Monday, November 28, 2011

கும்தலக்கடி - ஒரு கொலைவெறியாடல்

ஆனா ஊனா ஒரு நாலு பேரு புதுப் படத்தைப் ப்ரொமோட் பண்றேன் பேர்வழின்னு ஏதாச்சும் ஒரு சேனலை குத்தகைக்கு எடுத்துக்கிட்டு மொக்கை போடறது ஒரு வியாதியா பரவிகிட்டு வருது. அதனால தனுஷை விட பயங்கர கொலைவெறியோட இருக்கற மக்களுக்காக இந்த ஆர்டிகிள். (நடுநடுவே சாங்க்ஸ் மற்றும் ஸீன் கிளிப்பிங்க்ஸ் எல்லாம் நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க)

டிவி தொகுப்பாளினி, "வணக்கம் வசையருவி நேயர்களே, இன்னிக்கு நம்ம ஸ்டூடியோவுக்கு "கும்தலக்கடி" படக்குழுவினர் வந்திருக்காங்க. அதிலயும் நம்ம ஹீரோ கார்யா உங்களோட பேசப்போறாரு. என்ன, அப்படியே ஷாக் ஆயிட்டீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஸோ, உடனே போன் எடுங்க, டயல் பண்ணுங்க. நம்பர் உங்க டிவி ஸ்க்ரீன்ல பிளாஷ் ஆயிக்கிட்டிருக்கு. நீங்க போன் பண்ணலேன்னா அவங்க போடற மொக்கையை நான் மட்டும் தனியா இருந்து சமாளிக்கணும். பெண் பாவம் பொல்லாதது, ஞாபகமிருக்கட்டும்.

அடுத்த சீன், எல்லாரும் சோபாவில உக்காந்துகிட்டிருக்காங்க.

டிவி தொகுப்பாளினி, "வணக்கம் சார், உங்க புதுப் படம் "கும்தலக்கடி" ரிலீஸ் ஆகி வெற்றிகரமா நாலாவது ஷோவா ஓடிக்கிட்டிருக்கு. எப்படி பீல் பண்றீங்க? கார்யா சார், நீங்க சொல்லுங்க, அதுலயும் உங்க நடிப்பைப் பற்றித் தான் ஒரே பேச்சா இருக்கு"

கார்யா, "ரொம்ப நிறைவா இருக்கு. இதையும் ஒரு படம்னு நினைச்சு மக்கள் தியேட்டருக்கு வந்து பாக்கறதுல ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. ஏன்னா, இந்தப் படம் ரிலீஸ் ஆவுமான்னே நிறைய பேருக்கு டவுட் இருந்திச்சு. ஏன், எங்களுக்கே கூட இருந்தது"

தயாரிப்பளார் தர்மப்பிரபு இடைமறித்து, "முதல்ல இந்தப் படத்தை சென்சார் போர்ட் தணிக்கையே பண்ணமாட்டேனுட்டாங்க. ஏன்னா அந்த அளவுக்கு திராபையா இருக்குன்னு சொன்னாங்க. இந்த மாதிரி படம் ரிலீஸ் பண்ணினா மக்கள் மன நலம் பாதிக்கப்படும்னு பயந்தாங்க. அவங்க சொல்றது உண்மைன்னாலும் எங்க உழைப்பு வீணாப் போயிடுமே? அவங்களை கன்வின்ஸ் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு"

டிவி தொகுப்பாளினி, "டைரக்டர் அறிவுஜீவி சார், நீங்க சொல்லுங்க, எப்படி இந்தக் கதை உங்களுக்குள்ள உருவாச்சு?"

அறிவுஜீவி, "இது ஒரு பத்து வருஷ முயற்சிக்குக் கிடைத்த வெற்றின்னு தான் சொல்லணும். ஏன்னா, இந்த பத்து வருஷத்துல அவ்ளோ பிற மொழிப் படங்களை டிவிடிலேயும், திரைப்பட விழாக்களிலும் போய் மாஞ்சு மாஞ்சு பார்த்து, அது எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி இந்த கதையை நான் உருவாக்கியிருக்கேன். இது தமிழ்ல வந்திருக்கற ஒரு குளோபல் படம்னே சொல்லலாம்"

டிவி தொகுப்பாளினி, பட ஹீரோயினைப் பார்த்து, "என்ன பனுஷ்கா மேடம், ரொம்ப அமைதியா இருக்கீங்க? இது உங்க ரெண்டாவது படம், எப்படி வந்திருக்கு?"

கார்யா (பனுஷ்காவை கலாய்ப்பதாய் நினைத்துக் கொண்டு), "அவங்க காமெரா முன்னாடி தான் இப்படி. காமெராவுக்குப் பின்னாடி அவங்களை கையில புடிக்க முடியாது, என்ன பனுஷ், சரிதானே?"

பனுஷ்கா, "ரெம்ப ஹாப்பியா இருக்கு, அதுலயும் இதுல எனக்கு ஒரு வில்லேஜ் கேர்ல் ரோல் குடுத்திருக்காங்க. நிறைய கிளாமர் அண்ட் கொஞ்சம் ஆக்டிங் ரெண்டும் இருக்கற மாதிரியான ஒரு ரோல்"

அறிவுஜீவி, "காஸ்டியூம் விஷயத்துல டெய்லி எனக்கும் அவங்களுக்கும் மினி யுத்தமே நடக்கும். “நான் புல்லா டிரஸ் போட்டா ரசிகர்கள் கோச்சுக்குவாங்க, நீங்க என்னடான்னா பாவாடை தாவணி போடச் சொல்றீங்களே”ன்னு ஷூட்டிங் ஸ்பாட்டே ரகளையா இருக்கும். அப்புறம் இவங்களுக்காக ஜன்னல் வெச்ச ஜாக்கெட், வாசக்கால் வெச்ச பாவாடை, கம்பி போட்ட தாவணி எல்லாம் மும்பைலேர்ந்து வரவழைச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திட்டோம்."

டிவி தொகுப்பாளினி, "தர்மப்ரபு சார், இந்தப் படத்துக்கு நீங்க நிறைய செலவழிச்சிருக்கறதா ஆடியோ ரிலீஸ்ல சொல்லியிருந்தீங்க இல்லையா?"

தர்மப்ரபு, "ஆமாம், அதுலயும் குறிப்பா அவங்க காஸ்டியூம் செலவை விட அதை வரவழைக்க ஆன கொரியர் செலவு ஜாஸ்தின்னா பார்த்துக்கோங்க.

டிவி தொகுப்பாளினி, "சரி சார், இப்போ ஒரு நேயர் லைன்ல இருக்கார், ஹலோ!"

நேயர், "ஹலோ, வசையருவி? நான் அரக்கோணத்திலேர்ந்து அமுதகுமார் பேசறேன் மேடம்"

கார்யா, "சொல்லுங்க அமுதகுமார், நீங்க தானே உங்க ஊர் ராஜா தியேட்டர்ல முதல் ஷோ முதல் டிக்கெட் வாங்கின ஆளு?"

நேயர், "முதல் ஷோ பார்த்த ஆள் மட்டும் இல்லை சார், உங்க படத்தை எங்க ஊர்ல பார்த்த ஒரே ஆளும் நான் தான்"

அறிவு ஜீவி, "அமுதகுமார், படம் பார்த்தீங்களா? எப்படி இருக்கு?"

நேயர், "செம டெரரா இருக்கு சார், அதுலயும் கார்யா சார் பேசற அந்த வசனம் "ஊறுகாயை நக்கித் தான் சாப்பிடணும், அப்பளத்தை உடைச்சித்தான் சாப்பிடணும்" சூப்பர் சார். அதுலயும் உங்க உடம்பு, என்ன பாடி சார் அது?"

கார்யா, "படத்தை ரொம்ப ரசிச்சு பார்த்திருக்கீங்க போல, உங்க நண்பர்கள் கிட்டயும் பேசி அவங்களையும் படம் பாக்க வைங்க, சரிங்களா?"

நேயர், "அப்புறம் சார் இரு சின்ன விஷயம், நீங்க முதல் டிக்கெட் வாங்கினதுக்காக ஒரு மோதிரம் குடுத்தீங்களே, அது கவரிங்க்னு தெரிஞ்சு போச்சு, ஒரிஜினல் எப்ப சார் குடுப்பீங்க?"

கார்யா, "ஹெலோ ஹெலோ ஹெலோ..." - லைன் கட் ஆயிடுச்சுன்னு நினைக்கறேன்"

டிவி தொகுப்பாளினி, "கார்யா சார், நானே கேக்கணும்னு நினைச்சேன், எப்படி சார் அப்படி ஒரு பாடி டெவலப் பண்ணினீங்க?"

கார்யா, "அது ரொம்ப சிம்பிள், நம்ம சைதாபேட்டை ஸ்டேஷன் வெளியில ஒருத்தர் ரொம்ப அழகா ரோட்ல டிராயிங் போடுவார். அவரைக் கூப்பிட்டு சப்பாத்தி மாவுல வரி வரியா கட்டிங்க்ஸ் போடச் சொன்னோம். அப்புறம் அதை எடுத்து என் பாடி மேல ஒட்டிக்கிடுவேன்."

டிவி தொகுப்பாளினி, "கேக்கவே ரொம்ப வித்யாசமா இருக்கு"

பனுஷ்கா, "எஸ்பெஷலி டூயட்ல அவர் ஓப்பன் பாடியா இருப்பாரு, அவரை கட்டிப் பிடிக்கும்போது மாவு என் உடம்புல ஒட்டாம கட்டிப் பிடிக்கணும். குறிப்பா அந்த வரிகள் அழிஞ்சிடாம பார்த்துக்கணும். இட் வாஸ் வெரி டப்"

கார்யா, "அவங்க டூயட்னு சொன்னதும் ஒரு விஷயம் சொல்லணும். அந்த "வாடா வாடா எச்சக்கலை" சாங்க்ல அவங்க ஒரு யெல்லோ டிரஸ் போட்டுக்கிட்டு வருவாங்க. இன்னிக்கு யூத்ஸ் மத்தியில அது தான் ஹாட்"

டிவி தொகுப்பாளினி சிரித்துக்கொண்டே, " சரி சார், இன்னொரு நேயர் லைன்ல இருக்கார், ஹெலோ?"

நேயர், "ஹெலோ, நான் கல்பாக்கத்திலேர்ந்து கலைவாணி பேசறேங்க"

"சொல்லுங்க கலைவாணி, கும்தலக்கடி படம் பார்த்தீங்களா?"

"ஆமாங்க, ரொம்ப நல்லாருக்குங்க, கார்யா சார் இருக்காரா?'

கார்யா, "நான் கார்யா தான் பேசறேன், சொல்லுங்க"

கலைவாணி, "சார் உங்க நடிப்பு சூப்பர் சார்"

"ரொம்ப தேங்க்ஸ், படம் புடிச்சிருக்கா?"

"கண்டிப்பா சார், ஒரு சீன்ல உங்க தங்கச்சி தூங்கணும்கறதுக்காக ராத்திரி பூரா கொசு அடிப்பீங்களே, அப்படியே கண்ணு கலங்கிடுச்சு சார். எனக்கும் இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மாட்டாரான்னு ஏங்கிட்டேன்"

கார்யா, "ஆமாங்க, அந்த ஸீன் பண்ணும்போது மொத்த யூனிட்டும் கண்ணு கலங்கிடுச்சு" (கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்)

டிவி தொகுப்பாளினி, "சரிங்க கலைவாணி, கால் பண்ணினதுக்கு நன்றி"

கலைவாணி, "மேடம் மேடம், உங்க ஆளுங்க என்கிட்ட வந்து ஸ்டூடியோவுக்கு போன் பண்ணுங்க, நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் போடறோம்னு சொன்னாங்க மேடம், ஆனா அம்பது ரூபாய்க்குத் தான் பண்ணியிருக்காங்க. மீதி எப்ப மேடம் குடுப்பீங்க? (வழக்கம் போல் லைன் கட் ஆகிறது)

அறிவுஜீவி, "தங்கச்சிக்காக இவர் ஒரு பாட்டு பாடுவாரு, தமிழ்நாட்டுல இருக்கற தங்கச்சிங்க எல்லாம் இப்ப அந்த பாட்டைத் தான் காலர் டியூனா வெச்சிருக்காங்கன்னு நண்பர் ஒருத்தர் சொன்னார்"

தர்மப்ரபு, "பாட்டுன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது, கரடிமுத்து ரொம்ப அருமையா எழுதி குடுத்திருக்கார்"

அறிவு ஜீவி, "நம்ம பால்ராஜ் டியூன் சொல்லி முடிக்கறதுக்குள்ள அப்படியே வார்த்தைகளை கொட்டிடுவாரு, நாம தான் நமக்குத் தேவையானதை பொறுக்கிக்கணும்"

டிவி தொகுப்பாளினி, "சரி சார், இன்னொரு நேயர் லைன்ல இருக்கார், ஹெலோ?

நேயர், "நான் அம்பத்தூர்லேர்ந்து ரமேஷ் பேசறேன் மேடம், படம் பார்த்தேன், சூப்பர் மேடம், சாங்க்ஸ் எல்லாம் சான்சே இல்லை. பனுஷ்கா மேடம் கிட்ட பேச முடியுமா?"

பனுஷ்கா , "நான் பனுஷ்கா பேசறேன், சொல்லுங்க ரமேஷ்"

நேயர், "மேடம், உங்க நடிப்பு சூப்பர் மேடம், டான்சும் சூப்பர்"

பனுஷ்கா, "ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ், இந்த படத்துல உங்களுக்குப் பிடிச்ச சாங் எது?"

நேயர், "வாடா வாடா எச்சக்கலை தான் என் பேவரிட், நீங்க ஒரு ரெண்டு வரி பாடிக்காட்டணும் மேடம், ப்ளீஸ்"

பனுஷ்கா பாடுகிறார். எல்லோரும் கை தட்டுகின்றனர்.

நேயர், "ரொம்ப தேங்க்ஸ் மேடம்"

பனுஷ்கா, "இட்ஸ் ஓகே"

நேயர், "அதுக்கில்லை மேடம், உங்க குரல் ஆக்ஸா ப்ளேடை விட கொடுரமானதுன்னு என் பிரெண்ட் கிட்ட பெட் கட்டியிருந்தேன், நீங்க நிரூபிச்சிட்டீங்க, அதுக்குத் தான் தேங்க்ஸ்"
(பனுஷ்கா கடுப்பாகிறார்)

தர்மப்ரபு பேச்சை மாற்றும் விதமாக, "ரமேஷ், படத்தைத் தியேட்டர்ல தானே பார்த்தீங்க? திருட்டு விசிடில இல்லையே?"

"தியேட்டர்ல தான் சார், அங்க தான் பிரீயாவே கூப்பிட்டு பாரு பாருன்னு சொல்றாங்களே, போதாக்குறைக்கு கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் வேற தராங்க. அது மட்டுமில்லாம திருட்டு விசிடி சங்கத்து ஆளுங்க இந்தப் படத்தை விக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டாங்களாம். ஏன்னா தியேட்டர்லயே ஒருத்தரும் இல்லை, இதை எவன் வாங்கபோறான்னு சொல்லிட்டாங்க"

எல்லோரும் கப்சிப் ஆகவே, அறிவு ஜீவி பேசுகிறார்,, "படத்தோட இன்னொரு ஹைலைட் காமெடி. கார்யாவும் நடிகர் குங்குமமும் சேர்ந்து வர்ற ஸீன் எல்லாம் தியேட்டர்ல செம க்ளாப்ஸ் தான் போங்க"

டிவி தொகுப்பாளினி, "கடைசியா ஒரு நேயர் லைன்ல வரார், ஹெலோ?"

நேயர், "ஹெலோ, நான் கோட்டையிலிருந்து முதலைமச்சர் பேசறேன்"

எல்லாரும் ஷாக்காகி, "ஐயோ மேடம் நீங்களா?"

"உங்க படத்தைத் தான் மனிதர்கள் பாக்கவே லாயக்கில்லைன்னு தமிழக அரசு தடை பண்ணியிருக்கே, அப்புறம் எதுக்கு ப்ரோமோஷன் பண்றீங்க?"

"என்னது தடை பண்ணிட்டீங்களா?"

"அது மட்டுமில்லை, நீங்கல்லாம் டிவில பண்ற ராவடி தாங்க முடியாமத்தான் தமிழ்நாட்டுல எங்கேயும் சோபா செட் போடக்கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்கேனே? அப்புறம் எப்படி நீங்க ஸ்டூடியோவுல கால் மேல கால் போட்டு உக்காந்திருக்கீங்க? உஸ்மான் ரோடு முழுக்க சீல் வெச்ச பிறகும் உங்களுக்கெல்லாம் யாரு ஸ்பான்சர் பண்றது? செக்ரெடரி, உடனே கமிஷனரை விட்டு சேனலுக்கு சீல் வைக்கச் சொல்லுங்க"

"சீலா?" எல்லோரும் தறிகெட்டு ஓடுகின்றனர்.

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...