இப்படி அடிமாட்டு விலைக்குக் கேட்டா எப்படி சார்?" என்று பத்மநாபனைப் பார்த்துக் கேட்டான் மொஹிந்தர். பக்கத்தில் நண்பனும் ஆலோசகருமான வருண்.
"ஏம்பா 3.5C உனக்குக் கம்மியாப் படுதா?"
வருண், "ஏன் சார் குடுக்கக் கூடாது? வேர்ல்ட் கப் ஜெயிச்சிருக்கான். யூத் ஐக்கனா மாறிக்கிட்டு வர்றான். இன்னும் 10 வருஷத்துக்கு இந்த குதிரை ஓடும் சார்"
மொஹிந்தர், "இன்னிக்கோ நாளைக்கோ ரிடையர் ஆகப்போற பெரியவருக்கே 5C குடுக்கறாங்க. அதுவும் அவரால மும்பையைத் தவிர வேற எந்த டீம்லயும் விளையாட முடியாது. நானோ ஓபன் டிக்கெட். 8C வரைக்கும் குடுக்கறதுக்கு ரெடியா இருக்காங்க சார். நான் எதிர்பார்க்கறதுல என்ன சார் தப்பு?"
நடேசன் "ஒரு தப்பும் இல்லை. நாங்க உனக்கு வேற திட்டங்கள் யோசிச்சு வைச்சிருக்கோம். ஆனா நீ காசு மட்டும் தான் எதிர்பார்க்கறே"
வருண், "என்ன சார் திட்டம்?"
பத்மநாபன், "முதல்ல சில உண்மைகளை பேசுவோம். நீ பெரியவர் மாதிரியோ, கோகுல் மாதிரியோ தொழில்நுட்ப ரீதியா ஆடறவன் கிடையாது. இப்போதைக்கு உனக்கு பந்து மாட்டுது. உனக்கு போட்டிகள் அதிகம். டீம்ல நீ எவ்ளோ நாள் இருப்பேன்னு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு புதுப்பசங்க வந்துகிட்டே இருக்காங்க. நாளைக்கே சேர்ந்த மாதிரி இரண்டு சீரிஸ் தோத்தீன்னா குழு முதல்ல உன் தலையில் தான் கைவைக்கும். என்னைக்கும் நித்யகண்டம் பூரண ஆயுசு தான் உனக்கு.
மொஹிந்தர் கடுப்பாகி, "இன்னிக்குப் பத்தி பேசுங்க சார். நாளைய மேட்டரை நாளைக்கு பார்த்துக்கலாம். ஏன் சார், உங்களுக்கு நான் வேணும்னு எதிர்பார்க்கறீங்க, ஆனால் நான் கேட்கற காசை மட்டும் ஏன் தர மறுக்கறீங்க?"
"நான் தரமாட்டேன்னு சொல்லலியே, சம்பாதிச்சுக்கோன்னு சொல்றேன்"
இருவரும் முழித்தனர்.
"என்ன முழிக்கறீங்க? ஒண்ணும் புரியலையா?"
வருண், "அசிங்கபடுத்தறீங்கன்னு மட்டும் புரியுது, கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?"
"நடேசன், கொஞ்சம் சொல்லுங்க" என்று கூறி பத்மநாபன் மினெரல் வாட்டர் பாட்டிலை திறக்க ஆரம்பித்தார்.
நடேசன், "காண்ட்ராக்ட் மூலமா 3.5C தர்றோம், ஆனால் உனக்கு சம்பாதிக்கறதுக்கான வேற வழிவகைகளை ஏற்பாடு பண்ணித் தர்றோம். உதாரணத்திற்கு, நிறைய கிரிக்கெட் வீரர்கள் எங்க கம்பெனியில் இருக்காங்க. உனக்கும் எங்க கம்பெனியில் ஒரு பெரிய பதவி தர்றோம். - பொது மேலாளர், அந்த மாதிரி. வேலையெல்லாம் செய்ய வேண்டாம். மாசம் ஒருக்கா கையெழுத்து போட்டாப் போதும். அதுல ஒரு 50L வரும். அது போக நம்ம டீமோட மார்க்கெட்டிங் ரைட்ஸ் உனக்குத் தர்றோம். அது எப்படியும் 2-2.5C கிட்ட வரும்"
மொஹிந்தர், "நான் இன்னிக்கு இட்லி கேட்கறேன், நீங்க நாளைக்கு பிரியாணி வாங்கித்தரேன்னு சொல்றீங்க"
பத்மநாபன் சிரித்துக் கொண்டே, அடேடே, நல்லாப் பேசறியே. ஒரு உண்மையைச் சொல்லவா? உனக்குத் திறமையை விட அதிர்ஷ்டம் தான் கை குடுக்குது. பைனல்ஸ் நாம ஜெயிச்சது அதிர்ஷ்டம் தான். அதை தெரிஞ்சுக்கோ. அடுத்த 10 வருஷத்துல நீ ஒரு கிரிக்கெட் வீரரா மட்டும் இல்லாம ஒரு ஸ்போர்ட்ஸ் சிம்பலா இருக்கணும். வெறும் ப்ளேயரா இருந்து உன் வாழ்க்கையை முடிச்சுக்காதே"
மொஹிந்தர் மடக் மடக்கென்று இரண்டு க்ளாஸ் தண்ணீரைக் குடித்தான். "சார், என்ன தான் சொல்ல வர்றீங்க?"
"பெரிசா யோசின்னு சொல்றேன். நீ ஒண்ணும் சாப்பிடற பொருளுக்கு விளம்பரம் பண்ணப் போறதில்ல. ஒரு பெரிய வியாபாரத்தோட முக்கிய பகுதியா இருக்கப் போறே. நான் சொல்றபடி கேளு, நீயே ஆச்சர்யப்படற அளவுக்கு உன்னை ஆளாக்கிக் காட்டறேன்."
வருண் சிறிது யோசித்தான். பிறகு மொஹிந்தர் காதில் ஏதோ குசுகுசுத்தான்.
மொஹிந்தர், "சரி சார், நீங்க இவ்ளோ தூரம் சொல்றீங்க. சம்மதிக்கறேன். ஆனால் சில கண்டீஷன்ஸ் இருக்கு"
"என்னப்பா?"
"பொது மேலாளர் பதவி சரிப்படாது. பார்ட் டைம் டைரக்டர் அல்லது ஒரு வைஸ்-ப்ரெசிடெண்ட் பதவியாச்சும் வேணும்"
"டைரக்டரா போட்டா நீ ரெகுலரா வேலை செய்யணும். அதுக்க உன் கிரிக்கெட் இடம் கொடுக்காது. வைஸ்-ப்ரெசிடெண்ட் போஸ்ட் தர்றேன். ஆனால் சம்பளம் அதே தான். வேணும்னா சலுகைகள் கொஞ்சம் அதிகம் பண்ணித்தரேன்"
"ஓகே, மார்க்கெட்டிங் ரைட்ஸ் குடுத்த பிறகு உங்க தலையீடு அதில் இருக்கக் கூடாது"
"அதுக்காக நீ என்ன பண்ணினாலும் சரின்னு தலையாட்ட மாட்டேன். செக் பண்ணிட்டுத் தான் ஓகே சொல்லுவேன் - ஏன்னா டீம் என்னுது"
"அப்புறம் நான் புதுசா விளம்பர ஒப்பந்த கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். அதுல நம்ம வீரர்கள் காண்ட்ராக்ட் போட்டுக்கணும். அவங்களோட விளம்பர மேனேஜரா என் கம்பெனி தான் செயல்படும்"
"ஓகே, வேற எதாவது?'
"அவ்ளோ தான். முக்கியமான விஷயம். ஏலத்தில் என்னைத் தான் அதிக விலைக்கு எடுத்ததா நியூஸ் வரணும். அப்போ தான் எனக்கு மார்க்கெட் ஏறும்"
"சரி, என்கிட்டேயும் சில கண்டீஷன்ஸ் இருக்கு. கொஞ்சம் கேட்கறியா?"
வருண் "என்ன கண்டீஷன்ஸ்?"
"ஏயர் வாய்ஸ் தான் நம்ம அணிக்கு டைட்டில் ஸ்பான்சர். அவங்களோட ப்ராண்ட் அம்பாசிடரா நீ தான் இருக்கணும். அப்போ தான் நம்ம டீமுக்கு நல்ல காசு கிடைக்கும். நீ கேக்கற பேமென்ட் குடுக்க ரெடியா இருக்காங்க. நீ பொய்யா தயாரிச்ச கான்ட்ராக்டை இதன் மூலமா உண்மையாக்கிக்கலாம்"
வருணும் மொஹிந்தரும் சற்றே அதிர்ந்தனர்.
"எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கறியா? எங்களுக்குத் தெரியாம எதுவும் நடக்காது. அப்புறம் உன் ப்ரெண்ட் ஒருத்தன் டெல்லி பக்கத்துல ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சிருக்கானே, அதில் நீ கூட 30% ஷேர்ஸ் வாங்கியிருக்கியே? என்னவோ பேராச்சே, அமராவதியா, பத்மாவதியா?
வருண் "அமராவதி க்ரூப்"
"அதே தான், அவங்க கன்ஸ்ட்ரக்ஷன் எல்லாத்துக்கும் நம்ம கம்பெனி சிமெண்ட் தான் சப்ளை ஆகணும். வேணும்னா அவங்களை நம்ம டீமோட ஒரு சின்ன ஸ்பான்சரா போட்டுக்கலாம். என்ன சொல்றே?"
பத்மநாபன் அடுத்தடுத்து வீசிய யார்க்கரில் வருணும் மொஹிந்தரும் கிளீன் போல்டு ஆனார்கள்.
மொஹிந்தர் சற்றே சுதாரித்துக் கொண்டு "சரி சார். காண்ட்ராக்ட் பேப்பர்ஸ் அனுப்பி வைங்க. முடிச்சுடுவோம்" என்று சொல்லிவிட்டு கை குலுக்கினான், பிறகு வெளியே வந்தான். வருண் அவனைப் பின் தொடர்ந்தான்.
காரில் ஏறியவுடன் வருண், "என்னடா, இப்படி பொசுக்குன்னு எல்லாத்துக்கும் மண்டையாட்டணும்னு என்ன அவசியம்? இதுக்கு டபிள் பேமென்ட் பண்றேன், உடனே வாங்கன்னு மகேஷ் மெசேஜ் போட்டுக்கிட்டே இருக்காரு"
"அவசியம் இல்லை தான். ஆனால் எனக்கென்னவோ நான் சென்னை அணிக்கு ஆடறது தான் நல்லதுன்னு தோணுது"
"ஏன் அப்படி சொல்றே?"
"மகேஷ் காசு குடுப்பாரு, ஆனால் அங்கே மரியாதையை எதிர்பார்க்க முடியாது. பெரியவருக்குத் தான் முதல் மரியாதை கிடைக்கும். என்ன தான் எனக்கு மார்க்கெட் இருந்தாலும் வேற எந்த டீமுக்குப் போனாலும் அந்த ஊர் மக்கள் என்னை ஒரு அன்னியனாத்தான் பார்ப்பாங்க. குறிப்பா என்னை ஒரு பீகாரியாத் தான் பார்ப்பாங்க. ஆனால் தமிழர்கள் யாரையும் வித்யாசப்படுத்திப்படுத்தி பார்க்க மாட்டாங்க. அவங்கள்ல ஒருத்தனா என்னை சீக்கிரம் ஏத்துக்குவாங்க.
"அடேங்கப்பா, செம கணக்கு"
"ஆனால் எதுக்காக நான் பெரிய ஆளா வரணும்னு அவர் இவ்ளோ திட்டம் போடறார்னு எனக்கு புரியல"
வருண், "என்னவோ போ, நமக்கு கல்லா கட்டணும், அவ்ளோ தான். "
உள்ளே நடேசன் பத்மநாபனிடம், "ஏன் சார், இவ்ளோ செலவு பண்ணி இவனை நம்ம டீம்ல எடுக்கணுமா?"
"என்னமோ தெரியல நடேசன், அவன் முகத்தைப் பார்க்கும்போது ஓடிப்போன என் மகனோட ஞாபகம் அடிக்கடி வருது" - பத்மநாபனின் குரல் சற்றே நெகிழ்ந்தது.
"சார்"
சிறிது தண்ணீரைக் குடித்து விட்டு, "சென்டிமென்ட் எல்லாம் இல்லை, நீ இன்னிக்கு செலவை பார்க்கறே, நான் நாளைக்கு இவனால கிடைக்கப் போற பம்பர் லாட்டரியைப் பார்க்கறேன்"
"புரியலையே சார்?"
"கிரிக்கெட் எப்படி விளையாடணும்னு ஷயன் கெல்கரைப் பார்த்து மக்கள் தெரிஞ்சுக்கிட்டாங்க. அந்த கிரிக்கெட் மூலமா வாழ்க்கையில் எப்படி விளையாடணும்னு இவன் எல்லாருக்கும் கத்துக் குடுக்கப் போறான். பார்த்துக்கிட்டே இருங்க நடேசன், இது வரைக்கும் வந்த எல்லாரையும் இவன் தூக்கி சாப்பிடப் போறான்"
ஆட்டம் தொடரும்....
No comments:
Post a Comment