Monday, April 13, 2015

கேடியுடன் சிங்கிள் டீ

(இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)

வணக்கம் நேயர்களே, வாரா வாரம் யாராவது வீணாப் போனவங்களைக் கூப்பிட்டு மொக்கை போட்டு அனுப்பற நம்ம இந்த நிகழ்ச்சிக்கு இன்றைய சிறப்பு விருந்தினரா வரப் போகிறவர்...அவர் பெயரைக் கேட்டாலே எனக்கெல்லாம் அப்படியே சிலிர்க்கும். சினிமா ஹீரோ இப்படிக் கூட இருக்கலாமான்னு எல்லாரையும் யோசிக்க வெச்சவர், லெட்ஸ் வெல்கம் அர்விந்த் சுவாமி. (காமெரா படிக்கட்டை நோக்கி ஜூம் ஆகிறது). அங்கே கந்தரகோலமான ஆடையில் பிச்சைக்காரர் ஒருவர் என்ட்ரி ஆகிறார்.

கேடி கடுப்பாகி, "யார் மேன் நீ? உன்னையெல்லாம் யார் உள்ளே விட்டது? டைரக்டர் சார், கொஞ்சம் பாருங்க" என்று கையில் இருந்த காகிதத்தை மேசையில் வீசுகிறார். அதற்குள் பிச்சைக்காரர் கேடியை நோக்கி "ஜொள்ளிக்" கொண்டே கையை நீட்டுகிறார். கேடி அவரை க்ளோசப்பில் பார்த்து அலறவும் டைரக்டர் செட்டுக்குள் வருகிறார்.

"என்ன சார், அர்விந்த் ஸ்வாமின்னு சொல்லிட்டு எவனோ பிச்சைக்காரன் வந்திருக்கான்?"

"யம்மா யம்மா, இன்னிக்கு இவர் தாம்மா ஸ்பெஷல் கெஸ்ட்".

பிச்சைக்காரர் "ஏம்மா, பிச்சைக்காரனுக்கு அர்விந்த் ஸ்வாமின்னு பெயர் இருக்கக்கூடாதா?முனியாண்டி மாயாண்டின்னு தான் இருக்கணுமா? இதுல கூடவா ஜாதி பார்ப்பீங்க?"

டைரக்டர், "சார், நீங்க கொஞ்சம் பேசாம இருங்க, நான் புரிய வைக்கறேன்" என்று கூறிவிட்டு "கேடி, கொஞ்சம் இந்த பக்கம் வாங்க" என்று ஓரம் கட்டுகிறார்.

"அவரை யாருன்னு நினைச்சே? பெரிய தொழிலதிபர். ஆனா பிச்சைக்காரர்."

"என்ன சார் குழப்பறீங்க?"

"சாதாரண தொழிலதிபர் இல்லை மேடம். சினிமாவுக்கே பைனான்ஸ் பண்றவர். இப்படிச் சொன்னா உனக்குப் புரியாது. நம்ம டிவியில் கேப் கிடைச்சா என்ன படங்கள் போடுவோம்?"

"எங்க சார், விளம்பரத்திலேர்ந்து கேப் கிடைச்சாத்தான் நாம சினிமாவே போடுவோம்"

"காமெராவுக்கு முன்னாடி கம்பெனி சீக்ரெட்டை ஏன் லீக் பண்றே? ஜெனெரலா சொல்லு"

"மங்கி, நைனா அப்புறம் கருஞ்சிறுத்தை"

"கரெக்ட், அதுக்கெல்லாம் இவர் தான் பைனான்சியர். கூடிய சீக்கிரம் நம்ம சேனலில் பங்கு வாங்கறதா இருக்கறார். பார்த்து நடந்துக்குங்க" என்று எச்ச்சரிக்கை செய்துவிட்டு நகர்கிறார்.

கேடி பிறகு சுதாரித்துக் கொண்டு அந்த பிச்சைக்காரரிடம், "சாரி சார், நீங்க யாருன்னு தெரியாம கத்திட்டேன். ஷூட்டிங் வர்ற நீங்களும் கொஞ்சம் டீசண்டா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்கலாம்ல"

"பிச்சைக்காரர், "ரஜினி சார் கூடத்தான் பொது நிகழ்ச்சிகளுக்கு எளிமையா வர்றாரு, அவர் கிட்ட போய் "என்ன சார், சொட்டைத் தலையோட பவுடர் கூட போடாம வந்திருக்கீங்க" அப்படின்னு சொல்வீங்களா? அது மாதிரி தான். இதான் நான். இதான் நிஜம். "சரி சரி, வளவளன்னு பேசாம நிகழ்ச்சியை ஆரம்பிங்க" என்று கூறி சோபாவில் அமர்கிறார்.

டைரக்டர், "என்னம்மா ரெடியா, ஸ்டார்ட், காமெரா, ஆக்ஷன்"

"வணக்கம் சார், இவ்ளோ பெரிய ஒரு தொழிலதிபர், அதுவும் எங்க சூப்பர் ஸ்டார் மாதிரி பழசை மறக்காத, எளிமையான ஒரு மனிதர் எங்க நிகழ்ச்சிக்கு வந்திருக்கறது எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையான விஷயம். "

"வணக்கம்மா"

"நீங்க எப்படி சார் இந்த இன்டஸ்ட்ரிக்கு வந்தீங்க? சின்ன வயசிலேர்ந்தே சினிமா மோகம் அதிகமா, இல்லை யாராவது உங்களுக்கு ஊக்கம் குடுத்தாங்களா?"

"அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. +2 முடிஞ்ச உடனே எங்க அப்பாரு "4 மாடு வாங்கித்தரேன், மேய்ச்சு பொழச்சுக்க" அப்படின்னு சொன்னாப்ல. நான் தான் பிடிவாதமா 98% மார்க் வாங்கியிருக்கேன். பொறியியல் தான் படிப்பேன்னு அடம் பிடிச்சு பொறியியல் படிச்சேன். அதிலேயும் நல்ல மார்க் வாங்கிட்டேன். எதாச்சும் பெரிய கம்பெனில சேர்ந்து பெரிய ஆளாயிடலாம்னு நினைச்சிருந்த எனக்கு வந்த வேலைங்க எல்லாமே கால் சென்டர் வேலை தான். சரி, நல்ல கம்பெனி வர்ற வரைக்கும் இதை செய்வோம்னு சேர்ந்தேன். 2-3 வருஷம் கழிச்சு ஒரு பிரபல பொறியியல் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அங்க போனா நீ பொறியியல் படிச்சிட்டு கால் சென்டர் வேலைக்கு எதுக்குப் போனேன்னு கேட்டு வெளிய தள்ளிட்டாங்க. அதுக்கப்புறம் எவ்வளவோ முயற்சி செஞ்சும் ஒண்ணும் நடக்கலை. அப்ப ஒரு நாள்.." குரல் கம்முகிறது.

கேடி "என்ன சார் ஆச்சு?" என்று வழக்கம் போல் எக்ஸ்ட்ரா ஆக்டிங் குடுக்கிறார்.

"ஆள் குறைப்புன்னு சொல்லி என்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. வேலையில்ல. சம்பாதிச்ச காசெல்லாம் ECR ரோட்ல பார்ட்டி பண்ணியே தீர்ந்து போச்சு. நண்பர்கள் எல்லாம் கை விரிச்சிட்டாங்க. வீட்டுக்குப் போனா அப்பா உள்ளே சேர்க்கமாட்டேன்னு சொல்லிட்டார். அவர் பேச்சை மீறி நான் பொறியியல் படிச்சேன்ல. அந்த கடுப்பு. சரின்னு மறுபடியும் சென்னைக்கே வந்துட்டேன். எக்மோர் ஸ்டேஷன்லேர்ந்து வெளிய போகக் கூட காசில்லை. அங்கேயே ஒரு ஓரமா உட்கார்ந்து தண்ணிய மட்டும் குடிச்சு வயித்தைக் கழுவினேன். ஆனா 3 நாள் மேல தாக்குப் பிடிக்க முடியல. திருட மனசில்ல. கூச்சத்தை விட்டு... (அழுகை முட்டுகிறது),,,, அங்க ஒரு அம்மா வந்தாங்க... அவங்க கிட்ட....கை நீட்டி (தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறார்)....

கேடி "சார் எமோஷனல் ஆவாதீங்க.. தண்ணீர் குடிங்க" என்று க்ளாசை நீட்டுகிறார். கூடவே அவரும் அழுது கம்பெனி குடுக்கிறார்.

"ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்து விட்டு, "கை நீட்டி பிச்சை கேட்டேன். அதான் நான் கேட்ட முதல் பிச்சை" என்று மீண்டும் அழ ஆரம்பிக்கிறார்.

(ஒரு நிமிடம் மௌனம்)

"சாரி மேடம், ஜாலியான உங்க நிகழ்ச்சியை அழுகாச்சி ஆக்கிட்டேன்" என்று சட்டையில் மூக்கை சிந்திக் கொள்கிறார்.

"இந்த நிகழ்ச்சியே, வெற்றியையும் அதற்குப் பின்னால் இருக்கற வலியையும் மக்களுக்கு எடுத்துக் சொல்லணும், அப்படிங்கற நோக்கத்துல தான் எடுக்கறோம்"

சரி, கொஞ்சம் பிச்சை எடுத்த உடனே கையில் காசு வந்திருக்கும். அதற்குப்பிறகு நீங்க வேலை தேடினீங்களா?"

"அங்க தாங்க கடவுள் நிக்கறாரு. அப்படியே ஒரு மூணு நாள் அங்கேயே பிச்சை எடுத்த பிறகு பார்த்தா எங்கிட்ட 4000 ரூபாய் சேர்ந்து போச்சு. ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கும் மேல. அப்படின்னா மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய். இது நான் கால் சென்டர்ல வாங்கின சம்பளத்தை விட அதிகம்ங்க. அப்புறம் பாருங்க, வாடகை இல்லை, கரண்ட் பில் இல்லை. சாப்பாடு செலவு இல்லை. வருமான வரி கிடையாது. எந்த வித பிடித்தமும் கிடையாது. கிராஸ் சேலரி = நெட் சேலரி. நான் ஒரிஜினல் பிச்சைக்காரனாவே ஆயிட்டதால அங்க இருக்கற உணவங்கங்களில் எனக்கு அப்பப்போ இலவச சாப்பாடு. அது போக அரசாங்க இலவச கழிப்பிடம். ஸ்டேஷன் முழுக்க நடந்து நடந்து, படி ஏறி இறங்கி பிச்சை எடுத்ததுல உடம்பும் நல்ல ட்ரிம் ஆயிடுச்சு. அடடா, இது நல்ல பொழைப்பா இருக்கேன்னு அன்னிக்கு தான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு. அப்படியே கன்டினியூ பண்ணிட்டேன்."

கேடி வழக்கமான செயற்கை வெடிச் சிரிப்புடன்," அய்யோயோ, என்னால முடியலைங்க.. பிச்சை எடுக்கறதை இவ்ளோ சுவாரஸ்யமா சொன்ன முதல் ஆளு நீங்க தான்" என்று சும்மாவே விழுந்து விழுந்து சிரிக்கறார்.

"இது மட்டும் இல்லீங்க. போரடிக்குதுன்னு வெச்சுக்கோங்க. சிட்டிக்குள்ள போய் பிச்சை எடுத்துட்டு வருவேன். இல்லேன்னா எதாச்சும் ஒரு ட்ரைன்ல ஏறிட்டு, செங்கல்பட்டு, திண்டிவனம் வரைக்கும் லாங் டிரைவ் போய் பிச்சை எடுத்துட்டு வந்துடுவேன். .

கேடி மீண்டும் குமுறிக் குமுறி சிரிக்கிறார். 'சார், போதும் சார், போதும். இப்படியே பேசினீங்கன்னா நானே உங்க தொழிலுக்கு வந்துடுவேன்". 'சார், போதும் சார், போதும். இப்படியே பேசினீங்கன்னா நானே உங்க தொழிலுக்கு வந்துடுவேன்"

கேடி, "சினிமாவுக்கு எப்படி அறிமுகம் கிடைச்சுது?"

"அது ஒண்ணும் பெரிய விஷயமில்லீங்க. கையில் காசு சேர்ந்து போச்சு. நிலத்துல முதலீடு பண்ணினது போக மீதி காசு கொஞ்சம் கையில் இருந்தது. என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது தான் நண்பர் ஒருத்தர் சினிமாப்படம் எடுன்னு சொன்னாரு. சின்ன பட்ஜெட் படம் தான். என்னோட அதிர்ஷ்டம் பாருங்க, அது நல்லா பிச்சிக்கிச்சு. அந்தப்படத்துல தான் உங்க சேனல்ல ஒரு தம்பி காமெடி பண்ணுவாரே,

கேடி, "யாரு விஷ்ணு கணபதியா?"

"அவரே தான், அவருக்கு அதான் முதல் படம். அதுக்கப்புறம் தம்பி இப்போ பெரிய நடிகர். ஆனாலும் விசுவாசி. எங்கே பார்த்தாலும் உங்களால தான் நான் இன்னிக்கு ஹீரோ ஆயிருக்கேன்னு மரியாதையா பேசுவாரு. அவருக்கே தெரியாத ஒரு விஷயம் என்னன்னா நிறைய தடவை அவர் ஊர்லேர்ந்து எக்மூர்ல இறங்கும் போது அல்லது வடபழனி முருகன் கோவில் வாசலில் எனக்கே அவர் பிச்சை போட்டிருக்காரு. ஸோ, இது ஒரு வகையில் அவர் பணம் தான்"

கேடி காமெராவை நோக்கி, "விஷ்ணு, தர்மம் தலை காக்கும்னு புரட்சித் தலைவர் சொன்னது உங்க விஷயத்துல உண்மை ஆயிடுச்சு பாருங்க",

பிச்சைக்காரர் கறை படிந்த பற்கள் தெரிய சிரிக்கிறார்

கேடி, "ஓகே சார், உங்களைப் பற்றிய ரவுண்டு முடிஞ்சுது. இப்போ ரீவைண்ட். அதாவது மலரும் நினைவுகள். சில போட்டோஸ் காட்டுவோம். அது சம்பந்தமா நீங்க எதாவது சொல்லணும்"

"சரிம்மா"

தன் முன்னால் இருக்கும் திரையில் ஒரு போட்டோவைத் தட்டுகிறார். அது மலர்கிறது. அவரது கால் சென்டர் காலத்து கலை நிகழ்ச்சி விழா போட்டோ.

"அடடே, இது முதல் கம்பெனியில் எடுத்தது. ஆண்டு விழாவுக்காக நாடகம் ஒண்ணு போட்டோம். அங்கேயும் எனக்கு பிச்சைக்காரன் வேஷம் தான். சிறப்பு விருந்தினரா உலக நாயகன் வந்திருந்தாரு. ஆனா அவரோட போட்டோ எடுக்க முடியலை. நான் போட்டிருந்த பிச்சைக்காரன் மேக்கப்பைப் பாராட்டினாரு. நீங்கல்லாம் சினிமாவுல இருக்க வேண்டிய ஆளு சார்னு சொன்னாரு. அவர் வாய் முகூர்த்தம் தான் இன்னிக்கு சினிமாவுக்குள்ள வந்திருக்கேன் போல.

"இதுல பக்கத்துல இருக்கற நண்பர்கள் கூட இப்போ பழக்கத்துல இருக்கீங்களா?"

"வாட்சப்பில் அடிக்கடி பிங் பண்ணுவாங்க. நமக்குத் தான் நேரம் இருக்கறதில்ல. அதுவுமில்லாம என்கிட்டே இருக்கறதோ ஐபோன். பிச்சைக்காரன் கிட்ட ஐபோனான்னு போலீஸ் சந்தேகப்படவும் வாய்ப்பிருக்கு."

"ஓகே சார் அடுத்த போட்டோ". பிச்சை அடுத்த போட்டோவை தட்டுகிறார். வடபழனி முருகன் கோவில்.

"அடேடே, என்னோட ராசியான ஏரியா. வட இந்தியாவில் குண்டு போட்டுட்டாங்கன்னு சொல்லி ஸ்டேஷன்ல ரொம்ப கெடுபிடியா இருந்த டைம். அப்போ நானும் என் நண்பரும் இந்தக் கோவில் முன்னாடி தான் நானும் என் நண்பர் ஒருத்தரும் கொஞ்ச நாளைக்கு பிச்சை எடுத்திக்கிட்டிருந்தோம். இந்த முருகன் சன்னதியில் வெச்சுத் தான் சினிமாப் படம் எடுக்கணும் அப்படிங்கற டிஸ்கஷன் நடந்தது. அவரோட அருள் தான் இது வரைக்கும் நம்ம வண்டி ஓடிக்கிட்டிருக்கு. நாலு பேருக்கு நம்மளால முடிஞ்சா உதவியும் செய்ய முடியுது"

"வெரி நைஸ், நெக்ஸ்ட் போட்டோ ப்ளீஸ்"

அடுத்த போட்டோவில் ரயில்வே மேலாளர் கையால் விருது வாங்கும் காட்சி.

"இதுவும் மறக்க முடியாத ஒண்ணு. இன்னும் சொல்லப் போனா என்னாலேயும் இந்த நாட்டுக்கு எதாச்சும் செய்ய முடியும்னு நம்பிக்கை குடுத்த விஷயம். பிரதமர் தூய்மை இந்தியா திட்டம் அறிவிச்சப்போ நடந்த சம்பவம். எனக்குள்ள ஒரு யோசனை. இந்த ஸ்டேஷன் தான் நமக்கு சோறு போடுது. நாம ஏன் இதை சுத்தமா வெச்சுக்கக் கூடாதுன்னு நினைச்சேன். மேலாளர் கிட்டேயும் பேசினேன். அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. முழு ஒத்துழைப்பு குடுத்தாரு. அங்கே இருந்த எல்லா பிச்சைக்கார நண்பர்கள் எல்லாரையும் ஒருங்கிணைச்சு மூணே நாளில் ஸ்டேஷன் பளிங்கு மாதிரி ஆயிடுச்சு. அதைப் பாராட்டித் தான் இந்த விருது. இப்போ அந்த ஸ்டேஷன் பராமரிப்பு என் சொந்த செலவில் தான் நடக்குது"

"வெரி குட் சார், கடைசி போட்டோ ப்ளீஸ்". ஒரு கட்டிடத் திறப்பு விழா குறித்த போட்டோ. பிரபல பேச்சாளர் சோமநாத் ரிப்பன் வெட்டுகிறார். அருகில் பிச்சை.

கேடி உற்சாகமாகி, "அட எங்க சோமி அண்ணன்"

பிச்சை வெறுப்பாகி, "என்ன சோமியோ போங்க, இவரை எண்டா கூப்பிட்டோம்னு ஆயிடுச்சு அன்னிக்கு"

"ஏன் சார்?"

"நம்மள மாதிரி பொறியியல் படிச்சிட்டு கஷ்டப்படற இளைஞர்களுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு ஒரு சுய வேலை வாய்ப்பு மற்றும் மேம்பாடு கல்லூரி ஒண்ணை ஆரம்பிச்சேன். அதாவது நீங்க படிச்சதை இங்க ஆராய்ந்து பார்க்கலாம், புதுசா எதாவது கண்டு பிடிக்கலாம். அதை பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதற்கு நாங்க உதவியும் பண்ணுவோம். இதை ஒரு சேவையாத் தான் செஞ்சுட்டு வர்றோம். அந்த கல்லூரியைத் திறந்து வைக்கத் தான் இவரை அழிச்சோம். ஏன்னா இவர் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்காரு, இளைஞர்களுக்காக நிறைய பேசறார். ஸோ, இவர் வந்தா பொருத்தமா இருக்கும்னு நினைச்சுத் தான் கூப்பிட்டோம். இவர் அங்க வந்தப்ப தான் . ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இவர் தமிழக இளைஞர்களை ரொம்ப முட்டாளா காட்டியதாகவும் அதனால பல பேர் இவர் மேல செம கடுப்புல இருக்காங்கற உண்மை நிலவரமே தெரிஞ்சுது. ஏற்கனவே ஞாயிறு இரவு ஒரு 20 பேரை வெச்சுக்கிட்டு சமூகத்துக்கு கருத்து சொல்றேன்னு கடுப்படிக்கற இந்த ஆளை அங்கே பார்த்ததும் பெரிய கைகலப்பே ஆயிடுச்சு. அப்புறம் காவல் துறை வந்து தான் நிலைமையை சீர் செஞ்சாங்க. ஆனா அப்பவும் உங்க அண்ணன் விடலைங்க. கூட்டமெல்லாம் கலைஞ்சு போயி மிச்சம் இருந்த ஒரு 30 பேர் முன்னாடி மைக் புடிச்சு மூணு மணி நேரம் தம் கட்டி சொற்பொழிவு பண்ணாப்ல."

"இந்த ஆளை இப்படியே பேச விட்டா நம்மளையும் போட்டு வாங்கிடுவான்" என்று மனதுக்குள் நினைத்த கேடி, " ரொம்ப சந்தோசம் சார், உங்க பிசியான ஷெட்யூலில் எங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்க நினைவுகளை பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்தாங்க சார், உங்களுக்கான சிங்கிள் டீ" என்று கூறி க்ளாசை நீட்டவும் இயக்குனர் கட் சொல்லி காமெராவை அணைக்கிறார்.

பிச்சை "காபி டீ எல்லாம் இருக்கட்டும். எதுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்தறீங்க?

கேடி, "நீங்க கேட்கறது புரியலை சார்"

"இப்போ ஒரு சமையல் நிகழ்ச்சி, விளையாட்டு, சீரியல் அப்படின்னா புரியுது. இதை எந்த வகையில் சேர்க்கறது?"

கேடி, "சார், மக்களுக்கு எப்பவுமே சினிமான்னா ஒரு கிரேஸ், அதுக்குத் தீனி போடறது தான் இந்த ப்ரோக்ராம். அது மட்டுமில்ல, புதிய திரைப்படங்களை ப்ரொமோட் பண்றதுக்கு புதுசா ஒரு நிகழ்ச்சி தேவைப் படுது. மற்ற சேனல்கள் பண்ற மாதிரி படத்தோட ஹீரோ, ஹீரோயின், டைரக்டரை கூப்பிட்டு உட்கார்த்தி வெச்சு நேயர்களோட பேச வைக்கறதையே நாங்களும் பண்ணினா எப்படி? எங்களுக்குன்னு ஒரு தரம் இருக்குல்ல?

பிச்சை கோபமாகி, "என்ன உங்க தரம்? பகல் 12 மணி வரைக்கும் திண்டிவனம் செங்கல்பட்டை பிளாட் போட்டு விக்கறீங்க. அதுக்கு மேல ஹிந்தி டப்பிங் சீரியல்களைப் போட்டு கொல்றீங்க. சாயந்தரம் ஆச்சுன்னா பக்திங்கற பேர்ல பிராமணர்களுக்காக நிகழ்ச்சி பண்றீங்க. ஏழு மணிக்குத் தானேம்மா உங்க சானலே ஆரம்பிக்குது. அதிலேயும் ஒரு மணி நேரம் மைக் மோகன் ப்ரோக்ராம். ஆமாம், அதென்ன தமிழகத்தின் குரல்னு சொல்லிட்டு பாடறது பூரா ஒரே தெலுங்கு மற்றும் மலையாளிகளா இருக்காங்க? உங்களுக்கு TRP வேணும்னா யாராவது ஒரு ஊனமுற்றவனை வெச்சு 10 வாரம் ஓட்டறீங்க. "இவ்ளோ நல்ல்லாப் பாடறியே, ஆண்டவன் உன்னை இப்படி பண்ணிட்டானே" அப்படின்னு அங்க இருக்கற எல்லா பெண்களையும் மூக்கு சிந்த வைக்கறீங்க. அவ்ளோ நல்லாப் பாடறவன்னா முதல் பரிசை அவனுக்குக் குடுக்க வேண்டியது தானே? பொழுது போகலேன்னா ஆஸ்கார் அவார்ட் குடுக்கறதா நினைச்சிக்கிட்டு உங்களுக்கு நீங்களே விருது குடுத்துக்கறீங்க. இருக்கறதிலேயே உச்சகட்ட பாவம் அந்த விஷ்ணுகணபதி தான். முதல் வாய்ப்பு நீங்க தான் குடுத்தீங்க. ஆனா அதுக்காக தீபாவளி, பொங்கல்னு எல்லாப் பண்டிகைக்கும் அவனை கூப்பிட்டு ஒரு மணி நேரம் மொக்க ப்ரோக்ராம் பண்றீங்க பாருங்க, மனித உரிமை மீறல் அது.

பிச்சை இப்படி பேசிக் கொண்டே போக கேடி சிரிக்கிறார். "என்னம்மா சிரிக்கறே?"

கேடி டைரக்டரைப் பார்த்து, "என்ன சார் ஓகேவா?

டைரக்டர் "டபுள் ஓகே மா, இந்த ஆள் பேசினதை வெச்சு ஒரு மாசம் ஓட்டிடலாம்."

பிச்சை குழப்பத்தில்,"யோவ் காமெராவை அணைச்சுட்டதா சொன்னீங்க?

டைரக்டர், "அது மெயின் காமெரா, ஆனா எப்பவுமே 2 சைட் காமெரா ஓடிக்கிட்டே தான் இருக்கும். அப்போ தான் நிகழ்ச்சியோட "மேக்கிங்" அப்படின்னு சொல்லி ஒரு இரண்டு வாரம் ஓட்ட வசதியா இருக்கும். இப்போ நீங்க வாய் கிழிய நல்லா பேசினதை அப்படியே போடாம பிட்டு பிட்டா போடுவோம். நடுநடுவே நம்ம கேடி கண்ணீர் மல்க மனமுருக இரண்டு வரி பேசி கண்ணீர் விடுவாங்க. மக்கள் நீங்க ஏதோ கேடியை ரேப் பண்ணிட்டதாவே நினைச்சுக்குவாங்க.

பிச்சை டென்ஷனாகி, "என்னய்யா அராஜகமா இருக்கே?"

டைரக்டர், "அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியாது. இந்த மேட்டர் வெளிய போகாம இருக்கணும்னா உங்களோட அடுத்த நாலு படத்தையும் எங்களுக்கே தரணும். அதுவும் நாங்க சொல்ற ரேட்டுக்கு"

"தர்றேன், அந்த விடியோவை என்கிட்டே குடுத்துடு".

டைரக்டர், "நாளைக்கு அக்ரீமெண்ட்ல கையெழுத்து போட்டுட்டு வாங்கிக்கோங்க. எங்களை மிரட்டலாம்னு புதுசா எதுவும் ட்ரை பண்ணாதீங்க. எங்களுக்கும் டெல்லி வரைக்கும் ஆளுங்க இருக்காங்க. இல்லேன்னா இவ்ளோ வருஷம் கழகங்களை எதிர்த்துக்கிட்டு முன்னணியில் இருக்க முடியுமா?"

நொந்தபடியே போன பிச்சை எதிரில் நின்ற கேடியைப் பார்த்து, "என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா?" என்று கூறி வெளியேறுகிறார்.

ஜெயராமன்.


Related Posts Plugin for WordPress, Blogger...