Wednesday, July 3, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 11



"என்னய்யா இப்படிப் பண்ணிட்டே?" என்று ஸ்வராஜைப் பார்த்து கடுப்பாகக் கேட்டான் லலித்.

"இப்போ என்ன ஆச்சு?"

"என்ன ஆச்சா?

நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு வெளிநாட்டு வீரர்களை வளைச்சுப் போட்டுட்டே. இப்போ எப்படி பணம் புரட்டறது?"

ஷீலா, "வேறென்ன செய்யச் சொல்றீங்க? இந்திய நட்சத்திர வீரர்கள் எல்லாரும் ஏலத்துக்கு முன்னாடியே புக் ஆயிட்டாங்க. அதனால வேற வழியில்லாம வெளி நாட்டு வீரர்களை நிறைய எடுக்கவேண்டியதாப் போச்சு”

"என்னம்மா நீயும் புரியாம பேசறே, இப்போ பட்ஜெட் கன்னாபின்னான்னு எகிறிடுச்சே, இந்திய வீரர்கள் இல்லாததினால் நல்ல ஸ்பான்சரும் கிடைக்கமாட்டேங்கறாங்க"

ஸ்வராஜ், "மாமாஜி, தலையை குடுத்தாச்சு, எதாவது பண்ணித்தான் ஆகணும். கேரளாவில் நீங்க லாட்டரி பிஸினெஸ் ஓட்டினீங்களே, அது மாதிரி இதுல எதுவும் முடியாதா?"

"ஒரு நல்ல பெட்டிங் இணையதளம் ரெடி பண்ணி வெச்சிருந்தேன் மாப்ளே, ஆனா மேலிடம் நிராகரிச்சிட்டுது. கேட்டா மேட்ச் பிக்சிங் அதிகமாயிடும்னு சொல்றாங்க"

ஷீலா "இல்லேன்னா மட்டும் நடக்காதா?"


லலித் "நடக்கும் தான்"


ஸ்வராஜ், "அப்புறம் என்ன, பண்ண வேண்டியது தான், இந்த போட்டியில் தான் கேட்பாரே கிடையாதே"

"ஆனா நீ எடுத்திருக்கியே ஒரு கேப்டன், ஷைனி வார்னர், ரொம்ப கொள்கை விளக்கம் பேசுவானே"


"பேசினா பேசிட்டுப் போறான், அவன் வேலையை அவன் பார்க்கட்டும், நம்ம வேலையை நாம பார்ப்போம். "

*******************************************************************************


"இவ்ளோ விலை குடுத்து ஒரு கிரிக்கெட் டீமை வாங்கணுமா சார்?" என்று மகேஷைப் பார்த்துக் கேட்டார் ரஞ்சன் சுக்லா. மகேஷுக்கு எல்லாமே ரஞ்சன் தான்.


" கிரிக்கெட்டைப் பொறுத்த வரைக்கும் வீரர்கள் தான் பெரிய முதலீடு. பெரிய டிக்கெட்டுங்க எல்லாம் நம்ம கிட்ட இருந்தா விளம்பரமும் பணமும் தானா தேடி வரும். டீம் எவ்ளோ கேவலமா ஆடினாலும் முதலுக்கு மோசமிருக்காது"


"அது சரி தான்...."

"அதுவுமில்லாம நான் என்ன கிரிக்கெட்டை வளர்க்கறதுக்கா டீம் வாங்கியிருக்கேன்? ஏதோ என் பையன் ஆசைப்பட்டுட்டான், இந்த சந்தோஷத்தையாச்சும் அவனுக்குக் குடுப்போமேன்னு தான்...ஷயன் கெல்கர் நம்ம டீம்ல இருக்கான்னு சொன்னதும் அவன் முகத்துல அவ்ளோ சந்தோசம் ரஞ்சன், அந்த சந்தோஷத்துக்காக நான் எவ்ளோ கோடி ரூபாய் வேணாலும் இழக்கத் தயார்"


"நான் வழக்கம்போல யோசிச்சிட்டேன்"

"பரவால்ல, அப்புறம், இந்த பசங்க மேல ஒரு கண்ணு இருக்கட்டும் - குறிப்பா அந்த ஹர்கிரத் சிங் மேல. மேட்ச் பிக்சிங் அப்படி இப்படின்னு எதாச்சும் பண்ணிடப் போறான்"

*****************************************************************************


"ஏதோ ப்ரித்விராஜ் சிங் நமக்குக் கிடைச்சானோ, பிழைச்சோம், இல்லேன்னா ஸ்பான்சர்ஸ் இல்லாம நாறியிருப்போம்" என்று பெருமூச்சு விட்டான் மெஸ்ஸி.

ப்ரீத்தா "ஆமாம் டார்லிங், மூணு நாளா செம மண்டை குடைச்சல். இப்போ தான் நிம்மதியா இருக்கு"

"ஒரு விஷயம், நமக்குக் கிடைச்சிருக்கறது எல்லாமே குறுகிய கால ஒப்பந்தம் தான். டீம் நல்லா விளையாடினாத்தான் நமக்கு லாபம்"


"நீங்க கவலைப் படாதீங்க. டீமை சூப்பரா மோடிவேட் பண்ண வேண்டியது என் பொறுப்பு"


"பார்த்தும்மா, நீ கூடவே இருந்தீன்னா பசங்க "வேற" மாதிரி மோடிவேட் ஆயிடப் போறாங்க. அந்த ப்ரித்விராஜ் வேற லவ் பெயிலியர் கேஸ், அப்புறம் உன் மேல கொலவெறில பாஞ்சுடப்போறான்" என்று கிண்டல் செய்த மெஸ்ஸியை செல்லமாக அடித்தாள் ப்ரீத்தா.



******************************************************************************

"நம்ம டீமைப் பத்தி இண்டஸ்ட்ரீல என்ன பேசிக்கறாங்க?"என்று ஜானகியைப் பார்த்துக் கேட்டான் ஷாதிக்.


"உன்கிட்டேர்ந்து இப்படி ஒரு மூவ் யாருமே எதிர்பார்க்கலை போலிருக்கு. குறிப்பா அந்த ரப்பர் மூஞ்சி சலீம் கான் பேயறைஞ்ச மாதிரி இருக்கான்"


"அது... எனக்கு எல்லாமே பெரிசா இருக்கணும் - கனவுகள் ஆசைகள், இலட்சியங்கள், லட்சங்கள், எல்லாமே" என்று வழக்கம் போல கைகளை விரித்து வானத்தை அளக்க ஆரம்பித்தான்.


ஜானகி, "சார், இது ஒண்ணும் சினிமா ஷூட்டிங் இல்லை, கையை கீழே போடுங்க, மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்"

"ஸாரி , எல்லாப் படத்திலேயும் இப்படியே பண்ணிப் பண்ணி பழகிட்டேனா, அதே ஞாபகம். அது சரி, உன் புருஷனை நம்பி இந்தப் பொறுப்பைக் குடுத்திருக்கோமே, ஒழுங்கா செய்வானா?"


"கவலைப்படாதே, அவர் என்னை மாதிரி பேக்கு இல்லை. போதுமா?"

"அப்பாடா, தப்பிச்சேன்"

"ஆனால் இந்த கௌரவ் பய எல்லாத்திலேயும் மூக்கை நுழைச்சு ரொம்ப டார்ச்சர் பண்றான்"

"அவனை நான் பார்த்துகறேன்"



*****************************************************************************



"நீ ஆசைப்பட்ட மாதிரியே உனக்குப் பிடித்த எல்லா வீரர்களையும் இப்ப நம்ம டீம்ல இருக்காங்க. எல்லாரையும் வாங்கிட்டேன்" என்று குதூகலித்தான் ரகுநாத்.


பாரு, "சின்ன திருத்தம், எங்கப்பா வாங்கியிருக்காரு"


"சரி, உங்கப்பா தான் வாங்கியிருக்காரு" என்ற ரகுவின் முகம் சுண்டைக்காயாய் சுருங்கியது.


பாரு, "ஏய், நான் சும்மா ஜாலிக்கு சொன்னேன்பா, இதுக்குப் போய்"

"எது ஜாலி? சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னை அசிங்கப்படுத்தறதா?"

"கல்யாணத்துக்கு முன்னாடி இதை விட கேவலமா கிண்டல் பண்ணியிருக்கேன்"

"அப்போ லவ் இருந்திச்சே"

"இப்போ இல்லையா?"

"எனக்கு இருக்கு. உனக்கு இருக்கான்னு தெரியல"

"லவ் இல்லாமலா எங்கப்பா கிட்ட சண்டை போட்டு உன்னை கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தையையும் பெத்துக்கிட்டேன்?"

"குழந்தை பெத்துக்கறதுக்கு காதல் தேவையில்லை, காமம் இருந்தா போதும்"

பாரு விசுக்கென்று அழ ஆரம்பித்தாள்


"ம், ஒப்பாரி வை, லவ்வர் எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்க, ஆனால் புருஷன் மட்டும் பெர்பெக்டா இருக்கணும். இல்லேன்னா காலம் முழுக்க குத்திக் காட்டிக்கிட்டே இருக்க வேண்டியது"

பாரு தொடர்ந்து அழுதாள். அவள் விசும்பல் சத்தம் கீழே பத்மநாபனுக்குக் கேட்டது. "இதுகளுக்கு வேற வேலையே இல்லை" என்று பேப்பரை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

ரகு நெகிழ்ந்த குரலில்,"நான் உன் அளவுக்குப் படிக்கலை தான், உனக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாதவன் தான். ஆனால் உன்னை விட அதிகமா நேசிக்கறேன். தயவு செஞ்சு என்னை வார்த்தையால் குத்தாதே" என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்றாடினான். பாருவுக்கு துக்கமும் காதலும் பொங்கி வந்தது. அவனை கட்டியணைத்துக் கொண்டாள்.





மேற்கூறிய அனைத்தும் ஏலத்துக்குப்பிறகு முக்கியமான அணிகளில் நடந்தேறிய சம்பவங்கள். மற்ற அணிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கேற்ப கன்னாபின்னாவென்று வீரர்களை தேர்வு செய்து முழி பிதுங்கி நின்ற டெல்லி அணி, "அவசரப்பட்டு தலையை நுழைச்சிட்டோமோ" என்று மண்டையை சொறியும் ஹைதரபாத் ரெட்டி, "நாம சில குட்டிங்களை உஷார் பண்ணலாம்னா இந்த தாடி வெச்ச நம்ம டாடி அவரே எல்லாத்தையும் தள்ளிக்கிட்டுப் போறாரே" என்று அப்பாவைப் பார்த்து கடுப்பாகிய அஜய் செல்லையாவின் மகன் - என்று சிறு குறிப்பு வரைந்தால் போதுமானது.



********************************************************************************



"கேஸ் போடாம வெளியில் விட்டதற்கு ரொம்ப நன்றி சார்" என்று விக்ரம் ராத்தோரை கையெடுத்துக் கும்பிட்டான் ராதே சிங்.


"அட போய்யா, ஒரு வேலை ஒழுங்கா செய்யத் துப்பில்லை"

"ஸாரி சார், கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சு"

"மண்ணாங்கட்டி, அந்த மொஹிந்தரை வேவு பார்றான்னா இப்படி சொதப்பிட்டு வந்திருக்கியே? ஏற்கனவே கோவா, ஜெய்ப்பூர்னு வெள்ளைக்காரிங்க ரேப் கேஸ் பரபரப்பா ஓடிக்கிட்டிருக்கு. இதுல நீ வேற..."

"பார்ட்டி ரொம்ப பெரிசு சார். எல்லாம் வெள்ளைக்கார பொண்ணுங்களா இருந்திச்சா, தலை கால் புரியலை கொஞ்சம் ஓவரா வேற குடிச்சிட்டேன், அதான் போதையில் எக்குத்தப்பா ஒரு வெள்ளைக்கார பொண்ணு கிட்ட .....நான் வரமாட்டேன்னு தான் சொன்னேன், அந்த மொஹிந்தர் தான் வலுக்கட்டாயமா இழுத்துக்கிட்டு போனான்"

"ஏன்னா அவனுக்கு நீ யாருன்னு தெரிஞ்சிடுச்சு. உன்னை டீசெண்டா கழட்டி விடறதுக்குத் தான் இந்த டிராமா. அந்த வெள்ளைக்கார பொண்ணும் அவன் செட்டப் தான்"


"அவனுக்கு எப்படி சார் தெரியும்?"


"நம்ம க்ரூபிலேயே அவனுக்கு வேண்டப்பட்டவன் எவனாவது சொல்லியிருப்பான். சரி விடு. நீ இப்போதைக்கு அந்த ரகுநாத்தை பாலோ பண்ணு. சமயம் கிடைக்கும்போது ஒட்டிக்கோ. நீ போகலாம்.." என்றவர் மேஜை ட்ராயரிலிருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து ராதே முன் நீட்டினார்.


"எதுக்கு சார்?"

"வெச்சுக்கய்யா...இனிமே அடிக்கடி சென்னை போக வேண்டியிருக்கும்"

"வர்றேன் சார்" என்று வெளியேறினான் ராதே. எடுத்த காரியத்தை ஒழுங்காக முடிக்க முடியவில்லையே என்ற அவனின் ஆதங்கம் மொஹிந்தரின் மேல் வெறுப்பாக மாற ஆரம்பித்திருந்தது.





அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த விக்ரமின் மனதில் பளீரென்று மின்னல் போல் தோன்றினாள் பெங்காலி என்று சொல்லிக்கொண்டு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும் லாஜ்வந்தி ராய்.




ஆட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...