Tuesday, February 19, 2013

அப்பாவின் பிரசவ வேதனை!!

பொதுவா நம்ம ஊர்ல பிரசவம்னா அது பெண்களுக்கு மறுபிறப்பு, உயிர் போய் உயிர் வர்ற விஷயம், மறுஜென்மம், அது இதுன்னு ஏகப்பட்ட பில்ட் அப் குடுக்கறாங்க. அதெல்லாம் உண்மை தான், மறுக்க முடியாது. ஆனால் இந்த ஒட்டு மொத்த மேட்டர்ல அப்பாவை சுத்தமா மறந்துடறாங்க. அப்பா அல்லது கணவன்னா லேபர் ரூம் வாசலில் குறுக்கும் நெடுக்கும் அலையும் ஒரு கேரக்டராத் தான் காலங்காலமா காட்டிக்கிட்டு வர்றாங்க. ஆனா அந்த ஆள் எங்கெங்கே எப்படி எப்படி அடி வாங்கறாங்கன்னு யாரும் சொல்றதில்ல. அதுக்குத் தான் இந்த போஸ்ட்:

பொதுவா ஹாஸ்பிடல் உள்ளே நுழையும்போதே வசூல் ராஜா படம் ஞாபகத்துக்கு வராம இருக்காது (அரசாங்க மருத்துவமனை கேசே தனி, அதனால் அதை இங்கே சேர்க்கவில்லை). அதுலயும் குறிப்பா "நானே வசூல், இவனுங்க எனக்கு மேல வசூல்" - உள்ள போய் வெளிய வர்ற வரைக்கும் நம்ம நாடி நரம்பெல்லாம் ஓடி நம்மள ஒரு திகிலோடவே வைக்கிற டயலாக் இது.

நுழைஞ்ச உடனே ஒரு 10000 அல்லது 50000 (ஆஸ்பத்திரிக்கு ஏத்த மாதிரி) புடிங்கிக்குவான். அதான் இன்சுரன்ஸ் இருக்கே, இது எதுக்குடான்னு கேட்டா இன்சூரன்ஸ் வரும்போது அதுல அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்னு சொல்லுவான் (கந்து வட்டிக்காரன் கூட நாளைக்குத் தரேன்னு சொன்னா ஒத்துக்குவான், ஆனா இவனுங்க... ஹூஹும்)

அப்புறம் முக்கியமான பேப்பர்களை எல்லாம் இன்சுரன்ஸ் கிட்ட குடுக்கணும். அப்பப்போ அவனை பாலோ பண்ணணும். இல்லேன்னா நம்ம கேசை மறந்துடுவான். நாம மனசில பெரிய நுகர்வோர்னு நினைச்சுக்கிட்டு கொஞ்சம் சவுண்டு விட்டா அவ்ளோ தான், பேப்பரை தொலைச்சுடுவான். அப்படியே இவன் பேப்பரை அனுப்பிச்சாலும் நம்ம ஆபிஸ்ல பேசி அவங்களையும் ஒரு போன் போடச்சொல்லணும். அங்கேர்ந்து ஓகே வர்ற வரைக்கும் நம்ம ஹார்ட் பீட் எகிறிக்கிட்டே இருக்கும்.

அது என்னமோ, என்ன மாயமோ தெரியல, நீங்க இரண்டு லட்ச ரூபாய்க்கு இன்சுரன்ஸ் வெச்சிருந்தாலும் மேற்கொண்டு ஒரு 5 ஆயிரமாச்சும் கேஷா கட்ட வைக்காம விடமாட்டாங்க. (எந்த கம்பெனி இவங்களுக்கு Billing ப்ரோக்ராம் / சாப்ட்வேர் எழுதித்தருதுன்னு தெரிஞ்சுக்கணும்)

இப்படி இந்த க்ரூப் நம்ம பர்சை பதம் பார்க்கும்போதே டாக்டர் நம்மளை அர்ஜெண்டா வாங்கன்னு கூப்பிட்டு கலவரம் பண்ணுவான். தொப்புள் கொடி குழந்தை கழுத்தை சுத்திக்கிச்சு, தொப்புள் கொடி மாலையா இருக்கு (அப்படி இருந்தா குழந்தையோட மாமன் மண்டையைப் போட்டுடுவானாம் - இது கூடுதல் தகவல்), கர்ப்பப்பையில் ஆய் போயிடுச்சு, அதனால ஆபரேஷன் பண்ணணும், இல்லேன்னா என்ன வேணா ஆகலாம்னு பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு டர்ரை கிளப்புவான். நாம என்ன டாக்டருக்கா படிச்சிருக்கோம்? அவன் சொல்றதை நம்பி வேற வழியில்லாம ஒத்துக்குவோம். மேட்டர் என்னன்னா நார்மல் டெலிவெரிக்கு வலி வரணும். அதுக்கு 6-7 மணி நேரம் கூட ஆகலாம். அதுமட்டுமில்லாம வெறும் 15-20 ஆயிரம் தான் சார்ஜ் பண்ண முடியும். இதே கட்டிங்னா (அதாங்க, சிசேரியன்) அந்த நேரத்தில 2 ஆபரேஷன் பண்ணி 80 ஆயிரம் வரைக்கும் பில் போட முடியுமே?

ஆபரேஷன் நடக்கும்போது வார்ட் பாய் திடீர்னு எமெர்ஜென்சி வார்டுக்குப் போயிடுவான். மருந்து வாங்க ஆளிருக்காது. நர்ஸ் நம்மளை மருந்து வாங்கியாரச் சொல்லி விரட்டும் (அந்த ஓமனக்குட்டியை நிம்மதியா சைட் கூட அடிக்க முடியாது, அந்த அளவுக்கு டென்ஷன் பண்ணிடுவாங்க).

குழந்தை பிறந்த உடனே நம்ம கிட்ட ஏதோ சாம்பிள் காட்டற மாதிரி காட்டிட்டு திருப்பியும் உள்ளே எடுத்துக்கிட்டு போயிடுவாங்க.

இந்த இடத்தில் தான் உங்க செல்போன் கவரேஜ் லட்சணம் உங்களுக்குத் தெரிய வரும். காரிடார்ல பேசினா எதிரொலிக்கும்னு நீங்க சைடுல அல்லது ஸ்டெப்ஸ்ல போய் பேசுவீங்க. அங்க சுத்தமா சிக்னல் இருக்காது. எல்லாருக்கும் நல்ல செய்தியை மெசேஜ் பண்ணி முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். சில பேர் ஹை-டெக்கா போட்டோ எடுத்து வெப்சைட்ல போடறதும் உண்டு.

ஆபரேஷன் எல்லாம் முடிஞ்சு 5-6 மணி நேரம் ஆகியிருக்கும். ஆனாலும் எப்போ வார்டுக்கு மாத்துவாங்கன்னு சொல்லவே மாட்டாங்க.எதாச்சும் சாக்கு போக்கு சொல்லி முடிஞ்ச வரைக்கும் மீட்டர் போட்டுடுவாங்க.

அந்த மருத்துவமனையில் இருக்கறதிலேயே குறைந்த வாடகை உள்ள ரூம் எப்பவுமே புல்லாத்தான் இருக்கும். கிடைக்கவே கிடைக்காது. இல்லேன்னா ஜெனரல் வார்டில் தான் படுக்கணும். அங்க பேஷன்ட் கூட இருக்கறவங்க வராண்டாவிலோ அல்லது தெருவிலேயோ தான் படுக்கணும். டீலக்ஸ், சூட், ட்வின் ஷேரிங் அப்படின்னு சோலா ஷெராட்டன் ரேஞ்சுக்கு லிஸ்ட் வெச்சிருப்பான். பேசாம லீ மெரிடியன்லயெ டாக்டரைக் கூப்பிட்டு பிரசவம் பார்த்திருக்கலாமோன்னு கூட உங்களுக்குத் தோணும்.

யாரை வேணும்னாலும் முறைக்கலாம், குழந்தைகள் நர்சரி ஆயாவை மட்டும் பகைச்சுக்கக் கூடாது. கடுப்புல குழந்தையை மாத்தி வைச்சாலோ இல்லை நம்பர் ப்ளேட் மாத்திப் போட்டுட்டாலோ அவ்ளோ தான், நம்ம ஒரிஜினல் வாரிசு நமக்கு ஜென்மத்துக்கும் கிடைக்காது. நம்ம குழந்தைக்கு அது ஒழுங்கா பால் குடுக்குதான்னு வேற ரெகுலரா கவனிக்கணும - ஐ மீன் அந்த ஆயாவை நல்ல படியா "கவனிக்கணும்"

அப்புறம் விஷயம் கேள்விப்பட்டு நண்பர்கள் உறவினர்கள்னு அங்க ஒரு பெரிய படையெடுப்பே நடக்கும். எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி ஜான்சன் கிப்ட் பேக் வாங்கிட்டு வந்து ஒரு கடை வைக்கற அளவுக்கு ரூமை ரொப்பிடுவாங்க. போதாக்குறைக்கு நம்ம கிட்ட காசு வாங்கிட்டு இவனுங்க சரக்கடிச்சிட்டு ஜாலியா இருப்பானுங்க. இரண்டு நாளா தூங்காம இருக்கானே, ஒரு கட்டிங் போடறியா மாப்ளேன்னு மரியாதைக்குக் கூட கேட்க மாட்டானுங்க. அப்படியே தண்ணியடிக்கப் போறவனுங்க சும்மாவா போவானுங்க? "மச்சான், இனிமே அவ்ளோ தாண்டா, உன் யூத் வாழ்க்கை பினிஷ்" அப்படிங்கற மாதிரி ஒரு துக்கப் பார்வையை வேற வீசிட்டுப் போவானுங்க.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சு டாக்டர் வீட்டுக்குப் போகலாம்னு சொல்லும்போது குஷியா இருக்கும். ஆனா டிஸ்சார்ஜ் ரிபோர்ட் முதற்கொண்டு எல்லா பேப்பர்களையும் அவங்க கிட்டேர்ந்து வாங்கறதுக்குள்ள நாம ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகற நிலைமைக்கு ஆளாகிடுவோம்.

அப்புறம் பக்கத்து பிளாட் ஆளுங்க, சொசைட்டி கூர்க்கா, வாட்ச்மேன், வீட்டு வேலைக்காரங்க எல்லோருக்கும் இனிப்பு / இனாம் கண்டிப்பா குடுக்கணும். இல்லேன்னா "என்கிட்டே சொல்லவே இல்லையே?" அப்படின்னு ஒரு பிட்டை போட்டு நம்மள பின்னாளில் தாக்கிடுவாங்க.

இது போக கார்பரேஷன்லேர்ந்து பிறப்புச் சான்றிதழ் வாங்கறது தனி எபிசோடு. அவங்க நம்ம கிட்ட லஞ்சத்தையும் வாங்கிக்கிட்டு நம்ம வீட்டு அட்ரஸ்ஸை திருநங்கைகள் கிட்ட குடுத்து நம்மகிட்டேர்ந்து இனாம் வாங்கிக்கச் சொல்லுவாங்க. அது சரி, எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ண மாட்டோமா? உச்ச கட்ட கொடுமை என்னன்னா நாம அவங்களுக்குக் குடுக்கற இனாம்ல கூட அந்த பெரிய மனுஷனுங்க கமிஷன் அடிப்பாங்க.

என்னடா, ஒரே எதிர்மறையா இருக்கேன்னு பார்க்கறீங்களா? இவ்வளவு களேபரத்துக்கு நடுவிலும் நீங்கள், உங்கள் மனைவி மற்றும் குழந்தை மட்டும் இருக்கற மாதிரி ஒரு 5 நிமிஷம் கிடைக்கும். நீங்க குழந்தையைப் பார்ப்பீங்க. ஆனால் உங்கள் மனைவி உங்களை மட்டும் தான் பார்ப்பாங்க. அந்த பார்வையில் "ஏன்யா, நாலு நாளா ரொம்ப அல்லல் பட்டுட்டியா?" அப்படின்னு கருணை தொனிக்கும். அப்புறம் முத்தாய்ப்பாக உங்களை ஒரு பார்வையாலும் குழந்தையை மறு பார்வையாலும் பார்த்து முகத்தில் காதலும் வெட்கமும் கலந்து ஒரு புன்முறுவல் பூப்பாங்க பாருங்க - அட இதென்னங்க ஜுஜூபி, இன்னும் 16 பிரசவத்தை எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்குள் பிறக்கும்.

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...