தசாவதாரத்தில் விஷக்கிருமியைத் தேடி இந்தியா வந்த கமல், இதில் நியூக்ளியர் நச்சுப் பொருளைத் தேடி அமெரிக்கா செல்கிறார்.
மீண்டும் ஒரு முறை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளையும் அதன் விளைவுகளையும் கையாண்டிருக்கிறார் கமலஹாசன்.
கமலைத் தவிர வேறு யார் இந்தப் படத்தை செய்திருந்தாலும் அது காமெடியாகி இருக்கக் கூடும்.
நியாயப்படி அமெரிக்காவில் இந்தப் படம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்காவைத் தாக்கும் வசனங்களும் காட்சிகளும் இருக்கின்றன.
இதைத் தமிழ்ப் படம் என்று சொல்வது தவறு. ஏனென்றால் ஆங்கிலப் படத்தில் ஆங்காங்கே வேறு மொழி வசனங்கள் வருவது போல் இதில் தமிழும் , ஹிந்தியும், அராபிக்கும் வருகின்றன.
கதையில் பெரிய வித்யாசம் இல்லையென்றாலும் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணியும் கதைக்களமும் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத ஒன்று.
எந்நேரமும் மரணபயத்தில் இருக்கும் ஆப்கானிய மற்றும் தாலிபான்களின் தற்கால வாழ்க்கை மிகவும் அற்புதமாக படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன.
அமெரிக்க மற்றும் தாலிபான்களுக்கு இடையேயான பிரச்சினையின் ஆணி வேர் வரை செல்லாமல் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இன்னும் விரிவாகக் காட்டியிருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
கமலின் "மனிதாபிமானி" இமேஜ் எல்லோரும் அறிந்த ஒன்று என்பதால் அவரை தீவிரவாதியாக ஏற்க நம் மனம் மறுக்கிறது. போதாதென்று அவரும் ஏதோ தாலிபான் பற்றிய டாகுமெண்டரி எடுக்க வந்தவர் போல் ஒரு பிரயாணியாக கதையை விட்டு விலகியே வருகிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு "நடிகர்" கமலை நாட்டியக் கலைஞர் கதாபாத்திரத்தில் காண முடிகிறது.
நாட்டியக்கலைஞர் "பன்ச்" பாலாவாக ரைஸ் ஆகும் இடத்தில் பின்னணி இசை கன கச்சிதம். தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்டுவது எரிச்சலைத் தருகிறது. அது காட்சியின் வேகத்தையும் கதையின் வேகத்தையும் குறைக்கிறது.
வழக்கமாக இந்திய சினிமாவில் காட்டப்படும் படாடோப அமெரிக்காவிற்குப் பதிலாக அதன் அடிமட்டப் பகுதியைக் காட்டியிருப்பது ரசிகர்களுக்குப் புதுசு.
இரண்டு ஹீரோயின்கள் என்று சொல்வதை விட இரண்டு பெண் கதாபாத்திரங்கள் படத்தில் வருகின்றனர். இதுவும் தமிழ் சினிமாவுக்குப் புதுசு.
கமல் சாருக்கு ஒரு வேண்டுகோள்:
90 கோடி செலவு செய்து தாலிபான்களைப் பற்றி படம் எடுத்துவிட்டீர்கள். இனியும் தயக்கம் ஏன்? உங்கள் நீண்ட நாள் கனவான மருதநாயகத்தை தயவு செய்து எடுங்கள். அல்லது பொன்னியின் செல்வனையோ சிவகாமியின் சபதத்தையோ முயற்சி செய்யுங்கள். தமிழனுக்கு அவன் வரலாற்றைக் காட்டுங்கள். அதை உங்களால் மட்டும் தான் நேர்த்தியாக, நியாயமாக செய்ய முடியும்.
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment