Wednesday, November 9, 2011

நான்கு கில்லாடிகள்


இப்போதைய சென்சேஷன் மேட்ச் பிக்சிங் தான். அந்த கோர்ட் ரூம் டிராமாவைக் கொஞ்சம் வேற விதமா யோசிச்சா...?

நீதிபதி, " முதலில் ஆசிப்பை அழையுங்கள்"

ஆசிப், "வணக்கம் துரை, ஏன் சார், நமக்கு இதானே லாஸ்ட் மீட்டிங்?"

நீதிபதி, "குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? ஏன் இப்படிச் செய்தீர்கள்?"

"நீங்களும் நிறைய தடவை கேட்டுட்டீங்க. நானும் நிறைய தடவை சொல்லிட்டேன். மறுபடியும் சொல்றேன்" என்று கூறி தொடர்கிறார்.

"மஜார் மஜீத் மஜார் மஜீத்னு ஒரு புரோக்கர் பய எங்க ஊர் கிரிக்கெட் போர்டோட ரொம்ப நாள் நெருங்கி பழகறதா எங்க ஊர்ல பேசிக்கிட்டாங்க. எனக்கு உடனே கோவம் வந்து அந்த ஆள் சட்டையைப் பிடிக்கப் போனேன். அதுக்கு அவன் "பணத்தை நீ வெச்சுக்க, கிரிக்கெட்டை நான் வெச்சுக்கறேன்னு" கூலா ஒரு பதில் சொன்னான். பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்திச்சு.

நீதிபதி, "இவ்ளோ கேவலமான கதையை எவ்ளோ தடவை தான் சொல்வே?"

"அதான் கேவலம்னு தெரியுதுல்ல, அப்புறம் திரும்பத் திரும்ப விசாரணைன்னு கூப்பிட்டு ஏன் தாலியை அறுக்கறீங்க? சீக்கிரம் கேட் பாஸ் குடுத்து அனுப்பி விடுங்க"

நீதிபதி, "ஒரு வருடம் ஜெயில் தண்டனை, நீங்க போகலாம்"

ஆசிப், "ஒரு வருடமா?". பிறகு போலீஸ் அதிகாரியைப் பார்த்து, "என் செல்லுக்குப் பக்கத்துல லேடீஸ் ஜெயில் இருக்கும்ல? ஏன்னா போரடிக்கும் பாருங்க, அதான் கேக்கறேன்"

போலீஸ் அதிகாரி, "அந்த கவலை உனக்கு வேண்டாம், நாங்க பார்த்துக்கறோம்"

அடுத்து மிஸ்டர் மஜார் மஜீத்:

"மிஸ்டர் மஜார், இந்த மொத்த ஆபரேஷனுக்கும் நீங்க தான் பொறுப்புன்னு ஒத்துக்கறீங்களா?"

"என்ன பெரிய ஆபரேஷன், கார்கில் யுத்தமா பண்ணினேன்? ஏதோ புக்கீங்களுக்கு நாலு காசு சம்பாதிச்சு கொடுத்தேன், நாலு ஏழை வீரர்களுக்கு வாழ்வு கொடுத்தேன், அப்படியே நாலு காசு நானும் பார்த்தேன். இதெல்லாம் ஒரு குற்றமா?"

"தான் செய்யறது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கெல்லாம் மரத்துப் போயிடுச்சுல்ல?"

"யோவ் பெரிசு, இங்கென்ன ஷங்கர் படம் ஷூட்டிங்கா நடக்குது? இந்தியன் தாத்தா மாதிரி பீல் பண்றே, சீக்கிரம் கடையை மூடு, ஏகப்பட்ட வேலைகள் இருக்கு"

நீதிபதி, "இரண்டு வருடம் மற்றும் எட்டு மாதம் ஜெயில் தண்டனை"

மஜார், "இம்புட்டு தானா?, இதுக்குத் தான் ஒரு வருஷமா என்னை கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய விட்டீங்களா?, உங்களால எனக்கு வருமானம் போச்சுன்னு உங்க மேல மான நஷ்ட வழக்கு போடறேன்"

அருகிலிருக்கும் போலீஸ் அதிகாரி மஜாரை முறைக்கவும், மஜார் "என்னடா லுக்கு, ஒழுங்கா ஜாக்கிரதையா ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போ. கேர்ல்பிரெண்ட் என்னைப் பார்க்க வரும்போது மூஞ்சி பளிச்சின்னு இருக்கணும்.

நீதிபதி, "சல்மான் பட், நீங்க வரலாம்"

நீதிபதி, "மிஸ்டர் சல்மான், உங்க மேல வைக்கப்பட்டிருக்கற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்றீங்க?, இது உங்களுக்கு நாங்க தர்ற கடைசி சான்ஸ்"

சல்மான், " நீதிமன்றம், எவ்வளவோ வித்யாசமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இது அதிவித்யாசமான வழக்கு. நோ பால் வீசச் சொன்னேன், வைடு போடச் சொன்னேன், கேட்ச் தவற விட்டேன், அதுவும் பணம் வாங்கிகொண்டு - குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.

பணம் வாங்கினேன், லாஹூரில் அடுக்கு மாளிகைகள் கட்டுவதற்காகவா? இல்லை, இஸ்லாமாபாத்தில் இடுப்பொடிந்த என் தாயாருக்கு வைத்தியம் பார்ப்பதற்காக.

நோ பால் போடச் சொன்னேன், எதற்காக? அவன் ஒழுங்காக பால் போடுவது பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை, ஒழுங்காகப் போட்டால் கேட்ச் பிடிக்க வேண்டி வருமே என்ற பீதியால்.

வைடு போடச் சொன்னேன், எதற்காக? டைவ் அடித்துப் பிடிப்பதற்காகவா? இல்லை, பேட்ஸ்மேன் அடித்தால் ஆறு போய்விடுமே என்ற அச்சத்தினால். கேளுங்கள் என் கதையை.

பாகிஸ்தானில் பிறந்த எல்லாருக்கும் பிறக்க ஒரு ஊர், பணம் இழக்க ஊர், பிறகு அதைக் கறக்க ஒரு ஊர். இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கிரிக்கெட் கனவுகளுடன் இஸ்லாமாபாத் வந்தேன்.

கிரிக்கெட் போர்டு அலுவலகத்தில் நுழையவே அனுமதிச் சீட்டுக்குக் காசு வாங்கினார்கள், குடுத்தேன். அதிகாரிகளைப் பார்ப்பதற்கும் காசு வாங்கினார்கள், குடுத்தேன். வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் அணியில் நுழைய வைக்கிறேன் என்றார்கள். அதற்கும் குடுத்தேன். நான் மேட்ச் விளையாட வேண்டுமென்றால் அவர்களுக்குக் கட்டிங் தரவேண்டும் என்றார்கள் - தந்தேன். இப்படி ஒவ்வொரு இலாகாவாக இந்த சல்மானின் "பட்"டிலிருந்து ரத்தம் வரும் வரைக்கும் வாங்கிக்கொண்டே இருந்தார்கள்.

கிரிக்கெட் வாரியம் என் பணத்தைப் பதம் பார்த்தது. - ஓடினேன்

சீனியர் வீரர்கள் ப்ராக்டீஸ் என்ற பெயரில் பவுண்டரி வரை பல முறை என்னை ஓட ஓட பீல்டிங் செய்யச் சொன்னார்கள் - ஓடினேன்,

செலெக்ஷன் கமிட்டி என்னைக் கபாபும் குருமாவும் வாங்கித் தருமாறு விரட்டினர் - ஓடினேன்.
பிட்சில் கூட நான் அந்த அளவுக்கு ஓடியதில்லை.

ஓடினேன் ஓடினேன் ஓடினேன், தேம்ஸ் நதிக்கரை வரை ஓடினேன். அங்கே மஜார் மஜீத் இருந்ததால் நின்று விட்டேன்.

"ஓடினால் ரன் தான் கிடைக்கும், ஓடாமல் நின்றால் பணம் கிடைக்கும்" என்றார்.

"கேட்சைத் தவற விடு, உன் வாழ்க்கை சரியாகும்" என்றார்.

"நோ பால் வீசு, அந்த நோபெல் பரிசையே விலைக்கு வாங்கலாம்" என்றார்

"வைடாக வீசு, உன் வாழ்க்கை வசதிகள் விரிவடையும்" என்றார்
அவமானம், பணம், நாடு, மனசாட்சி - இறுதியில் பணமே வென்றது.

நீதிபதி, "அப்போ இது தப்புன்னு தெரிஞ்சே பண்ணியிருக்கீங்க?"

"இங்கு எல்லாமே தப்பு, எல்லாரும் தப்பு. சுறா மீன்கள் சிறு மீன்களை விழுங்குவது போல் சில பெரிய பண முதலைகள் எங்களைப் போன்றவர்களை முழுங்கிவிடுகின்றனர். ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள் நீதிபதி அவர்களே, உங்கள் வலை சிறியது. அதில் நான் கூறிய சுறா மீன்கள் சிக்காது."

நீதிபதி, "உன்னால் உன் நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?"

சல்மான் சிரித்துக் கொண்டே, "அவமானம் என் நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே அனைத்து பாகிஸ்தானியர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப் பட்டுவிட்டனர். இலங்கை வீரர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதி மானம் பறி போனது. பாப் வூமர் மேற்கிந்தியத் தீவில் ரத்த வெள்ளத்தில் மிதந்த போது மீதி மானமும் மறைந்தது."

நீதிபதி, "உனக்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது"

"அதற்கு முன்னாள் உங்களிடம் ஒரு கேள்வி. இதே ஒரு வெள்ளை கிரிக்கெட் வீரர் மேட்ச் பிக்சிங்கில் மாட்டியிருந்தால் அப்பொழுதும் உங்கள் விசாரணை இப்படித் தான் இருக்குமா? நன்றாக யோசித்து விட்டு தீர்ப்பு எழுதுங்கள்"

"கண்டிப்பாக, ஹன்சி குரோனே கதை தெரியாதா உனக்கு?"

"அதனால் தான் கேட்கிறேன், அவர் எப்படி இறந்தார் என்பது இன்று வரை ரகசியமாகவே இருக்கிறதே! முரளிதரன் எங்கே ஷேன் வார்னை முந்தி விடுவாரோ என்ற பயத்தில் அவரின் பௌலிங் திறமையை மீண்டும் மீண்டும் சோதித்தீர்கள். ஆசியர்களுக்கெதிரான ஐசிசியின் இந்த இனவெறித் தாக்குதல் என்று தான் அடங்குமோ!"

"என்ன பிதற்றுகிறாய்? நீ கூறுவதற்கும் இந்த கேசுக்கும் என்ன சம்பந்தம்?"

"அது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும்"

நீதிபதி, "முப்பது மாதங்கள் சிறைத் தண்டனை"

சல்மான் சிரித்துக் கொண்டே, "வாழ்க்கையே சிறை, வருகிறேன் கனவான்களே"

அடுத்து டவாலி அமீரை அழைக்கிறார்.

டவாலி, "அமீர், அமீர், அமீர்"

நீதிபதி, "மேட்ச் பிக்சிங்க்ல நிஜமாவே பணம் வாங்கினியா?"

அமீர், "என்ன பணம் வாங்கினியா?"

"இல்லப்பா, நீ காசு வாங்கிட்டு விளையாடினதா சொல்றாங்களே!"

"என்ன காசு வாங்கிட்டு விளையாடினதா சொல்றாங்க?"

"தம்பி, நீ உன் நாட்டுக்கு பெரிய கெட்ட பேரை உண்டாக்கியிருக்கியே, அதை சொல்றேன்"

"என்ன பெரிய கெட்ட பெயர் உண்டாயிடுச்சு?"

"ஏற்கனவே கிரிக்கெட்டுக்கும் மேட்ச் பிக்சிங்குக்கும் வாய்க்கா தகராறு இருக்கு"

"என்ன வாய்க்கா தகராறு இருக்கு?"

நீதிபதி கடுப்பாகி, "நீ ஜட்ஜா நான் ஜட்ஜா?"

"என்ன நீ ஜட்ஜா நான் ஜட்ஜா?"

"டேய், உனக்கு 20 வருஷம் ஜெயில் தண்டனை, போயிடு"

போலீஸ் அதிகாரி குறுக்கிட்டு, "ஐயா, இவனை 20 வருஷம் ஜெயிலில் வெச்சிருந்தா எங்க நிலைமை என்னாவும்? பார்த்து செய்ங்க"

நீதிபதி, "ஆறு மாசம், ஒழிஞ்சு போ"

அமீர், "என்ன ஆறு மாசம்?"

நீதிபதி டென்ஷனாகி கத்தியபடியே கோர்ட்டை விட்டு தலை தெறிக்க ஓடுகிறார், கோர்ட் கலவரமாகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...