Monday, June 4, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!! பாகம் - 1


வணக்கம் நேயர்களே, இது உங்கள் அபிமான "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி. என்னதான் நான் மொக்கை போட்டாலும் அதையெல்லாம் தாங்கிக்கிட்டு எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர்றீங்க. அதுக்கு உங்கள் எல்லாருக்கும் நன்றி" என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்ய எத்தனிக்கிறார், அந்த நேரத்தில் டைரக்டர் "ஐயா, இது அவார்ட் பங்க்ஷன் இல்லை, கொஞ்சம் அடக்கி வாசிங்க என்று அறிவுறுத்தவும் சுதாரித்துக் கொண்டு, "இன்னிக்கு நம்மளோட விளையாடப் போறவர், ஒரு பிரபலம். அதாவது எந்தப் பிரபலமும் இந்த அளவுக்கு பிரபலமாகியிருக்க முடியாது, அந்த அளவுக்குப் பிரபலம். பார்ப்பதற்குக் க்ராக் மாதிரி இருந்தாலும் தன்னுடைய நடவடிக்கைகளால் எல்லோர் மனதிலும் ப்ரேக் போடுபவர். இவர் பெயருக்கு "ராஜாவின் முகம்" என்றொரு அர்த்தம் உண்டு.

கான்ட்ரோவர்சியின் செல்லப் பிள்ளை, மீடியாவின் தத்துப்பிள்ளை - ஆடியன்ஸ், ப்ளீஸ் வெல்கம் பாலிவுட்டின் கிங் ஷாருக் கான்"

அப்பொழுது திடீரென ஸ்டூடியோவின் அனைத்து விளக்குகளும் அணைகின்றன. புகை மண்டலம் உருவாகிறது. பின்னணியில் "சம்மக் சல்லோ" பாடல் ஒலிக்கிறது. மேலிருந்து ஒரு ஒளி கீழ் நோக்கிப் பாய்கிறது. அதன் நடுவில் ஒரு கயிறு தென்படுகிறது. சூர்யா கொஞ்சம் அண்ணாந்து பார்க்கவும் ஒருவர் ஒரு கையில் IPL கோப்பை, மறு கையில் கயிறு என மலைக்கள்ளன் MGR ஸ்டைலில் கயிற்றைப் பிடித்தபடி கழுத்தை ஆட்டியபடி இறங்குகிறார். அவர் கீழே இறங்கவும் எல்லா விளக்குகளும் ஒளிர்கின்றன.

சூர்யா, "வணக்கம் சார், இவ்ளோ பெரிய ஸ்டார், எங்க ப்ரோக்ராமுக்கு வந்தது பெரிய சந்தோஷம். அதுவும் ஒரு பெரிய "cause"க்காக விளையாட வந்திருக்கீங்க.

ஷாருக்கான், "ஹெஏய், காசுன்னாதான் நான் எங்கயுமே வருவேன். ஐ லைக் இட் யூ நோ. நான் எப்பவுமே ஜனங்களின் கலைஞன், எங்க கூட்டம் இருந்தாலும் நான் இருப்பேன், நான் எங்க இருந்தாலும் அங்க கூட்டம் இருக்கும், யூ நோ"

சூர்யா, "சரி வாங்க சார் விளையாடலாம்"

ஷாருக், "ஒரு நிமிஷம், ஹே கேர்ல்ஸ், எல்லோரும் என்னை ஒரு தடவை ஹக் பண்ணுங்க, அப்போத்தான் என்னால விளையாட முடியும்". வழக்கம் போல ஒரு கும்பலே வந்து அவருடன் ஒட்டிக் கொள்கிறது.

பிறகு ஷாருக் சீட்டை நோக்கி நடக்கவும் சற்றே தடுமாறுகிறார். உடனே சூர்யா, "ஸ்டூடியோவுக்குள்ள எதுக்கு சார் ரேபான் க்ளாஸ்? கழட்டுங்க"

ஷாருக், "கழட்டறதா? விளம்பரம் தம்பி, எப்பொழுதும் போட்டுக்கிட்டே இருக்கணும். அதுக்குத் தான் அஞ்சு கோடி குடுக்கறான். கரண்ட் போனாலும் நான் கண்ணாடியக் கழட்டமாட்டேன்"

தட்டுத் தடுமாறி சீட்டில் உட்கார்கிறார். முன்னால் லெனோவோ LCD திரை ஒளிர்கிறது, "இந்தக் கம்பெனியோட எனக்கு அக்ரீமென்ட் இல்லையே, போகும்போது போன் நம்பர் குடுங்க, இன்னும் ஒரு இரண்டு கோடி தேத்திடணும்"

சூர்யா மனதுக்குள், "இவன் நம்மள விட உஷாரா இருப்பான் போலிருக்கே". பிறகு சிரித்துக்கொண்டே, "பயங்கர தமாஷான ஆளு சார் நீங்க. ஜோக் அடிச்சிக்கிட்டே இருக்கீங்க"

ஷாருக், "ஜோக்கா? இரு போகும்போது கவனிச்சுக்கறேன்"

சூர்யா, "இன்னைய தேதிக்கு நீங்க தான் ஹாட் டாபிக், IPL வெற்றிக்காக நீங்க கல்கத்தாவில் நடத்திய திருவிழாவைப் பார்த்து எல்லாரும் வாய் பிளந்து நிக்கறாங்க"

ஷாருக், "அதுக்குக் காரணம் ரஜினி சார் தான், அவர் சிவாஜி படத்துல சொல்ற "பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல" டயலாக் என்னை ரொம்பவே மோடிவேட் பண்ணிடுச்சு. அதான் என் பேரைக் கேட்டாலும் எல்லாருக்கும் சும்மா அதிரணும்னு முடிவு பண்ணித் தான் எந்த வேலையும் செய்வேன்"

ரஜினி பேரைக் கேட்டதும் எல்லோரும் கை தட்டுகின்றனர். அது தனக்குத் தான் என நினைத்துக் கொண்டு தேர்தல் வேட்பாளர் போல் கையை எல்லாப் பக்கமும் ஆட்டுகிறார்.

சூர்யா, "சரி சார், விளையாட ஆரம்பிப்போமா? ரூல்ஸ் எல்லாம் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன்.."

ஷாருக், "யா யா யா,,,,மொத்தம் 15 கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் பைசா டபிள் ஆவும், மூணு லைப் லைன், கூடவே மணியண்ணன் வருவாரு - - இதானே? "

எல்லோரும் வியந்து கை தட்டுகின்றனர்.

ஷாருக், "சூர்யா, ரொம்ப தாகமா இருக்கு, இளநீர் கிடைக்குமா?"

"இருக்கே, ஆனா நீங்க ஸ்ப்ரைட் தானே குடுப்பீங்க?"

"அது விளம்பரத்துல மட்டும் தான். ஒண்ணு செய்ங்க, இளநீரை ஸ்ப்ரைட் பாட்டிலில் ஊத்திக் குடுத்துடுங்க - ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் "

சூர்யா பேஜாராகி பார்க்கவும், ஷாருக், " கமான் யா, இதெல்லாம் பிசினெஸ் நேக், கேள்வியை ஸ்டார்ட் பண்ணு"

சூர்யா, "ஆயிரம் ரூபாய்க்கான முதல் கேள்வி, இதோ உங்கள் முன்னால்"

"கோடிட்ட இடத்தை நிரப்புக - இட்லிக்கு ________, இல்லாங்காட்டி பட்டினி - உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) சாம்பார்
B) மிளகாய்பொடி
C) தொக்கு
D) சட்னி

ஷாருக் சற்றும் யோசிக்காமல், "பிக்ஸ் சட்னி"

சூர்யா 'சரியான விடை, 1000 உங்களுடையது - இட்லி சட்னி சாப்பிட்டிருக்கீங்களா?

ஷாருக், "நிறைய, ஐ லவ் சவுத் இந்தியன் ஐட்டம்ஸ். அதுவும் கெளரி செஞ்ச இட்லின்னா இன்னிக்கெல்லாம் சாப்பிடலாம்

சூர்யா, "அவ்ளோ ருசியா இருக்குமா?"

ஷாருக், "அவ்ளோ ரப்பர் மாதிரி இருக்கும். முழுசா சாப்பிட ஒரு நாள் வேணும்"

கெளரி ஷாருக்கை செல்லமாக முறைக்கவும் ஷாருக், "சாரி, இப்படித் தான் உண்மையைப் பேசி அடிக்கடி வம்புல மாட்டிக்கறேன்"

சூர்யா புன்முறுவலுடன், "அடுத்த கேள்வி 2000 ரூபாய்க்கு, இதோ: சென்னையிலிருந்து டெல்லி 2000km தொலைவில் உள்ளது. அப்படியானால் டெல்லியிலிருந்து சென்னை எவ்வளவு தூரத்தில் உள்ளது? உங்க ஆப்ஷன்ஸ்:
A) 2000
B) 3000
C) 4000
D) 1000

ஷாருக், "ஹெஹெஹ், பிக்ஸ் ஆப்ஷன் A 2000"

சூர்யா, "சரியான விடை, 2000 உங்களுடையது"

ஷாருக் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே பெருமையாகப் பார்க்கிறார்.

சூர்யா, "5000 ரூபாய்க்கான மூன்றாவது கேள்வி இதோ: இவர்களில் யார் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரர்? உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) கமலஹாசன்
B) ரஜினிகாந்த்
C) அமிதாப் பச்சன்
D) ஷாருக் கான்

ஷாருக், "இதெல்லாம் ஒரு கேள்வியா? ரஜினி ரஜினி ரஜினி தான்"

சூர்யா, "சரியான பதில், 5000 உங்களுடையது"

சூர்யா, "10000 ரூபாய்க்கான நான்காவது கேள்வி இதோ:IPL அணியான KKR என்பதன் விரிவாக்கம் என்ன? உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) கான்பூர் கைட் ரைடர்ஸ்
B) கல்கத்தா கிட்ஸ் ரைடர்ஸ்
C) காளி கோலா ரைடர்ஸ்
D) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷாருக், சிரித்துக்கொண்டே, "ஆப்ஷன் D தவிர வேற எதுவும் சரியா இருக்க முடியாது. பிக்ஸ் இட்"

சூர்யா, "உறுதிப்பணம் 10000 ரூபாய் உங்களுடையது" எல்லோரும் கை தட்டுகின்றனர். வழக்கம் போல எல்லோரையும் பார்த்து கை அசைக்கிறார் ஷாருக்.


சூர்யா நேயர்களைப் பார்த்து, "கிங் கான் ஷாருக்குடன் இன்னிக்கு விளையாடிக்கிட்டிருக்கோம். 10000 ஜெயிச்சிருக்கார். டக்கு டக்குன்னு பதில் அடிச்சிக்கிட்டே இருக்காரு" பிறகு ஷாருக்கைப் பார்த்து, "உங்க குடும்பம் கூட இங்க வந்திருக்காங்க போலிருக்கு?'

ஷாருக், "யா யா யா, என் குடும்பம், என் டீம், எல்லாரும் வந்திருக்காங்க. அங்க பாருங்க. கவுதம் இங்க கூட பேடைக் கழட்டாம உட்கார்ந்திருக்காரு"

சூர்யா, "ஹாய், கவுதம், என்ன இங்கயும் அதே செண்டிமெண்டா?"

கவுதம், "யா, கல்கத்தா டீம் எங்கும் எதிலும் தோற்கக் கூடாது"

சூர்யா ஷாருக்கைப் பார்த்து, "ஒரு விஷயம் சொல்லுங்க, IPL போட்டி ஒரு தனியார் போட்டி. அதில ஜெயிச்சதுக்கு இப்படி ஒரு அமளி தேவையா?"

ஷாருக், "ஒரு வேளை நான் தோத்திருந்தா உங்க ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்? ஷாருக் டீம் சுத்த வேஸ்ட்னு நினைச்சிருப்பீங்க. அதிகாரமுள்ள டீமெல்லாம் ஒவ்வொரு தடவையும் எதாவது பண்ணி அட் லீஸ்ட் செமி பைனல் வரைக்குமாச்சும் வந்துடறாங்க. நாலு வருஷமா நாங்க பட்ட வலியும் வேதனையும் எங்களுக்குத் தான் தெரியும். அதை உங்களால புரிஞ்சுக்க முடியாது" லேசாகக் கண் கலங்குகிறார். பிறகு சுதாரித்துக் கொண்டு, "பாருங்க, நான் சாதாரண மனுஷன். கோபம், அழுகை. சிரிப்பு எல்லாம் எனக்கும் உண்டு. எனக்கு எதையும் மறைக்கத் தெரியாது"

சூர்யா சிறிது நேரம் அவரை உற்றுப் பார்க்கிறார், பிறகு கை தட்டுகிறார். மக்களும் கை தட்டுகின்றனர்.

சூர்யா, "அடுத்த கேள்விக்குப் போவோமா? அடுத்த கேள்வி 20000 ரூபாய்க்கு. இதோ:

இவற்றில் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் எது?
A) டெல்லி
B) சென்னை
C) பெங்களுரு
D) மும்பை

ஷாருக் சற்றும் தயங்காமல், "மும்பை...மேரி... ஜான்... ப்ளீஸ் லாக் ஆப்ஷன் D"

சூர்யா, "சரியான பதில், 20000 உங்களுடையது"

ஷாருக் சூர்யாவிடம் ரகசியமாக, "உங்க காமெராக்காரர் கிட்ட என் போன், வாட்ச் எல்லாத்தையும் அப்பப்ப க்ளோசப் எடுக்கச் சொல்லுங்க. இல்லேன்னா அக்ரீமென்ட் கான்ஸல் ஆயிடும்.

சூர்யா யாரிடமோ சைகை காட்டுகிறார். அவரும் புரிந்த மாதிரி தலை ஆட்டுகிறார்.

சூர்யா, "அடுத்த கேள்வி, 40000 ரூபாய்க்கு, இதோ உங்கள் திரையில்:

இவற்றில் ரசகுல்லாவிற்குப் புகழ்பெற்ற நகரம் எது?
A) மைலாப்பூர்
B) மாம்பலம்
C) தாம்பரம்
D) கொல்கத்தா

ஷாருக், "கடைசி ஆப்ஷனை பிக்ஸ் பண்ணிடுங்க"

சூர்யா, "சரியான விடை 40000 உங்களுடையது"

ஷாருக், "என்னா மேன் எல்லாம் சில்லரைக் கேள்வியா இருக்கு"

சூர்யா, "நீங்க ஒரு "cause "க்காக விளையாடறீங்க. அதனால எவ்ளோ நிறைய ஜெயிக்கறீங்களோ அவ்ளோ நல்லது"

ஷாருக், "ஆமாமாம், காசு எப்பவுமே நல்லது தான்"

சூர்யா, "80000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி இதோ:

"பாரிஸ் நகரம் எந்த நாட்டில் உள்ளது?"
A) லண்டன்
B) இந்தியா
C) பிரான்ஸ்
D) அமெரிக்கா

ஷாருக், "ஹிஹிஹெய், ஸில்லி பாய், பிரான்ஸ் லாக் கரோ"

சூர்யா, "சரியான பதில், 80000 உங்களோடது"

மறுபடியும் ஒரு ரவுண்டு கை ஆட்டல் - கோணல் சிரிப்புடன்.

சூர்யா, "இன்னொரு விஷயம் கேக்கணும், மும்பை ஸ்டேடியம்ல என்னா தான் சார் நடந்தது? அப் கோர்ஸ் அதுக்கு நீங்க சென்னையில மன்னிப்பும் கேட்டீங்க "

ஷாருக், தலையைக் கோதியவாறே, "நான் எந்த தப்பும் பண்ணல. என் கூட வாக்குவாதம் பண்ணியவர் என்னைவிட வயசில பெரியவர், அதனால மன்னிப்பு கேட்டேன். இல்லேன்னா நானாவது மன்னிப்பு கேட்கறதாவது?? ரா ஒன் மாதிரி படம் எடுத்ததற்கே நான் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கல, இதெல்லாம் பிஸ்கோத்து மேட்டர்"

சூர்யா, "ஒரு விஷயம் நான் கவனிச்சிருக்கேன், எந்நேரமும் மீடியா உங்களை சுத்தியே இருக்கு"

ஷாருக் ,"அதை அவாய்ட் பண்ண முடியாது. எங்களுக்கு அவங்க வேணும் அவங்களுக்கு எங்களை மாதிரி செலிப்ரிடிஸ் வேணும். ஐஸ்வர்யா ராய் உண்டானதுக்கும் பிரேக்கிங் நியூஸ் போட்டாங்க, இப்போ அவங்க குண்டானதுக்கும் பிரேக்கிங் நியூஸ் போடறாங்க."

மக்களிடையே பலத்த கரகோஷம் கிளம்புகிறது.

சூர்யா, "சரி சார், அடுத்த கேள்விக்குப் போவோம். 160000 ரூபாய்க்கானது, இதோ உங்கள் திரையில்:

இவர்களில் யாருடன் உங்களுக்கு, அதாவது நடிகர் ஷாருக்கானிற்கு வெறுப்பு அதிகம்?
A) சல்மான் கான்
B)...

அப்பொழுது திடீரென ஒரு சத்தம், சூர்யா பதறிபோய் "ஐயோ சார், என்ன காரியம் பண்ணிட்டீங்க?"

ஷாருக் என்ன செய்தார்? நடந்தது என்ன? அடுத்த எபிசோடில்....1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...