Sunday, June 9, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 7

"அப்பா, அப்பா, எப்படியாச்சும் என்னை இந்தியன் ஜூனியர் கிரிக்கெட் டீம்லயாச்சும் சேர்த்து விடுப்பா"

மகன் ஆனந்தின் இந்த வழக்கமான வேண்டுகோளைக் கேட்ட தொழிலதிபர் மகேஷ் அத்வானி வெறுப்புடன் பார்த்தார். மகன் இருக்கும் பாடி சைசுக்கு மல்யுத்தத்தில் வேண்டுமானால் சேர்த்து விடலாம். கிரிக்கெட்? எவ்வளவு முக்கினாலும் முடியாது

மகேஷ் வெறுப்பை மறைத்துக் கொண்டு புன்முறுவலுடன், "நாமெல்லாம் ஆட்டி வைக்கற சாதிப்பா. ஆடற ஜாதி இல்லை. நீ ஒரு வேலை பண்ணு.உனக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர்களை ஒரு லிஸ்ட் போட்டு வை. அப்பா கூடிய சீக்கிரம் வாங்கித் தரேன், அவங்க நமக்காக விளையாடுவாங்க. நீ பக்கத்துல உட்கார்ந்து பார்த்து ரசிக்கலாம்" என்று கூறிவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பினார்

அப்பா சொன்னது ஆனந்திற்கு சுத்தமாகப் புரியவில்லை. இருந்தாலும் பேப்பர் பென்சிலை எடுத்து லிஸ்ட் போட ஆரம்பித்தான். பிள்ளையார் சுழி போல் அவன் முதலில் எழுதிய பெயர் கிரிக்கெட் குரு ஷயன் கெல்கர்.
***********************************************************************************

"ஹேய், ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் வரப்போகுது, பண்றியா?" என்று தனது நண்பரும் ஹிந்தி திரையுலக நட்சத்திரமுமான ஷாதிக் கானிடம் கேட்டார் பிரபல முன்னாள் ஹிந்தி நடிகை ஜானகி சாவ்லா.

"என்ன ஆப்ஷன்?"

"புதுசா ஒரு கிரிக்கெட் டோர்னமன்ட் வரப்போகுது. பிரானச்சைஸ் அடிப்படையில் 8 டீம் கொண்ட போட்டி. ஒரு டீமை நாம எடுத்தோம்னா முதலீட்டுக்கு முதலீடும் ஆச்சு, கொஞ்சம் வித்யாசமாவும் இருக்கும்"

"உனக்கெப்படித் தெரியும்?"

"நம்ம ஷீலா ஷெட்டியும் அவ காதலனும் தான் சொன்னாங்க. ஏற்கனவே அதற்குண்டான வேலைகளையும் ஆரம்பிச்சுட்டாங்க"

"மார்க்கெட் போயிடுச்சுல்ல, அதான் இப்படி இறங்கிட்டா" என்றான் நக்கலாக.

"நீ மட்டும் என்ன யூத்தா? ஏதோ வெளிநாடுகளில் உன் படம் கலெக்ஷன் பண்ணிடுது. அதனால முதலுக்கு மோசமில்லாம போயிக்கிட்டிருக்கே. இல்லேன்னா நீ எப்பவோ பேக்-அப் தாண்டி"

"உண்மை தான், ஆனால் இது வேலைக்காகுமா?"

"நீ பண்ணித்தான் ஆகணும். உனக்கோ வயசாகிட்டே போகுது இன்னும் எவ்ளோ நாள் நீ ஹீரோவா நடிக்க முடியும்? இப்பவே உன்னோட நட்ச்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி ஒரு மாற்று உத்யோகம் உருவாக்கிக்கணும். நீ சினிமாவுல வேணா நடிக்காம இருக்கலாம். ஆனால் உன் ஸ்டார் வேல்யூ குறையாம பார்த்துக்கணும்.நமக்கெல்லாம் அதான் கடைசி வரைக்கும் கை குடுக்கும்"

"கரெக்ட், உடனே வேலையை ஆரம்பி"

***************************************************************************************
"டார்லிங், நாமளும் ஒரு கிரிக்கெட் டீம் வாங்கலாமா?" என்று தனது காதலன் மெஸ்ஸி வடாலாவிடம் கேட்டாள் நடிகை ப்ரீத்தா. இவளும் ஒரு மார்க்கெட் போன ஹிந்தி நடிகை தான்.

"புதுசா கார் வாங்கலாமான்னு கேட்கற மாதிரி கேட்கறியேடா செல்லம்" என்றான் சிரிப்புடன்.

"நிஜமாத்தாங்க" என்று தொடங்கி முழு விவரங்களையும் கூறினாள் - தகவல் உபயம் ஷீலா ஷெட்டி.

"கேட்க நல்லா இருக்கு"

" வாங்கினாலும் நல்லாத்தான் இருக்கும், உங்க துணி கம்பெனியோ படுத்துடுச்சு. ஏதோ எக்ஸ்போர்ட் வருமானம், அந்தக்காலத்துல வாங்கிப்போட்ட நிலபுலன்கள் இருக்கறதால வண்டி ஓடுது, இல்லேன்னா..."

"புரியுது புரியுது. ஆனால் ஏலத்தில் நிறைய போட்டி இருக்குமே?"

"அதெல்லாம் நான் செட் பண்ணிட்டேன். கவலைப்படாதே"

"அப்போ இப்பவே அப்ளிகேஷனைப் போட்டுடுவோம்"

***************************************************************************************

"ஏமி ராவ் காரு, என்ன யோசிக்குது?" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் அவரது பார்ட்னர் பிரவின் பாரேக்.

பிரகாஷ் ராவ் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தின் அதிபர். விமான நிலையங்கள், பாலங்கள் என்று இவர் இந்தியாவுக்காக கட்டியது நிறைய.

ராவ் தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தார். பிரவின், "என்ன யோசிக்கற? நீயும் ஒரு கிரிக்கெட் டீமை வாங்கிடு"

அதிர்ச்சியடைந்த பிரகாஷ், "உனக்கு எப்படிய்யா தெரியும்?"

"அதான் உன் ப்ரெண்ட் அந்த பேப்பர்காரன்..ராமோஜி ரெட்டி... அவனும் ஒரு டீமை எடுக்கப் போறானாமே? இந்தியா முழுக்க தொழிலதிபர்கள் மத்தியில் இன்னிக்கு இதான் பேச்சு"

"நீ என்ன சொல்ற? நாமளும் வாங்கிடலாமா?"

"ஒரு 400-500 கோடி ஆகும், பரவாயில்லையா?"

"அடப்பாவி, அசால்ட்டா சொல்றே?"

"இது இரு விஷயமா? ஹைவேயில் இன்னொரு பாலம் கட்டினா இதுக்கு டபிள் காசு பார்த்துடலாம்"

"ஹ்ம்ம். யோசிக்கணும்"

"நீ யோசி, நான் நமக்கு வேண்டப்பட்ட ஆளுங்க மூலமா பேசிட்டே வந்துட்டேன்"


************************************************************************************

அப்பா, இன்னும் எவ்ளோ நாளைக்குத் தான் குதிரை ஓட்டிக்கிட்டும், சாராயம் காய்ச்சிக்கிட்டும் இருக்கறது?"

"என்னடா சொல்ல வர்ற கண்ணா? என்றார் அஜய் செல்லையா. வழக்கம் போல் குட்டி-புட்டி சமேதராக இருந்தார்.

"நாமளும் கிரிக்கெட் டீம் வாங்குவோம்பா, ரெட்டி, ராவ், எல்லாரும் வாங்கறாங்க"

"நீ எதை வேணும்னாலும் வாங்கு, எனக்கு நிறைய கிளாமர் இருக்கணும். அவ்ளோ தான்"
*************************************************************************************

மேலே சொன்ன சம்பாஷனைகள் அனைத்தும் லலித் குமார் செய்த சில தொலைபேசி அழைப்புகளின் எதிரொலி தான்.

இங்கே கிரிக்கெட் மேட்சில் யார் ஜெயிப்பது என்பது மட்டுமல்ல, அதில் யார் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.ஆட்டம் தொடரும்....Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...