Monday, November 21, 2011
இந்தியா - 2020
எவ்ளோ நாளைக்குத் தான் டிராபிக் சிக்னல்ல நிக்கற பிச்சைக்காரங்களையும் ஊனமுற்றவங்களையும் பார்த்து உச்சுக் கொட்டி பரிதாபப் படறது? நான் கடவுள் படத்துல பாலா உண்மையை வெட்ட வெளிச்சமாக் கட்டிட்டார். அதனால இடுக்கண் வருங்கால் நகுகன்னு வள்ளுவர் சொன்ன மாதிரி கொஞ்சம் லைட்டா.....
ஒரு பிரபல தனியார் வங்கியின் கிளை.
விவேக் ஏதோ ஒரு வேலைக்காக அங்கே வந்திருக்கிறார். அவரிடம் ஒருவர் பேனா கேட்கிறார். பேனா கேட்கும் நபரை நிமிர்ந்து பார்த்து அதிர்கிறார்,
"நீயா?.."
"ஆமாம், நானே தான், வாந்தி எடுக்கறவன் எல்லாம் வண்டி எடுன்னு சொல்றான்னு சொன்னீங்களே, அதே பிச்சைக்காரன் தான்"
"டேய், நீ இங்க என்னடா பண்ற?"
"பணம் போட வந்தேன், நீங்க?"
"பணம் வாங்க வந்தேன், ஐ மீன் கடன் வாங்க வந்தேன்"
"இங்க ஏன் வாங்கறீங்க? அநியாய வட்டி வாங்குவாங்களே? நான் தரேன், இவங்களை விட கம்மி ரேட்டுக்கு"
"இந்த பிசினஸ் வேற பண்றியாடா நீ?"
"இதுவும் பண்றேன், ஒரு பத்து நிமிஷம் இருங்க, ஒரு வயர் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டு வரேன்"
"எல்லாம் உன் நேரம்டா"
பிச்சைக்காரர் வெளியே வருகிறார்.
"சொல்லுங்க சார், உங்களுக்கு எவ்ளோ பணம் தேவைப்படுது?"
"அது இருக்கட்டும், உங்க கிட்ட எப்படி இவ்ளோ பணம்?"
"உழைக்கறோம்ல"
விவேக், "அப்போ நாங்கல்லாம் சும்மாவா இருக்கோம்? நாங்களும் தான் உழைக்கறோம்"
"நீங்க சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க, நாங்க சுய தொழில் செய்யறவங்க"
"என்னது தொழிலா? நீ செய்யறது தொழில்னா டாட்டா பிர்லா அம்பானி இவங்க செய்யறதெல்லாம் என்னடா?"
"நாங்களும் டாட்டா அம்பானி தாங்க. இந்தியன் GDPல எங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கு "
"GDPயா?"
"கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட். இது கூடத் தெரியாதா?"
விவேக், "விட்டா பாலன்ஸ் ஷீட், ப்ராபிட் அண்ட் லாஸ் அக்கௌன்ட் எல்லாம் வெச்சிருப்பே போலிருக்கே?"
"அதெல்லாம் என் ஆடிட்டர் தான் பாத்துக்கறார்"
"இருந்தாலும் பிச்சை எடுக்கறது கேவலம் தானே?"
நீங்க கூட பல சினிமாக்கள்ல பிச்சைக்காரங்களைப் பற்றியும் பிச்சை எடுக்கறதைப் பற்றியும் காமெடி பண்ணியிருக்கீங்க. அப்படின்னா அதெல்லாம் கேவலமா? சிநேகிதனை, சிநேகிதனை - மறந்துட்டீங்களா?
விவேக், "அந்தப் பாத்திரத்தை மறக்க முடியுமா!ஆனா அதெல்லாம் காமெடிக்காக எழுதினது"
பிச்சைக்காரர், "பட் உங்க பொழைப்பு ஓடிச்சுல்ல. ஹிட் ஆச்சுல்ல? யார் தான் சார் பிச்சை எடுக்கலை? நாங்க ஓபனா செய்யறோம், நீங்க மறைவா செய்யறீங்க. அவ்ளோ தான் வித்யாசம்"
"அதுவும் சரி தான்"
"பெரிய பெரிய முதலாளிங்க எல்லாம் கம்பெனி நஷ்டத்துல ஓடுதுன்னு சொல்லிட்டு கவெர்மென்ட் கிட்ட போய் மானியம் குடுங்கன்னு நிக்கறாங்க. அது பிச்சை இல்லையா?. நாங்க ஒண்ணும் ஊரை அடிச்சு உலையில போடலை. மக்கள் அவங்களால முடிஞ்சதை எங்களுக்குத் தராங்க. அத வெச்சு நாங்க பொழைக்கறோம்"
"என்னமா லாஜிக் பேசறே"
"அத்தனையும் உண்மைங்க. நாங்களும் சமுதாயத்துல பெரும்புள்ளிங்க தான். எங்களுக்கும் சுவிஸ் பாங்க்ல அக்கௌன்ட் இருக்கு"
"டேய் என்கிட்டே சுவிஸ் நைப் கூட இல்லையேடா"
"நீங்க கூலிக்கு மாரடிக்கறவங்க, நாங்க சுய தொழில் செய்யறவங்க"
"மறுபடியும் தொழில்னு சொல்லாதேடா"
"ஏங்க சொல்லகூடாது? அரசாங்கமே தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்காங்க"
"எதைப்பத்தி?"
"எங்களைப் பற்றித்தான். இதை ஒரு முறையான தொழிலா அறிவிச்சு தேசிய அளவுல ஏலம் விட்டு லைசென்ஸ் கூட குடுக்கப் போறாங்க"
"எதுக்கு லைசென்ஸ்?"
"பிச்சையெடுக்கத் தான். நான் கூட கம்பெனி பார்ம் பண்ணிட்டேன்"
"கம்பெனியா?"
"ஆமாங்க, முன்ன மாதிரி அங்க இங்க ஓடி பிச்சை எடுக்க முடியல. இப்படி ஒரு கம்பெனி ஆரம்பிச்சு லைசென்ஸ் வாங்கிட்டோம்னு வைங்க, அப்புறம் என் staff போய் பிச்சை எடுத்துட்டு வருவாங்கல்ல "
"அடேங்கப்பா, நான் உன்னை என்னமோ நினைச்சேன், ஆனா உன் ரேஞ்சே வேறயா இருக்கு. ரொம்ப விவரமாத்தான் இருக்கே"
"இல்லேன்னா தொழில் பண்ண முடியுமா?"
"வேறேன்னெல்லாம் ஐடியா வெச்சிருக்கே?"
கவெர்மென்ட் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி குடுத்தாங்கன்னா ஒரு வெளி நாட்டுக் கம்பெனிய என் கூட பார்ட்னரா சேர்த்துக்குவேன். அப்புறம் IPO மூலமா என் கம்பெனிய பப்ளிக் லிமிடெட் கம்பெனியா மாத்திடுவேன்.
"இப்பவும் உன் கம்பெனி பப்ளிக் தயவுல தானேடா ஓடுது?"
அப்புறம் ஒரு பெரிய இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கணும்
"யாருக்கு?"
"பிசைக்காரங்களுக்குத் தான்"
"எதுக்கு"
புதுசா பிச்சை எடுக்க வர்றவங்களுக்கு அங்க ட்ரைனிங் குடுக்கணும்.
"என்ன ட்ரைனிங் குடுப்பே?"
"எல்லா மொழிகள்லயும் பிச்சை எடுக்கறது எப்படி, போலீஸ் மற்றும் ரவுடிகளை ஹேண்டில் செய்வது எப்படி, ரக வாரியா பைசாவை எப்படி சீக்கிரம் எண்றது, பார்த்தா சட்டுன்னு அருவருப்போ இல்லை பரிதாபமோ வர்ற மாதிரி எப்படி மேக்கப் போடறது - இப்படி நிறைய விஷயம் யோசிச்சு வெச்சிருக்கேன். குறிப்பா மேக்கப்புக்கு கமல் சாரை டிரைனராப் போடலாம்னு ஒரு ஐடியா இருக்கு.
"அட அட அட, இளைஞர்களே, நோட் பண்ணுங்கப்பா"
இன்னும் கேளுங்க. மக்கள் போன் பண்ணினாப் போதும். டோல் ப்ரீ நம்பர் தான். நாங்களே வீடு தேடி போய் பிச்சை வாங்கிப்போம். மொபைல் மூலமாவும் எங்களுக்கு பிச்சை போடலாம். ஒரு சின்ன அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணிக்கிட்டாப் போதும். ரெகுலரா பிச்சை போடறவங்களுக்கு நாங்க பாயிண்ட்ஸ் குடுப்போம். அதை அவங்க ஷாப்பிங் பண்ணும்போது ரீடீம் பண்ணிக்கலாம். இல்லேன்னா வருஷ முடிவுல அவங்களுக்கு சர்டிபிகேட் தருவோம், அதைக் காட்டி வருமான வரிலேர்ந்து விலக்கு வாங்கிக்கலாம்.
விவேக், "ஆஹா, நான் ஒரு காலத்துல காமெடியா சொன்னதெல்லாம் இப்ப நிஜமாலுமே நடக்கும் போலிருக்கே?"
"இது என் கனவுங்க. கனவு காணுங்கள்னு அப்துல் கலாமே சொல்லியிருக்காரே, உங்களுக்குத் தெரியாததா?"
விவேக், "உனக்கும் அவர் தான் ரோல் மாடலாடா? பாவம்டா அவரு. ஏற்கனவே கூடங்குளம் மேட்டர்ல மாட்டிகிட்டு மனுஷன் முழிக்கறாரு. இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாரு"
இதற்கிடையில் பிச்சைக்காரரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார். "சொல்லுங்க தலைவரே, ஒஹ் அப்படியா? கண்டிப்பா, நாளைக்கே உங்க ஆளுங்களை அனுப்பி வாங்கிக்கோங்க"
பின்னர் விவேக்கைப் பார்த்து, " நாக்கமுக்க கட்சிலேர்ந்து பேசறாங்க. இடைத்தேர்தல் வருதாம், தேர்தல் நிதி வேணுமாம், வந்து வாங்கிக்கோங்கன்னு சொல்லியிருக்கேன். பிச்சைக்காரப் பசங்க, என்கிட்டயே பிச்சை கேக்கறாங்க"
"உங்ககிட்ட தானே ரெகுலரா இன்கம் வருது, அதுவும் டாக்ஸ் ப்ரீ. அதனால தான் கேக்கறாங்க"
"எங்கெங்க வருது? முன்னாடியெல்லாம் மக்கள் கிட்ட காசு கம்மியா இருந்திச்சு. ஆனாலும் நிறைய தர்மம் பண்ணினாங்க. இப்ப காசு நிறைய இருக்கு. ஆனா மனசு சின்னதாயிடுச்சு. எல்லாம் சுயநலவாதியா ஆயிட்டாங்க. அந்த அளவுக்கு போட்டி பொறாமை. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. எல்லாரும் நித்ய கண்டம் பூரண ஆயுசுன்னு வேலை இன்னிக்கு போவுமோ நாளைக்கு போவுமொன்னு இருக்காங்க. போதாக்குறைக்கு என்னமோ சொல்றாங்களே, ரேஷனோ ரெசெஷனோ, அது வேற வந்திருக்காம். அரசாங்கமும் புதுசா தொழில் எதுவும் கொண்டு வரமாட்டேங்கறாங்க. எவ்ளோ நாளைக்குத் தான் கம்பியூட்டரை வெச்சு ஓட்டறது சொல்லுங்க? மக்கள் சம்பாதிச்சாத் தானே நாங்க சம்பாதிக்க முடியும்.
நீ சொல்றதை எகனாமிக் டைம்சிலேயே பப்ளிஷ் பண்ணலாம் போலிருக்கே!"
"போன வாரம் என்னோட இண்டர்வியூ வந்திச்சே, பாக்கலியா நீங்க?"
"ஆ, போதும்டா போதும்டா, என்னால இதுக்கு மேல தாங்க முடியாது"
பிச்சைக்காரர் சிரித்துக் கொண்டே, "அது சரி, உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லவே இல்லையே?"
"எனக்கு ஒரு 5 லட்சம் வேணும்"
"அவ்ளோ தானா? ஒரு நிமிஷம் இருங்க"
தன் ஐபோன் மூலம் விவேக்கை போட்டோ எடுக்கிறார். பிறகு போனில் அவரது கை ரேகையையும் எடுத்துக் கொள்கிறார்.
"டேய் என்னாங்கடா இது, புதுசா இருக்கு?"
பொறுங்க என்று சைகையில் காட்டிவிட்டு ஏதோ நாலைந்து முறை போனை தட்டுகிறார். பிறகு யாரிடமோ பேசுகிறார். "டேய் மாரி, டீடைல்ஸ் அனுப்பியிருக்கேன். சாருக்கு ஒரு 5 லட்சம் கேஷ் வீட்ல டெலிவர் பண்ணிடு, ஓகேவா?
விவேக் பிச்சைக்காரரைப் பார்த்து, "நீ என்கிட்டே எந்த விவரமும் கேக்கலையே, அப்புறம் எப்படி எனக்குப் பணம் கிடைக்கும்?"
பிச்சைக்காரர், "அதான் உங்க போட்டோ அண்ட் ரேகை இருக்குல்ல, அதை வெச்சு கண்டுபிடிச்சிடுவோம். நீங்க பணம் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால் குடுங்க, நாங்களே வந்து கலெக்ட் பண்ணிக்குவோம் - கஸ்டமர் சர்வீஸ் ரொம்ப முக்கியம் இல்லையா?"
"நீங்க இப்படியெல்லாம் பயன்படுத்துவீங்கன்னு முன்னமே தெரிஞ்சு தானோ என்னமோ, ஸ்டீவ் ஜாப்ஸ் சீக்கிரமே போயிட்டாரு. சரி, நான் உங்களை ஏமாத்திட்டு ஓடிட்டா?"
அதான் முடியாது. எங்க டேட்டாபேஸ் ரொம்ப ஸ்ட்ராங். இந்தியாவுல இருக்குற எல்லா பிச்சைக்காரங்க கிட்டயும் உங்க போட்டோ இருக்கும். நீங்க எங்களை ஏமாத்திட்டு எங்கேயும் ஓட முடியாது. ஏன்னா நாங்க தான் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், ஏர்போர்ட்னு எல்லா இடத்துலயும் இருக்கோமே!
"ஆமாம், கடவுள் இருக்காரோ இல்லையோ, கண்டிப்பா நீங்க எல்லா இடத்திலயும் நீக்கமற நிறைஞ்சிருக்கீங்க.
அப்படியும் மீறி நீங்க பிரச்சினை பண்ணினா, இருக்கவே இருக்கு ஆபீஸ் ரூம்"
"ஆபீஸ் ரூமா?"
"எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச ஆபீஸ் ரூம் தான் சார்"
"ஆஹா, அந்த ஆபீஸ் ரூமா? ஐ ஆம் எஸ்கேப்"
Labels:
Jai's Comedy Bazaar
Subscribe to:
Post Comments (Atom)
:-))) Super
ReplyDeleteThanks giri
ReplyDelete