Sunday, July 28, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 13
நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா அல்லது லாஸ் வேகாசுககு வந்துவிட்டோமா என்ற ஐய்யத்தை ஏற்படுத்திவிட்டது அஜய் செல்லையாவிற்குச் சொந்தமான அந்த பண்ணை வீடு. அங்கே தான் பிரீமியர் லீக் அணிகளின் முதல் அறிமுக பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது . அணி வீரர்கள், முதலாளிகள், அவர்களின் நண்பர்கள், நலம் விரும்பிகள் என இந்தியாவின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் அங்கே ஆஜராகியிருந்தனர். அரை ஆடையுடன் ஆங்கிலப் பெண்கள், குறை ஆடையுடன் இந்தியப் பெண்கள், சீட்டுக் கட்டு முதற்கொண்டு பல வகையான சூதாட்ட விளையாட்டுகள், பல வண்ணங்களில், பல விதங்களில் உற்சாக பானங்கள் (பானி பூரிக்குள் வோட்கா) - மது, மாது, சூது என முப்பெரும் விஷயங்கள் ஐக்கியமாகியிருந்தது அங்கே.

பொறுப்பாளர் என்ற முறையில் லலித் எல்லோரிடமும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான். அவ்வப்பொழுது ஆங்காங்கே நின்று கொண்டிருந்த வெள்ளைப் பெண்களிடமும் கொஞ்சிக் குலாவினான்.

அங்கேயிருந்த பல சொகுசு சோபாக்கள் ஒன்றில் ரகுவும் அவன் மனைவியும் அமர்ந்திருந்தனர். மனைவி அருகில் இருந்தாலும் ரகுவின் பார்வை முழுக்க எதிர்த் திசையில் அமர்ந்திருந்த மொஹிந்தரின் மீதும் அவனை உரசிக் கொண்டிருந்த லாஜ்வந்தி ராயின் மீதும் தான் இருந்தது. லாஜ்வந்தி, தமிழ் மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை. மங்களூர் ராய்க்கும் பெங்காலி ராய்க்கும் உள்ள குழப்பத்தை சரியாகப் பயன்படுத்தி வரும் நடிகை. இன்னமும் நட்சத்திர நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறார். மொஹிந்தரின் குடும்ப நண்பி மற்றும் கேரளா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் பெண் தோழி என்று தொடர்புகள் இருப்பதால் விக்ரம் இவளை அணுகி உளவு பார்க்குமாறு அனுப்பியுள்ளான். ஆனால் அவள் மொஹிந்தருக்கு துரோகம் செய்வாளா என்பது கேள்விக்குறி.

மொஹிந்தர் முழு ஜீன்ஸ் அணிந்திருந்தான். லாஜ்வந்தியும் ஜீன்ஸ் அணிந்திருந்தாள் - 70% தள்ளுபடி செய்து. அவனுடன் தொடையோடு தொடை உரசி அவன் தோள் மேல் கை போட்டு உட்கார்ந்திருந்தாள். மொஹிந்தர் மொபைலில் எதையோ காட்ட அதை என்னவென்று கூட பார்க்காமல் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். இவை அனைத்தும் எதிரே இருந்த ரகுவை உணர்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தின. அவளை மொஹிந்தரின் தோழியாகப் பார்ப்பதா, அல்லது அவளின் இளமையை ரசிப்பதா, அல்லது வன்மையாகக் கண்டிப்பதா என்று மிகவும் குழம்பியதில் ஒரே மூச்சில் கையிலிருந்த விஸ்கியை குடித்தான். பாருவோ படு கூலாக அருகே இருந்த வருணிடம் வியாபாரம் பேசிக் கொண்டிருந்தாள். இவை எதுவுமே அவளை பாதிக்கவில்லை.

பிரபல பேண்ட் வாத்யக் குழுவினர் காது கிழியும் அளவிற்கு இசையின் ஒலியைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். 20 பேர் நிற்கக் கூடிய நடன மேடையில் 70 பேர் நின்று ஆடிக் கொண்டிருந்தனர். கோபியர் கூட்டத்துக்கு நடுவே கண்ணனைப் போல ஹர்கிரத்தும், ப்ரித்வியும் பெண்களுக்கு மத்தியில் நடுநாயகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

இவர்களைப் போலவே மற்ற அணியினரும் முதலாளி மற்றும் கேப்டன் சமேதமாக அங்காங்கே அமர்ந்திருக்க ராதேவும் பாலாவும் ஆளுக்கொரு பியர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

பாலா, "என்னய்யா எல்லாம் ஒழுங்கா வர்க் அவுட் ஆகும்ல? உன்னை நம்பித்தான் இறங்கியிருக்கோம்"

ராதே, "சின்தா மத் கரோ பாய், நல்லபடியா வரும். என்ன, இந்த மொஹிந்தர் பய ஒத்துழைக்க மாட்டான். என் டீலிங் அவனுக்குத் தெரியும். போட்டுக் கொடுக்காம இருக்கணும்."

பாலா, "அது சரி, இந்த பிக்சிங் மேட்டர்ல துபாய் டேவிடுக்கும் தொடர்பு உண்டுன்னு அடிக்கடி சொல்றாங்களே? உண்மையா?

"பின்னே? நடத்தறதே அவர் தானே? இல்லேன்னா இங்கே இருக்கற அரசியல்வாதிகள் ஒருத்தருக்கொருத்தர் போட்டுக் கொடுத்து இந்நேரம் கதையை முடிச்சிருப்பாங்களே"

"நீ அவர் கூட நேரடியா பேசியிருக்கியா?"

"அதெல்லாம் முடியாது. சின்னத்தம்பின்னு ஒருத்தன் இருக்கான். அப்புறம் குருஜின்னு ஒருத்தர் இருக்காரு. அவங்க மூலமாத் தான் பேச முடியும்"

இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீகாந்த் அங்கே வந்தான் "என்ன ரெண்டு பேரும் ஓரமா இருக்கீங்க? அங்கே பாருங்கப்பா, பொண்ணுங்க எல்லாம் என்னமா இருக்குங்க. அதையெல்லாம் ரசிக்கறதை விட்டுட்டு.."

பாலா, "வாங்க சேட்டா"

ராதே, "வேண்டாம்பா, இந்த பொம்பளை ஷோக்குல தான் சமீபத்துல போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டேன் போதை ஏறிடுச்சுன்னா என்ன பண்றோம்னே தெரிய மாட்டேங்குது"

பாலா, "சேட்டா, நீங்க இங்க இருக்கீங்க, உங்க ஆளு எங்க?"

ராதே, "அவ தான் மொஹிந்தரை விட்டு நகர மாட்டேங்கறாளே"

ஸ்ரீகாந்த் "அவங்க ரெண்டும் பேரும் குடும்ப நண்பர்கள். சின்ன வயசு பழக்கம்"

பாலா, "பார்த்துங்க, மொஹிந்தர் ஹாட் ப்ராப்பர்ட்டி. கிராமத்துப் பெண்கள் எல்லாம் அவனை புருஷன் வேணும்னு நேர்ந்துக்கிட்டிருக்காங்க. மேடம் அந்த பக்கம் சாஞ்சுடப் போறாங்க"

ஸ்ரீகாந்த், "அதெல்லாம் போக மாட்டா, எங்க மாமா மூலமா அவளுக்கு 2-3 மலையாள சினிமாவுல சான்ஸ் வாங்கித் தர்றதா சொல்லியிருக்கேன் ஸோ, அது வரைக்கும் என் கூடத் தான் இருப்பா"

ராதே, "ரொம்ப சின்சியரா லவ் பண்றீங்களோ?'

"அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது. இப்போதைக்கு ப்ரீபெயிட், போகப் போக எப்படின்னு தெரியல. ராதே, உன்கிட்டே தனியா ஒரு விஷயம் பேசணுமே?"

பாலா, "பிக்சிங் பத்தின்னா இங்கேயே பேசுங்க, ஏன்னா நாங்களும் கேம்ல இருக்கோம்"

சற்று அதிர்ச்சியடைந்தாலும் "இந்த வருஷம் யார் மேல பைசா அதிகம் கட்டியிருக்காங்க?"

ராதே, "ஜெய்ப்பூர் மற்றும் சென்னை தான். ஏன்னா இரண்டு டீம்லயும் அரசியல் மற்றும் கிரிக்கெட் குழுவோட மறைமுக சப்போர்ட் இருக்கு. இவங்க ரெண்டு பேர்ல ஒரு டீம் தான் கப் ஜெயிக்கும்னு நம்பறாங்க"

பாலா, "சேட்டா, உங்க டீம் எப்படி இருக்கு?"

"கொஞ்சம் டல்லாத்தான் இருக்கு. வெள்ளைக்கார பசங்க இந்த ப்ரீத்தா மேலேயே ஒரு கண்ணா இருக்காங்க. இதுவும் எந்நேரமும் போய் அவங்க முன்னாடி வழிஞ்சிக்கிட்டே இருக்கு.

"உன் முன்னாடி வழிஞ்சிருந்தா குஜாலாயிருப்பே, இல்லை?'

"எனக்கு அக்கா மாதிரிங்க.."

"ஆனாலும் பக்காவாத்தானே இருக்கு."

"வாஸ்தவம் தான், போதாக்குறைக்கு இந்த ப்ரித்வி பய வேற"

"உனக்கு பொறாமையா இருக்கா?"

"அப்படின்னு இல்லை, நாமளும் தான் திறமைசாலி."

பாலா, "சேட்டா, போலர்ஸ் சினிமாவுல வர்ற காமெடியன்ஸ் மாதிரி. நல்லா பாராட்டுவாங்க, முக்கியத்துவம் குடுப்பாங்க, ஆனால் முன்னிலைப்படுத்த மாட்டாங்க"

ராதே, "சரியா சொன்னே, நீதான் சவுத் ஆப்ரிக்கா டூர்ல பல காமெடிகள் பண்ணினியே, அந்த மாதிரி எதாச்சும் பண்ணு"

பத்மநாபன் தங்களை நோக்கி வருவதை அறிந்த பாலா, "சரி சரி, பத்மா சார் வராரு, கொஞ்சம் அடக்கி வாசிங்க"

பத்மநாபன், "ஹெலோ பாய்ஸ், என்ன, பார்ட்டி என்ஜாய் பண்றீங்களா?"

பாலா, "இல்ல அங்கிள், லைட்டாத் தான்.."

பிறகு ராதேவைப் பார்த்து, "என்னப்பா, சௌக்கியமா? உங்க அப்பா, துபைல இருக்கற அண்ணன் தம்பி எல்லாரும் சௌக்கியமா?" என்றார்.

ராதேவுக்கு தூக்கி வாரிப் போட்டாலும் வெளியே காட்டாமல்"எல்லாரும் ஓகே சார்". பிறகு ராதே பாலாவையும் ஸ்ரீகாந்தையும் பார்த்து, "நீங்க பேசிக்கிட்டிருங்க, நான் பாத்ரூம் போயிட்டு வர்றேன்" என்று கூறி வேகமாக நகர்ந்தான்.

பத்மநாபன் இருவரையும் பார்த்து "அவன் யாருன்னு தெரியும்ல? ஜாக்கிரதையா இருங்க" என்று எச்சரித்தார்.

"ஓகே சார்" என்று கூறிவிட்டு ஸ்ரீகாந்த் லஜ்வந்தியை நோக்கிப் போனான்.

பாலா, "சார், அவன் யார்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அப்புறமும் ஏன் விட்டு வைச்சிருக்கீங்க?"

பத்மநாபன், "வீரர்கள் கிரிக்கெட் விளையாடறாங்க. நாங்க விளையாட்டை நடத்தறோம். ஆனால் உண்மையான விளையாட்டை நம்ம நாட்டு அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தான் விளையாடறாங்க. இங்கேன்னு இல்ல, எல்லா ஊர்லேயும் இப்படித்தான். எந்த ஒரு புகழ்பெற்ற விளையாட்டா இருந்தாலும் அதுக்குப் பின்னாடி இந்த இரண்டும் இருக்கும். ஏன்னா மக்கள்கிட்டேர்ந்து காசு வர்றதினால எல்லாரும் அதில் மீன் பிடிக்கப் பார்ப்பாங்க - தங்க முட்டை போடற வாத்தை யாராச்சும் அறுப்பாங்களா?"

பாலா புரிந்த மாதிரி தலையாட்டினான்.

"இந்த விஷயம் ரகுவுக்குத் தெரியுமா?"

"தெரியும்.. ஆனா அவன் ஒத்துக்கலை"

சிறிது நேரம் யோசித்த பத்மநாபன் "ஜாக்கிரதை, பெயர் வெளிய வரக்கூடாது" என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார். பாலா, புரிந்தும் புரியாமலும் நின்றான்.பார்ட்டி அதிகாலை 3 மணிக்கு முடிந்தது. முதலாளிகளும் கேப்டன்களும் சம்பிரதாய போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்.

ஷீலா, ப்ரீத்தா மற்றும் மகேஷின் மனைவி அனிதா ஆகியோர் தங்கள் டீம் கேப்டன்களிடம் குழைந்தது அவர்களின் கணவர்களுக்கு சற்றும் பிடிக்கவில்லை - இந்திய ஆண்கள் அப்படித்தான்!

அணியின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், யார் யார் எதைச் செய்ய வேண்டுமென்று ஷாதிக்கிற்கு முழு நேர கிளாஸ் எடுத்து அவனுக்கு இரட்டைத் தலைவலியை வரவழைத்தான் கௌரவ்.

ஷயனும் கோகுலும் கிரிக்கெட்டைப் பற்றியும் புதிய புதிய டெக்னிக்குகளைப் பற்றியும் பேசிப்பேசி களைத்துப் போயினர்.

ஹர்கிரத்தும், ப்ரித்வியும் தங்கள் திறந்தவெளிக் காரில் 2-3 பெண்களுடன் ஹோட்டலை நோக்கி உற்சாகமாக விரைந்தனர்.

எல்லோரிடமும் வம்படித்த நரேந்தர் மொஹிந்தரிடம் மட்டும் சம்பிரதாயமாகப் பேசினான்.

பார்ட்டிக்கு வந்திருந்த தொழிலதிபர்களிடமும் அரசியல் புள்ளிகளிடமும் வலிந்து பேசி 10 கோடி ரூபாய்க்கு புதிய கான்ட்ராக்டைப் பிடித்தனர் மொஹிந்தரும் வருணும்.

குழந்தைகள் தூங்கிவிட்டதால் பார்ட்டி முடியுமுன்னரே ஹோட்டலுக்குத் திரும்பினர் ரகுவும் பாருவும். இனிமேல் லீக் பார்ட்டிகளுக்கு குடும்பத்துடன் வருவதில்லை என மனதுக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டான் ரகு.

லஜ்வந்தியும் ஸ்ரீகாந்தும் பார்ட்டி நடந்த இடத்திலேயே ஒரு சிறிய அறையில் "செட்டில்" ஆகியிருந்தனர்.

போட்டி ஆரம்பிக்கும் முன்னரே 65 கோடிக்கு மேல் அட்வான்ஸ் புக்கிங் நடந்திருப்பதாக விக்ரம் தலைவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தான்.

நாளை மறுநாள் போட்டி ஆரம்பம்.....ஆட்டம் தொடரும்...

Friday, July 12, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 12


"பாய், திவாலி ஆகயா" என்று கூவிக்கொண்டே வந்தான் ஹைதர் அலி.

"என்ன சொல்றே?"என்று கேட்டவாறு பைப்பில் இருந்த புகையிலையை பற்ற வைத்தான் டேவிட் ஆபிரகாம். இந்தியாவில் நடக்கும் விதவிதமான பண மோசடிகள், சூதாட்டம், ஆட்கடத்தல், போதை மருந்து கடத்தல் போன்ற அனைத்து வித குற்றங்களுக்கும் ஒரே மூல காரணமாக கருதப்படுபவன் டேவிட். பல சமயங்களில் கேடு கெட்ட இந்திய அரசியல்வாதிகளுக்குக் கை கொடுக்கும் பிராண்டட் கிரிமினல். கடவுளைக் கூட கண்டுபிடித்து விடலாம். இவனை இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். மீடியாக்காரர்கள் பாடு தான் திண்டாட்டம். இவனைப் பற்றி எதாவது செய்தி போட வேண்டுமென்றால் ஒரு லேட்டஸ்ட் போட்டோ கூட கிடையாது. பாவம், 20 வருடத்துக்கு முந்தி எடுத்த போட்டோவை மாற்றி மாற்றி காண்பித்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

"நிஜமாத்தான் பாய், புதுசா பாரத் பிரீமியர் லீக்னு ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கப் போவுது. 20-20 பார்மாட்ல"

"அதுக்கு?"

"நாமளும் வழக்கம்போல கலந்துக்க வேண்டியது தான்"

"நமக்கென்ன லாபம்?"

"என்னண்ணே புதுசா கேக்கறே? ஒவ்வொரு தடவையும் அவங்களை விட நாம தானே அதிகமா சம்பாதிக்கறோம்"

"அட போய்யா,"

"இது தனியார் போட்டிண்ணே, பெரிசா கட்டுப்பாடுன்னு ஒண்ணும் கிடையாது"

"அங்க தான்யா போரடிக்கும். த்ரில் இருக்காது பாரு"

"ஏண்ணே?"

"த்ரில் எவ்ளோ அதிகமா இருக்கோ அவ்ளோ அதிகமா நாம சம்பாதிக்கலாம். அதுவுமில்லாம இதுல முதலாளிங்களே பந்தயம் கட்டி சம்பாதிக்க பார்ப்பானுங்க. நமக்கு வேலை இருக்காது"

"இருந்தாலும்.."

"சொல்றதை கேளு. இப்போ தான் 2 வேர்ல்ட் கப்ல ஏகப்பட்ட பிக்சிங் பண்ணியிருக்கோம். போலிஸ் இந்நேரம் நாம பண்ணின தொலைபேசி அழைப்புகளை பிரிச்சி பேன் பார்த்துக்கிட்டிருப்பாங்க. இந்நேரத்தில் நாம மறுபடியும் ஆரம்பிச்சோம்னா வீண் பிரச்சினை"

"நம்மளை யாருண்ணே பிடிக்கப் போறாங்க?"

"அப்படி நினைக்கவே கூடாது தம்பி. எவ்வளவு தான் கோடிகளில் சம்பாதிச்சாலும் பவர் இருந்தாலும் நாம என்னிக்குமே திருடங்க தான்"

"சரி, அப்போ குருஜி கிட்ட வேண்டாம்னு சொல்லிடவா?"

"சொல்லிடு சொல்லிடு"என்று டேவிட் கூறும்பொழுது தொலைபேசி அழைத்தது. அழைக்கும் நபர் பெயர் கண்டவுடன் வியப்படைந்த டேவிட் ஹைதரை காத்திருக்குமாறு சைகை செய்தான்.

*********************************************************************************

"மாமாஜி, எல்லாம் பக்காவா ரெடி பண்ணியாச்சு" என்று பூரிப்புடன் கூறினான் ஸ்வராஜ்.

"எதைச் சொல்றே?"

"நீங்க எதை கேட்கறீங்க?"

"நான் டீமை கேட்டேன்"

"நான் பெட்டிங் பத்திக் கேட்கறீங்களோன்னு நினைச்சேன்"

"அதில தான் நீ குறியா இருக்கியே, பக்காவாத் தான் பண்ணியிருப்பே'

"பின்னே என்ன மாமாஜி. எப்படியும் எவனோ ஒருத்தன் பெட்டிங்கோ பிக்சிங்கோ பண்ணி சம்பாதிக்கப் போறான். அதை நாமளே செஞ்சா என்ன? உங்களுக்குத் தெரியாததா?"

"அதெல்லாம் சரி தான். ஆனா இது சரியில்லை"

"சரி தப்பு பற்றி யோசிக்கற கட்டத்தை நான் தாண்டியாச்சு. இனிமே ஆக்ஷன் தான்"

"எல்லாம் சரி, ஜாக்கி யாரு?"  (ஜாக்கி என்பது பெட்டிங் ஒருங்கிணைப்பாளருக்கான சங்கேத வார்த்தை)

"ராதே சிங்"

*********************************************************************************

"அய்யய்யோ என்னால முடியாது. என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்க" என்று மிரண்ட படியே விஸ்கியை ஒரு மிடறு விழுங்கினான் ரகுநாத்.

"எதுக்குய்யா பயப்படறே? கிரிக்கெட்ல இதெல்லாம் சகஜமப்பா" என்று அவன் க்ளாசில் இன்னும் கொஞ்சம் விஸ்கியை ஊற்றினான் பாலா. கூடவே கதிர்வேலும் இருந்தான்.

"என் மாமனாருக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான்"

"அங்க தான் உனக்கு எந்த மரியாதையும் கிடையாதே, அப்புறம் எதுக்கு நடுக்கம்?"

"ஏற்கனவே உதாவக்கரை மாப்பிள்ளைன்னு ஊர் முழுக்க சொல்லிக்கிட்டுத் திரியறாரு. இருந்து இருந்து இப்போ தான் என்னை நம்பி ஒரு பொறுப்பை குடுத்திருக்கார். இப்ப போய்..."

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள் மச்சி"

கதிர்வேலு, "ஆமாம் மச்சி, நீ ஒரு கருவியா மட்டும் இருந்தாப் போதும். மத்ததை நாங்க பார்த்துக்கறோம். உன் பெயர் வெளியே தெரியாது"

"எதாவது ஏடாகூடமானா என் பொண்டாட்டி மூஞ்சியில் நான் எப்படி முழிப்பேன்?"

"நீயாச்சும் உன் பொண்டாட்டி மூஞ்சியில் முழிக்கறதைப் பற்றி யோசிக்கறே. நாங்க பொண்டாட்டி மூஞ்சியில் முழிச்சே பல நாள் ஆச்சு. வெட்டி ஆபிசர் போறார் பாருன்னு வெளிப்படையா கிண்டல் பண்றாங்க எங்க வீட்ல. இதுல எதாச்சும் சம்பாதிச்சு கொஞ்சம் கௌரவத்தைத் தேத்திக்குவோம்"

"அதுக்காக என்னை பலியாடாக்கப் பார்க்கறீங்களா?"

"சரிப்பா, உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுடு, ஏதோ நண்பர்களுக்கு உதவி பண்ணுவேன்னு நினைச்சோம்"

"இது உதவியில்லை, துரோகம்"

"அப்போ நீ பொறுப்பெடுத்திருக்கியே, அந்த டீம்ல எங்களுக்கு எதாச்சும் வேலை போட்டுத் தர்றியா? நாங்க வேணும்னா வீரர்களோட பேட்டிங் கிட்டைக் கூட தூக்கத் தயார்"

"இது நியாயமான உதவி. நீங்க அதெல்லாம் ஒண்ணும் தூக்க வேணாம். வேற வேலை போட்டுத் தரேன்"

பாலாவும் கதிரும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்

*********************************************************************************

"தலைவரே, இன்னும் போட்டி ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ளே தொலைபேசி அழைப்புகள் பறக்குது" என்றான் விக்ரம்

"அப்படியா?"

"அதுவும் சென்னை, ஜெய்ப்பூர், மும்பை - இந்த மூணு லொகேஷன்கள் தான் ஹாட்"

"இரு இரு. போட்டி ஆரம்பிக்கட்டும். கல்கத்தா, ராஞ்சி, சண்டிகர்னு லிஸ்ட் நீளும்"

"நீங்க ஏன் இதை தடுக்கக் கூடாது?"

"தடுக்கலாம். ஆனால் அதுக்கு நான் உயிரோட இருக்கணுமே - வேர்ல்ட் கப் ஆடப்போன இடத்தில அந்த கோச் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தானே, எப்படி? யாரால? எதாவது தெரிஞ்சுதா? மலர் வளையம் வைச்சது தான் மிச்சம்"

வியப்போடும் சற்று திகிலோடும் தலைவரை நோக்கினான் விக்ரம்.

"கிரிக்கெட்ல பெட்டிங் பண்றவங்க எல்லாருமே ஒரு கருவிங்க தான். அதுக்கு மூலம் எதாவது ஒரு அரசியல் கட்சி தான் இருக்கும். ஏன்னா அவங்களுக்கு சம்பாதிக்கறதுக்கு இதை விட எளிதான வழி கிடையவே கிடையாது. நம்ம கிரிக்கெட் குழு ஆரம்பிச்சு இவ்ளோ வருஷம் ஆவுது, இன்னும் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஏன்? - புரிஞ்சுக்க"

"அப்புறம் எங்களை எதுக்கு தொலைபேசியை ஒட்டுக் கேட்கச் சொல்றீங்க?" நீங்க பாட்டுக்கு சம்பாதிக்க வேண்டியது தானே?"

"அங்க தான் ட்விஸ்ட் இருக்கு. எப்பவுமே அடுத்தவன் நம்ம கட்டுப்பாட்டில் இருக்கணும். நம்மளை விட அதிகம் சம்பாதிக்கக் கூடாது. அவனை அப்பப்ப மிரட்டறதுக்கு ஒரு துருப்புச் சீட்டு வேண்டாமா? அதுக்குத் தான்"

"என்னவோ போங்க. எல்லாரும் சேர்ந்து எங்க உயிரை வாங்கறீங்க - எல்லாரும் கருவின்னு சொல்றீங்க, அப்போ நீங்களும்..."

"ஆமாம். வேற சாய்ஸ் கிடையாது. இல்லேன்னா ராஜினாமா பண்ணிட்டுப் போக வேண்டியது தான். வேற எவனாச்சும் சம்பாதிப்பான்.

"அப்போ கிரிக்கெட் விளையாடறதுக்காக இந்த குழு அமைக்கலியா?"

"ஆங், அதுவும் அப்பப்ப நடக்கும்"

வெறுப்பான புன்னைகையை உதிர்த்தான் விக்ரம்.

"இது ஏதோ மும்பை போலிஸ் மட்டும் செய்யற வேலைன்னு நினைக்காதே. டெல்லி போலீசும் இதுல முழுக் கவனம் செலுத்தறாங்க"

"சரி சார், நான் போனை வைக்கறேன். இன்னிக்கு உங்க கிட்டேர்ந்து நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி"

"அப்படியே அதையெல்லாம் மறந்துடு. ஞாபகம் வைச்சுக்காதே. உனக்குத் தான் ஆபத்து"

*********************************************************************************

போன் பேசி முடித்த டேவிட் நீண்ட பெருமூச்சு விட்டான். பைப்பில் புகையிலை சாம்பலாகியிருந்தது.

"யாருண்ணே?"

"எல்லாம் நம்ம பாடிகார்ட் தான். புதுசா ஒரு தீவிரவாதத் தாக்குதல் திட்டம் போட்டிருக்காங்க"

"எங்க?"

"கழுதை கெட்டா குட்டிச் சுவர். வழக்கம் போல மும்பையில் தான்"

"அதுக்கு?"

"நாம பணம் ஏற்பாடு பண்ணித் தரணுமாம்"

"சரியான பிச்சைக்கார பசங்க. இன்னும் எவ்ளோ தான் குடுக்கறது இந்த ஆளுக்கு? முதல்ல இவனைப் போடணும்"

"அவசரப்படாதே தம்பி. வேற எங்க போனாலும் கண்டவுடன் சுட்டுடுவாங்க. இங்க தான் நாம பாதுகாப்பா இருக்க முடியும்"

"அப்போ இந்தியாவில் போய் சரணடைஞ்சுடுங்க. கோர்ட் கேசுன்னு எப்படியும் 5 வருஷம் இழுத்தடிப்பாங்க. போலிஸ் பாதுகாப்பு, மீடியா கவரேஜ்னு ஜாலியா இருக்கலாம்"

"அப்புறம் திடுதிப்புன்னு ஒரு நாள் நம்மளை கொன்னுட்டு கைதிகளுக்குள் சண்டைன்னு சொல்லி கேசை மூடிடுவாங்க"

ஹைதர் திடுக்கிட்டான் "சரி, இப்போ என்ன பண்ணப் போறீங்க?"

டேவிட் யோசித்துக்கொண்டே மேசையில் இருந்த பேனாவை சுற்ற ஆரம்பித்தான். ஹைதர் முகம் மலர்ந்தது.

டேவிட், "லெட் த கேம்ஸ் பிகின்"
ஆட்டம் தொடரும்....

Wednesday, July 3, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 11"என்னய்யா இப்படிப் பண்ணிட்டே?" என்று ஸ்வராஜைப் பார்த்து கடுப்பாகக் கேட்டான் லலித்.

"இப்போ என்ன ஆச்சு?"

"என்ன ஆச்சா?

நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு வெளிநாட்டு வீரர்களை வளைச்சுப் போட்டுட்டே. இப்போ எப்படி பணம் புரட்டறது?"

ஷீலா, "வேறென்ன செய்யச் சொல்றீங்க? இந்திய நட்சத்திர வீரர்கள் எல்லாரும் ஏலத்துக்கு முன்னாடியே புக் ஆயிட்டாங்க. அதனால வேற வழியில்லாம வெளி நாட்டு வீரர்களை நிறைய எடுக்கவேண்டியதாப் போச்சு”

"என்னம்மா நீயும் புரியாம பேசறே, இப்போ பட்ஜெட் கன்னாபின்னான்னு எகிறிடுச்சே, இந்திய வீரர்கள் இல்லாததினால் நல்ல ஸ்பான்சரும் கிடைக்கமாட்டேங்கறாங்க"

ஸ்வராஜ், "மாமாஜி, தலையை குடுத்தாச்சு, எதாவது பண்ணித்தான் ஆகணும். கேரளாவில் நீங்க லாட்டரி பிஸினெஸ் ஓட்டினீங்களே, அது மாதிரி இதுல எதுவும் முடியாதா?"

"ஒரு நல்ல பெட்டிங் இணையதளம் ரெடி பண்ணி வெச்சிருந்தேன் மாப்ளே, ஆனா மேலிடம் நிராகரிச்சிட்டுது. கேட்டா மேட்ச் பிக்சிங் அதிகமாயிடும்னு சொல்றாங்க"

ஷீலா "இல்லேன்னா மட்டும் நடக்காதா?"


லலித் "நடக்கும் தான்"


ஸ்வராஜ், "அப்புறம் என்ன, பண்ண வேண்டியது தான், இந்த போட்டியில் தான் கேட்பாரே கிடையாதே"

"ஆனா நீ எடுத்திருக்கியே ஒரு கேப்டன், ஷைனி வார்னர், ரொம்ப கொள்கை விளக்கம் பேசுவானே"


"பேசினா பேசிட்டுப் போறான், அவன் வேலையை அவன் பார்க்கட்டும், நம்ம வேலையை நாம பார்ப்போம். "

*******************************************************************************


"இவ்ளோ விலை குடுத்து ஒரு கிரிக்கெட் டீமை வாங்கணுமா சார்?" என்று மகேஷைப் பார்த்துக் கேட்டார் ரஞ்சன் சுக்லா. மகேஷுக்கு எல்லாமே ரஞ்சன் தான்.


" கிரிக்கெட்டைப் பொறுத்த வரைக்கும் வீரர்கள் தான் பெரிய முதலீடு. பெரிய டிக்கெட்டுங்க எல்லாம் நம்ம கிட்ட இருந்தா விளம்பரமும் பணமும் தானா தேடி வரும். டீம் எவ்ளோ கேவலமா ஆடினாலும் முதலுக்கு மோசமிருக்காது"


"அது சரி தான்...."

"அதுவுமில்லாம நான் என்ன கிரிக்கெட்டை வளர்க்கறதுக்கா டீம் வாங்கியிருக்கேன்? ஏதோ என் பையன் ஆசைப்பட்டுட்டான், இந்த சந்தோஷத்தையாச்சும் அவனுக்குக் குடுப்போமேன்னு தான்...ஷயன் கெல்கர் நம்ம டீம்ல இருக்கான்னு சொன்னதும் அவன் முகத்துல அவ்ளோ சந்தோசம் ரஞ்சன், அந்த சந்தோஷத்துக்காக நான் எவ்ளோ கோடி ரூபாய் வேணாலும் இழக்கத் தயார்"


"நான் வழக்கம்போல யோசிச்சிட்டேன்"

"பரவால்ல, அப்புறம், இந்த பசங்க மேல ஒரு கண்ணு இருக்கட்டும் - குறிப்பா அந்த ஹர்கிரத் சிங் மேல. மேட்ச் பிக்சிங் அப்படி இப்படின்னு எதாச்சும் பண்ணிடப் போறான்"

*****************************************************************************


"ஏதோ ப்ரித்விராஜ் சிங் நமக்குக் கிடைச்சானோ, பிழைச்சோம், இல்லேன்னா ஸ்பான்சர்ஸ் இல்லாம நாறியிருப்போம்" என்று பெருமூச்சு விட்டான் மெஸ்ஸி.

ப்ரீத்தா "ஆமாம் டார்லிங், மூணு நாளா செம மண்டை குடைச்சல். இப்போ தான் நிம்மதியா இருக்கு"

"ஒரு விஷயம், நமக்குக் கிடைச்சிருக்கறது எல்லாமே குறுகிய கால ஒப்பந்தம் தான். டீம் நல்லா விளையாடினாத்தான் நமக்கு லாபம்"


"நீங்க கவலைப் படாதீங்க. டீமை சூப்பரா மோடிவேட் பண்ண வேண்டியது என் பொறுப்பு"


"பார்த்தும்மா, நீ கூடவே இருந்தீன்னா பசங்க "வேற" மாதிரி மோடிவேட் ஆயிடப் போறாங்க. அந்த ப்ரித்விராஜ் வேற லவ் பெயிலியர் கேஸ், அப்புறம் உன் மேல கொலவெறில பாஞ்சுடப்போறான்" என்று கிண்டல் செய்த மெஸ்ஸியை செல்லமாக அடித்தாள் ப்ரீத்தா.******************************************************************************

"நம்ம டீமைப் பத்தி இண்டஸ்ட்ரீல என்ன பேசிக்கறாங்க?"என்று ஜானகியைப் பார்த்துக் கேட்டான் ஷாதிக்.


"உன்கிட்டேர்ந்து இப்படி ஒரு மூவ் யாருமே எதிர்பார்க்கலை போலிருக்கு. குறிப்பா அந்த ரப்பர் மூஞ்சி சலீம் கான் பேயறைஞ்ச மாதிரி இருக்கான்"


"அது... எனக்கு எல்லாமே பெரிசா இருக்கணும் - கனவுகள் ஆசைகள், இலட்சியங்கள், லட்சங்கள், எல்லாமே" என்று வழக்கம் போல கைகளை விரித்து வானத்தை அளக்க ஆரம்பித்தான்.


ஜானகி, "சார், இது ஒண்ணும் சினிமா ஷூட்டிங் இல்லை, கையை கீழே போடுங்க, மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்"

"ஸாரி , எல்லாப் படத்திலேயும் இப்படியே பண்ணிப் பண்ணி பழகிட்டேனா, அதே ஞாபகம். அது சரி, உன் புருஷனை நம்பி இந்தப் பொறுப்பைக் குடுத்திருக்கோமே, ஒழுங்கா செய்வானா?"


"கவலைப்படாதே, அவர் என்னை மாதிரி பேக்கு இல்லை. போதுமா?"

"அப்பாடா, தப்பிச்சேன்"

"ஆனால் இந்த கௌரவ் பய எல்லாத்திலேயும் மூக்கை நுழைச்சு ரொம்ப டார்ச்சர் பண்றான்"

"அவனை நான் பார்த்துகறேன்"*****************************************************************************"நீ ஆசைப்பட்ட மாதிரியே உனக்குப் பிடித்த எல்லா வீரர்களையும் இப்ப நம்ம டீம்ல இருக்காங்க. எல்லாரையும் வாங்கிட்டேன்" என்று குதூகலித்தான் ரகுநாத்.


பாரு, "சின்ன திருத்தம், எங்கப்பா வாங்கியிருக்காரு"


"சரி, உங்கப்பா தான் வாங்கியிருக்காரு" என்ற ரகுவின் முகம் சுண்டைக்காயாய் சுருங்கியது.


பாரு, "ஏய், நான் சும்மா ஜாலிக்கு சொன்னேன்பா, இதுக்குப் போய்"

"எது ஜாலி? சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னை அசிங்கப்படுத்தறதா?"

"கல்யாணத்துக்கு முன்னாடி இதை விட கேவலமா கிண்டல் பண்ணியிருக்கேன்"

"அப்போ லவ் இருந்திச்சே"

"இப்போ இல்லையா?"

"எனக்கு இருக்கு. உனக்கு இருக்கான்னு தெரியல"

"லவ் இல்லாமலா எங்கப்பா கிட்ட சண்டை போட்டு உன்னை கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தையையும் பெத்துக்கிட்டேன்?"

"குழந்தை பெத்துக்கறதுக்கு காதல் தேவையில்லை, காமம் இருந்தா போதும்"

பாரு விசுக்கென்று அழ ஆரம்பித்தாள்


"ம், ஒப்பாரி வை, லவ்வர் எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்க, ஆனால் புருஷன் மட்டும் பெர்பெக்டா இருக்கணும். இல்லேன்னா காலம் முழுக்க குத்திக் காட்டிக்கிட்டே இருக்க வேண்டியது"

பாரு தொடர்ந்து அழுதாள். அவள் விசும்பல் சத்தம் கீழே பத்மநாபனுக்குக் கேட்டது. "இதுகளுக்கு வேற வேலையே இல்லை" என்று பேப்பரை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

ரகு நெகிழ்ந்த குரலில்,"நான் உன் அளவுக்குப் படிக்கலை தான், உனக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாதவன் தான். ஆனால் உன்னை விட அதிகமா நேசிக்கறேன். தயவு செஞ்சு என்னை வார்த்தையால் குத்தாதே" என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்றாடினான். பாருவுக்கு துக்கமும் காதலும் பொங்கி வந்தது. அவனை கட்டியணைத்துக் கொண்டாள்.

மேற்கூறிய அனைத்தும் ஏலத்துக்குப்பிறகு முக்கியமான அணிகளில் நடந்தேறிய சம்பவங்கள். மற்ற அணிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கேற்ப கன்னாபின்னாவென்று வீரர்களை தேர்வு செய்து முழி பிதுங்கி நின்ற டெல்லி அணி, "அவசரப்பட்டு தலையை நுழைச்சிட்டோமோ" என்று மண்டையை சொறியும் ஹைதரபாத் ரெட்டி, "நாம சில குட்டிங்களை உஷார் பண்ணலாம்னா இந்த தாடி வெச்ச நம்ம டாடி அவரே எல்லாத்தையும் தள்ளிக்கிட்டுப் போறாரே" என்று அப்பாவைப் பார்த்து கடுப்பாகிய அஜய் செல்லையாவின் மகன் - என்று சிறு குறிப்பு வரைந்தால் போதுமானது.********************************************************************************"கேஸ் போடாம வெளியில் விட்டதற்கு ரொம்ப நன்றி சார்" என்று விக்ரம் ராத்தோரை கையெடுத்துக் கும்பிட்டான் ராதே சிங்.


"அட போய்யா, ஒரு வேலை ஒழுங்கா செய்யத் துப்பில்லை"

"ஸாரி சார், கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சு"

"மண்ணாங்கட்டி, அந்த மொஹிந்தரை வேவு பார்றான்னா இப்படி சொதப்பிட்டு வந்திருக்கியே? ஏற்கனவே கோவா, ஜெய்ப்பூர்னு வெள்ளைக்காரிங்க ரேப் கேஸ் பரபரப்பா ஓடிக்கிட்டிருக்கு. இதுல நீ வேற..."

"பார்ட்டி ரொம்ப பெரிசு சார். எல்லாம் வெள்ளைக்கார பொண்ணுங்களா இருந்திச்சா, தலை கால் புரியலை கொஞ்சம் ஓவரா வேற குடிச்சிட்டேன், அதான் போதையில் எக்குத்தப்பா ஒரு வெள்ளைக்கார பொண்ணு கிட்ட .....நான் வரமாட்டேன்னு தான் சொன்னேன், அந்த மொஹிந்தர் தான் வலுக்கட்டாயமா இழுத்துக்கிட்டு போனான்"

"ஏன்னா அவனுக்கு நீ யாருன்னு தெரிஞ்சிடுச்சு. உன்னை டீசெண்டா கழட்டி விடறதுக்குத் தான் இந்த டிராமா. அந்த வெள்ளைக்கார பொண்ணும் அவன் செட்டப் தான்"


"அவனுக்கு எப்படி சார் தெரியும்?"


"நம்ம க்ரூபிலேயே அவனுக்கு வேண்டப்பட்டவன் எவனாவது சொல்லியிருப்பான். சரி விடு. நீ இப்போதைக்கு அந்த ரகுநாத்தை பாலோ பண்ணு. சமயம் கிடைக்கும்போது ஒட்டிக்கோ. நீ போகலாம்.." என்றவர் மேஜை ட்ராயரிலிருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து ராதே முன் நீட்டினார்.


"எதுக்கு சார்?"

"வெச்சுக்கய்யா...இனிமே அடிக்கடி சென்னை போக வேண்டியிருக்கும்"

"வர்றேன் சார்" என்று வெளியேறினான் ராதே. எடுத்த காரியத்தை ஒழுங்காக முடிக்க முடியவில்லையே என்ற அவனின் ஆதங்கம் மொஹிந்தரின் மேல் வெறுப்பாக மாற ஆரம்பித்திருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த விக்ரமின் மனதில் பளீரென்று மின்னல் போல் தோன்றினாள் பெங்காலி என்று சொல்லிக்கொண்டு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும் லாஜ்வந்தி ராய்.
ஆட்டம் தொடரும்...
Related Posts Plugin for WordPress, Blogger...