மும்பை ஏர்போர்ட்.
கன்வேயர் பெல்ட்டிலிருந்து லக்கேஜை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் ராதே சிங். எதிரே மூன்று போலீசார் இவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் இருந்து விலகி எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தவனை விரைந்து வந்து பிடித்தனர்.
போலீஸ்காரர் நக்கலாக " கொஞ்சம் கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் வர்றீங்களா?"
"எதுக்கு?"
"அதை அங்கே சொல்றோம், வண்டியில் ஏறு" என்று அவன் காலரை பிடித்தார் போலீஸ்காரர்.
"சட்டையை விடுங்க சார், நானே வர்றேன்" என்று கூறி விட்டு ஜீப்பின் பின்புறம் ஏறி உட்கார்ந்தான்.
******************************************************************************
பத்மநாபன் தனது வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து செக்ரட்டரி கொண்டு வந்திருந்த பேப்பர்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். மொஹிந்தர் மற்றும் அவனுடன் வந்திருந்தவர்களை ஹோட்டலில் டிராப் செய்து விட்டு வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ரகுநாத். பாரு ஆபீசிலிருந்து வந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு அப்பாவின் அருகே சோபாவில் அமர்ந்தாள். கையில் அவளுக்குப் பிடித்த பில்டர் காபி. காபியை சற்று உறிஞ்சி விட்டு அப்பாவைப் பார்த்தாள் . பிறகு அவளே பேச்சை ஆரம்பித்தாள்.
"நடேசன் உங்க கிட்ட பேசினாராப்பா?'
"எதைப் பற்றி? இந்த தடவையும் லாபம் குறைஞ்சு போச்சு. அதானே? தெரிஞ்ச விஷயம் தானே?"
"அது இல்லப்பா. நம்ம மார்க்கெட்டை வடக்கேயும் விரிவாக்கறதைப் பற்றி..."
"ஆமாமாம், ஏதோ நேஷனல் ஸ்பான்சர்ஷிப் பண்ணணும்னு சொன்னான். இன்னிக்கு கமிட்டியில் ஒரு புது டோர்னமென்ட் சம்பந்தமா நிறைய வேலை. அதனால அவன் சொன்னதை சரியா கவனிக்க முடியல"
"அதாம்பா. கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப் பத்தித்தான் பேசணும்"
"அது ஒரு யானைம்மா, நம்மளால கட்டி மேய்க்க முடியாது. அதுவும் நம்ம கம்பெனி இருக்கற நிலைமைக்கு"
"பேசாம அந்த ஆந்த்ரா பேக்டரியை வித்துடுங்களேன். அது நமக்கு பெரிய பாரமா ஆயிடுச்சு"
"அப்படிச் சொல்லதேம்மா, அதுக்கப்புறம் தான் நம்ம கெபாசிட்டி அதிகமாச்சு. அதைக்காட்டித் தான் நம்மளால குளோபல் இன்வெஸ்டர்ஸ் கிட்டேர்ந்து பணம் திரட்ட முடிஞ்சுது. இன்னிக்குக் கம்பெனியில் கொஞ்சமாச்சும் கேஷ் ப்ளோ இருக்குன்னா அதாம்மா காரணம்"
பாரு சலிப்பாக "அந்த பேக்டரியை வாங்கறதுக்கு நீங்க அங்க இருக்கற அரசியல் கட்சிகளுக்கு தண்டம் அழுத காசுக்கு இங்க ஒரு புது ப்ரொடக்ஷன் லைன் போட்டிருக்கலாம்"
" வாஸ்தவம் தான்.ஆனால் மெஷினரி எல்லாம் நம்பர் ஒன்னாச்சே"
"என்ன பிரயோஜனம்? தென்னிந்தியாவில் 6 பேக்டரி இருக்குன்னு வீண் பெருமை தான் மிச்சம்"
"அதுக்காக கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப் பண்ண முடியாதும்மா"
"கிரிக்கெட் சம்பந்தமா எதாவது ஒண்ணு. ஏன்னா நம்ம நாட்டு மக்கள் கிரிக்கெட்டைத் தவிர வேற எதையும் தினையளவு கூட மதிக்கறதில்ல. ஒரு சீரிஸ், ஒரு டோர்னமென்ட்? - அட் லீஸ்ட் வட இந்தியாவில் நடக்கற லோக்கல் டோர்னமென்ட்ல விளையாடற ஒரு டீமைக் கூடவா நம்மளால ஸ்பான்சர் பண்ண முடியாது? "
பத்மநாபன் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு போனை எடுத்து நம்பர்களை அழுத்தினார். பத்மநாபனுக்கு அபார ஞாபக சக்தி. அவர் எப்பொழுதாவது தான் போனில் உள்ள கான்டாக்ட் லிஸ்டைப் பயன்படுத்துவார்.
எதிர் முனையில் போனை எடுத்ததும் "தலைவரே, இந்த பிரீமியர் லீக் சம்பந்தமா கொஞ்சம் பேசணுமே? இப்போ வரலாமா?...நன்றி... இதோ அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன்" என்று சொல்லிவிட்டு காரை நோக்கி விரைந்தார். அப்பாவின் அதிரடி நடவடிக்கையைப் பற்றி புரியாத பாரு மிச்சமிருந்த காபியை குடித்து விட்டு டிவி ரிமோட்டை அழுத்த ஆரம்பித்தாள்.
*******************************************************************************
மும்பை கமிஷனர் அலுவலகம்.
தன் எதிரே அமர்ந்திருந்த ராதேவை உற்று நோக்கினார் ஸ்பெஷல் க்ரைம் ப்ராஞ்ச் தலைவர் விக்ரம் ராத்தோர்.
ராதே சன்னமான குரலில், "என்ன சார் அப்படிப் பார்க்கறீங்க"'
"ஏன்யா? உன்னை மொஹிந்தர் மற்றும் ஹர்கிரத்தோட பழகி எங்களுக்குத் தேவையான விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டு வாய்யான்னா அவங்களோட சேர்ந்து பார்ம் ஹௌசிலும், ஹோட்டலிலும் கூத்தடிச்சிக்கிட்டிருக்கே?"
"சார், அவங்க கிட்ட நெருங்கறது ரொம்ப கஷ்டம் சார். கொஞ்சம் கொஞ்சமாத்தான் மூவ் பண்ணணும். அதிலேயும் அந்த மொஹிந்தர் செம ஷார்ப். சிரிச்சுப் பேசற வரைக்கும் ஓகே. எதாச்சும் சீரியஸா கேட்க ஆரம்பிச்சா சூப்பரா பேச்சை மாத்தி நம்மளையே குழப்பிடறான். எங்கே திரும்பத் திரும்பக் கேட்டா சந்தேகம் வருமோன்னு நானும் அடக்கி வாசிக்க வேண்டியதா இருக்கு"
" அதெல்லாம் சரி. ஆனால் மேலிடத்திலேர்ந்து ப்ரெஷர் அதிகமாயிட்டே போவுதுய்யா. நடந்து முடிஞ்ச வேர்ல்ட் கப்ல நிறைய பிக்சிங் நடந்திருக்கறதாகவும் அதுல துபாய்ல இருக்கற டேவிட் ஆப்ரஹாமுக்குத் தொடர்பு இருக்கறதாகவும் நமக்கு தகவல்கள் வந்திருக்கு."
"அதான் அன்னிக்கே சொன்னீங்களே சார்"
"இது வரைக்கும் நாம சேகரிச்ச தொலைபேசி பதிவுகளில் இவங்க ரெண்டு பேர் தொடர்பான சங்கேத வார்த்தைகள் தான் அதிகமா இருக்கு. நிஜமாவே இவங்களுக்குத் தொடர்பு இருக்கா, இல்லை இவங்க பேரை யூஸ் பண்ணி வேற யாராச்சும் குளிர் காயறாங்களான்னு நாம கண்டுபிடிக்கணும்"
"சரி சார்"
"என்ன சரி சார்? பேசினா மட்டும் போதாது. செயலிலும் காட்டணும். இந்த வேலைக்கு எங்க ஆளுங்களையே கூட நேரடியா போட்டிருப்பேன். பட் அவங்க உருவம் காட்டிக் குடுத்துடும். நீ கொஞ்சம் லொடுக்கான ஆளு. சந்தேகம் வராது. அதனால தான் இந்த வேலையை உன்கிட்டே ஒப்படைச்சிருக்கேன்"
"கண்டிப்பா சார். அப்புறம் ஒரு விஷயம் சார். சென்னை போனப்ப ரகுநாத்னு ஒருத்தரோட அறிமுகம் கிடைச்சுது. அவர் நம்ம கிரிக்கெட் குழு பொருளாளர் பத்மநாபனோட மாப்பிளையாம்"
"அப்படியா? நல்ல மூவ் தான். அந்த சைடிலேர்ந்தும் எதாச்சும் துப்பு கிடைக்கலாம்"
"அப்போ நான் கிளம்பறேன் சார்"
"ஓகே, இந்த பாரு. நீ போலிஸ் இல்லை. இன்பார்மர் மாதிரி தான். அதை மனசுல வெச்சுக்கோ. போலீஸ்னு சொல்லிக்கிட்டு எதாச்சும் வம்பு பண்ணினே, முதல்ல உன்னைத் தான் போட்டுத் தள்ளுவேன்"
"புரியுது சார், வர்றேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் ராதே.
ஆட்டம் தொடரும்....
Jayaraman
New Delhi
(subscribe with us to get this series auto-delivered to your email)
No comments:
Post a Comment