Wednesday, March 6, 2013

தோனியின் வெற்றிப் பேட்டி

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு டெஸ்டுகளில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் புகழின் உச்சத்திற்கு வந்திருக்கிறார் தோனி. இந்த நிலையில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கலைஞர் ஸ்டைலில் (இருவரும் ராஜதந்திரிகள், அதான்) அவர் சொன்ன பதில்கள் இதோ:





இந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான தொடர் வெற்றியை எதிர்பார்த்தீர்களா?

ஒவ்வொரு முறையும் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்துத் தான் களம் இறங்குகிறோம். பல சமயம் வெற்றி பெறுகிறோம், சில சமயம் தோல்வியின் வடிவில் படிப்பினை பெறுகிறோம்.

அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று கணக்கை நேர் செய்வீர்களா?

நேர் செய்ய இது ஒன்றும் வரவு செலவு கணக்கோ அல்லது அவர்களுக்கு எதிரான போரோ அல்ல. அன்று வெற்றி அவர்களின் பக்கம். இன்று இந்தியாவின் பக்கம்.




ஆடுகளம் சுழற்பந்திற்கு சாதகமாக இருந்ததால் தான் வெற்றி பெற முடிந்ததா?

விதிகளை மாற்ற முடியாவிட்டால் விளையாட்டை மாற்று என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. அது இங்கே சாலப் பொருந்தும்.தேர்தலிலே போட்டியிடும் முன்னர் தொகுதியைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய ஆடுகளம் வேகப்பந்திற்குத் தோதாக இருப்பது போல் நமது களங்கள் சுழற்பந்திற்கு சாதகமாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. எதிர்க்க நினைப்பவர்கள் எதற்கும் துணிந்து எதிர்க்க வேண்டும் போர்க்களத்திலே பஞ்சு மெத்தையை எதிர்பார்க்கலாகாது.

அடுத்த இரண்டு போட்டிகளை எதிர் கொள்ள எதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

ஆஸ்திரேலியா ஒரு விழுப்புண் பட்ட வேங்கை. அது வீறு கொண்டு எழுந்தால் காடு தாங்காது - திட்டம் இருக்கிறது. ஆனால் அதை வெளியே சொல்வதற்கில்லை.




செஹ்வாக் ஆட்டம் சொல்லும்படியாக இல்லையே? அவர் அணியில் நீடிப்பாரா?

அவரின் ஆட்டத்தை தேர்வுக்குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இறுதி முடிவை அவர்கள் எடுப்பார்கள். அவருக்கு எப்பொழுதும் இதயத்தில் இடமுண்டு.

உங்களுக்கும் அவருக்குமான உறவு எப்படி இருக்கிறது? உரசல்கள் அதிகமாகிவிட்டதாக செய்திகள் வருதே?

நண்பர்களுக்குள் உரசல்கள் சகஜம். ஆனால் விரிசல்கள் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

அவருக்கு கண் பார்வையும் கேட்கும் திறனும் குறைந்து வருவதாக சொல்கிறார்களே உண்மையா?

வியூகங்களுக்கு பதில் உண்டு. ஆனால் ஊகங்களுக்கு இல்லை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கம்பீரை அணியிலிருந்து நீக்கியது சரியா?

அது காலத்தின் கட்டாயம். அதை இப்பொழுது நினைத்தாலும் கண்கள் பனிக்கும், இதயம் கனக்கும்.





சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் எல்லோரும் தவறாமல் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வருகின்றனரே? உங்களுக்கும் பிசிசிஐ தலைவருக்குமான நெருக்கமான தொடர்பு தான் இதற்குக் காரணமா?

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள் என்று சொல்வதை விட திறமை வாய்ந்தவர்கள் இந்திய அணியில் இடம் பெறுகிறார்கள் என்று சொல்லிப் பாருங்கள், தவறாகத் தெரியாது. அவர்கள் இந்திய அணியிலிருந்து சென்னை அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள். மூச்சிருக்கும் வரை தேசம் முன்னே, கட்சி பின்னே என்ற கொள்கையை அயராமல் கடை பிடித்து வருகிறோம்.




வேகப்பந்து வீச்சு நமது அணியில் இன்னமும் ஒரு குறையாகவே இருக்கிறதே? ஒருவர் கூட தொடர்ந்து நிலைப்பதில்லையே?

நீங்கள் சர்மாவைப் பார்க்கிறீர்கள், நான் குமாரைப் பார்க்கிறேன். இருந்தாலும் அது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.





புஜாராவின் ஆட்டம் எப்படி?

இந்திய அணியின் வளர்ந்து வரும் சுவர். திராவிட் பெருஞ்சுவர். இவர் சிறுஞ்சுவர். ஆனால் கண்டிப்பாக குட்டிச்சுவர் அல்ல (சிரிக்கிறார்).




இந்திய அணியின் அடுத்த தலைவராக யாரைச் சொல்வீர்கள்? உங்கள் வலது கையான ராயினாவா? அல்லது வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலியா?

தலைவர் யார் என்பதை மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். வருங்கால அணிக்கு இருவருமே தேவை. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை.  ஒருவர் போர் வாள் என்றால் மற்றொருவர் உடற்கவசம். அவர்களை எதிர்கால இந்திய அணியின் பொன்னர்-சங்கர் என்று கூறினால் அது மிகையாகாது.

உங்களுக்குப் பிறகு தலைவர் பதவிக்கு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் விக்கெட் கீப்பிங் செய்ய வேறு மாற்று இல்லையே? அப்படி வேறு யாராவது வந்தால் அணியில் உங்களுக்கு இடம் இருக்காது என்கிறார்களே?

எங்கிருந்தாலும் எனக்கு ரசிகர்கள் மத்தியில் நிரந்தர இடமுண்டு. இந்திய அணி என் தனிப்பட்ட சொத்து அல்ல. அது பொதுச் சொத்து. வீரர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த முறை ஐபிஎல் போட்டியில் சென்னை கோப்பை வெல்லுமா?

இந்த கேள்விக்கு நான் இந்திய அணியின் சீருடை அணிந்து பதில் சொல்வது சரியல்ல. ஆனால் இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என்பதை மட்டும் திண்ணமாகக் கூற முடியும்.

கடைசியாக ஒரு கேள்வி, 2013க்கு பிறகு நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைப் பற்றி யோசிப்பேன் என முன்னொரு முறை கூறியிருந்தீர்கள். அதைப் பற்றி எதாவது முடிவு எடுத்திருக்கிறீர்களா?

2013க்குப் பிறகு தானே? அதற்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கிறதே, என்ன அவசரம்!!

Jayaraman
New Delhi

பின் குறிப்பு:  இது ஒரு கற்பனை உரையாடல்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...