Monday, December 5, 2011

ஒரு தீவிரவாதியின் டைரிக்குறிப்பு

திங்கட்கிழமை:
தில்லி உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்தது நாங்கள் தான் என்று 4 -5 க்ரூப்கள் அறிக்கை விட்டுள்ளது எங்கள் தலைமையகத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உண்மை என்னவென்றால் அது எங்கள் அசைன்மெண்டே அல்ல. இந்திய அரசாங்கமே அவர்களாக ஒரு அமைப்பை உருவாக்கி விட்டு எங்களுக்கு எதிராக சதி செய்கின்றனர். எங்காவது குண்டு வெடித்தால் மக்கள் அரசியல் பிரச்சினைகளை மறந்து பரிதாபம் காட்டத் தொடங்கிவிடுவார்கள் என்பது அவர்கள் எண்ணம். இதேபோல் வெறுப்பேற்றக்கூடிய இன்னொரு செய்தி எங்கள் ரகசிய இடங்களை குண்டு வைத்துத் தகர்த்ததற்கு அமெரிக்கா மன்னிப்புக் கோரியுள்ளதாம். - மன்னிப்பு, கேப்டனுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் பிடிக்காத வார்த்தை.

செவ்வாய்கிழமை:
இன்று அரசாங்க உயர் அதிகாரிகளுடன் ரகசிய மீட்டிங் நடைபெற்றது. எங்களுக்குப் பணம் தருபவர்கள் முன்பு போல் தாராளமாக இல்லாமல் சிக்கனமாகி விட்டதாகவும், செலவுகளுக்குக் கணக்கு கேட்பதாகவும் தெரிவித்தனர். இதனால் தான் புதிய அசைன்மென்ட் எதுவும் எங்களுக்கு தர முடியவில்லை என்று போலியாக வருந்தினர். - பின் லேடன் மறைவுக்குப் பிறகு அவர்கள் பேச்சில் திமிர் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அள்ளக் கைகளை எவரும் மதிப்பதில்லை என்று அன்று கற்றுக் கொண்டேன்.

புதன்கிழமை:
தென்னிந்திய மண்டல மேலாளருடன் செயற்கைக்கோள் தொலைபேசியில் உரையாடினோம். கடந்த ஆறு மாதத்தில் ஏழு இடங்களில் ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்து எடுத்ததாக உவகை பொங்கக் கூறினார். விராட் கோலி மாதிரி ஐந்து ரன் அடித்து விட்டு ஐநூறு ரன் அடித்தது போன்ற பில்ட் அப் தர வேண்டாம் என்று அவரை சாந்தி செய்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தோம். அநேகமாக எல்லா தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் ஹீரோக்கள் தீவிரவாதிகளை ஓட ஓட அடித்து விரட்டுவதாகவும், தீவிரவாதிகளுக்கெதிரான போராட்டத்தில் கட்டாயம் ஒரு இஸ்லாமிய இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் இடம் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தாங்கள் சரி வர மக்களை மூளைச் சலவை செய்ய முடிவதில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார். இதைக் காரணம் காட்டி ஊக்கத்தொகையில் கை வைக்க வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொண்டார். உங்களுக்கு இந்த மாதம் சம்பளமே கிடையாது, நீங்கள் ஊக்கத் தொகை பற்றி வருத்தப்படுகிறீர்களே என்று அவருக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டு போனை வைத்தோம். - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு பாம் வாய்த்த திருப்தி.

வியாழக்கிழமை:
ஆயுத பேர இடைத்தரகர் ஒருவரை சந்தித்துப் பேசினேன். எல்லா நாடுகளிலும் பொருளாதாரம் படுத்துவிட்டதாகவும் பொது மக்கள் அரசாங்கத்தின் மீது கடுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதில் பாம் வெடித்தால் ஆட்சியே போய்விடும் என்று பதறிப் போய் இது போன்ற நாச வேலைகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறினார். இது போக இந்தியாவில் அடிக்கடி குண்டு வைத்ததினால் அவர்களுக்கு பழகிப் போய்விட்டதாகவும் தீவிரவாதத் தாக்குதல்களை ஏதோ சாலை விபத்து போல பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். ஆக மொத்தத்தில் வெடிகுண்டு பயம் போய்விட்டதாகக் கூறி எனக்கே பாம் வைத்தார். - இந்தியாவை நம்பித்தானே நாங்கள் இவ்வளவு வெடி பொருட்களை பாங்கில் லோன் போட்டு வாங்கி வைத்திருக்கிறோம். இதெல்லாம் என்ன செய்வது? அடுத்த வாரம் EMI வேறு கட்ட வேண்டுமே?!!

வெள்ளிக்கிழமை:
நக்சலைட் மூத்த தலைவர் ஒருவர் இந்தியாவில் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். மிச்சம் இருந்த ஒரு கஸ்டமரும் காலி . கொஞ்சமாக வாங்கினாலும் ரெகுலராக வாங்கிக் கொண்டிருந்தார்கள். இதனிடையே தலைமையகத்திடமிருந்து வந்த மின்னஞ்சலில் மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நேபால், பங்களாதேஷ் மூலமாக இந்தியாவுக்குச் சென்று பாம் வைப்பதில் மிகுந்த செலவாகிறது என்றும் இனிமேல் எல்லாம் ரிமோட் மூலம் இங்கிருந்தே இயக்கப்படுமென்றும் அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆன்-சைட் ப்ராஜெக்ட் கிடைத்தால் ஓரளவுக்கு குடும்ப நிலைமையை சமாளிக்கலாம் என்று பகல் கோட்டை கட்டிய எனக்கு பெருத்த அடி.


சனிக்கிழமை:
அன்னா ஹஜாரே என்று ஒருவர் இந்தியாவில் புரட்சி செய்து வருவதாக பத்திரிகையில் படித்தேன். அவர் இந்திய இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி வருவதாகவும் இளைஞர்கள் அநியாயத்திற்கு எதிராக போராட வேண்டுமென்று கூறி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் மட்டும் எப்படி கிழவர்களுக்கு இவ்வளவு செல்வாக்கு கிடைக்கிறது என்றெண்ணி வியந்தேன். அங்கே ஆள்பவர்கள் எல்லோரும் அறுபதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் எதிர்காலம் மட்டும் இளைஞர்கள் கையில் என்று உபதேசம் கூறி வருகிறார்கள். - அடுத்த ஜென்மத்திலாவது இந்தியாவில் பிறக்க வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை:
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு அஜ்மல் கசாவுக்காக செய்த செலவு மட்டும் பதினாறு கோடியாம். இன்டர்நெட்டில் படித்தேன். இந்தியப் பிரதமருக்கு இணையான செக்யூரிடி அவனுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் நினைத்த நேரத்தில் பிரியாணி முதற்கொண்டு அனைத்து உணவு வகைகளும் கிடைப்பதாகவும் அதில் கூறியிருந்தனர் . கண்ணெதிரே அறுபது பேரை கண்மூடித்தனமாகக் கொன்றதற்கு ஆதாரம் இருந்தும் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கும் இந்தியர்களின் திறமை கண்டு நிஜமாகவே ஆச்சர்யப்பட்டேன். இந்தியர்கள் மேரா பாரத் மஹான் என்று ஏன் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என அன்று தான் உணர்ந்தேன். குஜராத்தைப் பற்றிய பயம் இருந்தாலும் சீக்கிரம் எதாச்சும் சில்லறை திருட்டு செய்து இந்திய அரசால் பிடிபட வேண்டும் என்று எனக்குள் வெறி வந்து விட்டது - ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்தை நான் தான் கொன்றேன் என்று கூறி சரணடைந்து விடலாமா என்று யோசித்து வருகிறேன். வந்தே மாதரம்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...