தொடர்ந்து கேவலமாக ஆடி மறுபடியும் வெறும் வாய்க்கு அவல் குடுத்திருக்கிறார் சச்சின். இந்தத் தொடர் முடியும் முன்னரே அவர் கிரிக்கெட்டுக்கு முற்றும் போடுவார் அல்லது போட வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக சில பிரபலங்களை நாம் தொடர்பு கொண்ட போது:
"சிவாஜி" சுமன்:
என்னங்க சச்சின், படுபாவிங்க, இப்படிப் பண்ணிட்டாங்களே? ஆண்டவன் நல்லவங்களை ஏன் தான் இப்படி சோதிக்கறானோ? இப்ப என்ன பண்ணப் போறீங்க சச்சின்? பௌலிங் போடுவீங்களா? இல்லை பீல்டிங் பண்ணுவீங்களா? அய்யோயோ, அதுக்கெல்லாம் திடகாத்திரமாகவும் பார்ம்லேயும் இருக்கணும்னு சொல்லுவாங்களே? நான் வேணா மேலிடத்தில பேசி ஒரு வேலை வாங்கித்தரவா? என்ன வேலையா? அதான், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எல்லாரும் பண்றது - கிரிக்கெட் கமெண்டரி. முதல் போணி நானே பண்றேன், (ஆண்டவனை வேண்டிக் கொண்டு) இந்தாங்க மைக்.
சத்யராஜ்:
அட இந்த கருமத்துக்குத் தாங்க நான் ஹீரோவா நடிக்கறதையே நிறுத்திட்டேன். நம்மளால இந்த வாழ்க ஒழிக கோஷமெல்லாம் கேட்க முடியாது. அவரை விடுங்க, நம்ம ஜனங்களைப் பாருங்க. ஒரு பக்கம் பாரத் ரத்னா குடுக்கணும்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் கிரிக்கெட்டை விட்டுப் போயிடுன்னு காறித்துப்பாத குறையா பேசறாங்க. இவங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலையே?
வைகோ:
கி.பி ஏழாம் நூற்றாண்டில் ரோமாபுரியை ஆண்ட கிங் ஜார்ஜுக்கு வந்த அதே சிக்கல் சச்சினுக்கும் வந்திருக்கிறது. பாரதத்தில் துரியோதனன் கர்ணனைப் பார்த்துக் கேட்டானே "எடுக்கவோ, கோர்க்கவோ" - அதே கேள்வியை சச்சினின் முன் வைக்கிறேன். நீங்கள் கிளீன் போல்டு ஆனதில் சிதறிய பெயில்ஸ்களை எடுக்கவோ, அல்லது LBW ஆகி காலிலிருந்து கழன்ற பேடுகளை கோர்க்கவோ? உங்களுக்குள் ஒரு அரசியல்வாதி இருக்கிறான். அவனை விளையாட்டாக எண்ணாதீர்கள். நீங்கள் ஆட வேண்டிய களம் வேறு. அதை புரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர்:
சச் என்றால் ஹிந்தியில் உண்மை என்று பொருள். தன பெயருக்கேற்ப மைதானத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, அவர் என்றுமே உண்மையாகத்தான் இருந்திருக்கிறார். சச்சின் சாதனை நாயகன். அவருக்கு சறுக்கலாம். ஆனால் அவர் சரிய மாட்டார் என்றே நம்புகிறேன். மக்களின் போற்றலும் தூற்றலும் அவருக்குப் புதிதல்ல. இன்று ஏளனம் செய்பவர்கள் ஒரு காலத்தில் அவருக்குச் சாளரம் வீசியவர்கள் தான். வளர்த்த கடா மார்பில் பாய்வது உலக வழக்கம்.
கமல்:
சாதனை பாதி, சோதனை மீதி எனக் கலந்து செய்த கலவை சச்சின். அளவுகோல் வேறாக இருந்தாலும் நானும் சச்சினும் "விஸ்வரூபம்" எடுத்தவர்கள் என்ற உரிமையில் சொல்கிறேன், இது மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் காலம். இங்கே தோல்வி அடைவது குற்றம். அப்படித் தோற்றால் உங்களுக்குத் துவளக் கூட நேரம் தராமல் தூக்கி எறிந்து விடும் பிளாஸ்டிக் மனிதர்களின் காலம் இது. இந்த பிளாஸ்டிக் மனிதர்களுக்கு நடுவே வாழும் நிஜ மனிதன் சச்சின். அவர் செய்த சாதனைகள் பிளாஸ்டிக் போல - அழியவே அழியாது.
விஜய்:
"ண்ணா", பன்ச் பேசி வீணாப் போயிட்டிருந்த நானே ரூட் மாறி நண்பன், துப்பாக்கின்னு ஏதோ ஓரளவுக்கு மேல வந்துக்கிட்டிருக்கேன். நீங்களும் அதே மாதிரி ரூட் மாறி போயிடுங்க.
வைரமுத்து:
சச்சின் - தொடர் தோல்வி, மேட்ச் பிக்சிங் புகார் என அடுத்தடுத்து பல தொடர் புயல்கள் இந்திய கிரிக்கெட் எனும் கப்பலை தாக்கிக் கொண்டிருந்த போது தன் பேட்டிங் எனும் நங்கூரத்தைப் பாய்ச்சி மூழ்கவிருந்த கப்பலை தூக்கி நிறுத்தியவன் சச்சின். அவர் இந்திய கிரிக்கெட்டின் சிவாஜி கணேசன். கிரிக்கெட்டின் ஒட்டு மொத்த அகராதி. அதனால் தானோ என்னவோ அவரை நூலகத்தில் வைத்து அழகு பார்க்க ஆசைப் படுகின்றனர் சில அற்பப்பதர்கள்.
சந்தானம்:
பொதுவா மாலைக் கண் நோய் வரும், ஆனா உங்களுக்கு பகல் கண் நோய் வந்திருக்கு போல. அதான் கண்ணு மண்ணு தெரியாம ஆடி அசிங்கமா அவுட் ஆகறீங்க. வர வர உங்க ஆட்டம் டாஸ்மாக்ல கழுத்து வரைக்கும் குடிச்சிட்டு வர்றவன் மாதிரி ஒரே தடுமாற்றமா இருக்கு. டைம் இருந்தா வாங்க, பாண்டிச்சேரிக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம். பேட்டிங் சும்மா நாபிக்கமலத்திலேர்ந்து கிளம்பி வரும்.
கவிஞர் வாலி:
பறபற, சடசட - இதெல்லாம் இரட்டைக்கிளவி. அதே மாதிரி கிரிக்கெட்டும் பார்மும் இரட்டைக்கிளவி தான். ஒண்ணு இல்லேன்னா இன்னொண்ணு இல்லை. கிரிக்கெட் தெரியாம பார்ம் மட்டும் இருந்தா ரொம்ப நாளைக்கு வண்டி ஓட்ட முடியாது. கிரிக்கெட் தெரிஞ்சு பார்ம் இல்லேன்னா பிரயோஜனம் இல்லை. சச்சின் இரண்டாவது வகையறா. சீக்கிரம் பார்முக்கு வாங்க. இல்லேன்னா கூடிய சீக்கிரம் பார்ம் ஹௌஸ்ல உட்கார்ந்து பேப்பர் படிக்க வேண்டியது தான்.
ரஜினி:
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கை விட மாட்டான்னு சொன்னவனும் நான் தான். உன் வாழ்க்கை உன் கையில்னு சொன்னவனும் நான் தான். நீங்க நல்லவர். அதனால தான் ஆண்டவன் உங்களை சோதிக்கறார். ஆனால் உங்க வாழ்க்கை உங்க கையில் தான் இருக்கு. அதை கவனிக்காம விட்டீங்கன்னா அப்புறம் ஆண்டவனை குற்றம் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல. நம்ம உடம்பு ஒரு கார் மாதிரி என்ன தான் எஞ்சின் நல்ல கண்டீஷன்ல இருந்தாலும் ஒரு ஹெட் லைட் எரியலேன்னாக் கூட வண்டி ஓட்ட முடியாது. மனுஷன் வாழ்க்கையை பாருங்க, எப்பவுமே குழந்தையாவா இருக்கான்? குழந்தையா இருந்தவன் ஒரு குழந்தையை பெத்து வளர்க்கற அளவுக்கு பெரியவனா மாறி பிறகு வயசான காலத்துல ஒண்ணும் செய்ய முடியாம தன்னோட குழந்தைக்கே ஒரு குழந்தையா மாறிடறான். நம்ம வாழ்க்கையிலேயே நாம ஒரு நிலையா இருக்கறதில்ல. மாற்றம் தான் நிரந்தரம். இந்த கிரிக்கெட்டல்லாம் அதில சும்மா ஒரு சீசன் தான் - மாயா சாயா சாயா மாயா. இதை புரிஞ்சிக்கிட்டீங்கன்னா உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment