தமிழ் சினிமாவில் முதன் முறையாக உச்சத்தின் படத்துக்கு ஆங்கில அனிமேஷன் படங்களைப் போல முழு நீள மெர்ச்சண்டைசிங் செய்யத் திட்டமிட்டுள்ளனர். படம் சம்பந்தப்பட்ட பொருட்கள், தின்பண்டங்கள், ஆடைகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வண்ணம் திட்டம் போடப்பட்டுள்ளதாம். தமிழ் சினிமாவின் வியாபார நெருக்கடியே இதற்குக் காரணம் என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதனை நாயகன் இலங்கைத் தொடரிலிருந்து தானாகவே விலகிக் கொண்டதை ஒரு க்ரூப் பெரிய பிரச்சினையாக ஊதி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. இவர் ஆடவேண்டும், இவர் ஆடக் கூடாதென்று முடிவு செய்யவேண்டியது வாரியம் தானே தவிர இவர் அல்ல என்று உரக்கக் கூவி வருகின்றனர். ஆகாத மருமகள் உக்காந்தாலும் தப்பு நின்னாலும் தப்பு என்பது போல் இவர் ஆடினால் "இளையவர்களுக்கு வழி விடுவதில்லை" என்று குற்றம் சாட்டுகின்றனர், விலகினால் அதை வேறு விதமாக திரிக்கின்றனர்.
ஆங்கில சேனலின் சார்பாக ராணுவ வீரர்களை சந்திக்கும் நிகழ்ச்சி வரும் சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் பேசியதை விட தனக்கு கூடுதல் பங்கு வேண்டுமென்று ஏழாம் நம்பர் அடம் பிடிப்பதாக தகவல். கேட்டால் இலங்கை சீரீஸ் வென்றதன் மூலம் சரிந்திருந்த மார்க்கெட் நிமிர்ந்து விட்டதென்று சவடால் பேசி வருகிறாராம். மேலிடத்திற்கு வேண்டப்பட்ட சேனல் என்பதால் பகைத்துக் கொள்ள வேண்டாமென்று நலம் விரும்பிகள் அறிவுரை கூறி வருகின்றனர்.
இதுவும் ரேட் விஷயம் தான். யூனிவர்சல் ஹீரோவின் மெகாசைஸ் படம் ரிலீசுக்கு ரெடியாகியும் வெளிவராமல் இருப்பதற்குக் காரணம் ஹீரோ வினியோகஸ்த உரிமைக்கு நிர்ணயித்திருக்கும் விலை தான் என்கின்றனர் படத்தை வாங்க விரும்பியவர்கள். அவ்வை ஷண்முகி பட்ஜெட்டில் படம் எடுத்துவிட்டு அவதார் ரேஞ்சுக்கு விலை பேசுவது அநியாயம் என்று யாராவது அறிவுரை சொன்னால், தான் ஹாலிவுட்டில் படம் பண்ணப் போகும் தமிழன் என்று உதார் விடுகிறார் நம்மவர். அந்த பாழாப்போன ஆஸ்காரை இவருக்கு குடுத்துத் தொலைங்கப்பா!
தான் பார்மில் இல்லை என்று தெரிந்தும் வேண்டுமென்றே அனைத்து ஆட்டங்களிலும் ஆடவைத்ததாக ரோஹித வீரர் நெருங்கியவர்களிடம் புலம்பி வருகிறார். நோயிலிருந்து மீண்டு வந்த சிங்கத்தை டீமின் உள்ளே நுழைக்க இவரை பலிகடா ஆக்கிய விஷயம், பாவம் இவருக்குத் தெரியாது போலும் - உன் கதை முடியும் நேரமிது!!
"நவீன" காந்தி திடுதிப்பென்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டு அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்ததில் அவரின் விசுவாசிகளுக்கு அவ்வளவாக விருப்பமில்லையாம். சாக்கடையில் இறங்காமல் சாக்கடையை சுத்தம் செய்ய முடியாது என்று தனக்குக் கொஞ்சம் தாமதாகத்தான் புரிந்ததாகவும் அதனால் தான் இந்த முடிவு என்றும் காந்தி அவர்களை சமாதானப் படுத்தி வருகிறார். மக்களின் துணையும் இல்லை, மீடியாவையும் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கம் தடை செய்துவிட்ட நிலையில் பாவம் அவர் பட்டினி இருந்து என்ன லாபம்?
இலங்கை வாரியத்திற்கு சம்பாதித்துக் கொடுப்பதற்காக வலுக்கட்டாயமாக நடத்தப்பட்ட சமீபத்திய போட்டியில் கொஞ்சம் கூட கல்லா கட்டாதது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. டிக்கெட் விற்பனை, டிவி விளம்பர வருமானம் இரண்டுமே வரலாறு காணாத அளவுக்கு டல்லடித்து விட்டதால் வரவிருக்கும் T20 போட்டியை மிகவும் கவர்ச்சிகரமாக்கவேண்டுமென்று எல்லோருக்கும் ICC மறைமுக உத்தரவு போட்டுள்ளதாம்.
எல்லோரையும் கேலி பேசும் மீடியாவை மக்கள் கேலி பேசு வருவது தான் இன்றைய ஹாட் டாபிக். டெல்லி உண்ணாவிரதத்தையும் அஸ்ஸாம் இனக் கலவரத்தையும் எந்தத் தொலைக்காட்சியாவது காட்டினால் அவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மீறினால் கறுப்புப் பண லிஸ்டில் அவர்கள் பெயர் சேர்க்கப்படும் என்றும் ஆளுங்கட்சி மிரட்டியதே இதற்குக் காரணம் என்கிறது மீடியா வட்டாரம். தகுந்த உரிமம் இல்லாமலும் கறுப்புப் பணத்தின் துணையுடனுமே பல சேனல்கள் வண்டி ஒட்டுவதால் வேறு வழியின்றி மூடிக் கொண்டு இருக்கின்றனர்.
முட்டாள் கானின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிஜமாகவே பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறதாம். குறிப்பாக தண்ணீர்ப் பிரச்சினை எபிசோடு அனைவரையும் தூக்கி வாரிப் போட்டிருக்கிறது. அதைவிட அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனராம். கானின் புண்ணியத்தில் நிதி குவிந்த வண்ணம் உள்ளதே இதற்குக் காரணமாம்.
பீகாரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சமீபத்திய ஹிந்தித் திரைப்படமான கேங்க்ஸ் ஆப் வாசிபூர் படத்தைப் பார்த்து விட்டு இதே போன்று மதுரை மண்ணை மையமாக ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்று கலைத்தாகத்தில் துடியாய்த் துடிக்கிறாராம் பருத்திவீர இயக்குனர். நம்மூரில் எடுத்தால் வீண் சாதிப் பிரச்சினை வந்து படம் ரிலீசாகாமலே போகக் கூடும் என்று எச்சரித்து வருகின்றனர் அள்ஸ் (அதாங்க, அள்ளக்கைங்க)
ஒருபுறம் மெகாசைசின் வியாபாரம் இழுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் சூரிய நடிகரின் இரட்டைப் பிறவி படம் வரலாறு காணாத ரேட்டுக்கு விற்பனையாகும் என்று ஆரூடம் கூறி வருகின்றனர். படத்தில் பொழுதுபோக்கும் தொழில்நுட்பமும் நிறைந்து காணப்படுவதால் வாங்குவதற்கு போட்டாபோட்டி நிலவுகிறதாம்.
உதவி கேப்டன் தொடர்ந்து சதமடித்து வருவது சாதனை நாயகனை கலக்கமடையச் செய்திருப்பதாக அவரின் கோஷ்டி புரளி பேசி வருகிறது. இது சாதனை நாயகனின் ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தினாலும் அவரோ "இதுக்குப் போய் அலட்டிக்கலாமா" என்று வழக்கமான உற்சாகத்துடன் இருக்கிறாராம். எலி பூனையோடு மோதலாம், யானையோடு?
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment