Sunday, January 25, 2015

அந்(தோ(னி)) பரிதாபம்!ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், "நோ பீஸ் ஆப் மைண்ட்" - என்று சிவாஜி ஞான ஒளி படத்தில் வசனம் பேசுவார். கிட்டத்தட்ட நம்ம தோனியும் அந்த கேஸ் தான். நட்சத்திர வீரர்கள் புடை சூழ இருந்தும் அடி வாங்கிக்கிட்டே இருக்காரு. எப்படியாச்சும் இந்த உலகக் கோப்பையில் கொஞ்சம் சுமாரா ஆடி நல்லபேரோட ஒரு நாள் போட்டிகளிலேர்ந்தும் விலகிடணும்னு அவர் நினைக்கராறோன்னு நமக்கு ஒரு சந்தேகம் வராம இல்லை. அதுக்காக அவர் சில பேர் கிட்ட டிப்ஸ் கேக்கப் போறாரு. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

பிரபல ஜோசியர் (டிவி புகழ்):

என்னப்பா இது? உன் ஜாதகத்தில் சனி ஏழில் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருக்காரே?

தோனி, "ஏழு மட்டுமா? 8, 9 10, 11 வரைக்கும் சனி தான் சுவாமி"

"3ல அங்காரகன் இருக்கு. இதனால சமீபத்தில் உனக்கு பெரிய பிரச்சினை வந்திருக்கணுமே?"

"அட, கரெக்டா சொல்லிட்டீங்களே? உண்மை தாங்க, வளர்த்த கடா, மார்பில் பாய்ஞ்சிடுச்சுங்க"

"ஹ்ம்ம். ஆனா உனக்கு 5/6 ல குரு பார்வை இருக்கு. அதனால தான் நீ இன்னும் இருக்கே"

"ஐயா, நீங்களும் எங்க கமெண்டரி டீம் மாதிரி ஆராய்ச்சி பண்றீங்களே ஒழிய தீர்வு சொல்ல மாட்டேங்கறீங்களே? இதுக்கு எதாச்சும் பரிகாரம் இருக்குங்களா?"

கூடிய சீக்கிரம் 1 மற்றும் 2ல சுக்ரன் பார்வை பட பிரகாசமான வாய்ப்புகள் இருக்கு அதற்குப் பிறகு உனக்கு ஏற்றம் தான். பரிகாரமெல்லாம் தேவையில்லை."

வைரமுத்து:

தோனி,

ராய்னா எனும் தோணி பற்றி

அஷ்வின் எனும் காலை ஊன்றி

விராட் எனும் சரக்கை ஏற்றி

மைதானத்தில் பயணிக்கும்போது

ஷமி/உமேஷ் எனும் பாறை தாக்கி

மறியும்போது அறியவொண்ணா

துணையுனும் உணர்வை நல்காய்

ராஞ்சியூர் உடைய கோவே.

தோனி திருதிருவென்று விழிக்க, வைரமுத்து "உன்னை நம்பு, மற்றவர்கள் நீ சுழற்ற வேண்டிய வெறும் கம்பு"

அடுத்து அவர் சென்றது சூப்பர் ஸ்டாரிடம்:

கண்ணா, வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் எல்லாம் சகஜம். ஊர் என்ன சொல்லும்னு யோசிக்காதே, உனக்கு எது ரைட்டுன்னு படுதோ அதை டக்குனு செய். நீ முன்னாடியெல்லாம் யோசிக்காம பேசமாட்டே. ஆனா இப்பல்லாம் பேசின பிறகு யோசிக்கறே. 5ம் எட்டில் சேர்க்க வேண்டிய செல்வத்தை சேர்த்துட்டே, ஆனால் 4ம் எட்டில் பெற வேண்டிய குழந்தையை இன்னும் பெத்துக்கலையே? முதல்ல அதுக்கு வழியை பாரு.

"இவருக்கு நான் கேட்ட கேள்வி புரிஞ்சுதா, இல்லை இவர் சொன்ன பதில் எனக்கு புரியலையா?" என்ற குழப்பத்துடனே அங்கிருந்து வெளியேறுகிறார்.

 

இயக்குனர் ஷங்கர்:

முதல்ல உலககோப்பை லொகேஷனை மாத்தச் சொல்லுங்க ஜி. ஆஸ்திரேலியா நியூசிலாந்து எல்லாம் ஏற்கனவே பார்த்த லொகேஷன்கள். உஸ்பெகிஸ்தான் பக்கத்துல 200 ஏக்கர்ல பெரிய குதிரை லாயம் இருக்கு. அங்கே ஒரு 4 ஸ்டேடியம் செட் போட்டு எல்லா மேட்சையும் நடத்துவோம். ட்ரிங்க்ஸ் ப்ரேக்கில் குதிரைகள் தான் தண்ணி பாட்டில் கொண்டு வரும். ஒவ்வொரு இன்னிங்க்ஸ் பிரேக்கின் போதும் 200 டான்சர்ஸ் மைதானத்தில் லைவ் பெர்பார்மன்ஸ் பண்ணுவாங்க. ஏன்னா ஆடியன்சுக்கு போரடிக்கும்ல, அவங்களுக்கு புதுசா எதாவது காட்டிக்கிட்டே இருக்கணும். இதுபோக வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசும்போது பந்தைசுற்றி நெருப்பு வளையம் லைவ் CG பண்ணப் போறோம். இது யாரும் பண்ணாதது. அதே மாதிரி நீங்க சிக்ஸ் அடிக்கும்போது பால் அப்படியே ஆறா பிரியும், பௌண்டரி அடிச்சா நாலா பிரியும். அமெரிக்காவிலேர்ந்து ஸ்பெஷல் CG டீம் வரச்சொல்லிடலாம். அப்புறம்...

தோனி குறுக்கிட்டு, "தலைவரே, நீங்க சொல்றதை செய்யணும்னா  ICC கஜானாவை கொள்ளையடிச்சாத்தான் உண்டு, ஆளை விடுங்க.."என்று கூறி எழுந்திருக்கவும்,,

ஷங்கர்,"இருங்க ஜி, எங்கே போறீங்க? இப்போ தான் பாதி சொல்லியிருக்கேன், இன்னமும் இருக்கு"

"இன்னமுமா? அது சரி, கதையே இல்லாம 3 மணி நேரம் படம் எடுத்த ஆள் தானே நீங்க, உங்ககிட்ட வந்தது என் தப்பு தான்" என்று எஸ்கேப் ஆகிறார்.

அடுத்து "உழைப்பாளி" விக்ரம்:

அதாவது ஜி, டீம்ல முதல் மூணு பேரு பயங்கர மாஸ் பாடி பில்டரா இருக்கணும். அடுத்த 4 பேரு சாதாரண பாடியோட இருந்தா போதும். ஆனால் கடைசி 4 பேரு கூனன் மாதிரி பார்க்கவே டெரரா இருக்கணும். அப்போதான் எதிராளிங்க பயப்படுவாங்க - நான் சொல்றது புரியுதுல்ல?

"பாவம், இந்தாளுக்கு நிஜமாவே "I" வைரஸ் ஏறிடுச்சு போல" என்று கவலையுடன் வெளியேறுகிறார்.


VK ராமசாமி:

"டீம்ல எல்லாம் இள ரத்தம், அப்படித்தான் இருப்பாங்க, அதுல பாருங்க தம்பி, நம்ம பயலுவ எல்லார்கிட்டேயும் பொம்பள சமாச்சாரத்தை இங்கேயே விட்டுட்டு வரச் சொல்லுங்க. எவனாச்சும் ஹோட்டலுக்குப் போகும்போது சோத்துமூட்டையை கூடவே கட்டிக்கிட்டு போவானா? அதிலும் குறிப்பா இந்த விராட்டு பய, அந்த சினிமாக்காரி பின்னாடி ரொம்ப சுத்தறான். அவ ஆளும், மூஞ்சியும். நல்லா இருந்த வாயை ஆபரேஷன் பண்ணி குரங்கு மாதிரி ஆக்கிக்கிட்டு.. புரியுதுல்ல? இதுக்கெல்லாமா அலட்டிக்கறது? நீ பார்க்காத பேட்டா, பந்தா?

Chef வெங்கடேஷ் பட்:

பார்க்கறதுக்கு நல்லா இருக்கு, நல்ல கலர், நல்ல ப்ளேவர், ஆனால் உள்ளே இன்னும் கொஞ்சம் வேகணும். குறிப்பா அந்த லெக் பீஸ் சுத்தமா வேகலை. அந்த டெக்ஷர் இன்னும் நல்லா வந்திருக்கணும். அதனால சாப்பிடும்போது கடைசியில் பல்லில் மாட்டிக்குது. அதை தவிர்க்கணும். உப்பு ஒரே சீரா இல்லை. தூக்கலா, குறைவா, இப்படி மாறி மாறி வருது. கடிக்கும்போது அதிலேர்ந்து எண்ணெய் தெறிக்குது. சில்லி பௌடர் சரியா மாரினேட் ஆகலை. ஆனால் இந்த பெருங்காயத்தை மேலோட்டமா தூவியிருக்கீங்க. வித்யாசமா இருக்கு. அதே சமயம் டிபிகல் மசாலா யூஸ் பண்ணாம புதுசா எதையோ ட்ரை பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கறேன். அதான் எதிர்பார்த்த ரிசல்ட் வரலை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

தோனி  அவர் அருகில் சென்று  "ஏண்டா, ஏன்?" என்று அழாத குறையாக சொல்லிவிட்டு கிளம்புகிறார் .


தலைவர் ஸ்ரீனிவாசனிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று அவர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவர் இல்லை. போனில் தொடர்பு கொள்கிறார்.

"இதோ பார் தோனி, நானே CSKவா பிசிசிஐயான்னு குழப்பத்தில் இருக்கேன். உனக்கும் சேர்த்துத் தான் கோவில் கோவிலா போய் பரிகாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். இப்போ கூட சிருங்கேரி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ண வந்திருக்கேன். ஏதோ முடிஞ்ச வரைக்கும் ஆடு. முடியலேன்னா ஓடு. இனிமே என்னை அடிக்கடி தொடர்பு கொள்ளாதே. விஜிலன்ஸ் 24 மணி நேரமும் என்னை ஒட்டுக் கேட்டுக்க்கிட்டிருகாங்க. போனை கட் பண்ணு"

கடைசியாக, "அவரிடமும்" அட்வைஸ் கேட்டுக்கலாம் என்று செல்கிறார். அந்த "அவர்" நரேந்திர மோடி":

"ஹ்ம்ம், பெரிய பிரச்சினை தான். "தூய்மை இந்தியா" திட்டத்தை முதல்ல கிரிக்கெட் டீம்ல தான் அறிமுகம் பண்ணியிருக்கணும்". அருகிலிருந்த அமித் ஷாவிடம், "பிசிசிஐ ஆண்டு வருமானம் எவ்ளோ?"

அமித் ஷா "அது இருக்கும் தலைவரே, 3000 கோடி"

"அடடா, இது தெரியாம நான் ஜப்பான், சைனா இவங்க கூட நிறைய ஒப்பந்தம் போட்டுட்டேனே!. 3000 கோடின்னா 5 மங்கல்யான், காஷ்மீர் டு கன்யாகுமரி புல்லட் ரயில், 10 ஸ்மார்ட் சிட்டி, 20 டெக்னாலஜி யூனிவர்சிட்டி, இப்படி நிறைய பண்ணியிருக்கலாமே? மிஸ் ஆயிடுச்சே? அமித், இன்னிக்கே பிசிசிஐ கமிட்டியை மீட்டிங் வரச் சொல்லுங்க. முழு விபரங்கள் பவர் பாயிண்ட்ல வேணும் எனக்கு. கூடவே எகானமி கமிஷன் டீமையும் வரச் சொல்லுங்க. அப்புறம் இந்தப் பசங்க எல்லாம் இது வரைக்கும் எவ்ளோ சம்பாதிச்சிருக்காங்க, வரி ஒழுங்கா கட்டியிருக்காங்களா, அந்த விபரமும் வேணும். IPL விஷயத்தில் இவன் பேர் கூட அடிபடுதுல்ல? "

தோனி அதிர்ந்து போயிருக்க, மோடி, "ரொம்ப நன்றி தோனி, உன்னை மாதிரி இளைஞர்கள் தான் இந்த நாட்டுக்கு நல்வழி காட்டணும். அப்புறம் குடியரசு தினத்தில் தூய்மை இந்தியா திட்டத்துக்கு உனக்கும் அழைப்பு விடுக்கறேன். நீயும் ராஞ்சியில் எங்கயாச்சும் குப்பை பெருக்கிட்டு வீடியோவை என் வெப்சைட்ல போஸ்ட் பண்ணிடு. ஒரு வேளை மீடியா யாரும் வரலேன்னா அட் லீஸ்ட் ஒரு selfie போடு. அது போதும். "

" உங்ககிட்ட வந்தேன் பாருங்க, அது தான் நான் எடுத்துக்கிட்ட, சாரி, வெச்சுக்கிட்ட பெரிய selfie. இவருக்கு ஷிகர் தவனே பரவால்ல போலிருக்கே" என்று மனதில் புலம்பிக் கொண்டே செல்கிறார் தோனி.ஒரு வெற்றி, ஒரே ஒரு வெற்றி - அது எல்லோர் வாயையும் அடைத்துவிடும் - ஆல் தி பெஸ்ட் தோனி!


ஜெயராமன்

Thursday, January 1, 2015

ஐ - இப்படிக் கூட வந்திருக்கலாம்!!

டைரக்டர் ஷங்கர் மற்றும் விக்ரமின் கடும் உழைப்பில் உருவாகியுள்ள "" திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வேளையில் அந்தப் படம் எப்படி உருவாகியிருக்கும்னு ஒரு முன்னோட்டம். இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை உரையாடல் மட்டுமே.

இயக்குனர் ஷங்கரின் அலுவலகம். அது சினிமா அலுவலகமா அல்லது மென்பொருள் நிறுவனமா என்று பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு கணினிகள் இறைந்து கிடக்கின்றன. உள்ளே கான்பெரென்ஸ் அறையில் இயக்குனர் ஷங்கர் தனது உதவியாளர்களுடன் "" படத்தைப் பற்றி அலசிக் கொண்டிருக்கிறார். உதவியாளர் ஒருவர் பவர்பாயிண்ட் மூலம் "ஐ படத்தின் கதை மற்றும் காட்சி சுருக்கத்தை விவரித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் ஷங்கர் சொல்லும் மாற்றங்கள், திருத்தங்கள் உடனுக்குடன் "ஸ்பீச் டு டெக்ஸ்ட்" தொழில்நுட்பம் மூலமாக அதில் குறிப்புகளாக சேர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு காட்சிக்குத் தேவையான செலவுக் கணக்கும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தன. விக்ரமும் தயாரிப்பாளர் ஆஸ்காரும் பின் வரிசையில் அமர்ந்து எல்லாவற்றையும் நிதானமாக கவனித்த வண்ணம் இருந்தனர். திரை அணைந்தது. அறை விளக்குகள் ஒளிர்ந்தன.

ஆஸ்கார் மற்றும் விக்ரமைப் பார்த்து
, "இதான் சார் மொத்த கதை. என்ன சொல்றீங்க?" என்றார் ஷங்கர்.

ஆஸ்கார், "ஐடியா ரொம்ப பிரமாதமா இருக்கு, ஆனால் ரொம்ப செலவாகும் போலிருக்கே"

ஷங்கர், "சார், இன்றைய தேதியில் பேக்கேஜிங் தான் ரொம்ப முக்கியம். என் குருநாதர் எடுத்த "நான் சிகப்பு மனிதன்" தான் நாம எடுத்த "அந்நியன்". தங்கச்சியைக் கொன்னவனை அண்ணன் பழி வாங்கறான். அவ்ளோ தான் கதை. அதுக்கு கருட புராணம், லஞ்சம், தனி மனித ஒழுக்கம்னு பேக்கேஜிங் பண்ணி எடுத்தோம். யாருக்காச்சும் தெரிஞ்சுதா?. இதை நீங்க எடுக்கணும்னு நான் விருப்பப்படறேன்""

அது சரி சங்கர், ஏற்கனவே உலகநாயகன் படம் வேற ஓடிக்கிட்டிருக்கு. அது இரண்டு பாகம் வேற. இதுல இதையும் எடுத்தேன்னா தண்ணி தலைக்கு மேல போயிடும்"செலவு பார்த்தீங்கன்னா தரம் கிடைக்காது. அதுக்கு நான் ஆளில்லை."...ஹ்ம்ம்..சரிப்பா, உன் மேல நம்பிக்கை இருக்கு. நாம பண்ணுவோம்""

என்ன விக்ரம், ஒண்ணுமே பேசாம இருக்கீங்க?" என்கிறார் சிரித்தவாறே.விக்ரம், "நான் என்ன சார் சொல்றது? உங்க ஹோம்வர்க் பிரமாதமா வந்திருக்கு. ஆனா அந்நியனுக்கும் இதுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கே? இதுலேயும் 3 கெட்டப், 3 குணாதிசயம் - ஒரு சாது, ஒரு யூத், அப்புறம் ஒரு ஆக்ரோஷமான கேரக்டர்""

இது எப்பவுமே விற்கும் விக்ரம். நீங்க எந்த பிரபல ஹாலிவுட் கதாபாத்திரத்தை வேணும்னாலும் எடுத்துக்கோங்க. இதே பார்முலா தான். ஒட்டுமொத்த மனித உளவியல் இந்த 3 கேரக்டர்ல வந்துடும்"

விக்ரம்,"சரி இதுக்கு நான் என்ன ஹோம்வர்க் பண்ணணும்னு சொல்லுங்க?"

ஷங்கர், "முதல் வேலையா அஹோபில மடம் கோயில்கள் எல்லாத்தையும் நல்லா சுத்திப் பார்க்கறீங்க. 10 அல்லது 12 கோயில்கள் இருக்கு. ஒரு 15 நாள் தங்கியிருந்து அங்கே இருக்கற யோகா நரசிம்மர் சிலைகளை நல்ல அப்செர்வ் பண்ணுங்க. நெட்ல நிறைய தகவல்கள் இல்லை. பல்வேறு கோர முகபாவங்கள், அதைப் பற்றிய குறிப்புகள் அங்கே நிறைய இருக்கு. ஆராய்ச்சியாளன் மாதிரி முழுக்க முழுக்க உங்களுக்குள்ள டவுன்லோட் பண்ணிக்கோங்க. இதுல நீங்க பண்ற ஒரு கேரக்டருக்கு இந்த ஹோம்வர்க் தான் உயிர் குடுக்கப் போவுது""

"ஓகே ஜி. வேற?"

"முதல் ஷெட்யூலுக்கு 75 கிலோ வெயிட் வேணும். இரண்டாவதுக்கு 65 கிலோ, அப்புறம் கடைசியில் வெறும் 35 கிலோ தான் இருக்கணும்""

சார் 35 கிலோவா? என் பையனே 40 கிலோ இருக்கான் சார்""

கேரக்டர் கேக்குது விக்கி. உணர்ச்சிகள், முகபாவங்கள் எல்லாம் சிவாஜி காலத்து நடிப்பு. இந்த ஜெனரேஷனுக்கு அதெல்லாம் புரியாது. இப்படி விஷுவலா எதாவது இருக்கணும் - நம்ம பழைய தெருக்கூத்துக்கள் மாதிரி. ஸ்க்ரீன்ல பார்த்தா அப்படியே அரண்டு போகணும் ஆடியன்ஸ் - புரியுதா?""

சரிங்க ஜி,உடனே டிக்கெட் போட்டுட சொல்றேன்""

ஷங்கரின் உதவியாளர், "அதெல்லாம் ஏற்கனவே போட்டுட்டோம் சார். இந்தாங்க டிக்கெட். உங்களுக்குத் தேவையான துணிமணி இந்த பேக்ல இருக்கு" என்று விக்ரமிடம் ஒப்படைக்கிறார்

விக்ரம் அதிர்ச்சியில் நிற்க, ஷங்கர், "டைம் இல்ல சார், வாசலில் கார் ரெடியா இருக்கு. நேரா சென்ட்ரல் ஸ்டேஷன் டிராப் பண்ணிடுவாங்க. வீட்டுக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிடுங்க, யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ" என்று விரட்டுகிறார்.""

அப்புறம் ஆஸ்கார் சார், பொள்ளாச்சி பக்கத்துல ஒரு 3 கிரௌண்ட் நிலம் ஒண்ணு வாங்கணும். இப்பவே ஆக வேண்டிய வேலையைப் பாருங்க"

ஆஸ்கார் கலவரமாகி, "நிலமா? எதுக்கு?"

ஒரு பாட்டு முழுக்க முழுக்க பூந்தோட்டத்துல எடுக்கப்போறோம்."

"அதுக்கு?""

"அங்கே எல்லா நாட்டு பூக்களையும் விளைவிக்கப் போறோம். அது நல்லா பூத்துக்குலுங்க 6-7 மாசம் ஆவும்""

"அதுக்கு இடத்தை லீஸ்ல எடுக்கலாமே?""

அது சரி வராது சார். நம்ம இஷ்டத்துக்கு காமெரா, லைட்டிங் எல்லாம் வைக்க முடியாது. நாளைக்கு நல்லா தோட்டமா மாறும்போது ரேட் எகிறும் சார். யோசிக்காதீங்க""

ஒரு பாட்டுக்காக இடம் வாங்கறது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா?"

ஷங்கரின் உதவியாளர் ஒருவர் "கதையிலும் இதுக்கு முக்கியத்துவம் இருக்கு சார். அது இப்போ உங்களுக்கு தெரியாது"

இதனிடையே ஒளிப்பதிவாளர் பிசி உள்ளே நுழைகிறார். "ஹாய் ஷங்கர்". ஆஸ்காரை மரியாதையுடன் ஒரு சின்ன பார்வை பார்க்கிறார்.

ஷங்கர் "வாங்க சார் வாங்க உட்காருங்கஆஸ்கார் மனசுக்குள் "ஐயோ இந்தாளா, இவன் வேற தனியா ஒரு படம் எடுப்பானே, ரெண்டு பேரும் சேர்ந்தா தலையில ஒரு முடி கூட இல்லாம சுத்தமா மொட்டை அடிச்சுடுவாங்களே" என்று கவலையாகிறார்."

ஸ்க்ரிப்ட் பார்த்தேன் ஷங்கர். ஓகே. நான் பண்றேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயம்"

"சொல்லுங்க ஜி""

காமெரான்னு வரும்போது நான் தான் டைரக்டர். உனக்கு என்ன தேவையோ அதை என்கிட்டேர்ந்து வாங்கிக்க. ஆனால் செட்ல நான் சொல்றது தான். எந்த குறுக்கீடும் இருக்கக் கூடாது."

ஆஸ்கார் குறுக்கே புகுந்து, "ஸ்ரீராம் சார், செலவைப் பத்தி கவலைப்படாதீங்க. எக்ஸ்ட்ரா 5-6 லைட் வேணும்னாலும் வெச்சுக்கோங்க. படம் நல்லா பளிச்சுன்னு திரையில் தெரியணும்.நீங்க பாட்டுக்கு அக்னி நட்சத்திரம் மாதிரி எடுத்துடப் போறீங்க"

"பிசி கடுப்பாகி, "காமெரா பிடிக்கறவனுக்கும் கலப்பை பிடிக்கறவனுக்கும் தயவு செஞ்சு  உபதேசம் பண்ணாதீங்க. எங்க வேலையை செய்ய விடுங்க" என்று கூறி போனை நோண்டுகிறார்.

ஷங்கர் ரகசியமாக, "ஆஸ்கார் ஜி, கொஞ்சம் பேசாம இருங்க. இந்தப்படத்துக்கு இவரோட அனுபவம் கண்டிப்பா வேணும். ஏன்னா நிறைய சீன்ஸ் நைட் எபக்ட் இல்லேன்னா டல் லைடிங்க்ல வருது. பிச்சிக்கிட்டுப் போயிட்டார்னா பிரச்சினை"

போனிலிருந்து விடுபட்டவர், "என்ன ஷங்கர் ஓகே தானே? ஷூட்டிங் டீடைல்ஸ் மெயில் பண்ணுங்க. வேற வேற தீம்ல அவுட் டோர் வருது. கொஞ்சம் முன்னாடியே போய் என் டீமோட வொர்க் பண்ண வேண்டியிருக்கும். ஸீ யூ" என்று கூறி கிளம்புகிறார்.

அவர் போன பிறகு, "ஏம்பா ஷங்கர், வேற ஆளே கிடைக்கலையா?" ரவி, ராண்டி, ராஜீவ் மேனன், இவங்களை யாராச்சும் போடலாமே?""

நீங்க சொல்ற அத்தனை பேரும்  இவர் கிட்ட ஆனா ஆவன்னா படிச்ச மாணவர்கள் ஆஸ்கார். அதான் இந்த தடவை குருவோட வொர்க் பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். தொழில் சுத்தம் சார். கோவம் வர்றது இயற்கை""

என்னவோ போ, அது சரி, ஹீரோயினா யாரை போடப்போற? வழக்கம் போல பாம்பேவா?""

"இல்லை. இங்க்லீஷ்""

என்னது, வெள்ளைக்காரியா?""

ஆமாம் சார், கதைப்படி ஹீரோயின் வெளிநாட்டிலேர்ந்து இந்தியா வர்றாங்க. அதுவுமில்லாம நம்ம படத்தோட பட்ஜெட்டுக்கு ஒரு பொதுவான அல்லது பிரபல முக அமைப்பு வேணும். இல்லேன்னா படம் கும்மிடிப்பூண்டி தாண்டாது""

அது என்னவோ, நீ பார்த்துக்க. எனக்கு எப்படி லாபம் வரும்? அதை சொல்லு?""

அதெல்லாம் யோசிக்காம பட்ஜெட் போடுவேனா? 4000 பிரிண்ட் போடறோம். முதல் ஒரு வாரம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பெங்களூர், மும்பை, டில்லி, அமெரிக்கா இங்கெல்லாம் 75% சிட்டிங் இருந்தாக் கூட போதும். முதல் நிச்சயம். அதுக்கப்புறம் வர்றது எக்ஸ்ட்ரா கலெக்ஷன். அது போக ஹிந்தி டப்பிங் மற்றும் , சாட்டிலைட் உரிமம் நல்ல விலைக்கு போகும். இன்னிக்கும் சிவாஜி தி பாஸ் தான் ஹிந்தி சினிமா சானல்களில் நம்பர் 1 TRP. அது போக தமிழ் டிவி ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் இருக்கவே இருக்கு. டபுள் லாபம் நிச்சயம்""

"திரைக்கதை சொன்னியே ஒழிய மையக்  கரு என்ன? அதை சொல்லவே இல்லையே?,  இதுல அகோரி மாதிரி இருக்கிற கேரக்டர் பார்க்கறதுக்கு "மணாளனே மங்கையின் பாக்கியம்" படத்தில் வர்ற கூனன் ஜெமினி மாதிரி இல்ல?"

ஷங்கர் உஷாராகி, "சத்தம் போட்டு பேசாதீங்க. கிட்டத்தட்ட அதான்."

"யோவ், அந்தப் படத்தை தான் ரீமேக் பண்றியா? ஒழுங்கான ரைட்ஸ் வாங்கியிருக்கியா? அப்புறம் எவனாச்சும் கேஸ் போட்டு உயிரை வாங்கப்போறான்".

ஷங்கர், "ரீமேக் எல்லாம் இல்லை சார். ஆனால் சில ஒற்றுமைகள் இருக்கும்.""

"புரியலையே?""

"சார், எப்பவுமே நாம புறத்தோற்றதுக்கு முக்கியத்துவம் குடுத்துக்கிட்டே வர்றோம். அது இப்ப ரொம்ப அதிகமாயிருக்கு. டிவியில் பாருங்க. 80% விளம்பரம் இதைப் பற்றித் தான். முடியை வளர்ங்க, எடையைக் குறைங்க, உயரத்தைக் கூட்டுங்க, சிகப்பாவுங்க, ஜீரோ சைஸ் பிகர் ஆவுங்கன்னு தூண்டிக்கிட்டே இருக்காங்க. இப்போ அவங்க ஆண்களையும் குறி வைக்க ஆரம்பிச்சிருக்காங்க. இந்த பொருட்களில், குறிப்பா பாடி பில்டிங் ப்ரோட்டீன்ஸ், என்ன கலந்திருக்கு, உலக நாடுகளில் அந்த மூலப் பொருட்களுக்கு எதாவது தடை இருக்கா, இந்திய அரசாங்க அங்கீகாரம் இருக்கா, முறையான தயாரிப்பு தானா - இதைப்பற்றி யாருக்குமே கவலையும் இல்லை, அக்கறையும் இல்லை. வாங்கிப் போட்டுக்கிட்டே இருக்கோம். இந்த மாதிரி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இருக்கிற அரசியல் தெரியாம இந்த பொருட்களை வாங்கி பாதிப்படையற பல பேர்களில் ஒருத்தன் தான் நம்ம ஹீரோ. அதுல அவன் காதலும் பாதிக்கப்படுது. இது இரண்டையும் அவன் தாண்டி வர்றானா இல்லையான்னு தான் இந்தப் படத்தில் சொல்லப் போறோம்"

ஆஸ்கார் மகிழ்ச்சியுடன்"ஹ்ம்ம், வித்யாசமா இருக்கு"

ஷங்கர், "எல்லாருக்கும் வாழ்க்கையை விட பேஸ்புக் லைக்குகளும் வாட்சாப் கமெண்ட்சும் முக்கியமா போயிடுச்சு. தான் சார்ந்த எல்லா விஷயங்களும் அழகா இருந்தாத்தான் பெருமையா இருக்கு. சுமாரான ஆண்களோட போட்டோ எடுத்துக்கக்கூட  பெண்கள் கூச்சப்படறாங்க. ஆண்களும் அதே மாதிரி தான். பெண்களுக்கு சரியான துணையை  தேர்ந்தெடுக்கத் தெரியல. ஆண்களுக்கு தோல்விகளை தாங்கிக்கத் தெரியல. பெண்கள் மீதான ஆசிட் வீச்சுக் குற்றங்களுக்கு இந்த அழகும் ஒரு முக்கிய காரணம். நான் சுமாரா இருக்கேன், அதனால நீ என்னை காதலிக்க மாட்டியாங்கற கடுப்புல இந்த மாதிரி தவறுகள் நடக்குது. இது நியாயமில்லை. ஆனா இதான் நிஜம். நம்ம சினிமாக்களும் ஒரு காரணம் தான். சிகப்பா இருந்தா ஹீரோயின், கறுப்பா இருந்தா தங்கச்சின்னு தான் காலங்காலமா காட்டிக்கிட்டு வர்றோம்."

ஆஸ்கார், "வழக்கம் போல ஒரு சோஷியல் மெசேஜ் இருக்கு""

"அது இல்லேன்னா படம் நிக்காது சார். இது தான் படம். மத்ததெல்லாம் நான் சொன்ன மாதிரி பேக்கேஜிங்""

"உன் பேக்கேஜிங் என் பாக்கெட்டைப் பதம் பார்க்குதே! எல்லாப் படத்தில் வர்ற மாதிரி இந்தப் படத்திலும் ஹவுசிங் போர்டு சீன் உண்டா?""

"அது என்னோட செண்டிமெண்ட் சார். அது இல்லாம என் படமா? சான்சே இல்லை. அது தான் சார் நிஜ ஷங்கர். கோட்டுர்புரம் ஹவுசிங் போர்ட்ல பெரிய ஜிம் / குஸ்தி மைதானம் செட் போட்டு ஒரு மல்யுத்த சண்டைக் காட்சி இருக்கு.ஹரியானா மாநிலத்தில் "அக்காடா" அப்படின்னு சொல்லுவாங்க. பாரம்பரிய குஸ்தி வல்லுனர்கள் அங்கே தான் இளைஞர்களுக்கு குஸ்தி பயிற்சி குடுப்பாங்க. அங்கேர்ந்து சிறந்த 25 பேரை வரவழைக்கப் போறோம். தமிழ் சினிமாவில் இது வரைக்கும் வராத ஒண்ணு. நம்ம ஊர்லயும் இப்போ வட இந்தியர்கள் அதிகமாயிட்டாங்க. அவங்களையும் கவர் பண்ணின மாதிரி இருக்கும்"

"நீ வழக்கம் போல போட்டுத் தாக்கு. எனக்கு நேரமாவுது. நான் கிளம்பறேன். அந்த பட்ஜெட் ஷெட்யூல் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் அனுப்பிடு. ஏன்னா நிறைய பேர்கிட்ட கடன் வாங்க வேண்டியிருக்கு" என்று சிரித்துக் கொண்டே எழுகிறார். அப்பொழுது ஷங்கரின் அலைபேசி ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார்.

"ஆமிர் ஜி, போலியே (சொல்லுங்க)." ரிசீவரைக் கையால் மறைத்த வண்ணம் ஆஸ்காரிடம் " ஆமிர் கான், எந்திரன் பார்ட்-2 ஸ்க்ரிப்ட் அனுப்பியிருந்தேன் அதைப் பத்தித் தான் பேசறாப்ல". 

ஷங்கர், "ஸ்க்ரிப்ட் படிச்சீங்களா? நல்லா தமிழ் பேசறீங்களே, முருகதாஸ் ட்ரைனிங் போல? ஸ்க்ரிப்ட் ஓகேவா? ஆனால் 2015ல தான் ஆரம்பிக்க முடியும். என் படம் முடிய 2014 அக்டோபர் ஆயிடும். உங்களுக்கும் PK இருக்குல்ல?. முடிச்சிட்டு வாங்க. கண்டிப்பா பண்ணுவோம்பட்ஜெட்டா? இப்போதைக்கு 500-600 கோடி எஸ்டிமேட். என்ன ஜி...ஆமாமா, நம்மளால முடியாது, ஏற்கனவே ஸ்பீல்பெர்க் கிட்ட பேசிட்டேன். அவரோட ட்ரீம்வர்க்ஸ் கம்பெனி பணம் போடறேன்னு சொல்லிட்டாங்க. வார்னெர் பிரதர்ஸ் கூட பார்ட்னர்ஷிப்புக்கு ரெடி தான். பணம் ரெடி. நீங்களும் நானும் தான் ரெடியாகணும்." என்று பேசிக்கொண்டே இருக்க, ஆஸ்கார் அவருக்கு "நான் அப்புறமா பேசறேன்" என்று ஷங்கருக்கு ஜாடை செய்கிறார். பிறகு "இவனுக்கு ஒரு குளோபல் அடிமை சிக்கிட்டாண்டா." என்று மனதுக்குள் நினைத்தவாறே அறையை விட்டு வெளியேறுகிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...