Tuesday, June 4, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 4

லலித் குமாரின் அந்த கற்பனை டெஸ்ட் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது.

லலித், "யெஸ், ஒரு வித்யாசமான கிரிக்கெட் பார்மாட்டை கிரிக்கெட் உலகத்துக்கு அறிமுகப்படுத்தப் போறோம். இங்கிலாந்துல நடக்கற புட்பால் பிரீமியர் லீக் மாதிரி"

தலைவர் "லலித், பீடிகை வேண்டாம், இது ஒண்ணும் மார்க்கெட்டிங் ப்ரோமோ கூட்டம் இல்லை"

லலித் பதறியபடி,"சரி சார்." பிறகு அங்கிருந்தவர்களைப் பார்த்து "என்னதான் ஒற்றுமையா இருந்தாலும் இந்தியாவுல பிராந்திய பிரிவினை இன்னும் பலமாத் தான் இருக்கு. அதைப் பயன்படுத்தி தான் இந்த விளையாட்டு இருக்கப் போவுது"

குழுவில் ஒருவர் "கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா"

"சொல்றேன், பிராந்திய அடிப்படையில் 8 கிரிக்கெட் டீம் உருவாக்கப் போறோம். இந்திய வீரர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டு வீரர்களும் பங்கேற்கலாம். வீரர்களோட ஸ்டார் வேல்யூவுக்கு ஏத்த மாதிரி ரேட் பிக்ஸ் பண்ணி அவங்களை ஏலம் விடுவோம். டீம் முதலாளிகள் அவங்க பட்ஜெட்டுக்கும் தேவைக்கும் ஏத்த மாதிரி வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்"

"பிராந்திய அடிப்படையிலான டீம்னா?"

"மும்பை, டெல்லி, கொல்கத்தா இந்த மாதிரி. இன்னும் முழுசா முடிவு பண்ணலை"

"போட்டி எப்போ நடக்கும்?"

"வருஷா வருஷம் கோடை விடுமுறையில். ஒவ்வொரு டீமும் மற்ற டீம்களோட இரண்டு முறை ஆடுவாங்க"

பத்மநாபன் டேபிளில் இருந்த மினெரல் வாட்டரை க்ளாசில் ஊற்றிக் குடித்தவாறே ""கிரிக்கெட்டை தனியார் மயமாக்கறேன்னு சொல்லு. இதுல நமக்கென்னய்யா லாபம்?"

லலித்," ஒவ்வொரு டீம்கிட்டேர்ந்தும் ஒரு பெரிய தொகை அட்வான்ஸ் டெபாசிட்டா வாங்குவோம். அது அவங்களுக்கு ஜென்மத்துக்கும் திருப்பிக் கிடைக்காது. அது போக ஒவ்வொரு மேட்ச்சுக்கும் மேட்ச் பீஸா விளையாடற இரண்டு டீம்கிட்டேர்ந்தும் ஒரு அமௌண்ட் கிடைக்கும். இது மட்டுமா? டிவி ரைட்ஸ், டைட்டில் ஸ்பான்சர்,ஈவன்ட் ஸ்பான்சர்னு ஒரு நாலைஞ்சு பேரை உள்ளே பிடிச்சுப் போட்டு லம்ப்பா அடிச்சுடலாம்"

"டீமுக்கு எங்கேர்ந்து காசு வரும்?"

"டீம் ஸ்பான்சர்ஸ் குடுப்பாங்க. வீரர்கள் ஹெல்மெட் தொடங்கி ஷூ வரைக்கும் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டாத் தான் மைதானத்துக்குள்ள நுழைய முடியும். ஸ்பான்சர்கள் விளம்பரம் மற்றும் க்ரௌண்ட்ல ஸ்டால்ஸ் போடுவதன் மூலமா சம்பாதிப்பாங்க. இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம், இந்திய அணியில் சான்ஸ் கிடைக்காத, வாய்ப்புக்காக ஏங்குகிற இளம் வீரர்களுக்கு அவங்க திறமையைக் காட்ட இது ஒரு நல்ல களமா அமையும். மக்களுக்கு வழக்கம்போல என்டர்டைன்மென்ட்

பத்மநாபன் நக்கலாக சிரிக்கவும், லலித் "ஏன் சார் சிரிக்கறீங்க?"

"எங்கே மக்களுக்கு வழக்கம்போல நாமம்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன், அதான் சிரிச்சேன்"

லலித், "சார் நீங்க வேற. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே..."

பிறகு லலித் தன் லாப்டாப்பைத் தட்டி போட்டி சம்பந்தப்பட்ட சில கற்பனை வடிவங்களையும், மாதிரி அமைப்புகளையும் காண்பித்தான். அவை பார்ப்பதற்கே வண்ணமயமாக இருந்தன.

அறையில் சிறிது நேரம் மௌனம். எல்லோரும் எதையோ யோசித்த வண்ணம் பென்சிலால் நோட்புக்கை நோண்டிக் கொண்டிருந்தனர்.

தலைவர் "என்ன நண்பர்களே, ப்ளான் ஓகேவா? இதுல ஒரே ஒரு கண்டீஷன், நம்ம குழுவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தப் போட்டியில் பங்கெடுக்கக் கூடாது"

எல்லோரும் தலையைசைத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருக்கையை விட்டு எழும்போது குழுவில் இருந்த மூத்த உறுப்பினர் "ஆமாம், இந்தப் போட்டிக்கு எதாவது பெயர் வெச்சிருக்கீங்களா?

லலித் உற்சாகமாக, "பாரத் பிரீமியர் லீக்" என்று கூறிவிட்டு லாப்டாப்பை கையில் எடுத்துக் கொண்டு நடக்கலானான்.


ஆட்டம் தொடரும்...


Jayaraman
New Delhi

(If you cant visit our blog, subscribe yourself with your email id. The article will be sent to you thru automated email)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...