Monday, September 10, 2012

வர்றேண்டா இந்தியாவுக்கு!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டம்.

அமைச்சர்கள் பழனி, கப்பல் செப்பல், தாந்தோணி, மற்றும் ஊமை நாயகன் கன்மோகன் சிங் அமர்ந்திருக்க, சேமியா மேடம் உள்ளே நுழைகிறார்.

சேமியா, "ஆமாம், இன்னிக்கு எதைப் பற்றிப் பேசபோறோம்?"

தாந்தோணி திடுக்கிட்டு, "ஏதோ அவசரமா ஆலோசிக்கணும்னு நீங்க தானே மேடம் கூப்பிட்டீங்க?"

கப்பல், "ஆமாங்க, வெளிய மீடியா கேட்டதுக்கு ஏதோ சொல்லி சமாளிச்சுட்டேன். நீங்க என்னடான்னா இப்படிக் கேக்கறீங்களே?"

சேமியா, "அட, ஆமாம், நான் தான் கூப்பிட்டேன்ல, மறந்து போச்சு. சரி வந்துட்டோம், எதாச்சும் பேசுவோம்"

கப்பல், "இந்த 2G கேசை கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு விடுங்க மேடம். ஏன்னா அடுத்த ஏலம் நடத்தியாகணும். அதில வேற நாம கணிசமா அடிக்க வேண்டாமா? உங்க மாப்பிள்ளை வேற அவர் கம்பெனிக்கு பணம் வேணும்னு கேட்டு ரொம்ப நச்சரிக்கறாரு"

பழனி நக்கலாக, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை மேடம், கத்துக்குட்டி ராஜாவே இவ்ளோ அடிச்சிருக்கும்போது இவர் அவரை விட அதிகமா அடிச்சுக் காட்டறேன்னு சவால் விட்டிருக்கார். அதான், சீக்கிரம் சம்பாதிக்கணும்னு பார்க்கறார்."

சேமியா, " தாந்தோணி, ஆர்மில ஏதோ பிரச்சினை போலிருக்கே, என்ன அது?"

தாந்தோணி, "அதுவா, அதிகாரிங்க ஜாலியா ஊர் சுத்தறாங்க. கீழ் மட்டத்தில இருக்கறவங்க ஓவர் டைம் பாக்கறாங்க. மாசத்துல ஒரு நாள் கூட அவங்களுக்கு லீவ் கிடையாது. அந்த கடுப்புல சில பேர் கொந்தளிக்கறாங்க"

"அதுக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?"

"ரொம்ப சிம்பிள், எதாச்சும் ஒரு க்ரூப் கிட்ட சொல்லி காஷ்மீர்ல இருக்கற மசூதிக்குள்ள புகுந்து சில பேரை பிடிச்சு வெச்சிக்கச் சொல்ல வேண்டியது தான். பிடிபட்டவர்களை மீட்கறேன்னு இவங்களும் கொஞ்சம் பிசியா இருப்பாங்க.அப்படியே மீடியாவுக்கும் கவரேஜ் கிடைக்கும். எல்லாரும் பழசை மறந்துடுவாங்க"

பழனி, "அடேடே, இது வித்யாசமா இருக்கே?"

கப்பல், " மேடம், எதிர்கட்சி ஆளுங்க கிட்ட கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க. எந்நேரமும் பிரதமர் பதவி விலகணும்னு சொல்லி சொல்லியே கடுப்பேத்தறாங்க?"

இவ்ளோ நேரம் அமைதியா இருந்த கன்மோகன், "யோவ், மேடம் ஒரு வாரம் ஊர்ல இல்லை, அவங்க இல்லாம நாம எதாவது பேச முடியுமா? அதனால தான் அவங்க இஷ்டம் போல கத்தட்டும்னு பேசாம இருந்திட்டேன். அவங்க மட்டும் சத்தம் போடாம இருந்திருந்தா, நாம பார்லிமென்ட் நடத்தியிருக்க வேண்டியிருக்கும். அப்புறம் அந்த பில்லை பாஸ் பண்ணு, இந்த பில்லை பாஸ் பண்ணுன்னு உசிர வாங்கியிருப்பாங்க."

கப்பல், "ஒஹ், சாரி, இதுல இப்படி இரு ஆங்கிள் இருக்கறது தெரியாம போச்சே?"

சேமியா, "என்ன பழனி சார், பொருளாதாரம் எல்லாம் எப்படி இருக்கு?"

"யாரோடது மேடம்?"

சேமியா, "நம்ம பொருளாதாரம் நல்லாத்தான் இருக்குன்னு எனக்குத் தெரியும். நாட்டோட நிலைமை என்ன?"

பழனி, "அதுல ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை. முடிஞ்ச வரைக்கும் எந்தப் பொருளுக்கும் விலை குறையாம பார்த்துக்கிட்டு வர்றோம். நடுவுல அப்பப்ப பெட்ரோல் விலை ஏறுது, டீசல் விலை ஏறுதுன்னு சொல்லி ஜனங்களை எந்நேரமும் ஒரு திகிலோடவே வெச்சிருக்கோம்"

சேமியா, "குட், அப்படியே மெயின்டைன் பண்ணுங்க. முடிஞ்சா பெட்ரோல் ஒரு அஞ்சு ரூபாய் ஏத்திட்டு அப்புறமா ரெண்டு ரூபாய் கம்மி பண்ணிடுங்க. ஜனங்களை பிசியாவே வெச்சிருக்கணும். ப்ரீயா விட்டா யோசிச்சு யோசிச்சு கேள்வி கேட்பாங்க. அப்புறம் நம்ம வண்டி ஓடாது"

"இருந்தாலும், தேவையில்லாம போராட்டம், அது இதுன்னு அமளி பண்ணுவாங்களே?"

"யாருய்யா பண்றா? நியாயமான தேவைக்கு பெட்ரோலைப் பயன்படுத்தற எவனும் ரோட்ல இறங்கி கோஷம் போடறதில்ல. அவன் மனசுக்குள்ள உறுமிக்கிட்டே வழக்கம்போல டூ வீலரை தள்ளிக்கிட்டு பெட்ரோல் பங்குக்குப் போகத்தான் போறான்."

தாந்தோணி, "ரொம்ப சரியா சொன்னீங்க"

அப்பொழுது உள்துறை அமைச்சர் வியர்வையைத் துடைத்தவாறே உள்ளே நுழைகிறார்.

கப்பல், "என்னய்யா, ப்ரெஸ் மீட்டுக்கு வர்ற மாதிரி இவ்ளோ லேட்டா வர்றே?"

உள்துறை, "அஸ்ஸாம் கலவரம் சம்பந்தப்பட்ட வீடியோ ஒண்ணு ஒரு பத்திரிக்கை கிட்ட சிக்கிடுச்சு. மேடம் தான் அஸ்ஸாம் கலவரம் சம்பந்தப்பட்ட எந்த வீடியோவோ செய்தியோ மீடியாவுக்குப் போகக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருக்காங்களே. அவங்க கிட்ட பேசி, அப்புறம் ரெண்டு தட்டு தட்டி சரி பண்றதுக்குள்ள லேட் ஆயிடுச்சு, சாரி மேடம்"

சேமியா, "அது சரி, மோடி பத்தி இன்னிக்கு எதுவும் செய்தி வரலியே? ஏன்?"

உள்துறை, "எல்லா கேசும் நிலுவையில இருக்கே மேடம், அடுத்த வாரம் தான் தீர்ப்பு வரும்"

சேமியா, "அப்படியெல்லாம் ப்ரீயா விடாதீங்கய்யா. அந்த ஆளைப் பத்தி எதாச்சும் கெட்ட செய்தி ரெகுலரா வரணும். இல்லேன்னா பெரிய ஆளாகி நமக்கெல்லாம் ஆப்பு வெச்சிடுவான்.

பழனி, "அந்த ஆள் அடுத்த வாரம் சிறைக் கைதிகளை சந்திக்கப் போறாராமாம். "மோதி, ஜெயிலுக்குச் செல்கிறார்" அப்படின்னு தலைப்புப் போட்டு கொஞ்சம் கிண்டுங்க"

"நீங்க அனுபவசாலி, சொன்னா சரியாத்தான் இருக்கும், அப்படியே செஞ்சிடுவோம்"

கன்மோகன், "மேடம், இந்த நிலக்கரி ஊழல் பிரச்சினைக்கு என்ன பண்ணப் போறீங்க?"

சேமியா, "அதுல தான் எதிர்கட்சி ஆளுங்களும் சம்பந்தப்பட்டிருக்காங்களே, கவலையை விடுங்க, அவங்களே மூடி மறைச்சிடுவாங்க."

கப்பல், "மேடம், நம்ம தம்பி ராகுல் எப்போ அமைச்சரவைக்குள்ள வருவாரு?"

"அவன் வளர்ற பையன், அவனுக்கு எதுக்கு இதெல்லாம்? பார்லிமென்ட் பில்டிங் நல்லாருக்கு, தினசரி வந்து போகணும்னு ஆசைப்பட்டான். சரின்னு சொல்லி ஒரு MP ஒரு சீட்டை வாங்கிக் குடுத்துட்டேன். பொழுது போகலேன்னா எதாச்சும் கிராமத்துக்குப் போய் ஏழைங்களோட போட்டோ எடுத்துக்கிட்டு வருவான். இப்பவே அவனை உள்ளை இழுத்திட்டா அப்புறம் அடுத்த தலைமுறைன்னு சொல்லிக்க கட்சியில யாருமே இல்லை பாருங்க, அதான் அவனை இன்னும் உள்ளே சேர்க்கலை. அவனை வெளிய வெச்சிருந்தாத்தான் இளைய பாரதத்தின் எழுச்சி நாயகன்னு சொல்லி ஒரு நாலு வோட்டு வாங்க முடியும்”

உள்துறை, "மேடம் இந்த லோக்பால் மசோதாவை..."

பழனி "யோவ், அதான் அவங்களே காமெடி பீஸ் ஆயிட்டாங்களே, அப்புறம் லோக்பாலாவது ஒண்ணாவது?"

எல்லோர் முகத்திலும் புன்முறுவல். சில நிமிடங்கள் மவுனமாக இருக்கின்றனர்.

சேமியா, 'சரி, வேற ஒண்ணும் இல்லையே, எனக்கு ட்ரீட்மெண்டுக்கு நேரமாவுது. கிளம்பறேன், கன்மோகன் ஜி, முடிஞ்சா இந்த யுவராஜ் சிங்கை நம்ம பக்கம் இழுங்க. மக்கள் மத்தியில அவனுக்கு நிறைய "ஐயோ பாவம்" இமேஜ் இருக்கு. அதை நாம பயன்படுத்திக்கணும். கொஞ்சம் பஞ்சாபியில பேசி கரெக்ட் பண்ணுங்க, அப்புறம், வெளிய மீடியா இருக்காங்க. நான் வந்த விஷயம் அவங்களுக்குத் தெரியக் கூடாது, புரியுதா? "

சேமியா  கிளம்பிய பிறகு கன்மோகன், "யோவ் கப்பல், உள்ளே எதைப் பத்திப் பேசினீங்கன்னு வெளிய இருக்கற மீடியா கேட்பாங்களே, என்ன சொல்லப் போறீங்க?"

கப்பல் சிரித்துக்கொண்டே, "அதெல்லாம் சப்பை மேட்டர், நீங்க நியூஸ் சேனல் பாருங்க"



வணக்கம்,

தலைப்புச் செய்திகள், பிரதமர் கன்மோகன் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவையின் உயர்மட்டக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விலைவாசியைக் கட்டுபடுத்துவது, நிலக்கரி ஊழலை விசாரிக்க சிபிஐ தலைமையில் குழு அமைப்பது போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றதாக அமைச்சர் கப்பல் தெரிவித்தார். லோக்பால் மசோதாவை வரும் குளிர் காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வது பற்றி ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.



என்னங்க? ரண கடூர தெலுங்குப் படம் பார்த்த மாதிரி இருக்கா? அதீத கற்பனை தான். இருந்தாலும் நாட்டு நடப்பைப் பார்த்தா இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுது. அதனால தான் டைட்டில் கூட டப்பிங் படம் மாதிரியே வைச்சிருக்கோம். தெலுங்குப் பட ஹீரோ மாதிரி யாராச்சும் பொங்கி வந்தாத்தான் நமக்கெல்லாம் மோட்சம்! 

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...