Saturday, July 28, 2012

கிலிம்பிக்ஸ் - பகுதி 1


லண்டன் ஹீத்ரோ விமான நிலையம். விமானத்தின் கதவு திறந்தவுடன் முதல் ஆளாக கவுண்டர் வெளியே வருகிறார். வந்த வேகத்தில் மீண்டும் விமானத்தின் உள்ளே செல்கிறார்.

விமான பணிப்பெண், " என்ன சார் ஆச்சு?"

கவுண்டர், "அட போங்க அம்மணி, குளிர் காதைக் கிழிக்குது. இது ஆவுறதில்ல.ரிட்டர்ன்"

விமான பணிப்பெண், "சரி நீங்க கொஞ்சம் ஓரமா உட்காருங்க. மத்தவங்க இறங்கட்டும்"

"ஓகே," என்று சொல்லிவிட்டு ஓரமாக உட்காருகிறார். எல்லாரும் இறங்கிய பின் விமானத்தில் இவர் மட்டும். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "ஏங்க வைட் சிஸ்டர், என் கூட ஒரு ப்ளாக் பிக் வந்திச்சே, எங்கேங்க அது?"

"வ்ஹாட்?"

"அதாங்க, கறுப்பு பன்னி"

"ஒ, அவரா, அவர் இறங்கிப் போயிட்டாரே"

"என்னது போயிட்டானா?" என்று அலறி அடித்துக்கொண்டு இறங்குகிறார். கீழே இறங்கி அங்குமிங்கும் அலைகிறார். அப்பொழுது பின்னாலிருந்து ஒரு குரல் "அண்ணே, அண்ணண்ணே". கவுண்டர் திரும்பிப் பார்த்து, "டேய் நீயாடா? என்னடா இது வேஷம்?"

செந்தில் சிரித்துகொண்டே, "லண்டன்ல குளிர் ஜாஸ்தின்னு தெரியும், அதான் முன்னாடியே இந்த ஜாக்கெட், குல்லா எல்லாம் மாட்டிக்கிட்டு ரெடியாகிட்டேன். ஆமாம், நீங்க எதுவும் மாட்டிக்கல?"

கவுண்டர், "ஹெய்ஹே, நாங்கல்லாம் வீரன்ஸ், நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு சுத்தற தமிழன்ஸ்"

"ஒ, அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பயந்துக்கிட்டு ஓடி ஒளிஞ்சிங்களா?"

"படுவா, ரொம்ப பேசாதே, நேரமாகுது, வா ஹோடல்லுக்குப் போவோம்" என்று சொல்லிவிட்டு செந்திலின் குல்லாவை சரி செய்கிறார்.

"என்னண்ணே பண்றீங்க?"

"இப்படி மூஞ்சி முழுக்க குல்லாவால மூடியிருந்தீன்னா பார்க்கறவன் எல்லாம் லண்டன் ஜூலேர்ந்து கருங்குரங்கு ஒண்ணு தப்பிச்சு வந்திருச்சுன்னு நினைச்சிக்கப் போறாங்க. அப்புறம், கொஞ்சம் மனுஷன் மாதிரி பேசிக்கிட்டே வா, அப்போத்தான் நீ மனுஷன்னு எல்லாரும் நம்புவாங்க"

முறைத்துக்கொண்டே கவுண்டர் பின்னால் நடையைக் கட்டுகிறார் செந்தில்.

இருவரும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஒரு காபி ஷாப்பில் அமர்கின்றனர். அப்பொழுது கவுண்டர் தன் மொபைல் எதையோ தட்டிக் கொண்டு இருப்பதை கவனிக்கிறார் செந்தில்.

"ஐ, என்னண்ணே போன் இது, புதுசா இருக்கு?"

"ஆமாம், புதுசு தான், ஞானப்பழம்னு பேரு"

"உங்களுக்கு எப்பவுமே காமெடி தான். போனுக்குப் போய் ஞானப்பழம்னு யாராச்சும் பேர் வைப்பாங்களா?"

"ஏண்டா வைக்கக் கூடாது? ஆப்பிள், ப்ளாக்பெர்ரின்னு இங்கிலிஷ்ல பேரு வைச்சா மட்டும் விழுந்து விழுந்து வாங்கறீங்க? இதாண்டா, தமிழன் எது செஞ்சாலும் புடிக்காது"

ஏண்ணே, இங்க வந்து தமிழன், மலையாளின்னு அரசியல் பேசிக்கிட்டு?

" அடேய் வண்டுருட்டான் தலையா, இப்ப நாம பார்க்க வந்திருக்கோமே ஒலிம்பிக்ஸ், அதுவே ஒரு பெரிய உலக அரசியல் தாண்டா"

"கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே"

கவுண்டர் போனில் எதையோ தட்டி உற்றுப் பார்க்கிறார். பிறகு "அடேய், முன்னாடி இருந்த வெள்ளைக்கார ராஜாக்கள் எல்லாம் எந்நேரமும் கடவுள் பேரை சொல்லிக்கிட்டு சண்டை போட்டிக்கிட்டிருந்தாங்க. நடுவுல வந்த ஒண்ணு ரெண்டு நல்லவங்க, இந்த விளையாட்டு நடக்கும்போதாச்சும் யாரும் சண்டை போடாதீங்கன்னு சொல்லி ஆரம்பிச்சது தான் இந்த ஒலிம்பிக்ஸ்.

காபி வருகிறது. அதில் ஒரு வாய் குடித்து விட்டு மீண்டும் தொடர்கிறார்.

"இப்ப நடக்கற மாடர்ன் ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் சுமார் 115 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சது. கிரேக்கக் கடவுள்களை மையமா வெச்சு ஆரம்பிச்சதால கிரீஸ் நாட்டுக்கு இதுல எப்பவுமே ஒரு பாரம்பரிய சிறப்பு உண்டு"

"கடவுளா? அப்போ இதுவும் நம்ம ஊரு மாரியம்மன் கோவில் திருவிழா மாதிரியாண்ணே?"

கவுண்டர் கடுப்பாகி, "ஆமாம், கரகாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் ஆடுவாங்க. உன்னையெல்லாம் கூட்டிக்கிட்டு வந்தேன் பாரு" என்று சொல்லிவிட்டு மீண்டும் போனை பார்க்கிறார்.

செந்தில், "என்னண்ணே அடிக்கடி போனை பார்க்கறீங்க?"

"இல்லை, நமக்கு வேண்டிய பையன் ஒருத்தன் ஏர்போர்ட் வர்றேன்னு சொல்லியிருந்தான். அதான் பார்க்கறேன்"

"பையனா எதுக்கு?"

"இது..... நான் நல்லாத்தான் இங்க்லீஷ் பேசுவேன், ஆனா பாரு இந்த ஊரு சோன்பப்டி தலையன்களுக்கு அது புரியாது. அதுக்குத் தான் ஒரு படிச்ச பையனை உதவிக்கு வரச் சொல்லியிருந்தேன்"

செந்தில்,"அவன் வரும்போது வரட்டும், டிபன் தான் வாங்கித்தரமாட்டேன்னு சொல்லிட்டீங்க, இன்னொரு டீயும் பன்னும் சொல்லுங்க, பசிக்குது"

"டேய் இப்பத் தானேடா காபி குடிச்சே?"

"அதுண்ணே.."

கவுண்டர் இடைமறித்து, "வேண்டாம்பா, அப்புறம் அதிலயும் பால் தான் இதிலேயும் பால் தான்னு விஞ்ஞான விளக்கமெல்லாம் குடுப்பே, என்ன வேணுமோ குடிச்சுத் தொலைi"

செந்தில் ஆர்டர் சொல்லிவிட்டு "அது சரிண்ணே, ஒலிம்பிக் சின்னத்துல அது என்ன வளையம் வளையமா போட்டிருக்கு?

"அப்படிக் கேள், நம்ம வேர்ல்ட்ல மொத்தம் அஞ்சு கண்டம் இருக்கு. அதுல இருக்கற ஒவ்வொரு வளையமும் ஒவ்வொரு கண்டத்தைக் குறிக்குது."

"அப்படியாண்ணே," என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு டீயை உறிஞ்சுகிறார்.

கவுண்டர், "நல்ல வேளை, வளையம் போடும்போது எவனும் உன்னைப் பார்க்கல. இல்லேன்னா உனக்கும் ஒரு வளையம் போட்டிருப்பான்"

செந்தில் கடுப்பாகி, "அப்போ நான் கண்டமா?"

"பின்ன, தண்டமா?" என்று சொல்லவும் அவரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார். பிறகு செந்திலைப் பார்த்து, "டேய் நம்ம பையன் வெளிய வந்துட்டான். வா போகலாம்"

என்று செந்திலை எட்டி உதைக்காத குறையாக தள்ளிக் கொண்டு செல்கிறார். வெளியே நிற்பவரைப் பார்த்து கவுண்டர் அதிர்ச்சியடைகிறார்.

காரணம் நிற்பவர் நம்ம விவேக்.

"டேய் நீயாடா? நீ எப்படா இந்த வேலைக்கு வந்தே?"

விவேக்," ஹாய் ஹாய் ஹாய், வீட்ல எவ்ளோ நாள் தான் சும்மா இருக்கறது? சினிமாவை நம்பி அறக்கட்டளை வேற ஆரம்பிச்சிட்டேன். இப்போ சினிமா வாய்ப்பு சுத்தமா இல்லை, அதுக்காக அறம் செய்யாம இருக்க முடியுமா? அதான் இங்க எலிசபத் ராணியைப் பார்த்து டொனேஷன் வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன். அப்படியே ஒலிம்பிக் முடியற வரைக்கும் இந்த கைடு பிசினெஸ்ஸும் பண்றேன்.

செந்தில், "தம்பி தான் வரப் போவுதுன்னு எனக்கு முன்னாடியே தெரியும். உங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரலாமேன்னு தான் உங்க கிட்ட சொல்லலை"

கவுண்டர், "ஒ, சஸ்பென்ஸ் வைக்கிற அளவுக்கு பெரிய மனுஷனாகிட்டீங்களா?" என்று சொல்லிவிட்டு செந்திலை உதைக்க எத்தனிக்கிறார்.

விவேக், "ஹலோ, இது லண்டன், இங்க மிருகத்தை எவனாச்சும் பப்ளிக்கா அடிச்சாலே ஜெயில்ல போட்டுடுவாங்க. நீங்க ஒரு மனுஷனை அடிக்கறதைப் பார்த்தாங்க, இப்படியே இந்தியாவுக்கு திரும்பப் போக வேண்டியது தான்"

"அப்போ இங்க இருக்கற வரைக்கும் இவனை நான் அடிக்கவே முடியாதா? கடவுளே, என்ன ஒரு சோதனை" என்று வருத்தப்பட்டுக் கொண்டே காரில் ஏற முயற்சிக்கிறார். அப்பொழுது அங்கே மிகவும் அடி வாங்கிய நிலையில் ஒரு பாடி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். "ஏம்பா, என்னப்பா இது காருக்குள்ள ஒரு பிணம் கிடக்குது"

"பிணம் இல்லண்ணே, நானும் மனுஷன் தாண்ணே"

கவுண்டர், "இந்தக் குரலை நான் எங்கயோ கேட்டிருக்கேனே" என்று யோசிக்கிறார்.

"நான் தாண்ணே உங்க அன்புத் தம்பி வடிவேலு" என்று குரல் தழுதழுக்க காருக்குள் நிமிர்ந்து உட்கார முயற்சிக்கிறார்.

செந்தில்,"அடப்பாவி, உன்கேண்டா இந்த நிலைமை"

வடிவேலு, "எல்லாம் என் கேட்ட நேரம்ணே"

விவேக், "டேய், நீ தப்பு பண்ணிட்டு ஏண்டா நேரத்தை குற்றம் சொல்றே?"

கவுண்டர், "தப்பா? தம்பி அப்படியெல்லாம் பண்ண மாட்டானே?"

வடிவேலு, "அந்தக் கொடுமையை ஏண்ணே கேக்கறீங்க? துபாயிலிருந்தே டிக்கெட் எடுக்காம வந்தேன்னு ஒரு எடுபட்ட பய விளையாட்டா சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு நாமளும் டிக்கெட் இல்லாம லண்டன் வந்தா என்னன்னு ஒரு கெத்துல ஊர்லேர்ந்து கிளம்பிட்டேன். அங்க நம்மூர் ஆளுங்கள எப்படியோ சமாளிச்சு, ஏமாத்தி ப்ளைட்டும் ஏறிட்டேன். ஆனா இங்க வந்த உடனே லண்டன் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன். பாவிப் பயலுக, சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க.

அப்புறம் நம்ம விவேக் தம்பி தான் யார் யார் கிட்டயோ பேசி பைனைக் கட்டி வெளிய கொண்டாந்திச்சு.
விவேக், "யார் யார் கிட்டயோ பேசல. நம்ம சந்தானம் இங்க ஷூட்டிங்குக்காக வந்திருக்காப்ல.அவன் கிட்ட பேசித் தான் இந்த பாடிய வெளிய எடுக்க முடிஞ்சுது. நல்ல வேளை , கையில பாஸ்போர்ட் வெச்சிருந்தான், இல்லேன்னா  இந்நேரம்  அல் கைதா சிறப்பு ஜெயில்ல ரத்த வாந்தி எடுத்துக்கிட்டிருந்திருப்பான்"

வடிவேலு, "அப்படியாப்பா, ஆமாம், எங்க அந்த தம்பி?"

விவேக், "டியூட்டி ப்ரீ ஷாப்ல சரக்கு வாங்கப் போயிருக்கான், வந்துடுவான்" என்று சொல்லி முடிக்கவும் சந்தானம் காரின் அருகே வருகிறார்.

சந்தானம்,"என்ன பெரிசுங்க எல்லாம் மீட்டிங் போடறீங்க போலிருக்கு?"

கவுண்டர், "டேய், வந்தவுடனே உன் சரக்கு வேலையை ஆரம்பிச்சிட்டியா?"

சந்தானம், "இது எனக்கில்ல. என் நண்பர்களுக்கு. மனைவிக்காக மல்லிகைப் பூ வாங்கிட்டு வராத புருஷனும், பாரின் போய் சரக்கு வாங்கிக்கிட்டு வராத நண்பனும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்ல"

விவேக், "இந்த பன்ச் பாலா இருக்கும்போதே பன்ச்சா? சரி சரி, வண்டியை எடு"

கவுண்டர் ஷாக்காகி, "என்னது, இவனா வண்டி ஓட்டப் போறான்? நீ கைடு, இவன் டிரைவரா? இந்த வருஷம் ஒலிம்பிக்ஸ் பார்த்தா மாதிரி தான்" என்று சொல்லிக் கொண்டே காரின் உள்ளே நுழையவும் அவரை முந்திக் கொண்டு செந்தில் நுழைந்து அமர்கிறார். "ஐ, இது என் இடம்" 

கவுண்டர், "டேய் நீ இன்னும் மாறவே இல்லையாடா?" 

செந்தில், "மாறாம இருக்கறவன்தாண்ணே மனுஷன்" 

விவேக், "ஆஹா, ஆளாளுக்கு பன்ச் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களே," 

சந்தானம், "ஹேய் கன்ட்ரி மென், இது லேட்டஸ்ட் வண்டி, உங்களுக்கெல்லாம் ஓட்டத் தெரியாது. அதுவுமில்லாம நீங்க எல்லாம் என் சீனியர்ஸ், அதான் நானே வண்டி ஓட்டறேன்"

செந்தில், "சரி சரி, யார் வேணா வண்டிய ஓட்டுங்க, போற வழியில சாப்பாட்டுக்கு மட்டும் எதாச்சும் நல்ல முனியாண்டி விலாசாப் பார்த்து நிறுத்துங்க. பசிக்குது"

கவுண்டர், "அடிங்க... இது வயிறா இல்ல செப்டிக் டேங்கா? அதான் ப்ளைட்ல எனக்குக் குடுத்த சாப்பாட்டையும் சேர்த்து நீயே தானே சாப்பிட்டே மறுபடியும் பசிக்குதுன்னு சொல்றே"என்று ஆத்திரப்பட்டு அவரை உதைக்கப் போகிறார். அப்பொழுது நால்வரும் கோரசாக, "லண்டன்....பப்ளிக்...போலிஸ்..."

கவுண்டர், 'ஐயோ, இதை சொல்லியே என்னைக் கொல்றானே? இன்னும் ரெண்டு வாரம் எப்படித் தான் சமாளிக்கப் போறேனோ" என்று சோகமாக முகத்தில் துண்டைப் போட்டு மூடியபடி சீட்டில் சாய்கிறார். கார் பறக்கிறது.தொடரும்.....


Jayaraman
New Delhi
2 comments:

  1. enna sir olympics pakkam vanthuttinka

    ind SL series illaya

    ReplyDelete
  2. there is nothing to write about that series.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...