. அப்புறம் இந்தப் பசங்க எல்லாம் இது வரைக்கும் எவ்ளோ சம்பாதிச்சிருக்காங்க, வரி ஒழுங்கா கட்டியிருக்காங்களா, அந்த விபரமும் வேணும். IPL விஷயத்தில் இவன் பேர் கூட அடிபடுதுல்ல? "
தோனி அதிர்ந்து போயிருக்க, மோடி, "ரொம்ப நன்றி தோனி, உன்னை மாதிரி இளைஞர்கள் தான் இந்த நாட்டுக்கு நல்வழி காட்டணும். அப்புறம் குடியரசு தினத்தில் தூய்மை இந்தியா திட்டத்துக்கு உனக்கும் அழைப்பு விடுக்கறேன். நீயும் ராஞ்சியில் எங்கயாச்சும் குப்பை பெருக்கிட்டு வீடியோவை என் வெப்சைட்ல போஸ்ட் பண்ணிடு. ஒரு வேளை மீடியா யாரும் வரலேன்னா அட் லீஸ்ட் ஒரு selfie போடு. அது போதும். "
" உங்ககிட்ட வந்தேன் பாருங்க, அது தான் நான் எடுத்துக்கிட்ட, சாரி, வெச்சுக்கிட்ட பெரிய selfie. இவருக்கு ஷிகர் தவனே பரவால்ல போலிருக்கே" என்று மனதில் புலம்பிக் கொண்டே செல்கிறார் தோனி.
ஒரு வெற்றி, ஒரே ஒரு வெற்றி - அது எல்லோர் வாயையும் அடைத்துவிடும் - ஆல் தி பெஸ்ட் தோனி!
ஜெயராமன்