Tuesday, November 15, 2011

இதைப் படிக்காதீங்க



கொச்சின் அணி வெளியேறிய பிறகு அந்த இடத்தைத் தக்க வைத்தக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பல தென்னிந்திய நடிகர்கள் ஏழுமலையானுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்.

சாதனை சதம் தொடர்ந்து நழுவிப் போவது சாதனை நாயகனை மிகவும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புதிய வீட்டின் அமைப்பு குறித்து வாஸ்து நிபுணர்களை மீண்டும் ஒருமுறை கல்சல்ட் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம்.

டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டை ப்ளாக்கில் விற்ற விவகாரம் தலைவர் காதுக்கு எட்டியிருக்கிறது. பார்ட்டி சூடாவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு "இப்படி ஒரு யோசனை நமக்கு வராம போச்சே" என்று ஷாக் குடுத்து வருகிறாராம்.

இந்திய வீரர்கள் மாறி மாறி செஞ்சுரி அடித்தும் கொல்கத்தா மைதானம் காலியாக இருப்பது அசோசியேஷன் அதிகாரிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. எனினும் அடுத்த இரண்டு நாட்களில் கூட்டம் கூடும் என்று நம்பிக்கையோடு இருப்பதாக கொல்கத்தாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட்டை வைத்து திரையில் சீட்டு விளையாடிய இயக்குனருக்கு நிஜத்திலும் அப்படி விளையாட ஆசை வந்து விட்டதாம். அநேகமாக அடுத்த IPLக்கு தம்பியுடன் மும்பையில் டேரா போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அடுத்தடுத்து நண்பர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் பஞ்சாப் ராஜாவுக்கு ஏக வருத்தமாம். சீக்கிரம் தனக்கும் யாராவது கழுத்தை நீட்ட மாட்டார்களா என்று ஏங்கிப் போயிருக்கிறாராம். மைதானத்தில் தொடரும் சொதப்பல்களுக்கும் இதுவே காரணமாம்

திருமணமான அன்றே கிரிக்கெட் விளையாடச் சென்ற "வெற்றி" வீரரை அனைவரும் பெருமையுடன் பார்த்தாலும், அன்றைய தினம் சாந்தி முகூர்த்தத்துக்கு உகந்ததில்லை என்று ஜோதிடர் கூறியது தான் முக்கிய காரணம் என்கின்றனர் நெருங்கியவர்கள்.

மேட்ச் பிக்சிங் விவகாரத்தை முழுதாக விசாரிக்காமல் திடுமென முடித்து தீர்ப்பு வழங்கியிருப்பதாக பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்கள் குமுறி வருகின்றனர். முழுதாக விசாரித்தால் அணியின் என்றும் இளமையான வீரர் முதல் அமைச்சர் வரை பலரின் தலை உருளக் கூடும் என்பதே முக்கிய காரணம் என்கின்றனர் அவர்கள்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த தடாலடி டெஸ்ட் போட்டியில் ஐசிசியின் கைங்கர்யம் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். டெஸ்ட் போட்டியை விறுவிறுப்பாக்க இரண்டு அணிகளையும் சரி கட்டியதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இயந்திர மனிதன் எடுத்த கோடி இயக்குனர் கிரிக்கெட்டில் நடக்கும் திரைமறைவு சம்பவங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு வருவதாகக் உதவி இயக்குனர் வட்டாரம் தெரிவிக்கிறது. அநேகமாக மேட்ச் பிகிசிங்கை மையமாக வைத்து அடுத்த படம் எடுக்கக் கூடும் என்பது கொசுறு தகவல்

விளையாட்டு மந்திரி பிசிசிஐயுடன் தொடர்ந்து விளையாடி வருவது ஏழுமலையானை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இருப்பினும் தற்போதைக்கு சாந்தமாக இருக்குமாறு "சக்தி" மந்திரி அறிவுறுத்தி வருவதாக நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

கங்காரு அணி மோசமாக விளையாடினாலும் வாரியம் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக சிட்னி செய்திகள் தெரிவிக்கின்றன. இதைச் சாக்காக வைத்து அணியில் அதிரடியாகக் களை பிடுங்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் கேப்டனுக்கு செக் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"சுவர்" வீரர் தொடர்ந்து டெஸ்டில் வீடு கட்டி அடிப்பது கிரிக்கெட் பிரியர்களையும் இளம் வீரர்களையும் மிகவும் உற்சாகமூட்டியுள்ளது. இந்த வயதிலும் அவர் மன உறுதியோடு விளையாடுவது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...