Monday, June 17, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 9


"க்யா மாமாஜி, மீட்டிங் போடறதுக்கு வேற இடமே கிடைக்கலையா?" என்று லலித் குமாரைப் பார்த்துக் கேட்டான் ஷீலா ஷெட்டியின் வருங்கால புருஷன் ஸ்வராஜ் சந்திரா. லலித் ஸ்வராஜின் தாய் வழி உறவினன். இடம் - மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் அருகே உள்ள ஒரு ரெசார்ட்.

"பெரு நகரங்களில் மீட்டிங் வெச்சா மீடியா ரொம்ப தொல்லை பண்ணுவாங்க. ஏன்னா இங்க நிறைய விஷயம் ரகசியமா முடிவு பண்ண வேண்டியிருக்கு. அதான் இப்படி"

"ஓகே ஓகே" என்று ஸ்வராஜ் கூறவும் அருகே இருந்த பணியாள் இருவரையும் பார்த்து "சார் உங்களை உள்ளே கூப்பிடறாங்க" - இருவரும் உள்ளே விரைந்தனர்.

உள்ளே மகேஷ் அத்வானி, ஷாதிக் கான் & ஜானகி சாவ்லா, ஸ்வராஜ் & ஷீலா ஷெட்டி, ப்ரீத்தா & மெஸ்ஸி, பிரகாஷ் ராவ், ராமோஜி ரெட்டி, அஜய் செல்லையா மற்றும் அவரது மகன் எல்லோரும் வரிசையாக அமர்ந்திருந்தனர். ரகு வரிசையில் கடைசியாக அமர்ந்திருந்தான். எதிர் வரிசையில் தலைவர், லலித் குமார், பத்மநாபன் மற்றும் தலைவர் பாசறையைச் சேர்ந்த ஓரிரு உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

டல்லாக இருந்த ப்ரீத்தாவைப் பார்த்து ஷீலா கிண்டலாக, "என்ன சோர்வா இருக்கே? ராத்திரி ரொம்ப நேரம் கண்ணு முழிச்சீங்களோ? என்று கேட்டு கண்ணடித்தாள்.

"ச்சீ, அதெல்லாம் இல்லை."

"அப்போ? மசக்கையா? எவ்ளோ மாசம்?"

"உனக்கு எப்பவும் இதே நினைப்பு தானா? அதெல்லாம் நாங்க பாதுகாப்பாத்தான் இருக்கோம்"

தலைவர் தொண்டையைச் செருமவும் இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.

"நீங்க எல்லாம் இந்த புது T20 போட்டியில் ரொம்ப விருப்பம் காட்டினதால அணிகளை உங்களுக்கே குடுக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். டீம் விவரங்களை சொல்றேன்:

மகேஷ் அத்வானி - மும்பை

ஸ்வராஜ் சந்திரா - ஜெய்ப்பூர்

பிரகாஷ் ராவ் - டெல்லி

ராமோஜி ரெட்டி - ஹைதராபாத்

அஜய் செல்லையா – பெங்களுரு

,மெஸ்ஸி வடாலா – சண்டிகர்

ஷாதிக் கான் - கல்கத்தா

சவுத் இந்தியா சிமெண்ட்ஸ் - சென்னை

சென்னை அணிக்கு கம்பெனி பெயர் சொன்னதும் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

ஷாதிக் கான் "சென்னை அணிக்கு முதலாளி யாரும் கிடையாதா?"

ரகு பதில் சொல்ல முனையும் முன்னே பத்மநாபன் குறுக்கிட்டு "அது கம்பெனியின் சொத்து தான். ரகு ஒரு கைடா இருந்து வழி நடத்துவார்"

மகேஷ், "என்னங்க இது, நம்பற மாதிரியே இல்லையே? நீங்க தான் அந்த கம்பெனிக்குச் சேர்மன், இப்படி குழுவிலும் இருந்திகிட்டு போட்டியிலேயும் பங்கெடுத்தா போட்டி எப்படிங்க நியாயமா இருக்கும்?"

"அதெல்லாம் விதிமுறைகள் படி தான் நியமிச்சிருக்கோம். எந்த வகையிலும் அவர் தலையீடு இருக்காது" என்றார் தலைவர்.

அந்த பதிலில் மகேஷுக்கு திருப்தி ஏற்படவில்லை இருந்தாலும் ஏற்றுக் கொண்டது போல் தலையாட்டினான்.

ஸ்வராஜ், "இந்த போட்டியில் ஸ்பான்ஷர்ஷிப் தவிர எங்களுக்கு வேற எந்த வருமானமும் இல்லை. கிரௌண்ட் வருவாயும் எங்களுக்கு முழுசா கிடைக்காது. அதனால நீங்க பெட்டிங் பண்ண அனுமதிக்கணும். லலித் ஸ்வராஜை புன்முறுவலுடன் பார்த்தான்.

"அதெல்லாம் முடியாது, நம்ம நாட்டுல அது சட்ட விரோதம்" என்றார் பத்மநாபன்

ஷாதிக், "என்ன சட்ட விரோதம்? இன்னமும் நம்ம நாட்டுல சிக்கிம், மணிப்பூர், ஹர்யானான்னு லாட்டரி சீட்டு விற்பனை நடந்துகிட்டு தான் இருக்கு"

மெஸ்ஸி , "இங்கிலாந்து புட்பால் லீக் மாதிரி பார்மாட் போட்டுட்டு பெட்டிங் இல்லேன்னா எப்படி? அங்க விளையாடற அணிகளுக்கு பெட்டிங் மூலமா கணிசமான வருமானம் கிடைக்குது மக்களுக்கும் போரடிக்காது. இல்லேன்னா இரண்டு மாசம் டோர்னமென்ட் முடியறதுக்குள்ள மக்கள் ஓய்ஞ்சு போயிடுவாங்க.

மகேஷ், ராவ், ரெட்டி ஆகியோரும் பெட்டிங் வேண்டுமென்ற கருத்தை ஆமோதித்தனர். பத்மநாபன் தலைவரிடம் "என்னங்க இது, புது பிரச்சினை?"

தலைவர், "எல்லாம் இந்த லலித் பண்ற வேலை. பெட்டிங் பண்றதுக்காக ஏற்கனவே ஒரு வெப்சைட் ரெடி பண்ணி வெச்சிருக்கான். அதை வியாபாரமாக்கத்தான் இவங்களை மூட்டி விட்டிருக்கான்"

பிறகு எல்லோரையும் பார்த்து, "இது பற்றி நான் தனியா முடிவு எதுவும் சொல்ல முடியாது. மேலிடத்தில் கேட்டுட்டுத் தான் சொல்ல முடியும்"

இப்பொழுது லலித் எழுந்து, "வீரர்கள் சம்பந்தமா சில விவரங்கள் சொல்றேன் என்று சொல்லி லாப்டாப்பைத் தட்டினான். திரையில் வீரர்களில் பட்டியல் ஒளிர்ந்தது.

"என்ன தான் வீரர்களை ஏல முறைப்படி தேர்ந்தெடுத்தாலும் சில வீரர்கள் சில அணிக்காக ஆடினாத்தான் அந்த அணிக்கு மதிப்பு, காசு, பெருமை, எல்லாமே. உதாரணத்திற்கு ஷயன் கெல்கர் மும்பைக்காக ஆடினாத்தான் ஜனங்க வருவாங்க. அதனால சில வீரர்களை நாங்க ரிசர்வ் பண்ணி வெச்சிருக்கோம், பாருங்க" என்று சொல்லி மீண்டும் லாப்டாப்பைத் தட்டினான்.

ஷயன் - மும்பை

கௌரவ் - கல்கத்தா

கோகுல் - பெங்களுரு

நரேந்தர் - டெல்லி

ப்ரித்விராஜ் - பஞ்சாப்

மொஹிந்தர் - சென்னை

மகேஷ் கடுப்பாகி, "அதெப்படி மொஹிந்தர் சென்னைக்கு ஆடுவான்? அவன் ஊர் பேர்ல எந்த டீமும் இல்லை. அவனை பொது ஏலத்தில் எடுக்கறது தான் நியாயம்"

பத்மநாபன் சற்று நெளியவும், "இப்ப இருக்கற டீம்ல சென்னையிலேர்ந்து எந்த நட்சத்திர வீரரும் கிடையாது. அதுவுமில்லாம கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் இந்தியா பெங்களுருவோட முடியுது. ஒரு சமநிலையான போட்டி வேணும்னா குறைந்த பட்சம் ஒரு தெரிஞ்ச முகம் இருக்கணும்.அதுக்குத் தான் இந்த ஏற்பாடு" என்றார் தலைவர்.

ராவ், "இப்படி முன்னாடியே எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிட்டா அப்புறம் இந்த மீட்டிங் எதுக்கு?"

லலித், "இதுல வெளிநாட்டு வீரர்களும் விளையாடப் போறாங்க. அந்தக் கோட்டாவில் சென்னை அணி சமரசம் பண்ணிக்கறதா சொல்லியிருக்காங்க

தலைவர், "இவங்களைத் தவிர மற்ற வீரர்கள் பற்றிய விவரம் உங்ககிட்ட இருக்கு. நீங்க உங்களுக்குள்ள கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வாங்க. ஏலம் நடக்கும்போது எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது.மொஹிந்தரைத் தவிர வேற எதிலேயும் சென்னை டீம் தலையிடாம பார்த்துக்கறது என் பொறுப்பு"

ஷாதிக், "எல்லாத்துக்கும் நீங்களே பதில் சொல்றீங்க. அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்களா? அது என்ன உங்க டீமா?" என்று சற்று உஷ்ணமாகப் பேசினான்.

ரகு, "நாங்க சொல்ல வந்ததைத் தான் தலைவர் சொல்றார். இந்த உறுதிமொழியெல்லாம் கம்பெனி சார்பா ஏற்கனவே எழுதிக் கொடுத்துட்டுத் தான் இந்த போட்டியிலேயே பங்கெடுக்க வந்திருக்கோம்"

ரெட்டி, ராவிடம் "என்ன கிளி திடீர்னு சொந்தமா பேசுது!" என்று ஜாடையாக கிண்டலடித்தார்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. பிறகு தலைவரே தொடர்ந்தார்.

"நாம எல்லாரும் இங்க சம்பாதிக்கறதுக்காகத் தான் வந்திருக்கோம். இதை ஏன் கிரிக்கெட்டாப் பார்க்கறீங்க? மக்களுக்குத் தான்யா இது விளையாட்டு. நமக்கு இன்னொரு வியாபாரம். வியாபாரத்தில் முன்னபின்ன இருக்கறது சகஜம் தானே? ஆனால் யாருக்கும் நஷ்டம் வராது. அதுக்கு நான் கியாரண்டி - வியாபாரமாப் பாருங்க"

மகேஷ், "நீங்க இவ்ளோ சொல்றீங்க, உங்களை நம்பறோம்"

லலித், "நீங்க எல்லாரும் பேசிட்டு உங்க வீரர்கள் பட்டியலை என்கிட்டே குடுங்க. ஏலத்தை அதுக்கேத்த மாதிரியே நடத்துவோம். யாருக்கும் எந்த சந்தேகமும் வராம நான் பார்த்துக்கறேன். வளர்ந்து வரும் வீரர்கள் ஒரு 4-5 பேராவது உங்க டீம்ல இருக்கற மாதிரி பார்த்துக்கோங்க. ஏன்னா மக்கள் இந்தப் போட்டி புதுமுகங்களுக்கான ஒரு நல்ல களமா இருக்கும்னு நினைச்சிக்கிட்டிருக்காங்க." என்று கூறி போட்டி பற்றிய மேலும் சில விவரங்களை சொன்னான். அதில் மைதானத்தில் விக்கெட் மற்றும் பவுண்டரிகளுக்காக ஆடும் வெளிநாட்டு உற்சாக அழகிகளும் அடக்கம்.

மீண்டும் நிசப்தம். தலைவர், "அப்புறம் என்னப்பா? இன்னும் ஏன் மௌனம்? மீட்டிங் முடிஞ்சுது. வாங்க சாப்பிடலாம்"

உணவு இடைவேளையின் போது நடந்த நன்றி நவிலல்கள்:

பத்மநாபனை சபையில் கூனிக் குறுக வைத்ததற்காக ரெட்டியும் ராவும் மகேஷ் மற்றும் ஷாதிக்கிற்கு நன்றி தெரிவித்தனர். ஏனெனில் ரெட்டியையும் ராவையும் ஓரங்கட்டிவிட்டுத் தான் பத்மநாபன் ஆந்திரா சிமெண்ட் ஆலையை கையகப்படுத்தினார்.

பெட்டிங் விஷயத்தை ஆரம்பித்து வைத்ததற்காக மெஸ்ஸியும் லலித்தும் ஸ்வராஜுக்கு நன்றி தெரிவித்தனர்

தனது பெண் ரசிகைகள் அதிகம் இருக்கும் கொல்கத்தாவை தனக்கு விட்டுக் கொடுத்ததற்காக ராவிற்கு ஷாதிக்கும் ஜானகியும் நன்றி கூறினர்

மைதானத்தில் உற்சாக அழகிகளை ஆட அனுமதித்ததற்காக அஜய் செல்லையா தலைவருக்கு நன்றி கூறினார் - அதற்கான கான்ட்ராக்ட் அவர் வசம் இருந்தது

தலைவர் பத்மநாபனிடம், "என்னய்யா ஹேப்பியா?"

"டபிள் ஹேப்பி தலைவரே"

"அப்புறம் அந்த சிமெண்ட் விஷயம்.."

"நேத்திக்கே 20 லோடு உங்க அவுரங்காபாத் சர்க்கரை ஆலைக்கு கிளம்பிடுச்சு. இன்னும் இரண்டு நாளில் போய் சேர்ந்துடும்"

"உன்னை நம்பி தான் ஆரம்பிச்சிருக்கேன்... நல்லபடியா முடிச்சுக் குடுத்துடு"

"அது இனிமே என் ஆலை, கவலையை விடுங்க"

இந்த சம்பவங்கள் அனைத்தையும் கவனித்து வந்த 2 ஹோட்டல் சிப்பந்திகள், "ஏண்ணே, இவங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா?"

"அது இல்லாததினால் தான் அவங்க சாப்பிடறாங்க. நீ எச்சை பிளேட்டை எடுத்துக்கிட்டு இருக்கே. பெரிய மனுஷங்க எல்லாம் புருஷன் பொண்டாட்டிங்க மாதிரி. இன்னிக்கு அடிச்சுக்குவாங்க, நாளைக்கு கொஞ்சிக்குவாங்க. போய் வேலையைப் பாரு"

ஆட்டம் தொடரும்...

Jayaraman
New Delhi

1 comment:


  1. ஆடு புலி ஆட்டம் விளையாட்டு , சுவாரஸ்யம் நிறைந்த ஒரு விளையாட்டு.
    தமிழர் விளையாட்டான இந்த ஆடு புலி ஆட்டம் (Goats or Tigers) விளையாட்டு செயலியை முழுக்க 3டி உருவாக்கத்தில் நீங்கள் விளையாட முடியும்.
    www.manam.online/Technology/2016-AUG-21/Goats-or-Tigers-App-review

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...