Wednesday, December 21, 2011

தோனியின் ராஜவேட்டை: இந்தியாவின் ஆஸ்திரேலியப் படையெடுப்பு (பாகம் 1)வணக்கம், நான் தான் உங்க தோனி பேசறேன். டைட்டிலைப் படிச்சிட்டு மிரண்டோ அல்லது கடுப்போ ஆகாதீங்க. எல்லாம் ஒரு விளம்பரம் தான். நீ வாங்கற பத்து, அஞ்சு பிச்சைக்கு இது தேவையான்னு கவுண்டர் ஸ்டைலில் கேக்காதீங்க. அதெல்லாம் ஒரு பெப்பப்புக்காக போடறது. லோக்கலா சொன்னா மூடு கிரியேட் பண்றதுக்காக!

இங்கிலாந்து டூர்ல இருக்கும்போது உங்களோடு பேசினது. அதுக்கப்புறம் இப்பத் தான் பேசறேன்னு நினைக்கறேன். லண்டன்ல அடி வாங்கி ஓய்ந்து போன எங்களுக்கு அவங்களை நம்மூருக்கு வரவழைச்சு நல்லா அடிச்சு அனுப்பினதுல ஒரு சின்ன சந்தோசம். வெஸ்ட் இண்டீஸ் கூட ஜெயிச்சது கூடுதல் சந்தோசம். இந்த சின்னச்சின்ன வெற்றிகள் மனதுக்கு நிறைய தெம்பைக் குடுத்திருக்கு. அதுவுமில்லாம சிம்ம ராசிக்கு ஏழரைச் சனி முடிஞ்சிடுச்சாம். இனிமே எல்லாம் நல்லதே நடக்கும்னு எல்லாரும் ஆருடம் சொல்றாங்க. ஒரு குத்துமதிப்பான டீமை வெச்சிக்கிட்டு ஆஸ்திரேலியாவுல கிரிக்கெட் ஆட வந்த எனக்கு இதை விட உற்சாகம் தரக்கூடிய செய்தி என்ன இருக்கும் சொல்லுங்க!! - சனீஸ்வரா போற்றி!

உங்களை மாதிரியே நானும் இந்த ஆஸ்திரேலியா டூரை ரொம்ப எதிர்பாக்கறேன் - ஒரு ரசிகனாக, ஒரு வீரனாக. வழக்கம் போல இந்த டூருக்கும் ஏதோ உலகப் போர் நடக்கப் போற மாதிரி பில்ட் அப் குடுக்கறாங்க நம்ம மீடியா அன்பர்கள். ஸ்டார் கிரிக்கெட் "அக்நீபத் சீரீஸ்" அப்படின்னு விளம்பரம் பண்றாங்க. இதை சாக்கா வெச்சு "அக்நீபத்" ஹிந்திப் படத்தை ப்ரொமோட் பண்றாங்க. முழு டூருக்கான விளம்பர ஸ்பாட்டுகள் எல்லாத்தையும் அவங்க வித்துட்டதா பேப்பர்ல படிச்சேன். - வாழ்க கிரிக்கெட்! (btw, எந்த நம்பிக்கையில கரன் ஜோஹர் அமிதாப்ஜி நடிச்ச படத்தை ரித்திக் ரோஷனை வெச்சு ரீமேக் பண்றாருன்னு தெரியல -ஆனா கத்ரீனா கைப் மட்டும் செம க்ளாமர்)

அவரை ஏன் எடுக்கலை, இவரை ஏன் எடுத்தாங்கன்னு பட்டிமன்றமே நடத்தறாங்க. சாலமன் பாப்பையாவை விட்டு தீர்ப்பு சொல்லச் சொல்லுவாங்க போல.அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு மீட்டர் எகிறியிருக்கு. இது நல்லதா கெட்டதான்னு எனக்கு சொல்லத் தெரியல. ஆனா இந்த மாதிரி டிஸ்கஷன் எனக்கு பழகிடுச்சு.

இங்கிலாந்து டூர்ல பண்ணின தப்பை இந்த தடவை பண்ணிடக் கூடாதுன்னு நான் ரொம்ப குறிப்பா இருந்தேன். பத்து நாளைக்கு முன்னாடியே இங்க வந்ததுல கிளைமேட் நல்லா செட் ஆயிடுச்சு. இரண்டு ப்ராக்டீஸ் மேட்ச் ஆடினது நிறைய தன்னம்பிக்கையை குடுத்திருக்கு.ரெண்டு டீமும் ஏறத்தாழ சரி சமமா இருக்கறதால போட்டிக்கும், சில ரசாபாசங்களுக்கும் குறைவிருக்காதுன்னு நல்லாத் தெரியுது. அவங்க டீம்ல பேட்ஸ்மேன் சரியில்ல. நம்ம டீம்ல பௌலிங் சரியில்ல. இரண்டு பக்கமும் இஞ்சுரி கேசுங்க நிறையவே இருக்கு. ஸோ, யாரு களம் இறங்குவாங்க, யாரு உட்காருவாங்கன்னு முடிவு பண்றது மேட்சை விட விறுவிறுப்பா இருக்கும் போலிருக்கு.

ஆரம்பமே அலைக்கழிப்பா இருக்கற மாதிரி இஷாந்த் ஷர்மாவுக்கு காயம் ஆயிடுச்சு. ஏம்பா, உனக்கு நிஜமாவே காயம் பட்டிருக்கா, உன்னால ஆட முடியுமான்னு கேட்டா, "முடியும்... ஆனா முடியாது" அப்படின்னு என்னை வெச்சு காமெடி பண்றான்.சச்சின் தன்னோட நூறாவது சதத்தை அடிக்கறதுக்கு இதை விட சூப்பரான ஆடுகளம் அமையாது. நல்ல வேளை அவர் இந்தியாவுல அடிக்கலை. இல்லேன்னா உள்ளூர்ல அடிச்சிட்டு பெருமை பேசறார்னு சொல்லுவாங்க. அப்படியே ஒரு நாள் போட்டியிலும் ரெண்டு செஞ்சுரி போட்டு இரண்டிலேயும் 50 செஞ்சுரி போட்ட ஒரே ஆளுன்னு பேர் வாங்கிடுங்க பாஸ்!. ஆனா சில விளங்காத பயலுவ சச்சின் செஞ்சுரி அடிக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. அடிச்ச உடனே "இந்தாளு செஞ்சுரி அடிச்சா மேட்ச் விளங்கின மாதிரி தான்" அப்படின்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க - திருந்தாத ஜென்மங்கள்!!

உமேஷ் யாதவ் மாதிரி புதுமுகங்களுக்கும் லக்ஷ்மன், திராவிட் மாதிரி விற்பன்னர்களுக்கும் இது ஒரு நல்ல தொடரா இருக்கும்னு நம்பறேன். குறிப்பா லக்ஷ்மனுக்கு ஆஸ்திரேலியான்னா அல்வா சாப்பிடற மாதிரி.

அவங்கள்லாம் அடிக்கறது இருக்கட்டும், நீ என்ன பண்ணப் போறேன்னு கேக்கறீங்களா? முடிஞ்ச வரைக்கும் எஜ்ஜ் வாங்கி ஸ்லிப்ல அவுட் ஆகாம இருக்கணும்னு பாக்கறேன். கடவுள் அனுக்கிரகம் இருந்தா ஒரு செஞ்சுரி இல்லேன்னா ஒரு அம்பது. அதுக்கு மேல எல்லாம் நான் ஆசைப்படறது இல்லை. இதை விட முக்கியம், விக்கெட் கீப்பிங் பண்ணும்போது கேட்ச் எதையும் விடக் கூடாது. இல்லேன்னா அவ்ளோ தான், சடை பின்னி பூ வைச்சிட்டுப் போயிடுவாங்க நம்ம மீடியா மக்கள்.

2015 உலகக்கோப்பையில நான் ஆடுவேனாங்கறது 2013ல தான் தெரியும்னு தெரியாத்தனமா ஒரு ப்ளோவுல சொல்லிட்டேன். மக்கள் எல்லாரும் அதையே பிரிச்சு மேய ஆரம்பிச்சுட்டாங்க. நாம ஒண்ணு சொன்னா அவங்க ஒண்ணு புரிஞ்சுக்கறாங்க. என்னத்தைச் சொல்ல?

இதே மாதிரி பிராட்மன் ஓரேஷன்ல டிராவிட் பேசின பேச்சுக்கும் விதவிதமா அர்த்தம் கற்பிக்கறாங்க. ஆனாலும் மனுஷன் ஒரு நெருப்பு மாதிரி பேசினார் அன்னிக்கு. அந்தப் பேச்சு சம்பந்தப்பட்டவர்களை கண்டிப்பா யோசிக்க வைச்சிருக்கும்.

சச்சின் ரெகார்ட் பண்ணுவார், சேவாக் ரெகார்ட் பண்ணுவார்னு எல்லாரும் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. ஆனா என்னோட, இல்ல இல்ல, நம்ம டீமோட ஒரே குறிக்கோள் - டெஸ்ட் மேட்சா இருந்தாலும் காலையில நாலு மணிக்கு எழுந்து பாக்கறானே என் இந்திய கிரிக்கெட் ரசிகன், அவனை ஏமாத்தக் கூடாது. டவுன் அண்டர்ல விளையாடப் போய் டவுன் ஆகி அப்புறம் அண்டர்ல போயிடக்கூடாது.

அடுத்த ரெண்டு மாசத்துக்கு நீங்களும் என்னோட ஆஸ்திரேலியாவுல பயணம் பண்ணத் தயாரா இருப்பீங்கன்னு நம்பறேன்.ஆஸ்திரேலியா உங்களை அன்புடன் வரவேற்கிறது!!

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...