Monday, April 15, 2013

IPL 6 | டரியல் - 1





போட்டி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் நம்ம IPL அணியினர் என்ன மனநிலையில் இருக்காங்கன்னு தெரிந்து வர ஒரு ரவுண்டு கிளம்பினோம்:

டெல்லி:

எல்லோரும் எழவு வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் போல் இருக்க, நம்ம செஹ்வாக் மட்டும் ஆனந்தமாக லஸ்ஸி அருந்திக் கொண்டிருந்தார். நாம் அவர் அருகே சென்று,

"என்ன சார் டீம் தொடர்ந்து உதை வாங்கி சோகத்தில் இருக்கு. நீங்க என்னடான்னா....".

"ஆமாம்பா, டெல்லி டீம் தொடர்ந்து எல்லா மேட்சும் உதை வாங்குதாம். இந்தப் பசங்க எல்லாம் டல்லா இருக்காங்க"

"சார், அது உங்க டீம் சார்"

"அப்படியா? ஒஹ், அதான் எனக்கு இந்த சிகப்பு கலர் டிரஸ் குடுத்திருக்காங்களா? நான் பெங்களுரு அணின்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்"

"சரியா போச்சு, கலர் பிரச்சினை வேறயா?"

"என்ன பண்றது தம்பி, ஏதோ முதியோர் கோட்டாவுல இங்க ஒரு சீட் குடுத்திருக்காங்க, எப்படியாச்சும் இந்த வருஷம் மேனேஜ் பண்ணிட்டேன்னா மேக்சிமம் சமாளிச்சிடுவேன்"

"சுத்தம்..., நாங்க வர்றோம்"

"அப்புறம் தம்பி, இந்த டிரஸ் மேட்டர் நமக்குள்ளேயே இருக்கட்டும். நான் ஒரு அதிரடி ஆட்டக்காரன்னு இந்தப் பசங்க கிட்ட சொல்லி வெச்சிருக்கேன். கம்பெனி சீக்ரெட் வெளிய தெரியாம பாத்துக்குங்க"

கொல்கட்டா:

இங்கே நாம் அனுப்பியது நம்ம கவுண்டரை:

உள்ளே நுழைந்ததும் கம்பீரைப் பார்த்து, "என்னடா, ஓட்டை வாய் நாராயணா, எப்படி இருக்கே? விளையாடறியோ இல்லையோ, மூஞ்சியை மட்டும் பேருக்கேத்த மாதிரி கம்பீரமா வெச்சிக்கற. ஆனா உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் இப்படித் தான் இருப்பாங்க"

"ஹெலோ, யாருங்க ஓட்டை வாய்?"

"நீ தான், சின்னப் பய விராட் கிட்ட போய் உன் வீரத்தைக் காட்டறியே, வேறென்ன சொல்ல?"

"அதெல்லாம் ஒரு ப்ளோவுல வர்றது, நாங்கல்லாம் ஒரு துடிப்போட விளையாடற டீம்"

"பார்த்து மகனே, ஓவரா துடிக்காதே. அப்புறம் நாடித் துடிப்பு அடங்கிடப் போகுது"

"அது சரி, நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? வேவு பார்க்கவா?"

"ஆமாம், இது ;பெரிய ISRO விஞ்ஞானக் கூடம். வேவு பார்க்க வந்தாங்க.டீமுக்குக் கல்கத்தா பேரை வெச்சிக்கிட்டு ஒரு பெங்காலி கூட டீம்ல இல்லையே? எல்லாம் சும்மா பேச்சுத்தானா? எங்க உங்க திக்கு வாய் முதலாளி? மட்டை ஆயிட்டானா?"

"ஹெலோ, மரியாதையாப் பேசுங்க"

"அடேங்கப்பா, முதலாளியைத் திட்டினதும் அள்ளக்கைக்கு என்ன கோவம் வருது!!. உங்க முதலாளியை கொஞ்சம் ஒழுங்கா இருக்கச் சொல்லு. மும்பையில பண்ணின மாதிரி இங்கேயும் தண்ணியப் போட்டு கலாட்டா பண்ணப் போறான். அங்கேயாச்சும் க்ரௌண்டை விட்டு ஒதுக்கி வைச்சாங்க. இங்க குழி தோண்டி புதைச்சுடுவாங்க - சொல்லி வை"






சன்ரைசர்ஸ்:

இங்கே நாம் அனுப்பியது சிவகார்த்திகேயனை:

"மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் வாழ்க, தமிழினம் வாழ்கன்னு உங்க தாத்தா இந்த வயசிலேயும் முழங்கிக்கிட்டு இருக்கார். நீங்க என்னடான்னா உங்க டீமுக்கே ஒரு சிங்களவனை தலைவனாப் போட்டிருக்கீங்களே? இதெல்லாம் நியாயமே இல்லை சார்.

"டேய் தம்பி, அது வேறு இது வேறு. நாங்க மட்டும் பரிசு ஜெயிச்சோம்னா பாதிப் பரிசுத் தொகையை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணமாக் குடுக்கறதா இருக்கோம் தெரியுமா?"

"அடேடே, எங்க அண்ணன் விவேக் சொன்ன மாதிரி சமைச்ச ஆடு மற்றும் மாட்டுக் கறியை இலையில் வெச்சு சாப்பிடுவீங்க. அப்புறம் அந்த எச்ச இலையை மாட்டுக்குப் போடுவீங்களா? பயங்கரமான மனித நேயம் சார்"

"தம்பி, நீ ரொம்பப் பேசறே, கிளம்பு. அப்புறம் நாங்க ஆட்சிக்கு வந்தா உன் படம் ஒண்ணு கூட ரிலீஸ் ஆகாது, ஜாக்கிரதை"

"ஐயோ சார், வேணாம், நான் ஜூட் விடறேன்"

பெங்களுரு:
(தொலைக்காட்சி நேரலை நிருபர் ஸ்டைலில் படிக்கவும்):

"ப்ரியா, இப்ப நான் பெங்களுரு அணி தங்கியிருக்கற ஹோட்டலில் இருந்து தான் பேசறேன். கடைசி பால் நோ பால் போட்டு சொதப்பிய RP சிங் மேல ஒட்டுமொத்த டீமும் ஏகக் கடுப்புல இருக்காங்க. நான் அவரை பார்க்க முயற்சி பண்ணினேன். ஆனா எல்லாரும் சேர்ந்து அவரை நல்லாக் குமுறியிருப்பாங்க போல. அவர் இருக்கற ரூம் பக்கம் கூட யாரும் போக முடியலை.
நான் இனிமேல் நோ பால் போட மாட்டேன்" அப்படின்னு விராட் கொஹ்லி அவரை 1008 தடவை இம்போசிஷன் எழுதச் சொல்லியிருக்கறதாகவும் இங்க ஒரு செய்தி நிலவுது. இது வரைக்கும் விஜய் மால்யா மேட்ச் பார்க்க வர்றாரே ஒழிய அணி வீரர்களை ஒரு தடவை கூட சந்திக்கலை. இது வீரர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கு. ஏர்லைன்ஸ் மாதிரி இவங்களுக்கும் சம்பள பாக்கி ஆயிடுமோன்னு எல்லோரும் கவலைப்படறாங்க. இன்னொரு ருசிகரமான தகவல் என்னன்னா வழக்கமா தீபிகா படுகோனே மைதானத்துக்கு வருவாங்க இந்த தடவை வரலை. விராட் கொஹ்லிக்கு பயந்து சித்தார்த் அவரை ஒளிச்சு வெச்சிருக்கறதா இங்க ஒரு கிசு கிசு ஓடிக்கிட்டிருக்கு.





ராஜஸ்தான்:
முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்டும், நேர்மையாகவும் விளையாடும் இவர்களைக் கிண்டல் செய்ய மனம் வரவில்லை. அதற்கு டிராவிட்டும் ஒரு காரணம். இந்த வயதிலும் கரணம் அடித்துக் கேட்ச் பிடிக்கும் அவரின் உற்சாகம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. சீசனுக்கு வந்து போகும் பறவை போல் எல்லோரும் ஏனோ தானோவென்று ஆடுவது இந்த அணியின் பலவீனம். வழக்கம்போல் உற்சாகமாக ஆரம்பித்து முடிவில் சொதப்புவார்கள் என்று திடகாத்திரமாக நம்புகிறோம்.

மும்பை இந்தியன்ஸ்:

"அடடாடா, ரெண்டு கிழட்ஸ் ஓபனிங் இறங்கி என்னமா ஆடுதுங்க, இளைஞர்களே நோட் பண்ணுங்கப்பா! சர்தாரும் பாண்டிங்கும் சண்டை போடுவாங்கன்னு பார்த்தா ஒண்ணும் பெரிசா நடக்கலியே? அது சரி, இன்னும் ஒரு மாசம் இருக்குல்ல! ஆனா ஊனா அம்பானி மேடம் ஆரம்பிச்சிருக்கற பள்ளிக்கூடத்தைப் பத்தி காமிச்சே கடுப்பேத்தறாங்க. மும்பை இந்தியன்ஸ் அணியில் பந்து பொறுக்கிப் போடுபவரின் குழந்தைக்கு அந்தத் திட்டத்தின் கீழ் கல்வி கிடைக்குமா? நல்லதே நடக்கட்டும்.





பஞ்சாப்:
இங்கே சென்றது சிவகார்த்திகேயன் (எல்லாம் ப்ரீத்தி ஆன்ட்டி தான் காரணம்)

"ஆன்ட்டி, வழக்கம் போல இந்த வருஷமும் உங்க டீம் தான் காமெடி பீசாமே?"

"யாரைப் பார்த்து ஆன்டின்னு சொல்ற, எனக்குள்ள இன்னமும் இளமை ஊஞ்சலாடுது. அன்னிக்கு நான் போட்டுக்கிட்டு வந்த ரெட் டிரஸ் எப்படி? செம கிளாமர்ல?"

"நீங்க கிளாமர்னு சொல்றீங்க. ஆனா ஜனங்க ப்ரீத்தி கிட்ட சீர் லீடர்சுக்கு குடுக்க காசு இல்லை. அதனால அவங்களே அரையும் குறையுமா வந்துட்டாங்கன்னு கிண்டல் பண்றாங்க"

"யெஸ், எங்க டீமை சியர் பண்ணத் தான் வந்தேன்"

"பார்த்து மேடம், பிரவின் குமார் ஒரு மாதிரி. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டான். சியர் பண்ண வந்த உங்களை சீரழிச்சுடுவான்."

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும், நீ கிளம்பு"

"ஓகே மேடம், இன்னும் எவ்ளோ வருஷத்துக்கு டீமை இப்படி நஷ்டத்துல ஓட்டறதா உத்தேசம்?"

"வாடியா பேர்ல இன்னும் கொஞ்சம் சொத்து இருக்கு. அதையும் அடகு வெச்சிட்டோம்னா கூடிய சீக்கிரம் மங்களம் பாடிடுவோம்"





புனே:
ஒவ்வொரு மேட்ச்சுக்கும் ஒரு கேப்டன், இஷ்டம் இருந்தா விளையாடறாங்க, இல்லேன்னா எல்லாரும் வந்த வேகத்திலேயே திரும்பிடறாங்க. சத்தியமா இந்த டீமை புரிஞ்சுக்க முடியலை. இப்போதைக்கு ஜஸ்ட் பாஸ் வாங்கியிருக்கு. இனிமே எப்படி ஆடறாங்கன்னு பார்க்கணும்.

சென்னை :
சிவா தோனியை சந்தித்து "என்ன பாஸ், மெட்ராஸ் வெயில் தாங்காம மொட்டை போட்டுட்டீங்களா?

தோனி ,"ஆமாம்பா, செம காட்டு"

"ஏன் சாரி, டீம் உங்களை மட்டுமே பெரிசா நம்பற மாதிரி ஆயிட்டு வருதே? இது சரியா?"

"நம்ம டீம்ல என்னிக்கு எவன் ஸ்டெடியா ஆடியிருக்கான்? போதாக்குறைக்கு எங்க பார்த்தாலும் டாஸ்மாக் வேற. ஒரே கலப்படம். எப்படியா நிதானமா ஆடறது?"

"அதுவும் சரி தான். பூனே கிட்ட இப்படி தோக்கலாமா?"

"நம்ம டீம் மிடில் கிளாஸ் டீம் தம்பி. வெற்றி தோல்வின்னு மாறி மாறி வரும்"

"தத்துவம் எல்லாம் சொல்றீங்க"

"அது கிடக்குது கழுதை, ஆமாம், தமிழ் சினிமாவுல இப்போ லேட்டஸ்ட் ஹீரோயின் யாரு? உங்க கூட அடிக்கடி ஒரு பொண்ணு நடிக்குதே? அது எங்க இருக்கு?"

"எதுக்கு கேட்கறீங்க? அதுவும் என்னைப் பார்த்து ஏன் கேட்கறீங்க?"

சும்மா, பைக்ல ஒரு ரவுண்டு போகத் தான்"

"அதான் நிரந்தரமா ஒரு சவாரியை கூட்டியாந்திருக்கீங்களே, இன்னுமா இந்த பழக்கம்?"

"சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன். நீ பாட்டுக்குக் கோத்து விட்டு போயிடாதே. இப்ப தான் லக்ஷி ராய் பிரச்சினை ஒஞ்சிருக்கு "

"இந்த வருஷம் கப் ஜெயிப்பீங்களா?"

"அது ஏழுமலையான் கையில் இருக்கு"

"யூ மீன் லார்ட் ஸ்ரீநிவாசன்?"

"அவரே தான்!. ரொம்ப கேள்வி கேட்கறே, கிளம்பு"
















1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...