இங்கிலாந்து கமென்டரி மன்னனின் சமீபத்திய பேட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை வறுத்து எடுத்திருக்கிறார். அவருக்கு போதுமான அளவு கமென்டரி வாய்ப்பு தரப்படாததே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. ஐசிசிக்கு வேண்டியவர் என்பதால் அவரை சமாதனப்படுத்தும் விதமாக வரவிருக்கும் தொடர்களில் அவரை சேர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
டென்னிஸ் வீரர்களின் குழாயடி சண்டைக்குக் காரணம் சம்பளமே என்று தெரிய வந்துள்ளது. மூத்தவருக்கு செல்வாக்கு இருப்பதால் தகுதிக்கு மீறிய சம்பளத்தை கொடுக்கும் அசோசியேஷன் ஏனையோருக்கு அதில் பாதியைக் கூட தர மறுப்பதாக இளையவர்கள் புலம்புகின்றனர். இது காலம் காலமாக நடந்து வருவதாகவும் ஆனால் இந்த முறை வெளிச்சத்துக்கு வந்து விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து தள்ளிப் போகும் இரண்டாம் பாகப் படத்தினால் தலை மிகவும் நொந்து போயிருக்கிறார். பாடல்கள் சொதப்பியது போதாதென்று ரிலீசும் தள்ளிப் போவதால் படத்தின் வெற்றி குறித்து மிகவும் கவலை கொண்டிருப்பதாகத் தகவல்.
உலக நாயகனின் புதிய படத்தைப் பற்றி என்ன தான் திரைப்பட விழாவிலும் விருது விழாக்களிலும் பிரதமாகப் பேசினாலும், அவரின் முந்தைய அவதாரப் படத்தின் இரண்டாம் பாகம் போல அமைந்திருப்பதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். நின்றாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் இந்த வயதில் இவருக்கு நாட்டியம் தேவையா என்றும் கிண்டலடிக்கின்றனர்.
கூடிய விரைவில் இளைய காந்தி பிரதமராக அறிவிக்கப் படலாம் என்று டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே நிதி அமைச்சரை ஜனாதிபதி களத்தில் இறக்கி விட்டிருப்பதாகப் பேசப்படுகிறது.
ஊரே காறித் துப்பும் போதும் மன்மோஹனர் எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் தொடர்ந்து அமைதி காத்து வருவது எரிச்சலை அளித்தாலும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பத்து வருடத்துக்கும் மேலாக சாப்பாட்டில் துளி அளவு கூட உப்பு சேர்த்துக் கொள்ளாததே இதன் ரகசியம் என்று ரேஸ் கோர்ஸ் சமையல்காரர் நக்கலடிக்கிறார்.
நட்சத்திர டிவியின் கோடீஸ்வர நிகழ்ச்சிக்குப் போதுமான வருவாய் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லையாம். சூரிய நடிகர் இயற்கையாகப் பேசாமல் சினிமா வசனம் போல் பேசுவதாலும், டைமிங் தெரியாமல் மொக்கை போடுவதாலும் மக்கள் எரிச்சலடைந்து சேனல் மாற்றி விடுவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த சீசனுக்கு வேறு யாரைப் போடுவதென்று இப்பொழுதே யோசித்து வருகின்றனர் சேனல்காரர்கள்.
நானும் கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று வீம்புக்கு நிகழ்ச்சி நடத்தியதில் சூரிய தொலைகாட்சி மிகவும் கையைச் சுட்டுக் கொண்டிருக்கிறதாம். பங்கேற்க ஆள் கிடைக்காமல் சீரியல் நடிகர்களை வரவழைத்து பொழுது போக்குவதாகவும் கூடுதல் தகவல்.
சிங்கம் சிறுத்தை என அனைத்துப் படங்களும் ஹிந்தியில் வெற்றி பெறுவது இங்குள்ளவர்களை மிகவும் உற்சாகப் படுத்தியிருக்கிறது. இது போக ஹிந்தித் தொலைக்காட்சிகளிலும் தென்னிந்திய டப்பிங் படங்களுக்கு வரவேற்பு கூடியிருப்பதால் இனி வட இந்தியர்களையும் கவரும் வண்ணம் கதைக் களம் மற்றும் நடிகைகளைப் போடுவதென்று நம்மவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பு வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிங் கானின் அணி தனியார் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வங்காள அரசு அனைத்து வீரர்களுக்கும் தங்கச் சங்கிலி அணிவித்ததன் உண்மைப் பின்னணி தற்போது வெளிவந்துள்ளது. போடப்பட்ட சங்கிலிகள் அனைத்தும் போலி என்றும் சொர்ணாக்கா தனது இமேஜை உயர்த்திக் கொள்வதற்காகவே அப்படி செய்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். சங்கிலிக்குப் பதிலாக வீரர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. இது கிங் கானுக்கு முன்னமே தெரியுமென்றும் இதிலும் அவர் கணிசமான தொகையை அக்காவிடம் இருந்து கமிஷன் அடித்திருப்பதாகவும் நெருங்கியவர்கள் கூறுகின்றனர்
முட்டாள் கானின் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் TRP ரேட்டிங் குறைவதாக சேனல் புலம்பினாலும் சம்பந்தப்பட்ட அனைவரின் பாக்கெட் நிரம்பிவிட்டதாம். நிகழ்ச்சி நிஜமாகவே மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக மார்க்கெட்டிங் நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. குவிந்து வரும் SMS மற்றும் நிதியுதவியே இதற்கு சாட்சி என சொல்லப்படுகிறது. ஹ்ம்ம். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தால் சரி.
வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதில் நரேந்திரரும் குமாரரும் குடுமி சண்டை போடுவது தாமரைக் கட்சியை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 2014 வரைக்கும் கட்சி உயிருடன் இருக்குமா என்றே தெரியவில்லை, இவர்கள் ஏன் இப்போதிருந்தே அடித்துக் கொள்கிறார்கள் என்று கட்சியின் உண்மை விசுவாசிகள் எள்ளி நகையாடுகின்றனர்.
மதுரையைக் கைப்பற்றிய சாமியாரின் அடுத்த இலக்கு காஞ்சிபுரமாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வருவதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். சாமியார் விஷயத்தில் அம்மா சும்மா இருப்பதில் பக்தர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
புயல் மீண்டும் திரைக்கு வர வேண்டும் என்று விவேகம் கூறியிருப்பதில் எல்லோருக்கும் வியப்பு. ஆனால் "சொச்சமிச்சம் மிச்சசொச்சத்துக்குஆதரவாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் என்று விவேகம் காதுபட கலாய்க்கின்றனர் லொள்ளு க்ரூப்பைச் சேர்ந்தவர்கள்.
என்ன யோசிக்கறீங்க? இதெல்லாம் ஒரு ஆர்டிகிள்னு ஏண்டா படிச்சோம்னு தலையைப் பிச்சிக்கறீங்களா? நாங்க தான் முதல்லயே சொன்னோம்ல இதைப் படிக்காதீங்கன்னு. நம்மாளுங்க எவன் சொல் பேச்சு கேக்கறீங்க!!
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment