Tuesday, June 11, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 8

"ரகு, பாரு, ஒரு நிமிஷம் வாங்க" என்பர் வரவேற்பறையில் நுழையும் போதே இருவரையும் அழைத்தார். முகத்தில் பெருமை கலந்த சந்தோஷம்.

"போன காரியம் என்னப்பா ஆச்சு?" என்று கேட்டபடியே உள்ளேயிருந்து வந்தாள் பாரு. அதிசயமாக மாமனார் தன்னை கூப்பிடறாரே என்ற பதட்டத்தில் அவளுக்கு முன்னாடியே ஆஜரானான் ரகு.

"பழம் தான். என்ன, ரொம்ப இழுத்துட்டாங்க"

"என்ன விஷயம் மாமா? எனக்கு ஒன்னும் புரியலையே" என்றான் ரகு.

"உனக்கு என்றைக்குத் தான் நான் பேசறது புரிஞ்சிருக்கு" என்று மனதுக்குள் நினைத்தாலும் புதுசா ஒரு டோர்னமென்ட் வருது அதுல ஒரு டீமை நம்ம கம்பெனி சார்பா வாங்கியிருக்கேன்" என்றவர் இருவருக்கும் போட்டியின் மற்ற விவரங்களையும் எடுத்துக் கூறினார்

ரகு, "கேட்கவே சூப்பரா இருக்கே"

பத்மநாபன் "இந்த கமிட்டி ஆளுங்களை சம்மதிக்க வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. நல்ல வேளை, இந்த லலித் பயலும் அவன் பிரெண்ட்ஸ் மூலமா ஒரு டீம் எடுக்கறதால கொஞ்சம் எளிதா முடிஞ்சுது"

"அடேங்கப்பா, அவ்ளோ பெரிய ஆளா அவர்?"

"கொஞ்சம் ஏமாந்தா என்னையே தூக்கிச் சாப்பிட்டுடுவான், பொல்லாத பய"

பாரு, "இப்போ அடுத்து என்ன செய்யணும்?"

"டீமுக்கு பெயர் வைக்கணும். வீரர்கள் யார் யார் வேணும்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணனும். ஏன்னா ஏல முறைப்படி தானே எடுக்க முடியும்”

பாரு, "இதை சமாளிக்க நாம ஒரு ஆளை நியமிக்கணுமே, ஏன்னா இதுல வேலை இழுத்துக்கிட்டே போகும்"

"நான் பொறுப்பை எடுத்துக்கறேன் மாமா" என்று தானாக தலையைக் கொடுத்தான் ரகு.

சற்று அதிர்ந்தாலும் மாப்பிள்ளையின் ஆர்வம் பத்மநாபனை ஆச்சர்யப்பட வைத்தது. சம்மதித்தார்.

"தாங்க்ஸ், மாமா, நான் போய் அடிப்படை வேலைகளை ஆரம்பிக்கறேன்" என்று கூறி விட்டு உற்சாகமாக சென்றான்.

"என்னம்மா உன் புருஷன் ஓவரா குதூகலிக்கறானே?"

"அவரே பொறுப்பை எடுத்துக்கறேன்னு சொல்றப்போ குடுக்கறது தான் நல்லது."

" வாஸ்தவம் தான்"

"இதுல நிறைய முதலீடு செய்ய வேண்டியிருக்குமே?"

"அது ஒண்ணும் பெரிசா இல்லை 500-600 கோடி கிட்ட வரும். ஆனா மொத்த செலவுன்னு பார்த்தேன்னா ஒரு 100-150 கோடிக்குள்ள தான் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் லாபம் தான். போதாகுறைக்கு மாப்பிள்ளையே பொறுப்பை எடுத்துக்கறேன்னு சொல்லிட்டான். முதன்மை நிர்வாகி சம்பளமும் மிச்சம்"

"அப்பா, நீங்க பயங்கரமான ஆளு"

"ஒரு முக்கியமான விஷயம். இதை வந்து நம்ம சிமெண்ட் கம்பெனியோட ஒரு துணைக் கம்பெனியாத்தான் காட்டணும். நடேசன் கிட்ட அதுக்கேத்த மாதிரி புக்ஸ் தயார் பண்ணச் சொல்லு. இந்த டீம் கம்பெனியோட சொத்தாத்தான் இருக்கணும்"

"ஏம்பா அப்படி?"

"ஏகப்பட்ட ஒப்பந்தங்கள் போட வேண்டி வரும். கொடுக்கல் வாங்கல் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். அது மட்டுமில்லாம கிரிக்கெட் சம்பந்தப்பட்டது. நான் வேற கம்மிட்டியில் இருக்கேன். நமக்கு வேண்டாத பயலுங்க ஊர்முழுக்க இருக்கானுங்க. எதாச்சும் குடைச்சல் குடுத்துக்கிட்டே இருப்பானுவ, தனிச்சொத்தா காமிச்சா நிறைய சட்ட சிக்கல்கள் வரும், அதனால தான் கம்பெனி பேர்ல பண்ணச்சொல்றேன்"

"சரிப்பா”


*********************************************************************************

"என்ன சார் விஷயம், திடீர்னு என் பெர்சனல் நம்பர்ல போன் பண்ணியிருக்கீங்க?" என்றார் க்ரைம் ப்ராஞ்ச் தலைவர் விக்ரம். எதிர் முனையில் தலைவர்.

"ஒரு T -20 போட்டி புதுசா ஆரம்பிக்கறோம்" என்று ஆரம்பித்து போட்டியைப் பற்றி அவனுக்கு சுருக்கமாக விவரித்தார்

"இதுல நான் என்ன சார் செய்யணும்?"

"வழக்கம் போல இந்த பசங்க மேல ஒரு கண்ணா இருக்கணும். இன்டர்நேஷனல் போட்டிகளிலேயே கண்ணுல மண்ணைத் தூவற கேடிங்க, இதுல சும்மாவா இருப்ப்பாங்க? போதாக்குறைக்கு இதுல கட்டுப்பாடுன்னு பெரிசா ஒண்ணும் கிடையாது"

"புரியுது சார்"

"இதுல பங்கெடுக்கப் போறது பெரிய புள்ளிங்க. அதனால வலை இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கணும். எல்லா தொலைபேசி அழைப்புகளையும் கிளீனா அலசுங்க. எப்போ எவனுக்கு செக் வைக்கணும்னு நான் அப்புறமா சொல்றேன்"

"ஓகே சார்"

"அப்புறம் அந்தப் பசங்க விஷயம் என்னாச்சு?"

"போய்க்கிட்டிருக்கு சார், கூடிய சீக்கிரம் தெரிய வரும்"

"சரிப்பா, ரொம்ப நேரம் பேச வேண்டாம். அப்புறம் என் போனையும் எவனாச்சும் டாப் பண்ணிடப் போறான்" என்று கூறி போனை வைத்தார்




ஆட்டம் தொடரும்.....



Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...