Saturday, July 28, 2012

கிலிம்பிக்ஸ் - பகுதி 1






லண்டன் ஹீத்ரோ விமான நிலையம். விமானத்தின் கதவு திறந்தவுடன் முதல் ஆளாக கவுண்டர் வெளியே வருகிறார். வந்த வேகத்தில் மீண்டும் விமானத்தின் உள்ளே செல்கிறார்.

விமான பணிப்பெண், " என்ன சார் ஆச்சு?"

கவுண்டர், "அட போங்க அம்மணி, குளிர் காதைக் கிழிக்குது. இது ஆவுறதில்ல.ரிட்டர்ன்"

விமான பணிப்பெண், "சரி நீங்க கொஞ்சம் ஓரமா உட்காருங்க. மத்தவங்க இறங்கட்டும்"

"ஓகே," என்று சொல்லிவிட்டு ஓரமாக உட்காருகிறார். எல்லாரும் இறங்கிய பின் விமானத்தில் இவர் மட்டும். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "ஏங்க வைட் சிஸ்டர், என் கூட ஒரு ப்ளாக் பிக் வந்திச்சே, எங்கேங்க அது?"

"வ்ஹாட்?"

"அதாங்க, கறுப்பு பன்னி"

"ஒ, அவரா, அவர் இறங்கிப் போயிட்டாரே"

"என்னது போயிட்டானா?" என்று அலறி அடித்துக்கொண்டு இறங்குகிறார். கீழே இறங்கி அங்குமிங்கும் அலைகிறார். அப்பொழுது பின்னாலிருந்து ஒரு குரல் "அண்ணே, அண்ணண்ணே". கவுண்டர் திரும்பிப் பார்த்து, "டேய் நீயாடா? என்னடா இது வேஷம்?"

செந்தில் சிரித்துகொண்டே, "லண்டன்ல குளிர் ஜாஸ்தின்னு தெரியும், அதான் முன்னாடியே இந்த ஜாக்கெட், குல்லா எல்லாம் மாட்டிக்கிட்டு ரெடியாகிட்டேன். ஆமாம், நீங்க எதுவும் மாட்டிக்கல?"

கவுண்டர், "ஹெய்ஹே, நாங்கல்லாம் வீரன்ஸ், நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு சுத்தற தமிழன்ஸ்"

"ஒ, அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பயந்துக்கிட்டு ஓடி ஒளிஞ்சிங்களா?"

"படுவா, ரொம்ப பேசாதே, நேரமாகுது, வா ஹோடல்லுக்குப் போவோம்" என்று சொல்லிவிட்டு செந்திலின் குல்லாவை சரி செய்கிறார்.





"என்னண்ணே பண்றீங்க?"

"இப்படி மூஞ்சி முழுக்க குல்லாவால மூடியிருந்தீன்னா பார்க்கறவன் எல்லாம் லண்டன் ஜூலேர்ந்து கருங்குரங்கு ஒண்ணு தப்பிச்சு வந்திருச்சுன்னு நினைச்சிக்கப் போறாங்க. அப்புறம், கொஞ்சம் மனுஷன் மாதிரி பேசிக்கிட்டே வா, அப்போத்தான் நீ மனுஷன்னு எல்லாரும் நம்புவாங்க"

முறைத்துக்கொண்டே கவுண்டர் பின்னால் நடையைக் கட்டுகிறார் செந்தில்.

இருவரும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஒரு காபி ஷாப்பில் அமர்கின்றனர். அப்பொழுது கவுண்டர் தன் மொபைல் எதையோ தட்டிக் கொண்டு இருப்பதை கவனிக்கிறார் செந்தில்.

"ஐ, என்னண்ணே போன் இது, புதுசா இருக்கு?"

"ஆமாம், புதுசு தான், ஞானப்பழம்னு பேரு"

"உங்களுக்கு எப்பவுமே காமெடி தான். போனுக்குப் போய் ஞானப்பழம்னு யாராச்சும் பேர் வைப்பாங்களா?"

"ஏண்டா வைக்கக் கூடாது? ஆப்பிள், ப்ளாக்பெர்ரின்னு இங்கிலிஷ்ல பேரு வைச்சா மட்டும் விழுந்து விழுந்து வாங்கறீங்க? இதாண்டா, தமிழன் எது செஞ்சாலும் புடிக்காது"

ஏண்ணே, இங்க வந்து தமிழன், மலையாளின்னு அரசியல் பேசிக்கிட்டு?

" அடேய் வண்டுருட்டான் தலையா, இப்ப நாம பார்க்க வந்திருக்கோமே ஒலிம்பிக்ஸ், அதுவே ஒரு பெரிய உலக அரசியல் தாண்டா"

"கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே"

கவுண்டர் போனில் எதையோ தட்டி உற்றுப் பார்க்கிறார். பிறகு "அடேய், முன்னாடி இருந்த வெள்ளைக்கார ராஜாக்கள் எல்லாம் எந்நேரமும் கடவுள் பேரை சொல்லிக்கிட்டு சண்டை போட்டிக்கிட்டிருந்தாங்க. நடுவுல வந்த ஒண்ணு ரெண்டு நல்லவங்க, இந்த விளையாட்டு நடக்கும்போதாச்சும் யாரும் சண்டை போடாதீங்கன்னு சொல்லி ஆரம்பிச்சது தான் இந்த ஒலிம்பிக்ஸ்.

காபி வருகிறது. அதில் ஒரு வாய் குடித்து விட்டு மீண்டும் தொடர்கிறார்.

"இப்ப நடக்கற மாடர்ன் ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் சுமார் 115 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சது. கிரேக்கக் கடவுள்களை மையமா வெச்சு ஆரம்பிச்சதால கிரீஸ் நாட்டுக்கு இதுல எப்பவுமே ஒரு பாரம்பரிய சிறப்பு உண்டு"

"கடவுளா? அப்போ இதுவும் நம்ம ஊரு மாரியம்மன் கோவில் திருவிழா மாதிரியாண்ணே?"

கவுண்டர் கடுப்பாகி, "ஆமாம், கரகாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் ஆடுவாங்க. உன்னையெல்லாம் கூட்டிக்கிட்டு வந்தேன் பாரு" என்று சொல்லிவிட்டு மீண்டும் போனை பார்க்கிறார்.





செந்தில், "என்னண்ணே அடிக்கடி போனை பார்க்கறீங்க?"

"இல்லை, நமக்கு வேண்டிய பையன் ஒருத்தன் ஏர்போர்ட் வர்றேன்னு சொல்லியிருந்தான். அதான் பார்க்கறேன்"

"பையனா எதுக்கு?"

"இது..... நான் நல்லாத்தான் இங்க்லீஷ் பேசுவேன், ஆனா பாரு இந்த ஊரு சோன்பப்டி தலையன்களுக்கு அது புரியாது. அதுக்குத் தான் ஒரு படிச்ச பையனை உதவிக்கு வரச் சொல்லியிருந்தேன்"

செந்தில்,"அவன் வரும்போது வரட்டும், டிபன் தான் வாங்கித்தரமாட்டேன்னு சொல்லிட்டீங்க, இன்னொரு டீயும் பன்னும் சொல்லுங்க, பசிக்குது"

"டேய் இப்பத் தானேடா காபி குடிச்சே?"

"அதுண்ணே.."

கவுண்டர் இடைமறித்து, "வேண்டாம்பா, அப்புறம் அதிலயும் பால் தான் இதிலேயும் பால் தான்னு விஞ்ஞான விளக்கமெல்லாம் குடுப்பே, என்ன வேணுமோ குடிச்சுத் தொலைi"

செந்தில் ஆர்டர் சொல்லிவிட்டு "அது சரிண்ணே, ஒலிம்பிக் சின்னத்துல அது என்ன வளையம் வளையமா போட்டிருக்கு?

"அப்படிக் கேள், நம்ம வேர்ல்ட்ல மொத்தம் அஞ்சு கண்டம் இருக்கு. அதுல இருக்கற ஒவ்வொரு வளையமும் ஒவ்வொரு கண்டத்தைக் குறிக்குது."

"அப்படியாண்ணே," என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு டீயை உறிஞ்சுகிறார்.

கவுண்டர், "நல்ல வேளை, வளையம் போடும்போது எவனும் உன்னைப் பார்க்கல. இல்லேன்னா உனக்கும் ஒரு வளையம் போட்டிருப்பான்"

செந்தில் கடுப்பாகி, "அப்போ நான் கண்டமா?"

"பின்ன, தண்டமா?" என்று சொல்லவும் அவரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார். பிறகு செந்திலைப் பார்த்து, "டேய் நம்ம பையன் வெளிய வந்துட்டான். வா போகலாம்"

என்று செந்திலை எட்டி உதைக்காத குறையாக தள்ளிக் கொண்டு செல்கிறார். வெளியே நிற்பவரைப் பார்த்து கவுண்டர் அதிர்ச்சியடைகிறார்.

காரணம் நிற்பவர் நம்ம விவேக்.

"டேய் நீயாடா? நீ எப்படா இந்த வேலைக்கு வந்தே?"





விவேக்," ஹாய் ஹாய் ஹாய், வீட்ல எவ்ளோ நாள் தான் சும்மா இருக்கறது? சினிமாவை நம்பி அறக்கட்டளை வேற ஆரம்பிச்சிட்டேன். இப்போ சினிமா வாய்ப்பு சுத்தமா இல்லை, அதுக்காக அறம் செய்யாம இருக்க முடியுமா? அதான் இங்க எலிசபத் ராணியைப் பார்த்து டொனேஷன் வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன். அப்படியே ஒலிம்பிக் முடியற வரைக்கும் இந்த கைடு பிசினெஸ்ஸும் பண்றேன்.

செந்தில், "தம்பி தான் வரப் போவுதுன்னு எனக்கு முன்னாடியே தெரியும். உங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரலாமேன்னு தான் உங்க கிட்ட சொல்லலை"

கவுண்டர், "ஒ, சஸ்பென்ஸ் வைக்கிற அளவுக்கு பெரிய மனுஷனாகிட்டீங்களா?" என்று சொல்லிவிட்டு செந்திலை உதைக்க எத்தனிக்கிறார்.

விவேக், "ஹலோ, இது லண்டன், இங்க மிருகத்தை எவனாச்சும் பப்ளிக்கா அடிச்சாலே ஜெயில்ல போட்டுடுவாங்க. நீங்க ஒரு மனுஷனை அடிக்கறதைப் பார்த்தாங்க, இப்படியே இந்தியாவுக்கு திரும்பப் போக வேண்டியது தான்"

"அப்போ இங்க இருக்கற வரைக்கும் இவனை நான் அடிக்கவே முடியாதா? கடவுளே, என்ன ஒரு சோதனை" என்று வருத்தப்பட்டுக் கொண்டே காரில் ஏற முயற்சிக்கிறார். அப்பொழுது அங்கே மிகவும் அடி வாங்கிய நிலையில் ஒரு பாடி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். "ஏம்பா, என்னப்பா இது காருக்குள்ள ஒரு பிணம் கிடக்குது"

"பிணம் இல்லண்ணே, நானும் மனுஷன் தாண்ணே"

கவுண்டர், "இந்தக் குரலை நான் எங்கயோ கேட்டிருக்கேனே" என்று யோசிக்கிறார்.

"நான் தாண்ணே உங்க அன்புத் தம்பி வடிவேலு" என்று குரல் தழுதழுக்க காருக்குள் நிமிர்ந்து உட்கார முயற்சிக்கிறார்.

செந்தில்,"அடப்பாவி, உன்கேண்டா இந்த நிலைமை"

வடிவேலு, "எல்லாம் என் கேட்ட நேரம்ணே"

விவேக், "டேய், நீ தப்பு பண்ணிட்டு ஏண்டா நேரத்தை குற்றம் சொல்றே?"

கவுண்டர், "தப்பா? தம்பி அப்படியெல்லாம் பண்ண மாட்டானே?"

வடிவேலு, "அந்தக் கொடுமையை ஏண்ணே கேக்கறீங்க? துபாயிலிருந்தே டிக்கெட் எடுக்காம வந்தேன்னு ஒரு எடுபட்ட பய விளையாட்டா சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு நாமளும் டிக்கெட் இல்லாம லண்டன் வந்தா என்னன்னு ஒரு கெத்துல ஊர்லேர்ந்து கிளம்பிட்டேன். அங்க நம்மூர் ஆளுங்கள எப்படியோ சமாளிச்சு, ஏமாத்தி ப்ளைட்டும் ஏறிட்டேன். ஆனா இங்க வந்த உடனே லண்டன் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன். பாவிப் பயலுக, சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க.

அப்புறம் நம்ம விவேக் தம்பி தான் யார் யார் கிட்டயோ பேசி பைனைக் கட்டி வெளிய கொண்டாந்திச்சு.




விவேக், "யார் யார் கிட்டயோ பேசல. நம்ம சந்தானம் இங்க ஷூட்டிங்குக்காக வந்திருக்காப்ல.அவன் கிட்ட பேசித் தான் இந்த பாடிய வெளிய எடுக்க முடிஞ்சுது. நல்ல வேளை , கையில பாஸ்போர்ட் வெச்சிருந்தான், இல்லேன்னா  இந்நேரம்  அல் கைதா சிறப்பு ஜெயில்ல ரத்த வாந்தி எடுத்துக்கிட்டிருந்திருப்பான்"

வடிவேலு, "அப்படியாப்பா, ஆமாம், எங்க அந்த தம்பி?"

விவேக், "டியூட்டி ப்ரீ ஷாப்ல சரக்கு வாங்கப் போயிருக்கான், வந்துடுவான்" என்று சொல்லி முடிக்கவும் சந்தானம் காரின் அருகே வருகிறார்.

சந்தானம்,"என்ன பெரிசுங்க எல்லாம் மீட்டிங் போடறீங்க போலிருக்கு?"

கவுண்டர், "டேய், வந்தவுடனே உன் சரக்கு வேலையை ஆரம்பிச்சிட்டியா?"

சந்தானம், "இது எனக்கில்ல. என் நண்பர்களுக்கு. மனைவிக்காக மல்லிகைப் பூ வாங்கிட்டு வராத புருஷனும், பாரின் போய் சரக்கு வாங்கிக்கிட்டு வராத நண்பனும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்ல"

விவேக், "இந்த பன்ச் பாலா இருக்கும்போதே பன்ச்சா? சரி சரி, வண்டியை எடு"

கவுண்டர் ஷாக்காகி, "என்னது, இவனா வண்டி ஓட்டப் போறான்? நீ கைடு, இவன் டிரைவரா? இந்த வருஷம் ஒலிம்பிக்ஸ் பார்த்தா மாதிரி தான்" என்று சொல்லிக் கொண்டே காரின் உள்ளே நுழையவும் அவரை முந்திக் கொண்டு செந்தில் நுழைந்து அமர்கிறார். "ஐ, இது என் இடம்" 

கவுண்டர், "டேய் நீ இன்னும் மாறவே இல்லையாடா?" 

செந்தில், "மாறாம இருக்கறவன்தாண்ணே மனுஷன்" 

விவேக், "ஆஹா, ஆளாளுக்கு பன்ச் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களே," 

சந்தானம், "ஹேய் கன்ட்ரி மென், இது லேட்டஸ்ட் வண்டி, உங்களுக்கெல்லாம் ஓட்டத் தெரியாது. அதுவுமில்லாம நீங்க எல்லாம் என் சீனியர்ஸ், அதான் நானே வண்டி ஓட்டறேன்"

செந்தில், "சரி சரி, யார் வேணா வண்டிய ஓட்டுங்க, போற வழியில சாப்பாட்டுக்கு மட்டும் எதாச்சும் நல்ல முனியாண்டி விலாசாப் பார்த்து நிறுத்துங்க. பசிக்குது"

கவுண்டர், "அடிங்க... இது வயிறா இல்ல செப்டிக் டேங்கா? அதான் ப்ளைட்ல எனக்குக் குடுத்த சாப்பாட்டையும் சேர்த்து நீயே தானே சாப்பிட்டே மறுபடியும் பசிக்குதுன்னு சொல்றே"என்று ஆத்திரப்பட்டு அவரை உதைக்கப் போகிறார். அப்பொழுது நால்வரும் கோரசாக, "லண்டன்....பப்ளிக்...போலிஸ்..."

கவுண்டர், 'ஐயோ, இதை சொல்லியே என்னைக் கொல்றானே? இன்னும் ரெண்டு வாரம் எப்படித் தான் சமாளிக்கப் போறேனோ" என்று சோகமாக முகத்தில் துண்டைப் போட்டு மூடியபடி சீட்டில் சாய்கிறார். கார் பறக்கிறது.







தொடரும்.....


Jayaraman
New Delhi




















Saturday, July 21, 2012

டிஜிட்டல் பக்தி!!!




கோவிலுக்குப் போய் ரொம்ப நாளாச்சே என்றெண்ணிய குமார் தன் நண்பன் சுவாமிநாதனை அழைத்துக் கொண்டு சற்றுத் தொலைவிலிருந்த புகழ்பெற்ற கோவிலுக்குச் சென்றான். கோவிலுக்குச் சென்ற அவனுக்கு மகா ஆச்சர்யம். நாதனைப் பார்த்துக் கேட்டான், "என்ன மச்சி, கோவில் வாசலில் ஒரு கடை கண்ணி ஒண்ணுத்தையும் காணோம்?"

நாதன் நக்கலாக, "நீ கோவிலுக்கு வந்து பல வருஷம் ஆச்சு போலிருக்கு. அதான் லேட்டஸ்ட் நிலவரம் தெரியல. உள்ள வந்து பாரு" இருவரும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே நுழையும்போதே ஒரு செக்யூரிட்டி செக் வருகிறது.

குமார், "அடேங்கப்பா, இங்கேர்ந்தே சோதனையா?"

நாதன், "இது பாதுகாப்பு சோதனை இல்ல. டிரஸ் கோட் சோதனை"

குமார், "டிரஸ் கோட்?"

நாதன், "பின்ன, ஒரு பப்புக்குப் போறதா இருந்தாக் கூட டிரஸ் கோட் இருக்கு. அது படி போகலேன்னா வாசல்ல இருக்கறவன் உள்ள விடமாட்டான். அப்படி இருக்கும்போது கோவில் புனிதமான இடம். இங்க இருக்கக் கூடாதா?

குமார் நக்கலாக, "ஏம்பா, கோவிலும் பப்பும் ஒண்ணா? இது மனசு சம்பந்தப்பட்ட மேட்டர்."

நாதன், "அப்படியா? நாளைக்கு உன் ஆருயிர் நண்பன் ஒருத்தன் பார்ட்டி வெச்சிருக்கான்ல. அதுக்கு பஞ்சகச்சம் கட்டிக்கிட்டு போ"

குமார் "என்னப்பா நீ, அதெல்லாம் கட்டிக்கிட்டு பார்ட்டிக்கு எப்படிப்பா?"

நாதன், "முடியாதுல்ல, அது மாதிரி தான் இங்கயும். அதுக்குத் தான் உன்னை வரும்போதே வேஷ்டி கட்டிக்கிட்டு வரச் சொன்னேன், நட"



முதலில் ஒரு கவுண்டரில் வரிசையில் நின்றனர். குமார், "இங்க எதுக்குடா நிக்கறோம்?"

நாதன், "பொறுமையா இருடா"

இவர்கள் முறை வந்தது. கவுண்டரில் இருந்தவர் கேட்டார் "எவ்வளவுக்கு சார் கார்ட் வேணும்?'

"500 ரூபாய்க்கு குடுங்க" நாதன் கார்டை ஸ்வைப் செய்தவாறே கவுண்டரில் இருந்தவரிடம், "சைட் வேலை செய்யல போலிருக்கு. ஆன்லைன்ல பே பண்ணப் பார்த்தேன். ஆனா ஆகலை"

கவுண்டரில் இருந்தவர், "ஆமாம் சார், காலையில் இருந்தே Payment Gateway Connectivity சரியா இல்லை. அதான். என்ன போன் சார் வெச்சிருக்கீங்க? டச் ஸ்க்ரீன் தானே?"

"ஆமாம்"

"குடுங்க, அப்ளிகேஷனை டவுன்லோட் பண்ணிடறேன்"

குமார் ஆச்சர்யமாக "என்னடா நடக்குது இங்க?"

நாதன், "அது மச்சி, முன்னாடியெல்லாம் கோவிலுக்கு வர்றதா இருந்தா சில்லறையை வாரிக்கிட்டு வரணும். நோட்டாப் போடறதுக்கும் நமக்கு மனசு வராது. அதனால தான் இந்த கார்ட் சிஸ்டம். இப்ப பெரிய பெரிய Food Court போனா முன்னாடியே பணத்தைக் கட்டிட்டு அப்புறம் கடை கடையாப் போய் நமக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடறோம்ல, அது மாதிரி தான் இதுவும்"

கவுண்டரில் இருந்தவர், "உள்ள எங்க pay பண்றதா இருந்தாலும் அங்க இருக்கிற ரீடர் முன்னாடி இந்த அப்ளிகேஷனை காட்டினா போதும். பணம் டிடக்ட் ஆயிடும்" குமார் வாய் பிளந்தவாறே நாதனைத் தொடர்ந்தான்



நடைபாதையின் இருபுறமும் கடைகள் வரிசையாக இருந்தன. ஒரு கடைக்குள் நுழைகின்றனர். கடைக்காரர், "வாங்க சார் என்ன வேணும்?"

"ஒரு அர்ச்சனை, மாலை"

கடைக்காரர், "அர்ச்சனையில என்ன சார் டாப்பிங் வேணும்?"

குமார் திடுக்கிட்டு, "யோவ், பிசாவா ஆர்டர் பண்றோம்? டாப்பிங் பத்திப் பேசறே"

கடைக்காரார் சிரித்தவாறே, "சார் கோவில் பக்கம் ரொம்ப வருஷம் கழிச்சு வர்றாப் போல தெரியுதே?"

நாதன், "ஆமாங்க, வாழைப்பழத்துக்குப் பதிலா ஆப்பிள் போட்டுக்கோங்க. தேங்காய் வேண்டாம். எங்க வீட்ல எல்லாருக்கும் கொலஸ்டிரால். அதுக்குப் பதிலா இளநீர் குடுத்துடுங்க. விநாயகருக்கு மட்டும் ரெண்டு தேங்காய் வாங்கிக்கறேன். அதை நீங்க நேரா அன்னதானத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுங்க.

குமார் இடைமறித்து, "விநாயகருக்கு தேங்காய் விடல் போடணும்யா, நீ என்னடான்னா அன்னதானத்துக்கு அனுப்பச் சொல்றே?"

கடைக்காரர், "தேங்காயை உடைச்சா அதிலேர்ந்து சில்லு தெறிச்சு வெளிய விழுது. யார் காலிலாவது குத்தும். அது போக அதைப் பொறுக்கறதுக்கு ஒரு கூட்டம் முண்டியடிக்கும். இதெல்லாம் தேவையா? அதான் மாத்திட்டோம்.

கடைக்காரர் எல்லாவற்றையும் கணினியில் தட்டுகிறார்.

நாதன் ரீடர் முன்னால் போனைக் காட்டி பணம் செலுத்திவிட்டுப் புறப்பட்டான்.

குமார், "ஏம்பா, காசு குடுத்தியே, பொருள் வாங்கலை?"

கடைக்காரர், "ஸ்வைப் பண்ணும்போதே உங்க ஆர்டர் நம்பர் உள்ளே போயிடுச்சு சார். அங்க எல்லாம் தருவாங்க.."

நாதன், "ஆமாம்டா, போன்ல மெசேஜ் வந்திடுச்சு"

குமார், "யப்பா, டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்"



முதலில் விநாயகர் சன்னதி.

குமார், "நல்ல வேளை, இவரை எதுவும் மாத்தலை, அப்படியே தான் வெச்சிருக்காங்க."

இருவரும் விநாயகரை கும்பிட்டுவிட்டு நகர்கின்றனர். விநாயகர் சன்னதியில் இருந்த ரீடர் முன்பு செல்லைக் காட்டி ஐந்து ரூபாய் காணிக்கை செலுத்தினான்.

குமார், "ஓஹோ, உண்டியலுக்குப் பதிலா ரீடரா? கலக்கறீங்கப்பா. ஆமாம், எங்கப்பா விபூதி?"

நாதன், "ஒரே பாக்கெட் விபூதியை வேற வேற கிண்ணத்தில வெச்சு பிரசாதம்னு ஏமாத்தறீங்கன்னு கேலி பேசறீங்க. அதுவுமில்லாம பாதியை எடுத்துட்டு மீதியை சுவற்றிலோ இல்லை கீழயோ கொட்டறீங்க. எல்லாம் வேஸ்ட் ஆவுது. அதனால ஒரே ஒரு இடத்துல மட்டும் தான் இந்த சமாச்சாரம் கிடைக்கும்."

குமார், "அட, இத பார்றா"

வரிசையாக எல்லாக் குட்டி தெய்வங்களை தரிசித்த வண்ணம் இருவரும் செல்கின்றனர். பிரகார சீலிங் மற்றும் சுவர்களில் சித்திரம் மற்றும் சிலைகளுக்குப் பதிலாக LED திரைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. அவற்றில் கடவுள்கள் மற்றும் அவர்களின் அடியார்களின் படங்களும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பும் விளம்பரங்கள் போல் சில வினாடிகள் நின்று பிறகு மாறிக் கொண்டிருக்கின்றன.

குமார், "என்னய்யா இது. சிலைகள் தானே கோவிலுக்கு அழகு. இங்க என்னடான்னா ஒரே LED திரைகளா இருக்கு"

நாதன், "இரண்டாம் நூற்றாண்டு சோழர் காலத்துச் சிலைன்னு சொன்னா மட்டும் நம்பிடப் போறியா? லாஜிக் கேட்பீங்க, ஆதாரம் கேட்பீங்க. அதான், எல்லா ஸ்க்ரீன்ஸ். குமார் திருதிருவென்று முழித்தவாறே நாதனுடன் நகர்ந்தான்.

இருவரும் மெயின் கடவுள் அருகே வருகின்றனர். அங்கே தரையில் எஸ்கலேட்டர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் நாற்காலிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.



குமார், "டேய் என்னாங்கடா இது?"

நாதன், "வரிசையில நிக்கறதுக்கு நமக்கு பொறுமையும் இல்லை, காலில் தெம்பும் இல்லை. எல்லாம் மூட்டு வலி கேஸ் ஆயிட்டோம். ஜருகண்டி ஜருகண்டி சொல்லி அவங்களுக்கும் வாய் வலிக்குது. அதான் இந்த சிஸ்டம். இப்போ இதுல ஏறி உட்கார்ந்தீன்னா ஆட்டோமேட்டிக்கா நீ போய்த் தான் ஆகணும். சுவாமி கிட்ட போகும்போது கொஞ்சம் ஸ்பீட் குறையும். நீ அப்போ அலர்ட்டா இருந்து தரிசனம் பண்ணிக்க வேண்டியது தான்.

இருவரும் இருக்கையில் அமர்கின்றனர். மெயின் கடவுள் அருகே வரும் போது வேகம் குறைகிறது.

குமார், "ஏம்பா, இது கடவுள் தானா? இல்லை, இங்கயும் எதாச்சும் கிராபிக்ஸ் பண்ணிட்டீங்களா?'

நாதன், "சேச்சே, இவரை வெச்சுத்தானே இங்க எல்லாமே ஓடிக்கிட்டிருக்கு. அதனால இவரை எதுவும் செய்ய மாட்டோம்"

குருக்கள் இடுப்பில் ஸ்டைலாக ரீடரை சொருகிய வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். நாதன் அதில் இருபது ரூபாயைத் தேய்க்கிறான்.

தரிசித்து வெளியே வந்தவுடன் பிரசாதக் கூடம் வருகிறது. அங்கே உள்ள உதவியாளரிடம் நாதன் தன் மொபைல் நம்பரைச் சொல்லவும் அவர் அவனுக்குண்டான அர்ச்சனைப் பிரசாதத்தை எடுத்துக் கொடுக்கிறார்.

நாதன், "உனக்கு வேற எதாச்சும் பிரசாதம் வாங்கணுமா குமார்?"

குமார், "புளியோதரை கிடைக்குமா?"

உதவியாளர், "அதெல்லாம் இப்பப் போடறதில்ல சார். சுகர் ப்ரீ பொங்கல், எண்ணையில பொரிக்காம நெருப்புல சுட்ட வடை, ப்ரூட் சாலட், இந்த மாதிரி ஐட்டம்ஸ் தான் இருக்கு"

குமார், "அடப்பாவிகளா, நம்மாளுங்க கோவிலுக்கு வர்றதே பொங்கலும் புளியோதரையும் சாப்பிடத்தான். அதிலயும் கட்டிங்கா?"

நாதன், "எங்க பார்த்தாலும் Sugar, Acidity, அஜீரணக் கோளாறுன்னு ஒரே வியாதி மயம். அதான் இப்படி டயட் பிரசாதம் போடறாங்க"

குமார் பெருமூச்சு விட்டபடி, "சரி, ரெண்டு சுட்ட வடை சொல்லு, எப்படி இருக்குன்னு பார்க்கலாம்"

பிரசாதக் கூடையில் ஒரு சிறிய இலையில் விபூதி, குங்குமம் மற்றும் சந்தனம் பொட்டலம் கட்டி வைக்கப் பட்டிருக்கிறது. இருவரும் நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர். பின்னர் வடை மற்றும் பிரசாதத்தில் இருந்த ஆப்பிளையும் இளநீரையும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். அப்பொழுது குமார், "அங்க என்னடா, ஏதோ கேம் ஷாப் மாதிரி இருக்கு"



நாதன், "அதுவா, கிட்டத்தட்ட கேம் ஷாப் மாதிரி தான். என்ன ஒண்ணு, கேமுக்குப் பதிலா அமர்நாத் யாத்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ் இந்த மாதிரி கோவில்களா வரும். அதுக்குப் பேரு வர்ச்சுவல் தர்ஷன். எப்படி கேம்ல பைக் ஓட்டற மாதிரி, கார் ஓட்டற மாதிரி பீல் பண்றோமோ, அதே மாதிரி இங்கயும் நேர்ல பார்க்கிற மாதிரி பீல் பண்ணலாம்"

குமார், "ஆமாம், அது என்ன ஹெட் போன்ல சில பேர் என்னமோ கேட்டுக்கிட்டிருக்காங்க?

"மியூசிக் ஷாப்ல இருக்கற மாதிரி இங்கயும் நீ சாம்பிளுக்கு சாமிப் பாட்டுக் கேட்கலாம். புடிச்சிருந்தா அங்கேயே உன் மொபைலில் டவுன்லோட் பண்ணிக்கலாம். பாட்டு மட்டுமில்லை, அங்கே சுவாமிப் படங்களுக்கும் தனியா மெனு இருக்கு. உனக்கு எதாவது சாமிப் படம் புடிச்சிருந்தா அதையும் டவுன்லோட் பண்ணிக்கலாம். இந்த அப்ளிகேஷனைக் காண்பிச்சாப் போதும். இதிலேர்ந்து பணம் போயிடும்."

குமார், "இன்னிக்கு என் ராசி பலனுக்கு அதிர்ச்சின்னு எழுதியிருக்கும் போலிருக்கு"

வழக்கம் போல பிச்சைக்காரர்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர்.

குமார், "என்ன மாறியும், இது மாறலையே"

நாதன், "இது மாறிட்டா அப்புறம் இந்தியாங்கற பீலிங் எப்படி வரும்"

பிச்சைக்காரரும் ரீடர் வைத்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறான் குமார்.

பிச்சைக்காரர், "எதுனா பார்த்துப் போடு சாமி, லோன்ல ரீடர் வாங்கியிருக்கேன். EMI கட்டணும்"

நாதன் அவரிடம் ஒரு பத்து ரூபாய்க்குத் தேய்க்கிறான்.

பிச்சைக்காரர் அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பிறகு அடுத்த ஆளை எதிர்பார்க்கிறார்.

பேசிக்கொண்டே இருவரும் முதல் கவுண்டரை வந்தடைகின்றனர். நாதன் தன் போனைக் குடுத்து மிச்சம் எவ்வளவு இருக்கிறதென்று செக் செய்கிறான்.

கவுண்டரில் இருந்தவர், "சார் மீதி 125 ரூபாய் இருக்கு. நீங்க கோவிலுக்குள்ள செலவு பண்ணின 375 ரூபாய்க்கு உண்டான Income Tax Rebate உங்க பேங்க் அகௌன்ட்ல கிரெடிட் ஆயிடுச்சு."

நாதன், "பாலன்ஸ் அப்படியே இருக்கட்டும், அடுத்த தடவை பயன்படுத்திக்கறேன்."

கவுண்டரில் இருந்தவர், "அப்படியா சார், ஒரு நிமிஷம் இருங்க, உங்க loyalty points update பண்ணிடறேன்" கணினியை சகட்டு மேனிக்குத் தட்டிவிட்டு சிறிது நேரம் திரையை உற்றுப் பார்க்கிறார். பிறகு, " சார் நீங்க இந்த தடவையையும் சேர்ந்து இந்த வருஷத்துல இது வரைக்கும் எட்டு முறை கோவிலுக்கு வந்திருக்கீங்க. மொத்தம் 2750 ரூபாய் செலவு பண்ணியிருக்கீங்க. அதுல 10%, அதாவது 275 ரூபாய் உங்களுக்கு கேஷ்பேக் ஆகியிருக்கு. இதையும் சேர்த்து உங்க அக்கௌண்ட்ல 400 ரூபாய் கிரெடிட் இருக்கு.

நாதன், "தேங்க்ஸ்" சொல்லிவிட்டு நகர்கிறான்.



குமார், "கோவிலுக்கு வந்ததுக்கு வருமான வரி விலக்கா?

"ஆமாம் மச்சி, கோவில் ஆபீஸ் ரூம் போய் செக் எழுதிக் குடுத்தாதான் தர்மமா? இப்படி கடைக்காரர் முதல் பிச்சைக்காரர் வரை எவ்ளோ பேருக்கு நாம மறைமுகமா இது நாள் வரைக்கும் உதவி பண்ணியிருப்போம்? இந்தக் கோவில் இல்லேன்னா அந்தக் கடைக்காரர் தான் இங்க கடை போடுவாரா? இல்லை அந்தப் பிச்சைக்காரர் தான் இங்க குத்த வைச்சு உட்காருவாரா? அதனால கோவில் வளாகத்திற்குள் நாம செய்யற ஒவ்வொரு செலவும் தர்மக் கணக்குல வரணும்னு வருமான வரித் துறை ரூல் போட்டிருக்காங்க. அதுக்காகத் தான் இந்த கார்ட் சிஸ்டமே. என்ன ஒண்ணு, இதுல நீ செலவு பண்ற எல்லாமே வெள்ளைப் பணமா இருக்கணும். கறுப்புப் பணம் செலவு பண்ணினா கொஞ்சம் சிக்கல் வரும். ஏன்னா உன்னோட மொத்த வரவு செலவு அரசாங்கத்தில பதிவாகிக்கிட்டிருக்கு. அப்புறம் உனக்கு நோட்டிஸ் வரும். ஆனா அதை வழக்கம் போல லஞ்சம் குடுத்து சரி பண்ணிடலாம்னு வெச்சுக்கோ"

குமார், "இதெல்லாம் ரொம்ப ஓவர்டா"

நாதன், "உலகம் அப்படி ஆயிடுச்சு மச்சி. கோவில் நடத்தறது கம்பெனி நடத்தற மாதிரி ஆயிடுச்சு. இந்த மாதிரியெல்லாம் பண்ணலேன்னா ஜனங்க வரமாட்டேங்கறாங்க."

குமார், "என்ன மச்சி சொல்றே? ஜனங்க கோவிலுக்கு வர மாட்டேங்கறாங்களா?

நாதன், "ஆமாம் மச்சி, நாட்டுல நடக்கற அநியாயம், அராஜகம், ஊழல், வறட்சி, பசி, பெருகி வரும் வியாதி, முழு வியாபாரமாகிவிட்ட கல்வி மற்றும் மருத்துவம், மகன் அப்பாவைக் கொல்றது, தாத்தாவே பேரனைக் கொல்றது, பிச்சையெடுக்க வைக்கறதுக்காக குழந்தைகளைத் திருடறது, எல்லாத்துக்கும் மேலா கடவுள் பேரைச் சொல்லி நடக்கிற கொடுமைகள் - இதையெல்லாம் பார்த்துப் பார்த்து மக்களுக்கு கடவுள் நிஜமாவே இருக்காரான்னு சந்தேகம் வந்திடுச்சு.அதனால் கோவிலுக்குப் போய் எதுக்கு நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க்கணும்னு யாரும் வர்றதில்ல. So, ஜனங்களை ரெகுலரா கோவிலுக்கு வரவழைக்கறதுக்காக இப்படி லாயல்டி பாயிண்ட்ஸ், அது இதுன்னு பண்ண வேண்டியதா இருக்கு.

குமார் வருத்தம் கலந்த புன்னகையுடன் "வாஸ்தவம் தான், இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு கோவிலுக்கு வந்த மாதிரியே இல்லை, ஏதோ ஷாப்பிங் மாலுக்கு வந்த மாதிரி இருக்கு"



நாதன், "என்னப்பா பண்றது, என்னிக்கு நாம கடவுள் கிட்ட பேரம் பேச ஆரம்பிச்சோமோ அன்னிக்கே கோவில் கடையா மாறிடுச்சு. பாஸ் பண்ணிவிடு, பத்து ரூபாய் போடறேன், சீட் வாங்கிக் கொடு, ஆயிரம் ரூபாய் தர்றேன், வேலை வாங்கிக் கொடு, மொட்டை போடறேன், கல்யாணம் பண்ணி வை, அன்னதானம் பண்றேன்னு கடவுள் கிட்ட டீல் பேசிப் பேசி நாமளும் வியாபாரியா மாறி அவரையும் வியாபாரியா மாத்திட்டோம். சரி விடு, நாம வந்த வேலை முடிஞ்சுது. வா வீட்டுக்குப் போவோம்" இருவரும் கிளம்ப எத்தனிக்கும் போது குமார் யதேச்சையாக சைடில் பார்க்கிறான். அங்கே "மண் சோறு சாப்பிடும் இடம்" என்ற போர்டு வைக்கப் பட்டிருக்கிறது. உடனே நக்கலாக, "எவ்ளோ அட்வான்சாப் போனாலும் இந்தப் பழக்கத்தையெல்லாம் விட மாட்டீங்க போலிருக்கே?"

நாதன், " உண்மை தான், ஆனா அங்க கொஞ்சம் உன்னிச்சுக் கவனி"

குமார் சற்று உன்னித்துக் கவனிக்கிறான். அங்கே பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மண் சோறு சாப்பிடுகின்றனர். சிலர் மஞ்சள் உடைகளில், பலர் மாடர்ன் உடைகளில்.

குமார்,"என்ன கொடுமை நாதன் சார் இது?"

நாதன், "அவங்கல்லாம் மென்பொருள் வல்லுனர்கள். கம்பியூட்டர் தான் உலகம்னு ஆயிட்டதால எல்லாரும் கம்பியூட்டர் பட்டதாரிங்களாயிட்டாங்க. ஆனா பாவம், வேலை தான் கிடைக்க மாட்டேங்குது. பென்ச்ல உட்கார்த்தி வைச்சது போக இப்பல்லாம் பல பேர் தரையில உட்கார்ற நிலைமைக்கு ஆளாயிட்டாங்க. அந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்கல்லாம் வேலை கிடைச்சா மண் சோறு சாப்பிடறேன்னு வேண்டிக்கறாங்க. சில பேர் முதல்ல மண் சோறு சாப்பிட்டு விட்டு அப்புறம் கடவுளை வேலை வாங்கிக் கொடுன்னு மிரட்டறாங்க.

குமார், "கம்பியூட்டருக்கும் மண் சோறு சாப்பிடறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?"

நாதன், "அட அற்பப் பதரே, நீயும் ஒரு மென்பொருள் வல்லுநர் தானே, மென்பொருள் ப்ரோக்ராமை எதுல எழுதறீங்க?

குமார் "சிலிகன் சிப்ல"

"நாதன், "அந்த சிப்பே மண்ணை கம்ப்ரெஸ் பண்ணி உருவாக்கறது தான். மண் சோறு சாப்பிட்டா அந்த மண் இவங்களுக்கு சோறு போடும்னு ஒரு லேட்டஸ்ட் ஐதீகம். இதான் கொள்கை விளக்கம், புரிஞ்சுதா?"

குமார், "அடச்சே, இது எனக்குத் தெரியாம போச்சே, சரி வந்தது வந்துட்டோம். நானும் போய் ஒரு ப்ளேட் மண் சோறு சாப்பிடறேன்."

"நீயா? எதுக்குடா?"

குமார், "இல்லை மச்சி, ரொம்ப நாளா வெளிநாட்டு அசைன்மென்ட் ஒண்ணு கைக்கும் எட்டாம வாய்க்கும் எட்டாம இழுத்தடிக்குது. அதான் மண் சோறு சாப்பிட்டா கடவுள் கருணை காட்டுவாரான்னு பார்க்கலாமேன்னு......இங்கயே வெயிட் பண்ணு மச்சி, இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு ஓடுகிறான்.

நாதன், "போடா போ, உங்களை எல்லாம் லட்சம் பெரியார் வந்தாக்கூட திருத்த முடியாது"

(ஆடி மாசம் பக்தி மாசமாச்சேன்னு நினைச்சிக்கிட்டு ஏதோ மனசில பட்டதை எழுதிட்டேன். எதாச்சும் பிழை இருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுட்டுங்க. இதையெல்லாம் மனசில வெச்சிக்கிட்டு பழிவாங்கிடாதீங்க கடவுள்களே, எதுவா இருந்தாலும் வழக்கம் போல பேசித் தீர்த்துக்குவோம்)

Jayaraman
New Delhi

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மேலே சொன்ன கற்பனைக் கதை கூடிய விரைவில் நிஜமாகவே நடக்கும் எனத் தோன்றுகிறது. எனவே, முன் அனுமதியின்றி இதை யாரும் எங்கும் எதிலும் நகலெடுக்க வேண்டாம் (அதாங்க, Control C and Control V) எனக் கேட்டுக் கொள்கிறேன் (இது அதிகப் பிரசங்கித்தனமா, தன்னம்பிக்கையா அல்லது தலைக்கனமா???). This article is owned by crazycricketlover.blogspot.com

Wednesday, July 18, 2012

who is the KING OF TEST CRICKET

The other day, my friend Balaji casually asked me to take a guess on the Man of the Match Awards won by Sachin Tendulkar in Test Cricket.

Considering Tendulkar played about 200 matches, I took a guess of 25 MoM awards, assuming he would have been instrumental the least 40% of India Draws and Victories. Although, inside my heart I felt 25 is a very humble number.

My friend replied “You would be stumped to know the results”.

Are you already taking a guess on the Man of the Match awards won by Sachin Tendulkar in Test Cricket?

As he mentioned, I was totally stumped to know the result. The result actually lured us to analyze, the number of MoM awards won by Tendulkar's contemporaries in Indian Cricket and World Cricket. Here is the look at the stats.


Sachin Tendulkar has won only 14 MoM awards in 188 Test matches. Out of which only 5 were on the winning cause. Anyways, the idea is not prove Tendulkar any inferior, but only to emphasize Man of Match Awards are very difficult to earn in Test Cricket. By the way, Tendulkar has 63 MoM awards in ODI’s.

Again, we were totally surprised to see not a single cricketer has managed more than 25 MoM awards in Test Cricket yet. With the exception of Kallis, MoM awards were predominantly dominated by Bowlers (rightfully).

It is also interesting to see all MoM’s won by Ambrose, Steve Waugh and Sehwag resulted in the Team winning the match. While, Warne, Murali and Kumble’s MoM performances resulted largely on the winning side (above 85%).

On the contrary the two greats, Lara and Tendulkar’s Man of the Match Awards mostly resulted in draws compared to winning causes.

Don’t read too much into it. Stats is a B&$@H. It can be manipulated the way we want.

But in this case, it did prove a point. Kallis is the King of Cricket. By the way, Kallis scored his last century in England in Test Cricket only 14 years ago.

Dinesh
Cricket Lover

Sunday, July 15, 2012

பில்லா - 2 விமர்சனம்

ஓவரா பில்ட் அப் குடுத்து ஒரு படம் ஊத்திக்கிட்டா அதை விட குஜாலான மேட்டர் வேற எதுவும் இருக்க முடியாது. இதோ, லேட்டஸ்ட் பில்லாவை சில பேர் எப்படி கலாய்க்கறாங்கன்னு பார்ப்போமா?

விஜய்:

மூச்சுக்கு முன்னூறு தடவை உங்க ரசிகர்கள் தல அஜித், தல அஜித்னு சொல்றாளே, அஜித்ங்கறது உங்க பேரு, தலங்கறது நீங்க வாங்கின டிகிரியா? ஹீரோ வழிபாடு வேண்டாம்னு சொல்ற நீங்களே இப்படி டைட்டில் போட்டுக்கிட்டு அலப்பற பண்றது நியாயமா? நான் நண்பன் மூலமா மசாலாவிலேர்ந்து கரையேறிட்டேன், நீங்க எப்போ ஏறப் போறேள்?

விக்ரம்:

அநியாயம் பண்ணினா ஆண்டவனுக்குப் புடிக்காது. அறுவையான படம்னா இந்த அருளுக்குப் புடிக்காது. மசாலாப் படம்கற பேர்ல மொக்கை போட்டா எவனா இருந்தாலும் வெட்டுவேன், எவனா இருந்தாலும் வெட்டுவேன் - இது படம் இல்லை,. ப்ளேடு.

சூர்யா:

மொக்கையை காலேஜில பார்த்திருப்பே, வீட்டு காம்பௌண்ட்ல பார்த்திருப்பே, ரோட்ல பார்த்திருப்பே, பார்க்ல பார்த்திருப்பே, ஆனா தியேட்டர்ல பார்த்திருக்கியா? சினிமாங்கற பேர்ல ரெண்டு மணி நேரம் டார்ச்சர் பண்ணி பார்த்திருக்கியா? ஓங்கி அடிக்கற ஒவ்வொரு பன்ச்சும் ஒன்றரை டன் தலைவலியைக் குடுக்கும், இன்னிக்கே டிக்கெட் வாங்கித் தர்றேன், பார்க்கறியா, பார்க்கறியா, பார்க்கறியா?

கமல்:

ஒரு நல்ல படத்துக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை சமாச்சாரமும் இந்தப் படத்துக்குக் கிடைச்சிருக்கே, அது எப்படி? நான் இது மோசமான படம்னு சொல்ல மாட்டேன், ஆனா நல்ல படமா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொல்வேன். அஜித், நீங்க நல்லவரா, கெட்டவரா?

ரஜினி:
ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கை விட மாட்டான். ரசிகர்களுக்கு அஜித் ஆண்டவன் மாதிரி. அதான் இந்த படத்தின் மூலமா சோதிச்சிட்டாரு. கவலைப்படாதீங்க ரசிகர்களே, கண்டிப்பா உங்க ஆண்டவன் உங்களை கை விட மாட்டார். அடுத்த படம் நல்லபடியா வர அந்த அருணாச்சலனை வேண்டிக்கறேன்.

வைரமுத்து:

வழக்கமாக தியேட்டர் காலியாக இருந்தால் "ஈ ஓட்டுகிறார்கள்" என்று கிண்டலாகச் சொல்வது தமிழ் மரபு. ஆனால் "ஈ' என்ற படம் இந்த பில்லாவை ஓட்டிவிட்டதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். முயற்சியின் மறுபெயர் அஜித். இந்த முறை தோற்றதால் வீண் முயற்சி ஆகிவிட்டது. அடுத்த படத்தில் அது வெற்றிபெற்று விடாமுயற்சியாக மாற வாழ்த்துக்கள்.

 விவேக்;

உடம்புக்குத் தல முக்கியம் தான். அதுக்காக கை, கால், கிட்னி, இதயம் எல்லா வேஸ்ட்னு ஆகிடாது. அது மாதிரி ஒரு படத்தில் தல இருக்கறதாலேயே அது வெற்றிப் படம் ஆயிடாது. திரைக்கதை, பாட்டு, இசைன்னு மத்த உறுப்புகளும் ஒழுங்கா இருந்தாத்தான் உடம்புக்கு மரியாதை. மொத்தத்தில் ஆபரேஷன் வெற்றி, ஆனா பேஷன்ட் மரணம்னு ஆகிப் போச்சு.

வடிவேலு:

வீட்ல சும்மாத்தான் சாமி இருக்கேன், ப்ரீயா வேணாலும் நடிச்சுத் தர்றேன், என்னை வெச்சு ஒரு காமெடி ட்ராக் சேர்த்துக்குங்கன்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன், கேட்டானா அந்த சில்வண்டு டைரக்டர். இந்தப் படத்துக்கு காமெடி பீஸ் தேவையில்லைன்னு சொல்லி என்னிய ரிஜெக்ட் பண்ணிட்டான். இப்போ படமே காமெடி பீசா மாறி ஊரே சிரிக்கற அளவுக்கு நாறிப் போயிடுச்சு.

நமிதா:

அஜித் மச்சான் நல்லா நடிச்சிருக்கு. அவரை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. ஆனா படம் என்னை கண்டபடி கடிச்சிருக்கு. வீட்டுக்குப் போய் டெட்டனஸ் இன்ஜெக்ஷன் போட்டுக்கணும்.

சந்தானம்:

"நண்பனா இருக்கறதுக்கு தகுதி வேண்டாம். ஆனா எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்" - படத்துல நீங்க சொல்றது இது. ஆனா மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா தல, "கேங்ஸ்டெர் படம் பார்க்கறதுக்கு எந்த தகுதியும் வேணாம், ஆனா அதை எடுக்கறதுக்கு ஒரு தகுதி வேணும்னு சொல்றாங்க"

விஜயகாந்த்:

அம்மா ஆட்சியிலும் சோனியாவின் கொடுங்கோலாட்சியிலும் ஏற்கனவே மக்கள் அவதிப்பட்டுக்கிட்டிருக்காங்க. இதுக்கு நடுவுல இந்த மாதிரி படமெல்லாம் வந்தா மக்கள் என்ன தான் செய்வாங்க? எங்க போவாங்க? இதுக்கு ஒரே தீர்வு. பில்லா - 3 படத்தில நான் ஹீரோவா நடிக்கறது தான். மக்களே என்ன சொல்றீங்க?

ஆஸ்கர் ரவிச்சந்திரன்:

எவ்ளோ செலவு பண்ணி படத்தை ரிலீஸ் பண்ணினேண்டா! அத்தனையும் வீணாப் போச்சுடா. யாரைக் கேட்டாலும் தல படமா, நல்லா ஓடும், நல்லா ஓடும்னு சொன்னதை வெச்சு இருந்த ஒரே ஒரு சுமாரான படத்தையும் உடைப்பில போட்டுட்டேன். இப்போ நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு ஒரு குறும்படம் எடுக்கணும்னாக் கூட என்கிட்டே காசு இல்லடா.

கார்த்தி:

என்ன தல சார், சௌக்கியமா? நல்ல வேளை நீங்க சகுனியோட இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணலை. இல்லேன்னா உங்களுக்கு டெபாசிட் கூட கிடைச்சிருக்காது போலிருக்கே.

ஷங்கர்:

சுஜாதா சார் பாணியில சொல்லணும்னா கண்ணு தெரியாதவனுக்கு காகிள்ஸ் குடுத்த மாதிரி ஆயிடுச்சு. ஓட்டையான ஸ்க்ரீன்ப்ளேவை வெச்சிக்கிட்டு அதுக்கு நீங்க என்ன தான் அஜித் மாதிரி காஸ்ட்லி கோட் மாட்டினாலும் நிக்காது. மாஸ் ஹீரோங்கறவர் மசாலாவிலேர்ந்து வர்ற மணம் மாதிரி. மணம் ரசிகனை சுண்டி இழுக்கும். ஆனா ருசி தான் அவனை தொடர்ந்து சாப்பிட வைக்கும். இல்லேன்னா டேஸ்ட் பண்ணிட்டு துப்பிட்டு போயிடுவான்.

அஜித் ரசிகன்:

வெற்றியும் தோல்வியும் வீரனுக்குச் சகஜம். நீ வீரன் தல. சுத்தமான தமிழ் வீரன். நீ கண்டிப்பா எழுந்து வருவே. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.

சாதாரண ரசிகன்:

போஸ்டர் முழுக்க ரத்த விளாறா இருக்கும்போதே சுதாரிச்சிருக்க வேண்டாமா? படத்தில அஜித் துப்பாக்கியிலேர்ந்து வர்ற ஒவ்வொரு குண்டும் நேரா நம்மளைத் தாக்கிடுச்சே!! யப்பா டேய், யார்ரா அங்க. கொஞ்சம் அம்ருதாஞ்சன் தொழிற்சாலையில என்னை டிராப் பண்ணிடுங்கப்பா. தலைவலி மண்டயப் பொளக்குது. நேராப் போய் மருந்து தயாராகற பாய்லர்ல போய் தலைய விட்டாத் தான் இந்த தலைவலி போகும் போலிருக்கு.

கடைசியா இதுக்குத் தல என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போமா?

மங்காத்தா வெற்றிப் படம். நான் குதிக்கல. அதே சமயம் இந்தப் படம் பிளாப் ஆயிட்டதால நான் துவண்டு போகவும் மாட்டேன். நான் எப்பவுமே இறங்கிப் போறவன் இல்லை, ஏறிப் போறவன். நான் எப்பவுமே நானாத் தான் இருக்கேன். நான் அலட்டிக்கல. நீங்களும் அலட்டிக்காதீங்க. அடுத்த சண்டே வீட்ல ப்ரீயா இருப்பீங்களா? இருந்தா சொல்லுங்க, பிரியாணி கொண்டு வர்றேன். என் கையால நானே செஞ்சது.

Jayaraman
New Delhi

Thursday, July 12, 2012

கோடீஸ்வரனும் 13வது கேள்வியும்



சூர்யா நடத்தும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் 25 லட்சத்துக்கான 13வது கேள்வி மிகவும் கோக்குமாக்காக உள்ளது (அது சரி, சும்மா வருவாளா சுகுமாரி?) . அக்பரின் மூன்றாவது மனைவியின் தம்பி பெயர் என்ன, காந்தி மதுரைக்கு வந்தபோது எந்த ஹோட்டலில் இட்லி சாப்பிட்டார் - இது மாதிரியான வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்விகளைக் கேட்டு நல்லா ஆடறவங்களை பேக் பண்ணி அனுப்பிடறாங்க. முதல் சீசன் முடியப்போகிற இந்த நேரத்தில நம்ம பங்குக்கு நாமளும் சில பிரபலங்களை ஆட விட்டு, இல்லை இல்லை, ஓட விட்டு வேடிக்கை பார்ப்போம். இந்த கேள்விக்கு அவங்க அட் லீஸ்ட் அரை மணி நேரமாச்சும் யோசிச்சே ஆகணும்.

செஹ்வாக்:

இதில் உங்களுக்கு மிகவும் தொல்லை தருவது எது?

1) தோள் பட்டை காயம்
2) பத்து வருஷமாக கடுகளவும் காலை நகர்த்தாமல் ஆடுவது
3) எவ்வளவு முக்கினாலும் கேப்டனாக முடியாதது
4) தோனி

அஜித்:

எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?

1) குடும்பம்
2) சினிமா
3) ரேஸ்
4) பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தில்லாக டெர்ரர் பேட்டிகள் குடுப்பது




மன்மோகன்:
பின்வருவனவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த பட்டப்பெயர் எது?

1) ஊமைக்கோட்டான்
2) சோனியாவின் ஜால்ரா
3) கையாலாகாதவர்
4) ஜடம்


சச்சின்:

பின்வரும் குற்றச்சாட்டுகளில் எது மிகவும் பிரபலம்?

1) சச்சின் நூறு அடிச்சா டீம் விளங்காது
2) சச்சின் சாதனைக்காக மட்டுமே ஆடுபவர்
3) இன்னமும் ரிடையர் ஆகாமல் இளைய தலைமுறைக்கு பிரச்சினை பண்ணுபவர்
4) கோடி கோடியாக சம்பாதித்த பிறகும் அரசாங்கத்திடம் வரி விலக்கு கேட்பது

கமலஹாசன்:

உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்:

1) ஹீரோயின் உதட்டை பதம் பார்ப்பது
2) நண்பர்களை வறுபுறுத்தி ஓசியில் நடிக்க வைப்பது
3) ஹாலிவுட் படங்களை தமிழ்ப்படுத்துவது
4) வித்யாசம் என்ற பெயரில் ஒரிஜினல் முகத்தைக் காட்ட மறுப்பது




பிசிசிஐ ஸ்ரீனிவாசன்:

உங்கள் ரத்தக்கொதிப்பை அதிகமாக்குபவர் யார்?

1) அஜய் மாக்கன்
2) ஜகன் மோகன் ரெட்டி
3) சிபிஐ
4) சென்னை சூப்பர் கிங்க்ஸ்


விஜய்:

நீங்கள் மறக்க நினைக்கும் படம் எது?

1) குருவி
2) வில்லு
3) அழகிய தமிழ்மகன்
4) சச்சின்

அஜ்மல் கசாப்:

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு துணைபுரியும் நாடு எது?

1) அமெரிக்கா
2) சீனா
3) நேபால்
4) பங்களாதேஷ்





விக்ரம்:

இதில் உங்களுக்குச் சம்பந்தமில்லாதது என்ன?

1) மசாலா ஹீரோ
2) ஊனமுற்றவனாக நடிப்பது
3) ஹீரோவுக்கு எடுப்பாக வருவது
4) என்ன வித்யாசம் காட்டினாலும் பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து படங்கள் பல்டி அடிப்பது

தோனி:

இதில் உங்களுக்கு மிகவும் பழக்கமான விஷயம் எது?

1) பைக் ஓட்டுவது
2) கிரிக்கெட்டில் அரசியல் பண்ணுவது
3) அடிக்கடி கிரிக்கெட்டை மறப்பது
4) தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருப்பது

நித்தி:

உங்களைப் பரவசப்படுத்துவது எது?

1) ரஞ்சிதா
2) ஆதீனம்
3) கோடிகளில் சொத்து
4) மக்கள் தொடர்ந்தும் கொடுக்கும் ஆதரவு





ஆமிர் கான்:

உங்களின் பொழுதுபோக்கு என்ன?

1) சினிமாவில் நடிப்பது
2) டிவியில் நடிப்பது
3) சோஷலிசம் பேசுவது
4) மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்துவது


கருணாநிதி:

உங்களுக்குப் பிறகு திமுகவின் தலைவராக யார் வருவார்?

1) ஸ்டாலின்
2) அழகிரி
3) கனிமொழி
4) அன்பழகன்

ஷாருக் கான்:

இதில் உங்களுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் யார்?

1) கஜோல்
2) ராணி முகர்ஜி
3) பிரியங்கா சோப்ரா
4) கரன் ஜோஹர்



ஏனைய கான் மற்றும் இதர அள்ளக்கை நடிகர்களுக்கு:

உங்களின் பொழுதுபோக்கு என்ன?

1) குடித்துவிட்டு காரை ஓட்டி யாரையாவது சாவடிப்பது
2) டிவி நிகழ்ச்சிகளில் காசு குடுத்து குத்தாட்டம் போடுவது
3) முன்ஜென்மம், மறுஜென்மம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது
4) முன்னாள் நண்பர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சம்பந்தமே இல்லாமல் கண்ணீர் விடுவது


சோனியா காந்தி:

நீங்க யாருக்காக ஊழல் செய்கிறீர்கள்?

1) இத்தாலி குடும்பத்துக்காக
2) மருமகன் வதேராவுக்காக
3) மகன் ராகுலுக்காக
4) காங்கிரஸ் கட்சிக்காக

சூர்யா:

நீங்கள் அடிக்கடி செய்வது எது?

1) விழாக்களில் நமஸ்கரிப்பது
2) என்ன பேசுவதென்று தெரியாமல் காமெராவைப் பார்த்து முழிப்பது
3) சொந்தப் பணத்தில் படமெடுத்து அதை நல்ல ரேட்டுக்கு விற்றுவிடுவது
4) இயலாதவர்களுக்கு உதவி செய்வது


தனியார் தொலைக்காட்சிகளுக்கு:

இவற்றில் மக்களை அதிகம் டார்ச்சர் செய்யும் நிகழ்ச்சி எது?

1) மனை மற்றும் டிவி ஷாப்பிங் விளம்பரங்கள்
2) இரண்டு மணி நேரப் படத்தை விளம்பரங்கள் போட்டு ஐந்து மணி நேரமாக ஓட்டுவது
3) கலை மற்றும் விருது நிகழ்ச்சிகளை ரெகார்ட் தேயும் வரை மறு ஒளிபரப்பு செய்வது
4) வீணாப் போன ஹிந்தி சீரியல்களை தமிழில் டப் செய்து ஒளிபரப்புவது

இந்தியக் குடிமகன்:

உங்களை மிகவும் பாதிப்பது எது?

1) எரிபொருள் விலையேற்றம்
2) உணவுப்பொருள் விலையேற்றம்
3) லஞ்சம் ஊழல்
4) கழுத்தறுக்கும் மழை

என்ன தான் வியாபாரமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலமா சில பேர் வாழ்க்கையை நல்ல விதமா மாற்றி அமைச்சதற்கும், ஆதரவில்லாம கஷ்டப்படற நிறைய பேருக்கு உதவிகள் குவிய காரணமா இருந்ததற்கும், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த அளவுக்கு அறிவு இருக்குன்னு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கும் விஜய் டிவிக்கு நன்றி. நம்ம மக்களுக்கு வெறும் புத்தக அறிவு தான் அதிகமாயிருக்கு. பொது அறிவு அநியாயத்திற்குக் குறைவா இருக்கு. அதிலும் தமிழறிவு சூன்யம். அட, தமிழறிவு தான் இல்லை, பிரியங்கா காந்திக்கும் பிரியங்கா சோப்ராவிற்கும் கூடவா வித்யாசம் தெரியாது? நினைக்கும்போதே புல்லரிக்குது.

வாழ்க ஆங்கிலம், வளர்க தமிழ் மக்கள். சூர்யா, மைண்ட்ல வெச்சிருக்கோம், பட் உங்க கிட்ட நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கறோம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (சேர்ந்தே இருப்பது தமிழனும் ஆங்கிலமும் - பிரிக்கவும் முடியாது, திருத்தவும் முடியாது).

Jayaraman
New Delhi

Thursday, July 5, 2012

எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணும்!!


தேர்வு அறை. ரமேஷ் மிகவும் பதட்டமாக அமர்ந்திருந்தான். இது வரை 4 -5 இடம் பார்த்தாகி விட்டது. ஒன்றும் செட் ஆகவில்லை. இந்த இடமாவது அமைய வேண்டுமே என்று மனதில் கவலை. அடுத்தது அவனைத் தான் அழைப்பார்கள். இவனுக்கு முன்னால் சென்ற ஏழு பேரும் போன வேகத்தில் வெளியே வந்துவிட்டார்கள். அதிலும் கடைசியாக வெளியே வந்தவன் சும்மா இல்லாமல் "கேள்விகள் எல்லாம் செம tough பாஸ், தேறுவது ரொம்ப கஷ்டம்" என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான்.

கலக்கத்தில் நாக்கு மிகவும் வறண்டு போகவே, தண்ணீர் குடிக்க நினைத்து சீட்டை விட்டு எழவும் அவனை உள்ளே அழைத்தார்கள். பீர் போல பொங்கிய வியர்வையை துடைத்துக் கொண்டு, வேகமாக தலைவாரி, தொண்டையை செருமிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

மிகவும் மாடர்னாக இருந்த பெண்மணி இவனை அமருமாறு சைகை செய்தாள்.

"ரமேஷ்.... பெயர் கொஞ்சம் ஓல்ட் பேஷனா இருக்கே"

ரமேஷ் "என்னடா இது, ஆரம்பமே சரியில்லையே" என்று நினைத்துக் கொண்டே "ஆனா எல்லாரும் என்னை ராமின்னு தான் கூப்பிடுவாங்க"

"ஹ்ம்ம்...சரி, உங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க"

"நான் இஞ்சினீரிங் படிக்கறேன், பைனல் இயர் முடிக்கப் போறேன். போன வாரம் நடந்த கேம்பஸ் தேர்வில கூட செலெக்ட் ஆயிருக்கேன்."

பெண்மணி குறுக்கிட்டு, "நான் கேக்கறது உங்க பெர்சனாலிட்டி பத்தி. அதாவது ரமேஷ் ஒரு தனி மனிதனா எப்படிப்பட்ட ஆளுன்னு"

ரமேஷ், "நான் ரொம்ப ஜோவியலான ஆளு, மொக்கை ஜோக், தத்துவம்னு சும்மா அடிச்சிக்கிட்டே இருப்பேன்"

"எங்கே, ஒரு மொக்கை போடுங்க பார்க்கலாம்"

"என் சரக்கு உனக்கு போதையாவும், ஆனா உன் போதை எனக்கு சரக்காவாது"

"நாட் பேட்"

ரமேஷின் கண்களில் சற்றே ஒளி தெரிந்தது.

"உங்க ஹேபிட்ஸ்?"

"எந்த மாதிரி ஹேபிட்ஸ்? ஸ்மோகிங்?"

"அதுவும் தான்"

"ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டு. வாரம் ஒரு முறை பீர் அடிப்பேன்"

"பீர் தனியா அடிப்பீங்களா அல்லது நண்பர்களோடவா?"

"பிரெண்ட்ஸ் கூடத் தான்"

"பெண் நண்பர்கள் அந்தக் கூட்டத்தில இருப்பாங்களா?"

"இல்லை, ஆண்கள் கூடத் தான். பெண்கள் முன்னாடி நான் சரக்கடிக்கரதில்ல"

"ஒரு வேளை அப்படி அடிக்கற நிலைமை வந்தா கூச்சப்படாம அவங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஆபர் பண்ணுவீங்களா?"

"கண்டிப்பா, ஆனா நான் அப்படிப்பட்ட நிலைமைக்குள்ள சிக்கிக்க மாட்டேன்"

"அது ஏன்?"

"லேடீஸ் முன்னாடி குடிச்சா சரியா வராது"

"அதான் ஏன்?"

"நான் குடிக்கறதே போதைக்கு, அவங்களைப் பார்த்தா மைன்ட் அலெர்ட் ஆயிடும்."

"ஓகே, குடிச்சிட்டு வண்டி ஓட்டுவீங்களா?"

"இல்லை, பிரெண்ட் வீட்லேயே தூங்கிடுவேன்"

"ஏன், பயமா?"

"ஆமாம், உயிரோட இருந்தாத்தானே இன்னும் நிறைய நாள் ஜாலியா இருக்க முடியும்"

"ஹ்ம்ம்..பைக்ல சுமாரா எவ்ளோ ஸ்பீட் போவீங்க?"

"ரோட்டைப் பொறுத்து - அதிகபட்சம் 70"

"ஸ்பீட் பிரேக்கர் வந்தா?"

"சுத்தமா ஸ்லோ பண்ணிடுவேன். சடார்னு ஏத்தினா முதுகெலும்பு பாதிக்கும்"

"பைக்ல போயிக்கிட்டிருக்கீங்க, திடீர்னு மழை வருது. என்ன செய்வீங்க?"

"உடனே ஓரங்கட்டிடுவேன், பக்கத்துல எதாவது டீக்கடை இருந்தா சூடா பஜ்ஜி டீ சாப்பிடுவேன்"

"மழையில நனைய மாட்டீங்களா?"

"அய்யய்யோ, உடனே ஜலதோஷம் புடிச்சிக்கும்"

"ஹ்ம்ம்...என்ன போன் வெச்சிருக்கீங்க?"

ரமேஷ் தன் போனைக் காட்டுகிறான்.

"டச் ஸ்க்ரீன் இல்லையா?"

"இது தான் ரொம்ப வசதியா இருக்கு. டச் ஸ்க்ரீன் போன் கை தவறி விழுந்தா நொறுங்கிடுது "

"எவ்ளோ சினிமா பார்ப்பீங்க?

"ஒரு மாசத்துல ஆறு சினிமா பார்ப்பேன்"

பெண்மணி ஆச்சர்யத்துடன், "6 தடவை தியேட்டருக்குப் போவீங்களா?"

"எல்லாம் விசிடி டிவிடி தான். எந்திரன் மாதிரி பிரம்மாண்டமான படம் எதாவது வந்தா தியேட்டருக்குப் போவேன்"

"அப்படி தியேட்டருக்குப் போகும்போது எவ்ளோ செலவு பண்ணுவீங்க?"

"படம் போறதுக்கு முன்னாடி வீட்ல இல்லேன்னா ஹோட்டலில் நல்லா சாப்பிட்டுருவேன். ஏன்னா அப்போத்தான் தியேட்டர்ல பசிக்காது. அப்படியே பசிச்சாலும் அதிகபட்சம் ஒரு காபி அல்லது கூல் ட்ரிங்க்ஸ் அவ்ளோ தான். தியேட்டருக்குள்ள என்ன விலை விக்கறாங்க!"

"உங்களுக்குத் தெரிஞ்ச லேடீஸ் காஸ்டியூம்ஸ் பேரு சொல்லுங்க"

ரமேஷ், "சேலை, சுடிதார், ஜீன்ஸ், டாப், குர்தா, மிடி, ஸ்கர்ட், ஹ்ம்ம்... அவ்ளோ தான்"

"இது வரைக்கும் காவல் நிலையம், வம்பு தும்பு, அடிதடி, எதாவது சந்திச்சிருக்கீங்களா?"

"அந்த வாடையே ஆகாதுங்க. எதுக்குக் கேக்கறீங்க? நான் யோக்கியனான்னு தெரிஞ்சுக்கவா?

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நீங்களும் நானும் ஒண்ணா ஊர் சுத்தும்போது உங்க மேல பொறாமைப்பட்டு உங்களை சில பேர் தாக்க வரலாம். ஏன், எனக்கே கூட நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர் உங்களை ஆளை வெச்சு அடிக்கலாம். அதுக்கெல்லாம் உங்களுக்குத் திராணி வேண்டாமா? அதுக்குத் தான்"

ரமேஷின் முழி பிதுங்கிகிறது.


பெண்மணி சிறிது நேரம் யோசிக்கிறாள்.

ரமேஷ் பொறுக்க மாட்டாமல், "என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?"

பெண்மணி, "பாய் பிரெண்டா இருக்கறதுக்கான ஒரு தகுதியும் உங்களுக்கு இல்லை"

ரமேஷ் கலவரமாகி, "எதனால அப்படிச் சொல்றீங்க?"

"என் கூட அரை மணி நேரமா பேசிக்கிட்டிருக்கீங்க, ஆனா இது வரைக்கும் என் டிரெஸ்ஸைப் பற்றியோ, என் ஹேர் ஸ்டைலைப் பற்றியோ நீங்க ஒண்ணும் சொல்லவே இல்லை. உங்களை கல்யாணம் வேணா பண்ணிக்கலாம். ஆனா அதுக்கு எனக்கு இன்னும் வயசு இருக்கு. நீங்க போயிட்டு ஒரு நாலு வருஷம் கழிச்சு வாங்க"

ரமேஷ் சோகமாகி,"கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க"

"என்னய்யா கன்சிடர் பண்றது? ஒரு பொண்ணு பார்க்க வர்றவங்க கூட பூ பழம் இனிப்புன்னு வாங்கிட்டு வர்றாங்க. நீங்க என்னடான்னா அட் லீஸ்ட் ஒரு பொக்கே கூட கொண்டு வராம வெறும் கையோட வந்திருக்கீங்க"

ரமேஷ், "ஒரு வேளை செலெக்ட் ஆயிட்டேன்னா உங்களுக்கு உடனே ஒரு பொக்கே குடுத்து ட்ரீட் குடுக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தேன்"

பெண்மணி, "அதென்ன ஒரு வேளை? அப்படின்னா உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இல்லையா?"

ரமேஷ் பதற்றமாகி, "அப்படி இல்லை.."

"வேற எப்படி ராமி? தன்னம்பிக்கை இல்லாத ஆள் கூட நான் எப்படி சுத்தறது? ஐ ஆம் சாரி. நீங்க போகலாம்" என்று கூறி முடிக்கவும் அவரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார் "ஹாய் ரமேஷ், எப்படிடா இருக்கே? நானா? இல்லை இல்லை, ஆக்சுவலி உன் கூட ஆறு மாசமா சுத்தி போரடிச்சிடுச்சு. அதனால வேற ஒரு ஆளைத் தேடிக்கிட்டிருக்கேன். என்னது? நீ ரீ-அப்ளை பண்ணப் போறியா? அனுபவசாலியாச்சே! கண்டிப்பா உனக்கு முன்னுரிமை உண்டு. இன்னிக்கா? கொஞ்சம் பிசி தான். இன்னும் ஒரு கேண்டிடேட் இருக்கான்னு நினைக்கறேன். முடிச்சிட்டு சொல்றேன், லவ் யூ, பை". பிறகு நிமிர்ந்து நம்ம ரமேஷைப் பார்க்கிறாள். "நீங்க இன்னும் போகலியா சார்?" போய்யா, போ... போயிட்டு நாலு வருஷம் கழிச்சு வா. அதுக்குள்ளே பாரின் இல்லேன்னா மல்டிநேஷனல் கம்பெனில ஒரு நல்ல வேலையில சேர்ந்துடு.


ரமேஷ், "ஒரே ஒரு கேள்வி, இப்படி அடாவடி பண்றீங்களே? இது உங்களுக்கே அடுக்குமா?"


பெண்மணி நக்கலாக, "நீங்க பண்ணாத அடாவடியா நாங்க பண்றோம்? எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் எங்களைப் போட்டு நசுக்கத் தான் போறீங்க. அதான் காற்றுள்ள போதே தூற்றிக்கறோம். இதான் கொள்கை விளக்கம், புரிஞ்சுதா? கிளம்பு"

சோகமாக வெளியே வரும் ரமேஷைப் பார்த்து அடுத்ததாகக் காத்திருக்கும் நபர், "என்ன பாஸ், என்ன சொல்றாங்க?"

ரமேஷ் வெறுப்பாக, "எல்லாம் ஐ வாஷ் பாஸ், ஏற்கனவே ஆளை பிக்ஸ் பண்ணிட்டாங்க."

"அப்படியா சொல்றீங்க? இப்ப என்ன பாஸ் பண்றது?"

ரமேஷ், "நாம என்ன சார் செய்ய முடியும்? எல்லாம் நம்ம பெரிசுங்க பண்ணின கூத்து. கள்ளிப்பால் ஊத்தி பெண் குழந்தைகளை எல்லாம் கொன்னுட்டானுங்க. அதனால அவங்க எண்ணிக்கை கம்மியாயிடுச்சு. நாம அதிகமாயிட்டோம். இப்ப நாம ஆள் கிடைக்காம அவஸ்தைப்படறோம். இப்படியே போச்சுன்னா நாம் எல்லாரும் "அவன்" ஆயிட வேண்டியது தான்"

கேள்வி கேட்ட நபர் சோகமாகவும், ரமேஷ் ஜாலியாக, "இதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க பாஸ், நாம வழக்கம்போல மூக்கு முட்ட குடுச்சிட்டு பிரியாணி சாப்பிடுவோம். முடிஞ்சா, "அழகான பாதகியே, என் நெஞ்சை நொறுக்கிய க்ராதகியே" அப்படின்னு ஒரு லவ் பெயிலியர் சாங் பாடுவோம். அப்படியாச்சும் இவங்களுக்கு நம்ம மேல இரக்கம் வருதான்னு பார்க்கலாம்"

". இருவரும் ஒருவர் மீது ஒருவர் கை போட்டுச் செல்கின்றனர்.





பெண்களை இழிவுபடுத்துவது எங்கள் நோக்கமல்ல. டிமாண்ட் உள்ளவர்கள் அதிகாரம் செலுத்துவது இயல்பு. ஆனால் மேலே சொன்ன கற்பனைக் கதை நிஜமாகும் வாய்ப்புகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தாய்ப்பால் தவிர வேற எந்தப் பாலையும் யாருக்கும் குடுக்காதீங்கன்னு தாழ்மையுடன் கேட்டுக்கறேன்.

Jayaraman
New Delhi
Related Posts Plugin for WordPress, Blogger...