Thursday, July 5, 2012

எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணும்!!


தேர்வு அறை. ரமேஷ் மிகவும் பதட்டமாக அமர்ந்திருந்தான். இது வரை 4 -5 இடம் பார்த்தாகி விட்டது. ஒன்றும் செட் ஆகவில்லை. இந்த இடமாவது அமைய வேண்டுமே என்று மனதில் கவலை. அடுத்தது அவனைத் தான் அழைப்பார்கள். இவனுக்கு முன்னால் சென்ற ஏழு பேரும் போன வேகத்தில் வெளியே வந்துவிட்டார்கள். அதிலும் கடைசியாக வெளியே வந்தவன் சும்மா இல்லாமல் "கேள்விகள் எல்லாம் செம tough பாஸ், தேறுவது ரொம்ப கஷ்டம்" என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான்.

கலக்கத்தில் நாக்கு மிகவும் வறண்டு போகவே, தண்ணீர் குடிக்க நினைத்து சீட்டை விட்டு எழவும் அவனை உள்ளே அழைத்தார்கள். பீர் போல பொங்கிய வியர்வையை துடைத்துக் கொண்டு, வேகமாக தலைவாரி, தொண்டையை செருமிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

மிகவும் மாடர்னாக இருந்த பெண்மணி இவனை அமருமாறு சைகை செய்தாள்.

"ரமேஷ்.... பெயர் கொஞ்சம் ஓல்ட் பேஷனா இருக்கே"

ரமேஷ் "என்னடா இது, ஆரம்பமே சரியில்லையே" என்று நினைத்துக் கொண்டே "ஆனா எல்லாரும் என்னை ராமின்னு தான் கூப்பிடுவாங்க"

"ஹ்ம்ம்...சரி, உங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க"

"நான் இஞ்சினீரிங் படிக்கறேன், பைனல் இயர் முடிக்கப் போறேன். போன வாரம் நடந்த கேம்பஸ் தேர்வில கூட செலெக்ட் ஆயிருக்கேன்."

பெண்மணி குறுக்கிட்டு, "நான் கேக்கறது உங்க பெர்சனாலிட்டி பத்தி. அதாவது ரமேஷ் ஒரு தனி மனிதனா எப்படிப்பட்ட ஆளுன்னு"

ரமேஷ், "நான் ரொம்ப ஜோவியலான ஆளு, மொக்கை ஜோக், தத்துவம்னு சும்மா அடிச்சிக்கிட்டே இருப்பேன்"

"எங்கே, ஒரு மொக்கை போடுங்க பார்க்கலாம்"

"என் சரக்கு உனக்கு போதையாவும், ஆனா உன் போதை எனக்கு சரக்காவாது"

"நாட் பேட்"

ரமேஷின் கண்களில் சற்றே ஒளி தெரிந்தது.

"உங்க ஹேபிட்ஸ்?"

"எந்த மாதிரி ஹேபிட்ஸ்? ஸ்மோகிங்?"

"அதுவும் தான்"

"ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டு. வாரம் ஒரு முறை பீர் அடிப்பேன்"

"பீர் தனியா அடிப்பீங்களா அல்லது நண்பர்களோடவா?"

"பிரெண்ட்ஸ் கூடத் தான்"

"பெண் நண்பர்கள் அந்தக் கூட்டத்தில இருப்பாங்களா?"

"இல்லை, ஆண்கள் கூடத் தான். பெண்கள் முன்னாடி நான் சரக்கடிக்கரதில்ல"

"ஒரு வேளை அப்படி அடிக்கற நிலைமை வந்தா கூச்சப்படாம அவங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஆபர் பண்ணுவீங்களா?"

"கண்டிப்பா, ஆனா நான் அப்படிப்பட்ட நிலைமைக்குள்ள சிக்கிக்க மாட்டேன்"

"அது ஏன்?"

"லேடீஸ் முன்னாடி குடிச்சா சரியா வராது"

"அதான் ஏன்?"

"நான் குடிக்கறதே போதைக்கு, அவங்களைப் பார்த்தா மைன்ட் அலெர்ட் ஆயிடும்."

"ஓகே, குடிச்சிட்டு வண்டி ஓட்டுவீங்களா?"

"இல்லை, பிரெண்ட் வீட்லேயே தூங்கிடுவேன்"

"ஏன், பயமா?"

"ஆமாம், உயிரோட இருந்தாத்தானே இன்னும் நிறைய நாள் ஜாலியா இருக்க முடியும்"

"ஹ்ம்ம்..பைக்ல சுமாரா எவ்ளோ ஸ்பீட் போவீங்க?"

"ரோட்டைப் பொறுத்து - அதிகபட்சம் 70"

"ஸ்பீட் பிரேக்கர் வந்தா?"

"சுத்தமா ஸ்லோ பண்ணிடுவேன். சடார்னு ஏத்தினா முதுகெலும்பு பாதிக்கும்"

"பைக்ல போயிக்கிட்டிருக்கீங்க, திடீர்னு மழை வருது. என்ன செய்வீங்க?"

"உடனே ஓரங்கட்டிடுவேன், பக்கத்துல எதாவது டீக்கடை இருந்தா சூடா பஜ்ஜி டீ சாப்பிடுவேன்"

"மழையில நனைய மாட்டீங்களா?"

"அய்யய்யோ, உடனே ஜலதோஷம் புடிச்சிக்கும்"

"ஹ்ம்ம்...என்ன போன் வெச்சிருக்கீங்க?"

ரமேஷ் தன் போனைக் காட்டுகிறான்.

"டச் ஸ்க்ரீன் இல்லையா?"

"இது தான் ரொம்ப வசதியா இருக்கு. டச் ஸ்க்ரீன் போன் கை தவறி விழுந்தா நொறுங்கிடுது "

"எவ்ளோ சினிமா பார்ப்பீங்க?

"ஒரு மாசத்துல ஆறு சினிமா பார்ப்பேன்"

பெண்மணி ஆச்சர்யத்துடன், "6 தடவை தியேட்டருக்குப் போவீங்களா?"

"எல்லாம் விசிடி டிவிடி தான். எந்திரன் மாதிரி பிரம்மாண்டமான படம் எதாவது வந்தா தியேட்டருக்குப் போவேன்"

"அப்படி தியேட்டருக்குப் போகும்போது எவ்ளோ செலவு பண்ணுவீங்க?"

"படம் போறதுக்கு முன்னாடி வீட்ல இல்லேன்னா ஹோட்டலில் நல்லா சாப்பிட்டுருவேன். ஏன்னா அப்போத்தான் தியேட்டர்ல பசிக்காது. அப்படியே பசிச்சாலும் அதிகபட்சம் ஒரு காபி அல்லது கூல் ட்ரிங்க்ஸ் அவ்ளோ தான். தியேட்டருக்குள்ள என்ன விலை விக்கறாங்க!"

"உங்களுக்குத் தெரிஞ்ச லேடீஸ் காஸ்டியூம்ஸ் பேரு சொல்லுங்க"

ரமேஷ், "சேலை, சுடிதார், ஜீன்ஸ், டாப், குர்தா, மிடி, ஸ்கர்ட், ஹ்ம்ம்... அவ்ளோ தான்"

"இது வரைக்கும் காவல் நிலையம், வம்பு தும்பு, அடிதடி, எதாவது சந்திச்சிருக்கீங்களா?"

"அந்த வாடையே ஆகாதுங்க. எதுக்குக் கேக்கறீங்க? நான் யோக்கியனான்னு தெரிஞ்சுக்கவா?

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நீங்களும் நானும் ஒண்ணா ஊர் சுத்தும்போது உங்க மேல பொறாமைப்பட்டு உங்களை சில பேர் தாக்க வரலாம். ஏன், எனக்கே கூட நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர் உங்களை ஆளை வெச்சு அடிக்கலாம். அதுக்கெல்லாம் உங்களுக்குத் திராணி வேண்டாமா? அதுக்குத் தான்"

ரமேஷின் முழி பிதுங்கிகிறது.


பெண்மணி சிறிது நேரம் யோசிக்கிறாள்.

ரமேஷ் பொறுக்க மாட்டாமல், "என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?"

பெண்மணி, "பாய் பிரெண்டா இருக்கறதுக்கான ஒரு தகுதியும் உங்களுக்கு இல்லை"

ரமேஷ் கலவரமாகி, "எதனால அப்படிச் சொல்றீங்க?"

"என் கூட அரை மணி நேரமா பேசிக்கிட்டிருக்கீங்க, ஆனா இது வரைக்கும் என் டிரெஸ்ஸைப் பற்றியோ, என் ஹேர் ஸ்டைலைப் பற்றியோ நீங்க ஒண்ணும் சொல்லவே இல்லை. உங்களை கல்யாணம் வேணா பண்ணிக்கலாம். ஆனா அதுக்கு எனக்கு இன்னும் வயசு இருக்கு. நீங்க போயிட்டு ஒரு நாலு வருஷம் கழிச்சு வாங்க"

ரமேஷ் சோகமாகி,"கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க"

"என்னய்யா கன்சிடர் பண்றது? ஒரு பொண்ணு பார்க்க வர்றவங்க கூட பூ பழம் இனிப்புன்னு வாங்கிட்டு வர்றாங்க. நீங்க என்னடான்னா அட் லீஸ்ட் ஒரு பொக்கே கூட கொண்டு வராம வெறும் கையோட வந்திருக்கீங்க"

ரமேஷ், "ஒரு வேளை செலெக்ட் ஆயிட்டேன்னா உங்களுக்கு உடனே ஒரு பொக்கே குடுத்து ட்ரீட் குடுக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தேன்"

பெண்மணி, "அதென்ன ஒரு வேளை? அப்படின்னா உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இல்லையா?"

ரமேஷ் பதற்றமாகி, "அப்படி இல்லை.."

"வேற எப்படி ராமி? தன்னம்பிக்கை இல்லாத ஆள் கூட நான் எப்படி சுத்தறது? ஐ ஆம் சாரி. நீங்க போகலாம்" என்று கூறி முடிக்கவும் அவரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார் "ஹாய் ரமேஷ், எப்படிடா இருக்கே? நானா? இல்லை இல்லை, ஆக்சுவலி உன் கூட ஆறு மாசமா சுத்தி போரடிச்சிடுச்சு. அதனால வேற ஒரு ஆளைத் தேடிக்கிட்டிருக்கேன். என்னது? நீ ரீ-அப்ளை பண்ணப் போறியா? அனுபவசாலியாச்சே! கண்டிப்பா உனக்கு முன்னுரிமை உண்டு. இன்னிக்கா? கொஞ்சம் பிசி தான். இன்னும் ஒரு கேண்டிடேட் இருக்கான்னு நினைக்கறேன். முடிச்சிட்டு சொல்றேன், லவ் யூ, பை". பிறகு நிமிர்ந்து நம்ம ரமேஷைப் பார்க்கிறாள். "நீங்க இன்னும் போகலியா சார்?" போய்யா, போ... போயிட்டு நாலு வருஷம் கழிச்சு வா. அதுக்குள்ளே பாரின் இல்லேன்னா மல்டிநேஷனல் கம்பெனில ஒரு நல்ல வேலையில சேர்ந்துடு.


ரமேஷ், "ஒரே ஒரு கேள்வி, இப்படி அடாவடி பண்றீங்களே? இது உங்களுக்கே அடுக்குமா?"


பெண்மணி நக்கலாக, "நீங்க பண்ணாத அடாவடியா நாங்க பண்றோம்? எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் எங்களைப் போட்டு நசுக்கத் தான் போறீங்க. அதான் காற்றுள்ள போதே தூற்றிக்கறோம். இதான் கொள்கை விளக்கம், புரிஞ்சுதா? கிளம்பு"

சோகமாக வெளியே வரும் ரமேஷைப் பார்த்து அடுத்ததாகக் காத்திருக்கும் நபர், "என்ன பாஸ், என்ன சொல்றாங்க?"

ரமேஷ் வெறுப்பாக, "எல்லாம் ஐ வாஷ் பாஸ், ஏற்கனவே ஆளை பிக்ஸ் பண்ணிட்டாங்க."

"அப்படியா சொல்றீங்க? இப்ப என்ன பாஸ் பண்றது?"

ரமேஷ், "நாம என்ன சார் செய்ய முடியும்? எல்லாம் நம்ம பெரிசுங்க பண்ணின கூத்து. கள்ளிப்பால் ஊத்தி பெண் குழந்தைகளை எல்லாம் கொன்னுட்டானுங்க. அதனால அவங்க எண்ணிக்கை கம்மியாயிடுச்சு. நாம அதிகமாயிட்டோம். இப்ப நாம ஆள் கிடைக்காம அவஸ்தைப்படறோம். இப்படியே போச்சுன்னா நாம் எல்லாரும் "அவன்" ஆயிட வேண்டியது தான்"

கேள்வி கேட்ட நபர் சோகமாகவும், ரமேஷ் ஜாலியாக, "இதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க பாஸ், நாம வழக்கம்போல மூக்கு முட்ட குடுச்சிட்டு பிரியாணி சாப்பிடுவோம். முடிஞ்சா, "அழகான பாதகியே, என் நெஞ்சை நொறுக்கிய க்ராதகியே" அப்படின்னு ஒரு லவ் பெயிலியர் சாங் பாடுவோம். அப்படியாச்சும் இவங்களுக்கு நம்ம மேல இரக்கம் வருதான்னு பார்க்கலாம்"

". இருவரும் ஒருவர் மீது ஒருவர் கை போட்டுச் செல்கின்றனர்.





பெண்களை இழிவுபடுத்துவது எங்கள் நோக்கமல்ல. டிமாண்ட் உள்ளவர்கள் அதிகாரம் செலுத்துவது இயல்பு. ஆனால் மேலே சொன்ன கற்பனைக் கதை நிஜமாகும் வாய்ப்புகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தாய்ப்பால் தவிர வேற எந்தப் பாலையும் யாருக்கும் குடுக்காதீங்கன்னு தாழ்மையுடன் கேட்டுக்கறேன்.

Jayaraman
New Delhi

5 comments:

  1. Thanks Giri for the continued and regular appreciation.

    Eagerly looking for a launch pad to move further.

    Would be grateful if you can help us by recommending my articles (the one which is worth recommending from your perspective) to your contacts in the media / magazine industry.

    thanks again

    ReplyDelete
  2. attakasama iruku boss...!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...