Sunday, January 6, 2013

கமலின் "விஸ்வரூபம்"









உலக நாயகனின் இந்த முற்றிலும் மாறுபட்ட "நறுக்" பேட்டி இது வரையிலும் எந்த சேனலிலும் வரவில்லை. கூடிய சீக்கிரம் வரும்:


வணக்கம் சார்

"வணக்கம்"

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்க படம், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு படம், - எப்படி உணர்றீங்க?

"நிறைவாக இருக்கிறது. இந்த படத்திற்குக் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பார்க்கும்போது ஈன்ற பொழுதினிற் பெரிதுவக்கிறேன்னு தான் சொல்லணும்."

"இந்த மாதிரி ஒரு படம் பண்ணணும்னு எப்படி உங்களுக்குத் தோணிச்சு?"

"தசாவதாரம் எடுக்கும் போதே என் மனதில் உதித்த கதை இது. அதை கொஞ்சம் கொஞ்சமா மெருகேற்றி உருவம் கொடுத்ததில் விஸ்வரூபமாக வளரந்துள்ளது"

DTH ஒளிபரப்பு - என்ன காரணம்?

மக்கள் மீதிருக்கும் நம்பிக்கை தான். தரமான பொருளுக்கு அவர்கள் சரியான விலை தரத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும் தான் இதற்கு அடிப்படை. மேலும் வாடிக்கையாளரை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது வணிகக் கட்டாயம் மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும் கூட.

இது ஒரு புது முயற்சியாக இருந்தாலும் கூட, இதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதா? குறிப்பாக ரிபீட் ஆடியன்ஸ் எண்ணிக்கை குறைந்து விடுமே?

அது ஏற்கனவே குறைந்து விட்டது - தொலைக்காட்சிக்கு முக்கிய பங்கு உண்டு அதில். இதையும் நான் தொலைக்காட்சி வருவதற்கு முன்னரே தெரிவித்தேன். அப்பொழுதும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார்கள். DTH விவகாரத்தில் உண்மை தெரிந்த திரையரங்கு உரிமையாளர்கள் எனக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள். மற்றவர்களும் கூடிய விரைவில் உண்மையை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம். இந்த யுத்தி தோல்வியடைந்தால் ஒரு தயாரிப்பாளராக, கலைஞனாக அதிக பாதிப்புக்கு ஆளாகப் போகிறவன் நான் தான். நானே தைரியமாக இருக்கும்போது இவர்கள் பயப்படுவது வேடிக்கை.

எதிர்ப்பு இந்த அளவுக்கு இருக்குமென்று எதிர்பார்த்தீர்களா?

கண்டிப்பாக. எந்தவொரு புதிய விஷயத்தையும் அது எனக்குப் புரியாதவரை நான் கட்டாயமாக எதிர்ப்பேன். ஏனென்றால் புதிய விஷயத்திற்காக நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் சொல்வார்களே "comfort zone" அந்த சொகுசு மண்டலத்தை விட்டு வெளியே வர வேண்டியிருக்கிறது. நான் அடிக்கடி என் சௌகர்யத்தை விட்டு வெளியே வந்திருக்கிறேன். வர இயலாதவர்களுக்கு உதவியும் வருகிறேன்.

இந்த DTH யுத்தி வெற்றி பெற்றால் அது எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நினைக்கிறீர்கள்?

நல்ல மாற்றங்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன். உதாரணத்திற்கு எல்லாப் பொருட்களும் கடைகளிலும் கிடைக்கின்றன. வலை தளம் மூலமாகவும் நீங்கள் வாங்க முடியும். அதற்காக எல்லாக் கடைக்காரர்களும் கடையை மூடிவிட்டார்களா என்ன? அது மாதிரி தான் இதுவும். இது ஒரு மாற்று. அவ்வளவு தான். திரையரங்குகள் இல்லாமல் கிடப்பில் இருக்கும் பல நல்ல திரைப்படங்களுக்கு இது ஒரு வடிகாலாக இருக்க வாய்ப்பு உள்ளது.



"ஆரம்பத்துல நிறைய தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தை எடுக்க முன் வந்தாங்க, ஆனா நீங்களே ஏன் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினீங்க?"

"அவர்களின் நலம் கருதித் தான் (இருவரும் சிரிக்கின்றனர்). இதற்கு நான் திரைக்கதை எழுத எழுத இதற்கான முதலீடு அதிகரித்த வண்ணம் இருந்தது. அடுத்தவர் முதுகில் ஏன் வீண்சுமையை ஏற்ற வேண்டும் என்றெண்ணி நானே சுமக்க முடிவு செய்தேன்."

"ஹீரோ, தயாரிப்பாளர், திரைக்கைதையாசிரியர், இயக்குனர் - உங்களுக்கு இது புதுசில்ல, இருந்தாலும் இப்படி ஒரு பெரிய படம் பண்ணும்போது நிறைய சிக்கல்கள் வந்திருக்கணுமே?"

"நல்ல வேளை மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டர் எதுவும் ஆகலை. அதற்கு நாசர் மாதிரி தன்னலம் கருதாத நண்பர்களும் ஒரு காரணம். படத்தை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் என்னை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன். இந்த யானை ஒழுங்காக வந்திருக்கிறதென்றால் அவர்களின் அங்குசத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது"

"இந்த படத்தோட முதல் போஸ்டர் வெளியனதிலிருந்தே கதையைப் பத்தின ஏகப்பட்ட ஊகங்கள் மக்கள் மனசில வந்திடுச்சு. குறிப்பா டைட்டில் இஸ்லாமிய ஸ்டைலில் எழுதப்பட்டிருக்கு, பின்னணியில அமெரிக்கா, நடுவே ஒரு வெள்ளைப் புறா - இது ஏதோ உலகத் தீவிரவாதம் பற்றிய படம்னு நிறைய பேர் ஆளாளுக்கு ஒரு கதை ரெடி பண்ணிட்டாங்க"

"ஏன் சார், இது ஒசாமாவின் வாழ்க்கை வரலாறா?" அப்படின்னு கூட என்கிட்டே ஒருத்தர் கேட்டார். ஆமாம்னு சொன்னேன். இன்னொருத்தர் இது தசாவதாரத்தின் தொடர்ச்சியான்னு கேட்டார். அவருக்கும் ஆமாம்னு தான் சொன்னேன். இன்னும் சில பேர் என்னிடம் முழு கதையே சொன்னார்கள். , இப்படிக் கூட எடுத்திருக்கலாமோன்னு எனக்கே கூட சில சமயம் தோணிச்சு (சிரிக்கிறார்). என்னைக் கேட்டால், இது உங்கள் வரலாறு, என் வரலாறு, ஏன், நம் எல்லோரின் வரலாறுன்னு சொல்வேன்"

"படத்தோட பெரும்பகுதி அமெரிக்காவில் எடுத்திருக்கீங்க, அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்"

"ஷூட்டிங் நடத்துறதுல அவ்வளவு சிரமம் இல்லை - தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்லியாக வேண்டும். நடிகர்களுக்குத் தான் சிரமம். ஏன்னா இது இரட்டை மொழிப் படம். அவர்கள் மாறி மாறி வசனம் பேசணும். உடைகள், பாவனைகளில் கொஞ்சம் மாற்றம் இருக்கும். அதற்கேற்றாற்போல் நடிக்க வேண்டும். நான் ஏதோ தமிழ்ல எடுத்துட்டு அதை ஹிந்தியில டப் பண்ணியிருக்கிறதா நிறைய பேர் நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஒவ்வொரு காட்சியும் தமிழிலும் பிறகு ஹிந்தியிலும் மாறி மாறி எடுக்கப்பட்டிருக்கு. சுருங்கச் சொன்னால் ஒரே நேரத்தில் இரண்டு படம் எடுத்திருக்கிறோம்.




"அதே மாதிரி ஹீரோயினுக்காகவும் நீங்க ரொம்ப அலைந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்திச்சே?"

"இப்படி மொட்டையா அலைந்தேன்னு சொல்லாதீங்க. அதுக்கு வேற அர்த்தம் ஆயிடும். கதைக்கேற்ற ஆட்கள் அமைவது மிகச் சிரமம். உடல்வாகும் இருக்கணும். கொஞ்சம் நடிக்கவும் செய்யணும். இருமொழிப் படம்கறதால இரண்டு தரப்பினருக்கும் பொதுவான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய முகம் தேவை."

"ஆனால் இந்த மாதிரி இரு மொழிப் படங்களில் தமிழ்த் தன்மை பரவலா அடிபட்டுப் போவுது. அதாவது ஒரு அந்நியத் தன்மை, டப்பிங் படம் பார்க்கற மாதிரி ஒரு உணர்வு வருதே?"

"அதுக்குத் தான் வெளிநாட்டில ஷூட்டிங் நடத்தியிருக்கோம். ஒரு பெரிய பட்ஜெட் படம் பண்ணும்போது பல மொழிகளில் அதை விற்க வேண்டியிருக்கு. அதற்கு ஒரு பொதுவான கதைக்களம் மிகவும் அவசியம்"

"நீங்கள் சொல்வது வணிகத்திற்கு சரி. ஆனால் இது தமிழ்ப்படம் என்கிற அடையாளம் தொலைகிறதே?"

"இன்றைய தலைமுறை மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு தலைமுறை. ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளும் அல்லது நிராகரிக்கும் வேகம் மிகவும் அபரிமிதமாக இருக்கிறது. நாம் அவர்களை நோக்கித் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. எல்லா இடத்திலும் ஆங்கிலத்தை வளர விட்டுவிட்டு சினிமாவில் மட்டும் தமிழ் வாழ்கன்னு கொடி பிடிப்பது என்னைப் பொறுத்தவரை அபத்தமான செயல். இது நண்பர் ரஜினியிடமிருந்து நான் கற்ற பாடம். எல்லோரும் வழக்கமான ஆக்ஷன் பார்முலாவில் இருக்கும்போது அவர் எந்திரன் மூலமாக அடுத்த கட்டத்துக்கு போய்விட்டார்.




"நீங்க எந்த ஒரு படம் பண்ணினாலும் இந்த ஆராய்ச்சி கட்டாயம் இடம்பெறும் - இது இந்தப் படத்தின் தழுவல், அந்த ஆங்கிலப்படத்தின் காபி..."

"இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே சொன்ன பதிலைத் தான் மறுபடியும் சொல்லணும். வால்மிகியைத் தழுவித் தான் கம்பர் ராமாயணம் எழுதினார். ஆனால் அவருக்கு விழா எடுக்கறோம். எனக்கு விழா எடுங்கன்னு சொல்லலை, பரிசீலியுங்கள்னு கேட்டுக்கறேன். எத்தனையோ தமிழ்ப் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. அதில் பெரும்பாலானவை மாபெரும் வெற்றிப் படங்கள். கலைஞர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் சகஜம். ஒரு ஆங்கிலப்படத்தை டப் செய்து பார்ப்பதற்கும் அதே கதையை உங்கள் மொழியில் நேரடியாகப் பார்ப்பதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது. நான் ரசித்தவற்றை, நேசித்தவற்றை என் மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவ்வளவு தான். ஒரு வேளை கலைஞானி என்றால் எல்லாவற்றையும் சுயமாகத் தான் சிந்திக்க வேண்டும், செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்களோ என்னவோ!

"அதே மாதிரி உங்கள் படத்திற்கு யாரவது ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பதும், தடை செய்யக் கோரி வழக்குப் போடுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இது ஏன்?"

"காய்த்த மரம் தான் கல்லடி படும் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அது ஏதோ படத்தை விற்பதற்கான விளம்பர யுத்தி என மக்கள் கருதுகின்றனர். இந்தப் படத்திற்குக்கூட ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் ஏதோ இஸ்லாமியர்களையும் அவர்களின் இறை நம்பிக்கையையும் இழிவுபடுத்துவதாகக் கூறி இந்தப் படத்திற்குத் தடைவிதிக்கக் கோரியிருந்தனர். பிறகு அவர்களுக்கு முழுப் படத்தையும் போட்டுக் காட்டிய பிறகு அவர்களுக்கு உண்மை விளங்கிற்று."



" இப்போ இந்தப் படத்தை விட்டு கொஞ்சம் வெளியே வருவோம், இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறதுன்னு நினைக்கறீங்க?"

வழக்கம்போல நல்லாருக்கு. கொஞ்சம் வணிகச் சிக்கல் அதிகமாயிருக்கு. நல்ல கதைக்கும் கதைக்களத்திற்கும் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது வளர்ச்சியின் அறிகுறி. ஆனால் அதே சமயம் புற்றீசல் போல வாரத்துக்கு 7 -8 படங்கள் வெளி வருவது கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

"வணிகச் சிக்கல்னு சொன்னீங்க, அதை கொஞ்சம் விளக்க முடியுமா?"

சினிமா மட்டுமே பொழுதுபோக்கு என்றிருந்த காலம் மலையேறி விட்டது. ஒரு ரசிகனுக்கு திரைப்படத்தைப் பார்க்க ஆகும் செலவு அதிகரித்து விட்டது. என்னுடைய இருநூறு ரூபாய்க்கு இந்தப் படம் தகுதியானதான்னு ஒரு தடவைக்கு பத்து தடவை யோசிக்கிறான். ஏனெனில் அவன் அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரித்து விட்டது. இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்த்தால் போதும், இந்தப் படத்தில் கிராபிக் காட்சிகள் நிறைய இருக்கு, இதை தியேட்டரில் போய் பார்க்கணும் என்று படங்களை அவர்கள் தரம் பிரித்து வைத்து விடுகிறார்கள். ரசிகனுக்கு சினிமா மேல் மோகம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. ஆனால் அதை அவன் பார்க்கும் முறை மாறிவிட்டது. மேலும் கலைஞர்கள், தொழிலாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று வழக்கமான எங்கள் குடும்ப சண்டைகளும் சிக்கலை இன்னும் சிக்கலாக்கி விட்டன.






உங்களைப் பற்றிய ஒரு கேள்வி, கமல் என்கிற எழுத்தாளர், கவிஞர் எப்படி இருக்கிறார்?"

"அவர் எந்தக் கவலையும் இல்லாமல் வழக்கம் போல் தானுண்டு தன் கிறுக்கல்களுண்டு என்று சுகமாக இருக்கிறார். இப்பொழுது கூடுதலாக வலைதளத்தின் மூலமாக ரசிகர்களின் நேரடித் தொடர்பிலும் இருக்கிறார்"

"வலை தளம்னு சொன்னவுடன் ஞாபகம் வருது. வட இந்திய நடிகர்கள் சமூக வலை தளங்களில் பிரபலமடைந்த அளவுக்கு நம்மூர் நடிகர்கள் ஆகவில்லையே?"

"அவர்களின் வியாபார சந்தை பெரியது, போட்டி நிறைந்தது. எந்நேரமும் ரசிகனுடன் தொடர்பிலிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நமது தமிழ் சினிமாவின் வியாபார சந்தை இபோழுது தான் வளர்ந்து வருகிறது. வட்டம் பெரிதாக ஆகும்போது இங்குள்ளவர்களும் வலைதளத்தை நோக்கிச் செல்வர். ஆனால் இன்றைய இளைய நடிகர்கள் அனைவரும் வலை தளத்தில் இருக்கின்றனர். ஏனெனில் அவர்களிடையே கடும் போட்டி இருக்கிறது."


"இவ்ளோ நேரம் எங்களுடன் உங்கள் புதிய படத்தைப் பற்றியும், உங்களைப் பற்றியும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கடைசியா ரசிகர்களுக்கு எதாவது சொல்ல விரும்பறீங்களா?"

இந்தப் படத்தை நீங்க பார்க்கலேன்னாலும் பரவால்ல, தயவு செய்து திருட்டு விசிடியில பார்த்துட்டு படத்தை பாராட்டாதீங்கன்னு கேட்டுக்கறேன். பல திரையரங்குகள் திருமண மண்டபமானதில் இதற்குப் பெரும் பங்குண்டு. திருட்டு விசிடியை வாங்கி திருடர்களை ஊக்கப்படுத்தாதீர்கள். எங்களுக்குத் தான் உங்கள் ஊக்கம் தேவை. இல்லையேல் நசிந்து போன பல நாட்டுப் புற கலைகளின் வரிசையில் சினிமாவும் சேர்ந்து விடும். தயவு செய்து சினிமாவைக் காப்பாற்றுங்கள். நன்றி.














No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...