Monday, August 20, 2012

Ek Tha Tiger - விமர்சனம்






ஷாருக் கான் படம் ரிலீசானா தீபாவளின்னு அர்த்தம், அமீர் கான் படம் வந்தா கிறிஸ்துமஸ்னு அர்த்தம். அது மாதிரி சல்லு பாய் படம் வந்தா ரம்ஜான்னு அர்த்தம். வாண்டட், தபங், பாடிகார்டைத் தொடர்ந்து நான்காவது வருடமாக ETT (ஏக் தா டைகர்னா "டைகர்னு ஒருத்தன் இருந்தான்னு" அர்த்தம்) மூலம் ஹிட் அடித்திருக்கிறார் - இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே.

மாஸ் ரசிகர்களை கவர் பண்ணுவதிலும் கிளாஸ் ரசிகர்களை குழப்புவதிலும் சல்லு கில்லாடி. இந்தப் படமும் அப்படியே. பார்க்கலாமா வேண்டாமா என்று குழம்பும் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களை வேறு வழியில்லாமல் பார்க்க வைத்து விடுகிறார் (வேற படமே இல்லீங்க, அதுவும் காலை பத்து மணி தொடங்கி இரவு 11 .45 வரை ஒரு மல்டிப்ளெக்ஸில்  மட்டும் மொத்தம் 32 காட்சிகள்)

முதல் நாள் கலெக்ஷன் 32 கோடி என்று சொல்கிறார்கள். 75 கோடி செலவு செய்து முதல் 5 நாட்களிலேயே நூறு கோடியைத் தாண்டி புதிய சாதனை படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் (ஹிந்தி சினிமாவில் இந்த நூறு கோடிக்கு என்ன லாஜிக், ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று யாரவது விளக்கினால் தேவலை) - உண்மையாகக் கூட இருக்கலாம்.நான் பார்க்குமோது தியேட்டரில் இருந்த 560 சீட்டுகளில் வெறும் மூன்று சீட்கள் மட்டுமே காலியாக இருந்தன.

கதை என்னன்னு கேக்கறீங்களா? சல்லு இந்திய உளவாளியாக நடிக்கிறார், உலக அளவில் பல விஷயங்களை துப்பு துலக்குகிறார்னு எல்லாரும் சொன்னாங்க. ஒருவேளை அரசியல் கலந்த ஆக்ஷன் கலந்த த்ரில்லராக இருக்குமென்று நம்பிப் போன எனக்கு ஒரு அதிபயங்கர காதல் கதை தான் பார்க்கக் கிடைத்தது. ஒரு இந்திய உளவாளியும் பாகிஸ்தான் உளவாளியும் காதலித்தால் என்னாகும்னு ஹாலிவுட் ரேஞ்சுக்கு (அதாவது சம்பந்தமே இல்லாமல் 4-5 வெளிநாடுகளில் ஷூட்டிங் பண்ணினா அது ஒரு உலகளாவிய படம், இது இந்திய சினிமாவின் புதிய நியதி) சொல்லியிருக்காங்க.





படம் மிகச் சரியாக 135 நிமிடங்கள் ஓடுகிறது. இது மிகப் பெரிய வரப்ரசாதம். தமிழ்ல ஆக்ஷன் படம் எடுக்கறவங்க தயவு செய்து நோட் பண்ணுங்கப்பா. வளவளன்னு எடுக்காதீங்க.

மொத்தம் நாலு பாடல்கள். எல்லாமே காதல் பாடல்கள். அதிலும் ஒன்று படம் முடிந்த பின் தான் வருகிறது.

ஹீரோயினுக்கும் ஹீரோ போல் படத்தை நகர்த்திச் செல்வதில் சரி சம உரிமை கொடுத்திருப்பது பாராட்டப் பட வேண்டிய விஷயம். சம்மர் சால்ட் அடிக்கும் கத்ரினாவுக்கு விசில் பறக்கிறது.

நாட்டைக் காப்பாற்றப் போராடுவதால் எங்கே தேசபக்தி வசனங்கள் நிறைய இருக்குமோ என்று பயப்படத் தேவையில்லை. சொல்லப் போனால் வசனங்கள் மிகக் குறைவு.





எந்த மொழிப் படமாக இருந்தாலும் ஆக்ஷன் ஹீரோ என்றால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது எழுதப்படாத விதி போலும். இந்தப் படத்திலும் அதை செவ்வனே கடைபிடித்திருக்கிறார்கள். சல்லு தன் கோட்டைக் கழற்றி (ஆனால் சட்டை போட்டிருக்கிறார்) மின்சார ரயிலின் இணைப்புக் கம்பியை வளைத்து மின் இணைப்பைத் துண்டிக்கிறார் (என்ன எழுதியிருக்கேன்னு புரியலேன்னா படம் பாருங்க), நெருக்கடியான சந்துகளில் மாடிக்கு மாடி தாவுகிறார் (பார்ன் அல்டிமேட்டம் மாதிரி), இடுப்பில் குண்டடி பட்டாலும் டைவ் அடித்து ப்ளேனில் ஏறுகிறார்.

படத்தில் ஆக்ஷன் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. காதல் இருக்கிறது. ஹீரோயிசம் இருக்கிறது. காமெடி கூட இருக்கிறது. ஆனால் எதுவும் முழுமையாக ஒட்டாமல் இருப்பது மைனஸ் பாயின்ட் - ஹிந்தி சினிமாவுக்குத் தேவை ஒரு நல்ல கம்மெர்ஷியல் டைரக்டர்.

"நாய் மாதிரி மூச்சு வாங்கறியே, ஒரு நாளைக்கு எவ்ளோ சிகரெட் பிடிக்கறே?" என்று சல்லு ஒருவரைப் பார்த்து சாதாரணமாகக் கேட்கிறார். ஆனால் ரசிகர்களோ இவர் "கிங்கைத்" தான் குறிப்பிடுகிறார் என்று எண்ணி ஆரவாரம் செய்கிறார்கள்.

எல்லாப் படத்திலும் இவர் கதாப்பாத்திரம் ராஜஸ்தான் பின்னணியில் தான் இருக்கும். இந்தப் படமும் விதிவிலக்கல்ல.





இந்தப் படத்தை தமிழில் எடுப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி யாராவது எடுத்து வெற்றி பெற்றால் அவர் நிஜமாகவே பெரிய தில்லாலங்கடி தான்.

படம் பார்க்கும்போது யோசிக்காதீங்க. பார்த்த பிறகு மறந்து போய்க் கூட யோசிக்காதீங்க. யோசிச்சீங்கன்னா ரொம்ப பீல் பண்ணுவீங்க.

சன் டிவி பாணியில் சொல்வதென்றால் "ஒரு தடவை பார்க்கலாம்"

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...