Saturday, September 28, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 15

பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும் - இது பழமொழி. ஆனால் பிரீமியர் லீகில் தொடர்புடையவர்கள்  அந்தப் பணத்துக்காக பாதாளம் வரை பாயத் தயாராக இருந்தார்கள். முதல் போட்டி தந்த பணம், புகழ், கவர்ச்சி, விளம்பரம் அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. இந்திய ரசிகனின் கிரிக்கெட் வெறியும், கிரிக்கெட் மீது அவன் கொண்டிருந்த / கொண்டுள்ள காதலும் மோகமும் பண முதலைகளை மேலும் சம்பாதிக்கத் தூண்டின. முடிந்தவரை எல்லா போட்டிகளையும் "த்ரில்" வெற்றியாக்கி ரசிகர்களின் ரத்தத்தைச் சூடேற்றினர்.

பணம் வந்தாலே மனிதன் மாறிவிடுவான். இதில் புகழும் சேர்ந்து வந்தால் கேட்கவா வேண்டும்?

உளவு பார்க்க வந்த லாஜ்வந்தி மொஹிந்தருடன் ஏற்பட்ட கிசுகிசுவையும் ரகுவின் சினிமாத் தொடர்புகளையும் பயன்படுத்தி இரண்டு திரைப்படங்களில் கதாநாயகி வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுதெல்லாம்  ராத்தோரின் தொலைபேசி அழைப்புகளை அவள் சட்டை செய்வதே இல்லை.

முன்னாள் தலைவர் நல்லகண்ணு தன் மீது போட்ட நன்னடத்தை வழக்கை தவிடுபொடி ஆக்கியதோடு மட்டுமல்லாமல் வாரியத்தின் செயலாளர் பதவிக்கும் முன்னேறினார் பத்மநாபன்.

10-12 வருடங்களுக்கு முன்னால் நல்லகண்ணுவின் மகளுக்கு பத்மநாபனின் மகனை திருமணம் செய்து வைப்பதாய் முடிவு செய்திருந்த நிலையில் அதை கடைசி நேரத்தில் தடை செய்தார் பத்மநாபன். அந்த அதிர்ச்சியில் நல்லகண்ணுவின் மகள் பக்கவாதத்தில் விழுந்துவிட்டாள். இன்னமும் எழுந்த பாடில்லை. தன் மகள் வாழ்க்கையை நாசம் செய்த பத்மநாபனின் நிம்மதியை முடிநத அளவு குலைக்க வேண்டுமென்று சபதம் எடுத்துக் கொண்டார் நல்லகண்ணு. அதன் விளைவே அவர் மீதான தொடர் வழக்குகளும் கோர்ட் படி ஏறல்களும்.

தன் மகன் ஒரு ஓரினச் சேர்க்கை விரும்பி என்பதையும் அவன் தனது ஓரின நண்பனுடன் தாய்லாந்து சென்று போலீஸ் ரிமாண்ட் ஆனதையும் பத்மநாபனால் எப்படி பகிரங்கமாகச் சொல்ல முடியும்? நல்லகண்ணுவின் மகளைக் காப்பாற்ற வேண்டி அவர் எடுத்த முடிவால் அந்தப் பெண்ணிற்கு இப்படி ஆகிவிடும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சி இன்றும் அவருக்கு உண்டு.

கணவன் ரகு மீது சந்தேகம் இருந்தாலும் காதலன் ரகு தனக்கு துரோகம் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் வேலைகளைத் தொடர்ந்தாள் பாரு.

அணி எவ்வளவு கேவலமாக ஆடினாலும் அதை தன் சினிமா புகழ் மற்றும் விளம்பர செல்வாக்கின் மூலம் மறைத்து கல்லா கட்டினான் சாதிக். ஆனால் மும்பை குண்டு வெடிப்பிற்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களை தடை செய்ததில் சற்றே பாதிப்படைந்திருந்தான்.

பொதுத் தேர்தல் காரணமாக போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டதால் இரண்டாம் வருடப் போட்டிகள் தென்னாப்ப்ரிக்காவில்  நடந்தன.

உள்ளூர்ப் போட்டிகளில் ஊறுகாய் போட்டவர்களுக்கு வெளிநாட்டில் போட்டி நடந்தால் சொல்லியா தரவேண்டும்?

தனது அணி இறுதிப் போட்டி வரை வந்ததை நம்ப முடியாத செல்லையா பணத்தை பீராகவும் பீரை அழகிகளாகவும் செலவழித்தார்.

ஹர்கிரத்தும் ப்ரித்வியும் மைதானத்தில் விளையாடியதை விட படுக்கையறையில் பெண்களுடன் அதிகம் விளையாடினர் - 50 நாட்கள், 50 பெண்கள் என்ற கொள்கையோடு.

ப்ரித்வியின் லூட்டியாலும் பஞ்சாப் காவல் துறையுடன் ஏற்பட்ட தகராறாலும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர் ப்ரீத்தாவும் வடாலாவும்.

தான் வளர்ந்த மாநிலத்தில் சகல வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டான் மொஹிந்தர். பிரபல ஹிந்தி நடிகை அபிலாஷா போசுடன் தனக்கிருந்த நெருங்கிய தொடர்பு ராக்கிக்குத் தெரிய வந்ததால் மூன்றாமாண்டுப் போட்டி முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாய் உறுதி அளித்தான்.

உலகளாவிய போட்டிகள் தங்கள் மாநில மைதானத்திலும் நடத்த வேண்டுமென்ற பீகார் குழுவின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வந்தார் பத்மநாபன். "எல்லா பயலும் நாட்டுத் துப்பாக்கியோட சுத்தறான். எவனையாச்சும் போட்டுத் தள்ளிட்டா நாளைக்கு நாங்க தான் பதில் சொல்லணும்" என்பது அவர் வாதம். தலைவர் பத்மநாபன் பக்கம் இருந்ததால் பீகார் குழுவினரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் மொஹிந்தரின் மைதான முயற்சிகளுக்கு அவர் மறைமுக ஆதரவு அளித்து வந்தார். இதனால் பீகார் குழுவினர் பத்மநாபன் மீது ஜென்ம பகையுடன் கறுவிய வண்ணம் இருந்தனர்.

தொடர்ந்து இரண்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்தேறியதில் ஏகப்பட்ட தலைச்செருக்குடன் உலவ ஆரம்பித்தான் லலித். தான் வைத்ததே சட்டமென்று தறிகெட்டு அலைந்தான். தலைவர் உட்பட எவர் எது சொன்னாலும் "இது எனது குழந்தை, நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் பணத்தை மட்டும் எண்ணிக் கொள்ளுங்கள்" என்று கூறி எல்லோர் வாயையும் பணத்தால் அடைத்தான்.

தென்னாப்பிரிக்காவில் வெற்றி வாகை சூடினாலும் வரவு எட்டணா செலவு பத்தணா என்றிருந்ததால் "டைட்டானிக்"காக மாற ஆரம்பித்திருந்தார் ரெட்டி.

"சும்மா சொல்லக் கூடாது சார், இந்த வயசிலும் கும்முன்னு இருக்காங்க உங்க பொண்டாட்டி" என்று போதையில் யதார்த்தமாக மகேஷிடம் சொல்லப் போக ஏகத்துக்கும் உள்காயம் வாங்கிக் கட்டிக் கொண்டான் ஹர்கிரத். 

ஷாஜகான் தன் காதலிக்காக தாஜ் மஹால் கட்டினான். மலையாள மத்திய அமைச்சர் சசிதரன் தன் காதலிக்காக 1500 கோடிக்கு கேரளா கிரிக்கெட் அணியை உருவாக்கிக் கொடுத்தார். இதில் "சேட்டா" ஸ்ரீகாந்திற்கும் பங்கு உண்டு. 

மூன்றாம் ஆண்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் தலைவரும் பத்மநாபனும் லலித்தை அவசரக் கூட்டத்துக்காக அழைத்தனர்.



ஆட்டம் தொடரும்....

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...