Thursday, June 6, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 6

அல்மோரா, உத்தரான்ச்சல் மாநிலம்.

மொஹிந்தர் சூப்பர் ஸ்டார் மாதிரி. பிறந்தது ஒரு ஊர். ஆனால் வளர்ந்ததும், வாழ்வதும், தான் யாரென்று அடையாளம் காட்டியதும் வேறொரு ஊர். இது அவன் பிறந்த ஊர். அது மட்டுமல்ல, அவனது நாளைய மனைவி இங்கே உள்ள கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருக்கிறாள்.

மொஹிந்தர் தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள தொங்கு கட்டிலில் அயர்ந்திருந்தான்.

"என்ன சார், பகலிலேயே தூக்கமா?" குரல் கேட்டு நிமிர்ந்தான். அங்கே அவன் பால்ய நண்பன் வருண் சதுர்வேதி நின்றிருந்தான்.

வருண் மொஹிந்தரின் நீண்ட கால நண்பன். மொஹிந்தர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு அவனது சம்பாத்தியம் மொத்தமும் இவன் கண்ட்ரோலில் தான். எங்கு முதலீடு செய்ய வேண்டும், எந்தப் பொருளுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் - எல்லா முடிவையும் இவன் தான் எடுப்பான். குறியிட்ட இடங்களில் கையெழுத்திடுவது மட்டும் தான் மொஹிந்தரின் வேலை. சுருக்கமாகச் சொன்னால் மொஹிந்தரை ஆட்டுவிக்கும் ரிமோட் கண்ட்ரோல்.

'வாடா, என்ன திடீர்னு?"

"ஒரு யூத் ஐக்கன் இப்படி பகல்ல கவுந்தடிச்சு படுத்திருக்கறதை நாலு பேர் பார்த்தா என்ன ஆவும்?"

"அதுக்காக தூங்காம இருக்கணுமா என்ன?"

"சும்மா சொன்னேன். சென்னை போனியே, என்ன செய்தி?"

"நேரா விஷயத்துக்கு வர்றான் பாரு. கொஞ்சமாச்சும் கேஷுவலா இருய்யா"

"அதெல்லாம் வயசான காலத்துல இருந்துக்கலாம். நீ மேட்டரை சொல்லு"

"புதுசா ஒரு T -20 டோர்னமென்ட் ஆரம்பிக்கப் போறாங்க. புட்பால் பிரீமியர் லீக் மாதிரி. நம்ம கிரிக்கெட் குழு வெறும் கவர்னிங் பாடி தான். முழுக்க முழுக்க தனியார் ராஜ்ஜியம் தான். இன்னும் முறையா என்கிட்டே சொல்லலை. நம்ம ஆளுங்க மூலமா தெரிய வந்திச்சு"

வருண், "அப்படிப் போடு அரிவாளை. அப்போ விளம்பர ஒப்பந்தங்கள் இனிமே சூடு பறக்கும்னு சொல்லு"

"அது சூடு பறந்தா என்ன, பறக்காட்டி என்ன. அதை விடு இங்க என்ன நடக்குது?"

"பெரிசா ஒண்ணும் இல்லை. ஒரு மதராசி செல்போன் கம்பெனி நீ தான் அவங்க பிராண்ட் அம்பாசிடரா வேணும்னு ஒத்தைக்காலில் நிக்கறாங்க. நல்ல பேமென்ட் குடுக்க ரெடியா இருக்காங்க. நீ சரின்னு சொன்னா புக் பண்ணிடலாம்"

"நீயே பார்த்து செய்."

"அப்புறம், நீ என்ன தான் பேமஸ் ஆயிட்டாலும் உன் வேல்யூ அந்த அளவுக்கு ஏறலை. இன்னமும் பெரியவர் தான் லீடிங்க்ல இருக்கார்"

"யோவ், அவர் எங்கே, நான் எங்கே?"

"அப்படி இல்லை மொஹி, அவர் ஆட வந்தப்போ இந்த அளவுக்கு நெருக்கடி கிடையாது. சிங்கம் சிங்கிளா ஆடிச்சு. ஆனா உனக்கு அப்படியா? உன்னை ஏறி மிதிக்க ஒரு கூட்டமே ரெடியா இருக்கு. குறிப்பா அந்த 3 டெல்லிப்பசங்க கழுகு மாதிரி உன்னையே வாட்ச் பண்றாங்க.

அய்யய்யே, கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுய்யா, நானே ஏதோ குத்துமதிப்பா கிரிக்கெட் விளையாடிக்கிட்டிருக்கேன். எனக்கெல்லாம் இதுவே அதிகம். இதுல வேல்யூ ஏறலை வால்வு ஏறலைன்னு...."

"அப்படி இல்லடா..."

"என்னதான் சொல்ல வர்றே?"

"ஒரு பொய்யான ஒப்பந்தத்தை உருவாக்கப் போறேன். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு கான்ட்ராக்ட் போடப்பட்ட வீரர்னு உன்னைப் பத்தி நியூஸ் கிளப்பப்போறேன். அதுக்காக ஒரு டூப்ளிகேட் டாகுமெண்ட்டும் ரெடி பண்ணிட்டேன்"

"அதனால என்ன ஆகும்?"

அடுத்து உன்னை புக் பண்ண வர்றவங்க கிட்ட இதைக் காட்டி ரேட்டை சல்லுன்னு ஏத்திடுவேன். பொய்யாப் போட்ட அக்ரீமெண்டை நிஜமாக்கிடுவேன்"

"யப்பா ஐடியா மணி. ஜாக்கிரதையா இரு. மாட்டினோம், அப்புறம் ஜென்மத்துக்கும் பணம் சம்பாதிக்க முடியாது"

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நான் பார்த்துக்கறேன்"

"என்னவோ போ"

"அது சரி, உன் டாவை பார்க்கப் போகலியா?"

"அவ ஏதோ காலேஜ் டூர்னு எங்கேயோ போயிட்டா. நான் இன்னிக்கு சாயந்தரம் ஜாம்ஷெட்பூர் போலாம்னு இருக்கேன், டிக்கெட் போடு"

"ஓகே, டிக்கெட் போட்டுட்டு சொல்றேன், வர்றேன்.
அப்புறம் நம்ம ராவத் அங்கிள் பையன் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். அதுல 30% ஷேர்ஸ் வாங்கிட்டேன். டெல்லியைச் சுத்தி 15 ப்ராபர்ட்டி அவங்க கட்டப் போறாங்க. ஒரு இரண்டு நாள் ஷூட் போக வேண்டி வரும். தேதியை முடிவு பண்ணிட்டு சொல்றேன்"

"பிசினஸ்... பிசினஸ் .....பிசினஸ்.. கூல் மேன், பீர் போடறியா?"

வருண் முறைக்கவும், "சரி சரி, நீ ஒரு அக்மார்க் டீடோட்டலர்னு தெரியும். சும்மாக் கேட்டேன்"

"வர்றேன்"
***********************************************************************************

"அதெல்லாம் முடியாதுய்யா, ரொம்ப கஷ்டம்" - விஸ்கியை க்ளாசில் ஊற்றியபடியே பத்மநாபனிடம் கூறினார் தலைவர். பிறகு ஒரு க்ளாசை பத்மநாபனிடம் நீட்டினார். அது அவருக்குப் பிடித்தமான ஸ்காட்ச் என்பதால் பத்மநாபனால் மறுக்க முடியவில்லை.

தலைவர், "நம்ம ஆளுங்க யாரும் இதுல பங்கெடுக்கக் கூடாதுன்னு காலையில் தானே சொன்னேன், இப்போ வந்து எனக்கு ஒரு டீம் வேணும்னு சொன்னா எப்படி?"

"காரணம் தான் நான் சொன்னேனே சார். இதுக்குத் தேவையான விதிமாற்றங்களை நான் சிக்கலில்லாம பண்ணிடறேன்"

"அது வழக்கமா பண்றது தானே, பட் அது தப்புய்யா"

"நீங்க மனசு வெச்சா எல்லாம் முடியும். போதாக்குறைக்கு என் மாப்பிள்ளை வேற ஒரு வெட்டிப் பய. இந்த மாதிரி ஒரு வேலையைக் குடுத்தா கொஞ்சம் பொறுப்பா இருப்பான். அவன் ஒழுங்கா இருந்தா என் பொண்ணு கொஞ்சம் சந்தோஷமா இருப்பா"

"உன் கஷ்டம் புரியுது. ஆனா என் மனசாட்சி எனக்கு இடம் குடுக்கலியே? உன் ஒருத்தனுக்காக இன்னிக்கு ரூல்ஸை மாத்தினா நாளைக்கு இது பெரிய சிக்கலில் போய் முடியும்ப்பா. அப்போ நீ இன்னும் கஷ்டப்படுவே"

"அப்படி எதுவும் ஆகாம நான் பார்த்துக்கறேன் சார், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு"

"சரி, நாளைக்கு ஒரு சின்ன மீட்டிங் போடுவோம். அந்த இரண்டு முசுடுங்க ரொம்ப குடைச்சல் குடுப்பாங்க. அவங்களை எப்படி சமாளிக்கறதுன்னு தான் யோசிக்கறேன்"

"அது என் கவலை. நான் பார்த்துக்கறேன்"

"சரி, அப்போ நாளைக்குக் கலந்து பேசி ஒரு முடிவு பண்ணுவோம்"

"சரி சார், கிளம்பறேன்"

"இன்னொரு பெக் போடறியா?"

"இல்லை சார், ஒரு ஸ்மால் தான். பொண்ணோட ஆர்டர்"

"ஓகே ஓகே"

பத்மநாபன் வெளியே போனவுடன் தலைவர் போனை எடுத்து நம்பர்களைத் தேடி அமுக்கினார். "யோவ் லலித், எல்லாரும் நாடகமாய்யா ஆடறீங்க?"

மறுமுனையில் லலித், "என்ன சார் ஆச்சு?"

"இப்போ பத்மநாபன் வந்தார். அவருக்கும் ஒரு டீம் வேணுமாம் - உன்னை மாதிரியே. நாளைக்கு ஒரு சின்ன மீட்டிங் சொல்லியிருக்கேன். பேசுவோம்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

வெளியே வந்த பத்மநாபன் காரில் ஏறினார். கார் செக்யூரிட்டியைக் கடக்கும்போது ஏதோ நினைவுக்கு வந்தவராக கண்ணாடியைக் கீழிறக்கி அங்கே இருந்த பாதுகாவலரிடம் , "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லலித் இங்க வந்தாராப்பா?"

"ஆமாம் சார், ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனார்"

"நினைச்சேன்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட பத்மநாபனின் முகத்தில் மின்னல் போன்ற பிரகாசம் பரவியது.





ஆட்டம் தொடரும்..

Jayaraman
New Delhi

(subscribe with us to get this article auto-delivered to your email)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...