Sunday, November 18, 2012

துப்பாக்கி - திரை விமர்சனம்











ராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் விஜய்க்கு தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான நூல் கிடைக்கிறது. அதை வைத்து அவர் எப்படி மாஞ்சா போட்டு காத்தாடி விடுகிறார் என்பதை இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு நீட்டி முழக்கியிருக்கிறார்கள்.


மும்பைக்கும் குண்டுவெடிப்பிற்கும் இணை பிரியாத தொடர்பு இருப்பதால் அதையே கதைக்களமாக்கியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். அதற்கேற்றாற்போல் ஏகப்பட்ட ஹிந்தி வசனங்கள்.

படத்தில் எல்லா ஹிந்திக்காரர்களும் தீவிரவாதிகளும் தமிழ் பேசுகிறார்கள். மணிரத்தினத்தின் ரோஜாவிலேயே தீவிரவாதி தமிழ் பேசிவிட்டதால் நாம் இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.

விறுவிறுப்பான, தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய ஆக்ஷன் ப்ளாக்குகள், கதைக்களம் அனைத்தும் திரைக்கதையில் இருக்கும்போது வம்படியாக ஒரு ஹீரோ அறிமுகப் பாடல், பிறகு ஹீரோயின் தேடல், நடுவே ஊடல், பிறகு டூயட், க்ளைமாக்ஸில் வில்லனுடன் ஒண்டிக்கு ஒண்டி பைட் போன்ற வழக்கமான சமாச்சாரங்களை தவிர்த்திருக்கலாம். அதிலும் ஆரம்பத்தில் விஜய் தன் நண்பருடன் போடும் விளையாட்டுச்சண்டை அனாவசியம்.

கருமமே கண்ணாக செயல்படும் வீரனாக விஜய் நடித்திருக்கிறார். நண்பனைப் போல் இதிலும் மிகவும் அடக்கி வாசித்திருப்பது சந்தோசம். தீவிரவாதிகளைப் பிடிக்க தன் தங்கையையே பணயம் வைக்கத் தயங்காதவர் கடைசியில் கிளைமாக்ஸுக்கு முன்னால் சென்டிமென்ட் பேசுவது யதார்த்தமாக இருந்தாலும் கேரக்டரை டேமேஜ் செய்து விடுகிறது.

ராணுவம் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் நாட்டுப் பற்று தொடர்பான காட்சிகளோ வசனங்களோ வைக்காதது மிகவும் புதுமை. ஆனால் முழு நீள ஆக்ஷன் கதையில் தேவையில்லாமல் ராணுவ குடும்ப செண்டிமெண்டை புகுத்த முயன்று அதை சரிவரச் சொல்லாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களே, தயவு செய்து கொஞ்ச காலத்திற்கு இசையமைக்காமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பின்னணி இசையில் இப்படியா அப்பட்டமாக காப்பியடிப்பீர்கள்? பாடல்கள் வழக்கம் போல் முந்தைய படங்களை நினைவூட்டுகின்றன.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் கவர்ச்சி காட்டிய காலம் போய் இப்பொழுது காமெடி பீசாக மாறி வருகின்றனர். இந்தப் படத்திலும் காஜல் அகர்வால் அதை செவ்வனே செய்திருக்கிறார்.

எல்லா விஷயத்திலும் லாஜிக் பார்க்கக் கூடாது தான். அதற்காக மும்பை போலிசின் ஒட்டு மொத்த கண்ட்ரோல் ரூமையும் சத்யன் ஒருவரே தனியாளாய் நின்று சமாளித்து விஜய்க்கு உதவுவது எல்லாம் ரொம்ப ஓவர் சார்.

விஜய்யின் வீடு பார்ப்பதற்கு பங்களா போல் இருக்கிறது ஆனால் அவரது குடும்பத்தினர் டாக்சியில் ஒருவர் மீது ஒருவர் மடியில் அமர்ந்து வருகின்றனர். இது எந்த ஊர் நியாயமோ?

மும்பை போலிஸ் தலைமையக கான்டீனில் அமர்ந்து விஜய் புதிய தலைமுறை சேனல் பார்க்கிறார் - உங்க தமிழ்ப் பற்றுக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் முருகதாஸ்?

மும்பை, ராணுவம் போன்ற பின்னணி இல்லாமல் தமிழ்நாட்டை மையமாக வைத்தே இதை ஒரு முழுநீள ஆக்ஷன் படமாகக் கொடுத்திருக்கலாம் - ஒரு வேளை அது வழக்கமான போலிஸ் ஸ்டோரி ஆகி விடுமோ என்று முருகதாஸ் நினைத்திருக்கலாம்.

வித்யாசமான ஆக்ஷன் காட்சிகளுக்காக ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம் (நீங்கள் பார்ப்பதற்கு உருப்படியாக வேறு படமும் இல்லை என்பது கூடுதல் தகவல்).


Jayaraman

New Delhi












No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...