Sunday, October 6, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 17

மூன்றாம் ஆண்டு இறுதிப் போட்டி - சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு  இடையே இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது.

சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. மொஹிந்தர் ஆடுகளத்தைப் பற்றியும் வெளிவட்டத்தைப் பற்றியும் வழக்கம்போல் ஆங்கிலத்தில் ரீல் விட்டுக் கொண்டிருந்தான். ஷயன் "எங்கள் ஊர்" அட்வான்டேஜ் இருப்பதால் எப்படியும் ஜெயிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தான்.

*********************************************************************************


ராதேவின் போன் ஒலித்தது. எதிர் முனையில் குருஜி.

"சொல்லுங்க குருஜி"

"எல்லாரும் ரெடியா?"

"பக்காவா"

சென்னை குறைந்தபட்சம் 10 பைசா, மும்பை 15 பைசா (லட்சம்)

"ஒகே ஜி"

ராதே தனது மினி தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் பிற புக்கிகளையும், பெரும்புள்ளிகளையும் தொடர்புகொண்டு மேற்குறிப்பிட்டது போல் பந்தயப்பணத்தை சேகரிக்க ஆரம்பித்தான்.

*********************************************************************************

டாஸ் போட்டுவிட்டு டிரெஸ்ஸிங் அறைக்கு வந்தான் மொஹிந்தர். வாசலில் ரகு நின்றிருந்தான்.

"என்ன ரகு இங்க நிக்கறே? வழக்கம் போல உன் ராசியான இடத்தில் போய் நில்லு"

"இதோ போறேன், மறுபடியும் பைனல்ஸ் வந்திருக்கோம். அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு"

"அதெல்லாம் கவலைப்படாதே. ______கட்டி மலையை இழுப்போம்.  வந்தா மலை, போனா _____ - அவ்ளோ தான் நம்ம கொள்கை, வர்ட்டா?"

"சரி நான் போறேன், எதாச்சும் புதுசா ப்ளான் பண்ணியிருக்கியா?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை, அதே அதே சபாபதே"

"ஆல் தி பெஸ்ட்"

"தேங்க்ஸ்"

போட்டி தொடங்கியது. 

*********************************************************************************
5 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 29 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் இழப்பு எதுவும் இல்லை.

ரகு ராதேவை தொலைபேசியில் அழைத்தான். "நீங்க சொன்ன மாதிரி ஒண்ணும் நடக்கலியே? கண்டிப்பா நாங்க தானே ஜெயிக்கறோம்?"

"அதுக்குள்ளே சந்தேகமா? விட்டுத் தான்யா புடிக்கணும்"

*********************************************************************************

7வது ஓவர்.

இலங்கை வீரர் வீசிய பந்தை அடிக்கப் போய்  மிக எளிதாக கேட்ச் குடுத்து வெளியேறினான் துவக்க ஆட்டக்காரர் கிருஷ்ணன். அடுத்து விளையாடக் களம் இறங்கிய ரமேஷ் "என்னடா, பழம் மாதிரி அவுட் ஆயிட்டே" என்று கிருஷ்ணனைத் திட்டிக் கொண்டே ஆடுகளத்தை நோக்கி ஓடினான். ஆட்டம் துவங்கியது - உள்ளேயும் வெளியேயும்.

ரமேஷின் கேட்சை இரண்டு முறை தவறவிட்டது, 2வது விக்கெட்டுக்கு முருகன் வருவானா மொஹிந்தர் வருவானா, எலும்புமுறி வீரரின் பந்தில் மொஹிந்தர் சிக்ஸர் அடிப்பானா மாட்டானா, சென்னை அணி 150க்கு மேல் எடுக்குமா அல்லது 200 தாண்டுமா - இப்படி அடுக்கடுக்காக எல்லோரும் மாற்றி மாற்றி பணத்தால் விளையாடிக் கொண்டிருந்தனர். சென்னை-மும்பை-ஜெய்ப்பூர்-பரோடா-புனே-டெல்லி-சிம்லா-லாகூர்-கராச்சி என்று தொலைபேசி அழைப்புகள் பறந்தவண்ணம் இருந்தன. தேவைக்கதிகமாக பணம் இருந்தாலும் மனிதர்கள் அலை பாய்வதும் கரை புரள்வதும் புரியாத புதிராக இருக்கிறது.

ஒரு வழியாக சென்னை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெற்றி பெற மும்பைக்கு 169 ரன்கள் எடுக்க வேண்டும் - ஆட்ட இடைவேளை

*********************************************************************************

"யோவ் ராத்தோர், நாடு முழுக்க பெட்டிங் கால்ஸ் மும்பை மூலமா பறக்குது. புடிச்சு உள்ளே போடாம வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கியே?" என்று போனில் பாய்ந்தார் டெல்லி கமிஷனர் அஜய்.

"என்னங்க பண்றது? எல்லாம் பெரிய இடம். தலைவர் இப்போதைக்கு வேடிக்கை மட்டும் பார்க்கச் சொல்லியிருக்கார்"

"யாரு? பழைய தலைவரா?"

"ஆமாம், ஆமாம்"

அந்த ஆளுக்கு மட்டும் எப்படி இவ்ளோ பவர்? அதுவும் பதவியில் இல்லாதபோதும்?

"நீங்க வேற, டெல்லி மருமகன் குடுமியே அவர் கையில் தான் இருக்கு. அதனால தான் விவசாயம் சம்பந்தமா அவர் எடுக்கற முடிவுகளை மத்திய அரசு தடை பண்றதே இல்லை."

"அவனுங்கெல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. நாம தான்யா அதிரடியா எதாச்சும் செய்யணும். எதாவது எக்குத்தப்பா நடந்தா மன்னிப்பு கேட்டுக்க வேண்டியது தான். 10 வருஷத்துக்கு முன்னாடி தென்னாப்பிரிக்காவில் நாங்க பண்ணலை? "

"அப்போ டெல்லியிலும் மத்தியிலும் ஆட்சி ரோஜாக் கட்சி கிட்ட இருந்தது. அவங்க யாருக்கும் அதில தொடர்பு இல்லை. அதனால புகுந்து விளையாடினீங்க. இப்போ அப்படியா?"

"நீ சொல்றதும் சரி தான். இப்போ எவன் எங்க திருடறான், யாருக்கு யார் கூட லிங்க் இருக்குன்னே சொல்ல முடியல"

"எங்க போயிடப் போறானுங்க? என்னிக்கு இருந்தாலும் நம்ம கிட்ட அடியும் கொஞ்சம் களியும் வாங்கித்தான் ஆகணும். பாப்போம்"

********************************************************************************
"நான் என்னங்க பண்ணட்டும்? கடைசி ஓவர் கேட்டு வாங்கிப் போட்டேன். நானும் எவ்ளோ தான் வைடா போடறது? போதாக்குறைக்கு தாறுமாறா ஓடி ரன் அவுட் வேற ஆகறாங்க. இல்லேன்னா நீங்க சொன்ன மாதிரி 3 சிக்ஸ் கண்டிப்பா குடுத்திருப்பேங்க, என்னை நம்புங்க" என்று யாரிடமோ போனில் மன்றாடிக் கொண்டிருந்தான் மும்பை பௌலர் லலித் கலிங்கா

********************************************************************************

"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன், ஒரே படபடப்பா இருக்கியே? என்ன விஷயம்?" என்று ரகுவைப் பார்த்துக் கேட்டான் மொஹிந்தர்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. பைனல், ஸ்கோர் வேற கம்மி, அதான்..."

"நானெல்லாம் பத்தாம் கிளாஸ்ல பெயில் ஆனதுக்கே அசரலை. இது ஆப்டர் ஆல் கிரிக்கெட் மேட்ச், இதுக்குப் போய் இப்படி அலட்டிக்கறே?"

உனக்கென்ன? கூலாத்தான் இருப்பே, நான் தானே பணம் போட்டிருக்கேன்"

"நம்ம நட்பின் காரணமாக் கேட்டேன், சீரியஸா எடுத்துக்காதே.சரி, போன்ல யார்கிட்ட அடிக்கடி பேசிக்கிட்டிருந்தே?

" பாரு மீட்டிங் போயிருக்கா, அதனால அவளுக்கு லைவ் ஸ்கோர் சொல்லிக்கிட்டிருந்தேன்..."

"அப்படியா? அப்போ அங்கே  உட்கார்ந்திருக்கறது யாரு..?" என்று எதிரே கை காட்டி விட்டு கையுறைகளை எடுத்துக் கொண்டு மைதானத்தை நோக்கி விரைந்தான் மொஹிந்தார்.

மொஹிந்தர் கை காட்டிய திசையில் பாரு தன் பிள்ளைகள் மற்றும் நண்பர்களுடன் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தாள். ரகுவுக்குக் குப்பென்று வியர்த்தது.

*******************************************************************************

"பாய், சென்னை மேல எக்கச்சக்கமா பணம் புக் ஆகியிருக்கு" என்றார் குருஜி.

"அப்போ வழக்கம் போல கவுத்திட வேண்டியது தான். முதல் ஓவர் அந்த வெள்ளைக்காரன் தானே போடப் போறான்?"

"ப்ளான் படி அவன் தான்"

"ஓகே ஓகே."

இவர்கள் எல்லோரிடமும் தொடர்புடையவர்கள். குறிப்பிட்ட ஒரு நபரை மட்டும் நம்புவதில்லை.

*******************************************************************************

இடைவேளைக்குப் பின் ஆட்டம் துவங்கியது.

சேகர் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருந்தான். எதிர் முனையில் ஷயன். ஆனால் பந்து வீச வந்ததோ தமிழகத்தைச் சேர்ந்த அசோகன்.

"ஏன் இப்படி பண்றான்" என்று ரகு யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் போன் அலறியது. எதிர் முனையில் பாலா.

"டேய், இப்போ திடீர்னு மும்பை ஜெயிக்கணும்னு சொல்றாங்கடா"

இன்னொரு லைனில்  இருந்த ராதே "ரகு சாப், இங்க நிலைமை மாறிடுச்சு. அதனால நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் ஆகணும். நீங்க பைனல் வரைக்கும் வர்றதுக்கு நாங்க நிறைய தடவை உதவி பண்ணியிருக்கோம். நன்றி மறக்காதீங்க.

"அப்படியெல்லாம் பண்ணாதீங்க ராதே, எங்களை ஜெயிக்க வைப்பீங்கன்னு தான் இவ்ளோ முயற்சிகளும் பண்ணினோம். இப்போ திடீர்னு பாய் மும்பை ஜெயிக்கணும்னு சொல்றார்னு சொல்றீங்க. அதெல்லாம் முடியாது" என்று கடுப்புடன் சொன்னான் ரகு.

"அதெல்லாம் பாயோட கணக்கு. உங்களுக்குப் புரியாது. சொன்னப்படி செய்ங்க" என்று போனை படக்கென்று வைத்தான் ராதே.

"என்னடா இப்படிச் சொல்றான்?" என்றான் ரகு.

"இதெல்லாம் சகஜம்டா. மக்கள் எந்த டீம் மேல பெட் அதிகமா கட்டறாங்களோ இவங்க அதுக்கு எதிரா போவாங்க. உள்ளே புகுந்து நம்மளை மாதிரி ஆளுங்களைப் புடிச்சு பிக்சிங் பண்ணி அப்படியே மேட்சை கவுத்திடுவாங்க. அப்போ தானே அவங்க சம்பாதிக்க முடியும்?"

"சேம் சைட் கோல் போடச் சொல்றே?" வெறுப்பாகச் சிரித்தான் ரகு.

"அதுக்குப் பேர் தான்டா பிக்சிங்"

*******************************************************************************

10 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை அணி 58 ரன்கள் எடுத்திருந்தது.

"என்ன பாய், போக்கே சரியில்லையே?" என்றார் குருஜி.

"அதான் பார்க்கறேன். இந்த மொஹிந்தர் பய ஏதோ பண்றான்"

*******************************************************************************

15 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை 5  விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள்  எடுத்திருந்தனர்.

ரகுவின் அலைபேசியில் ராதே. "ரொம்ப பண்றீங்க ரகு. ஒரே ஓவர்ல 2 விக்கெட்"

"ராதே, ப்ரேக் டைம்ல கூட அவன் கிட்ட பேச்சு குடுத்துப் பார்த்தேன். எதுவும் சொல்ல மாட்டேங்கறான். என் கட்டுப்பாட்டில் இப்போ எதுவும் இல்லை. இனிமே போன் பண்ணாதீங்க" என்று அழைப்பைத் துண்டித்தான் ரகு.

*******************************************************************************

பாக்ஸில் அமர்ந்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் எழுந்து கழிவறையை நோக்கிச் சென்றான். போகிற வழியில் உதவியாளரை பின் தொடருமாறு சைகை செய்தான்.

"சொல்லுங்க ஐயா"

"மேட்ச் போற போக்கு சரியில்ல. நாம ஜெயிக்கறது கஷ்டம். காஞ்சிலால் கிட்ட சொல்லி பணத்தை சென்னை மேல திருப்பிடச் சொல்லு."

"ஐயா, நம்ம தகுதிக்கு இது ஒண்ணும் பெரிய இழப்பு இல்லீங்களே?"

"சிறு துளி பெருவெள்ளம். இந்த மாதிரி சின்ன நஷ்டங்கள் நாளைக்கு பெரிய இழப்பாகிடும்"

"இருந்தாலும்..."

"சொல்றதை செய்ங்க"

*******************************************************************************

அதே பாக்ஸில் இன்னொரு பகுதியில் அமர்ந்திருந்த லலித்தின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்திருந்தது. எடுத்துப் பார்த்தான்.

"நாளை கைது. தயாராக இருக்கவும்". அனுப்பியவர் பத்மநாபன்.

*******************************************************************************

18வது ஓவர். வெள்ளைக்காரன் பௌலிங் போட வந்தான். பேசியபடியே 18 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிவிட்டுச் சென்றான். ரகுவிற்கு மனதில் வருத்தம். ஆனால் வெளியே பெருமூச்சு விட்டான். வெற்றியை விட உயிர் முக்கியமாயிற்றே!!!

*******************************************************************************

கடைசி ஓவர். வெற்றி பெற மும்பைக்கு 27 ரன்கள் வேண்டும். மீண்டும் வெள்ளைக்காரன் பௌலிங் போட வந்தான். மொஹிந்தர் அவனருகே ஓடிச் சென்றான். பிறகு ரகசியமாக, "எவ்ளோ கேவலமா வேணாலும் பௌலிங் போட்டுக்கோ, நான் தான் ஜெயிக்கப் போறேன்" என்று ஸ்திரமாகக் கூறிவிட்டு மீண்டும் பொசிஷனுக்கு வந்தான். வெள்ளைக்காரனுக்குப் புரிந்தாலும் புரியாதது போல் முழித்தான்.

*******************************************************************************

ஆட்டம் முடிந்தது.  சென்னை வெற்றி பெற்றது. பரிசளிப்புகள் துவங்குமுன் லலித் மரியாதை நிமித்தமாக பேச வந்தான். அவன் பேசிய பேச்சு கடைசி நாள் பேச்சு போல தொனித்தது.

கொண்டாட்டங்கள் துவங்கின. கார், பைக், ரொக்கம் என வீரர்கள் பரிசுகளை அள்ளினர். ரமேஷ் ஆட்ட நாயகனாகவும் ஷயன் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப் பட்டார்கள்.



ஆட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...