Monday, January 13, 2014

விடை கொடு எந்தன் நாடே!!

ஆனானப்பட்ட சச்சின் டெண்டுல்கரே ரிட்டயர் ஆயிட்டாரு. ஆனாலும் நம்மூர்ல சில மனிதர்கள் / விஷயங்கள் இன்னமும் போகாம அடம் பிடிக்கறாங்க. இந்த வருஷமாச்சும் இவர்களெல்லாம் ஓய்வு பெறுவார்களா, அல்லது குறைந்தபட்சம் மாறுவார்களா / மாறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!

LK அத்வானி:
அண்ணன் வாஜ்பாய் எப்போ எழுந்து போவார், திண்ணை எப்போ காலியாகும்னு ரொம்ப எதிர்பார்த்து இருந்தவருக்கு திண்ணை காலியானாலும் படுக்க முடியலேன்னு இன்னமும் கவலை. போதாகுறைக்கு மோதியுடன் மோதவும் முடியாமல் அட்ஜஸ்ட் பண்ணவும் பண்ண முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு..அய்யோயோயோ! மீசை நரைச்சாலும் பிரதமர் ஆசை மட்டும் இன்னமும் நரைக்கவில்லை அய்யாவுக்கு! அத்வானி ஐயா, இந்த வருஷமாச்சும் உங்க தலைவர் வாஜ்பாய் மாதிரி அரசியலுக்கு ஓய்வு குடுத்துட்டு நிஜமாவே கிருஷ்ணா ராமான்னு இருமய்யா!!

கவாஸ்கர் / ரவி சாஸ்திரி:
நீங்க கிரிக்கெட் விளையாடின ஆண்டுகளை விட மைக் பிடிச்ச ஆண்டுகள் அதிகமா இருக்கும் போலிருக்கேய்யா! 20 வருஷமா அதே வார்த்தைகள், உச்சரிப்பு கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. அதான் உங்க இளவல் வெளியே வந்துட்டார்ல. மைக்கை அவர் கிட்ட கொடுத்துட்டு கொஞ்சம் சைடு வாங்குங்க. த்ரிமூர்த்திகளான சச்சின், திராவிட் அண்ட் கங்கூலி அந்த வேலையை இனிமே நல்லாவே பார்த்துப்பாங்க.

கமலஹாசன்:
என்ன தான் நீங்க உலக ரேஞ்சுக்கு பயாஸ்கோப் காட்டினாலும், கம்பியோட சப்போர்ட்டில் எகிறி எகிறி அடிக்கறதும், பாதிக்குப் பாதி வயசு பொண்ணுங்களோட கொஞ்சறதும் பார்க்க சகிக்கலை. உங்கள் அனுபவம் அடுத்த தலைமுறைக்குத் தேவை. "நான் இன்னும் மாணவன் தான்" அப்படின்னு நீங்க வேணா அவையடக்கத்தோட சொல்லிக்கலாம். ஆனால் உங்களுக்குக் கீழே ஏராளமான மாணவர்கள் இருக்காங்க. உங்கள் சேவை, திரைக்குப் பின்னால் தேவை. - திரைக்கதை பயிற்சிக்கூடம் நடத்தின மாதிரி. உங்களை நீங்களே டைரக்ட் பண்றதில் என்ன சார் த்ரில்? ஒரு போட்டிக்கு விஜய் சேதுபதியை வெச்சு படம் பண்ணிப் பாருங்க.

மணிரத்னம் / பாரதிராஜா:
அதிகம் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே புரிஞ்சிருக்கும். காலம் போன காலத்தில சம்பாதிச்ச பணத்தையெல்லாம் விரயம் பண்ணாதீங்க. மௌன ராகத்திற்கும் ரோஜாவிற்கும் என்றுமே எங்கள் மனதில் முதல் மரியாதை உண்டு.

செஹ்வாக்:
சோற்றிலும் அடிவாங்கியாச்சு, சேற்றிலும் அடிவாங்கியாச்சு. இன்னுமென்ன யோசனை? கிரிக்கெட் கிட்டை ஏறக்கட்ட வேண்டியது தானே? எவ்வளவு முக்கினாலும் இனிமே ஒண்ணும் முடியாது. பொண்டாட்டி நடத்தற கிரிக்கெட் கோச்சிங் க்ளப்ல சமத்தா உட்கார்ந்து பில்லு குத்துங்க.உங்களுக்கு அது தான் சரியான வேலை. ஏன்னா அங்கேயும் காலை நகர்த்த வேண்டாம்.

கலைஞர்:
காங்கிரசுடன் கூட்டணி இல்லைன்னு சொல்லிட்டீங்க. நரேந்திர மோதி இருக்கற வரைக்கும் அவங்க கூட சேர முடியாது. என்ன பண்ணப் போறீங்க? இன்னமும் பொது நிகழ்ச்சிகளில் நீங்க கலந்துக்கறது உற்சாகமா இருந்தாலும் உங்களுக்குப் பிறகு கட்சிக்கு ஒரு அடையாளம் வேண்டாமா? தலைவர்னு ஒருத்தர் இருக்கற வரைக்கும் தான் தொண்டர்கள் இருப்பாங்க. இப்பவும் நீங்க அடுத்த தலைவரை காட்டாமல் இருப்பது உங்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் திமுக என்ற கட்சிக்கு அது பேராபத்தை விளைவிக்கும். என்னது? 2016க்குப் பிறகு கடக ராசிக்காரர்களுக்கு திசை மாறும்னு சொல்றீங்களா? ரைட்டு விடுங்க.

சன் டிவி:
ஒரு காலத்தில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கு முன்னோடியா இருந்த நீங்க இப்போ கன்டென்ட் இல்லாமல் தவிக்கறது ரொம்ப பரிதாபமா இருக்கு. மற்ற தொலைகாட்சிகளில் பிரபலமாகற நிகழ்ச்சிகளை காப்பியடிச்சுப் போடறது கேவலத்திலும் கேவலம். புது சினிமாக்கள் எதுவும் உங்க கிட்ட வர்றது இல்லை. போதாக்குறைக்கு எல்லா நிகழ்ச்சிகளிலும் உங்க கட்சி ஜால்ராக்களின் ராஜ்ஜியம் தான். ஒரு வேளை ப்ரீயா வேலை செய்யறாங்களோ? அது சரி, ராஜ் டிவியே இன்னமும் ஓடிக்கிட்டிருக்கு, உங்களுக்கென்ன!!

கல்விமுறை:
இந்தியா மாதிரி நாட்டுக்கு பொதுவான கல்விமுறை கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனால் அதுக்காக உருப்படாத கல்வி முறையை மாற்றலாம் இல்லையா? வெள்ளைக்காரனுக்குக் கூஜா பிடிக்கறதுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட BA மாதிரியான பட்டங்களையும், சுத்தமா வேலைக்காகாத பொறியியல் படிப்புகளையும் கட்டிக்கிட்டு இன்னமும் மாரடிக்கத்தான் வேணுமா? இலக்கியத்தையும் வரலாற்றையும் அறிவியலாக்குங்க. BA வரலாறு படிச்சவனுக்கும் வேலை கிடைக்கும்.பொறியியல் மோகமும் குறையும்.


தமிழ் சினிமா பாடல்கள்:
ஒரு ஹீரோ (புரட்சி கலந்த) அறிமுகம் அல்லது எழுச்சிப் பாட்டு, ஒரு ஹீரோயின் அறிமுகம், ஒரு மெலடி டூயட், ஒரு குத்து டூயட், ஒரு பெண்களைத் திட்டும் டாஸ்மாக் காதல் சோகம் - இதைத் தவிர வேற எதுவுமே தோணாதா? புரட்சி, பருப்புன்னு பேசற பெரிய நடிகர்களும் இந்த வட்டத்துக்குள் அடக்கமாயிட்டாங்கறது வேதனை. இந்தக் கருமத்துக்கு டிவியில் படத்தைப் பற்றி லொடலொடன்னு பேச்சு வேற. கொஞ்சமாச்சும் அப்டேட் ஆவுங்கப்பு!! இல்லேன்னா பாட்டே போடாதீங்க!

டிவி சீரியல்கள்:
நண்பர்களே, பெண்களெல்லாம் முன்னை மாதிரி வீட்டில் இருக்கறதில்ல. படிக்கறாங்க, வேலைக்குப் போறாங்க. கணவனே வேண்டாம், என் சுதந்திரம் தான் முக்கியம்னு சிக்சர் அடிக்கறாங்க. இப்பப் போய் நாத்தனார் தொல்லை, மாமியார் கொடுமை மாதிரி 20ம் நூற்றாண்டு பிரச்சினைகளையே வெச்சு சேலை நெய்யறது நல்லாவா இருக்கு? சக ஊழியருடன் சண்டை, அபார்ட்மெண்ட் செகரட்டரியை எதிர்த்துப் போராடுதல், அரசியல் பிரவேசம், இந்த மாதிரி புதுசா எதாச்சும் காட்டுங்க. இல்லேன்னா மாமனார் கொடுமை, மச்சினி கொடுமைன்னு ஆண்கள் பிரச்சினைகளை வெச்சு எடுங்க. TRP கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் முயற்சி செய்யுங்க.

ஊழல் / லஞ்சம்:
60 வருடங்களாக இந்தியாவைப் பிடித்திருக்கும் ஜென்ம சனி. எந்தத் திருநள்ளாரில் தீர்த்தமாடினால் இதிலிருந்து விடிவு கிடைக்குமென்று தெரியவில்லை. குறைந்தபட்சம் உக்கிரம் குறைந்தால் கூட போதும். யாராவது பரிகாரம் சொன்னால் / செய்தால் தேவலை - ஆஹா, பரிகாரமும் ஒரு வகையில் லஞ்சமாச்சே? அப்போ ஒழிக்கவே முடியாதா??


சூப்பர் ஸ்டார், அம்மா மாதிரி இன்னும் முக்கியப் புள்ளிகள் நிறைய பேரை இந்த லிஸ்ட்ல ஏன் சேர்க்கலை?  - அப்படிங்கற உங்க மைண்ட் வாய்ஸ் எங்களுக்குக் கேட்குது பாஸ். சூப்பர் ஸ்டார் எப்பவோ தான் ஒரு படம் பண்றார். அப்புறம் அம்மா - அப்பா அடிச்சா அம்மா கிட்ட சொல்லலாம், ஆனா அம்மா அடிச்சா யார் கிட்ட போய் சொல்ல?

ஹாப்பி பொங்கல் பாஸ்.
ஜெயராமன்

டெல்லி

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...