Saturday, October 19, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 18

"ஆகவே, இந்திய கிரிக்கெட் குழு விளக்கம் கேட்டு அளித்துள்ள  நோட்டீசுக்கு திரு. லலித் அவர்கள் 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க  வேண்டுமென்றும் இந்த வழக்கை பொருளாதாரக் குற்றவியலின் கீழ் பதிவு செய்ய வலியிறுத்தியும் இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என்று தனது நீண்ட உரையை முடித்தார் டெல்லி  உயர்நீதி மன்ற நீதிபதி.

லலித் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பத்மநாபனைப் பார்த்து புன்னகைத்தான். ஜாமீன் மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட பத்மநாபனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் வெளியே காட்டாமல் சமாளித்தார். லலித் வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர். கேள்விகள் பலவகையாக இருந்தாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாகவே இருந்ததால் எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டே காரை நோக்கி நடந்தான். காரில் ஏறுமுன் "கூடிய விரைவில் துரோகிகள் அடையாளம் காட்டப்படுவார்கள்" என்று கூறிவிட்டு காருக்குள் நுழைந்துகொண்டான்.

********************************************************************************

 "நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலை" என்று ரகுவைக் கடிந்து கொண்டான் மொஹிந்தர். முகத்தில் சாந்தம், ஆனால் கண்களில் கோபம்.

"பெட்டிங் தாம்பா பண்ணினேன். ஆனால் அவனுங்க வீரர்கள் கூட நேரடித் தொடர்புள்ள இருக்கானுங்க. எவன் அவங்களோட கூட்டுன்னு கண்டுபிடிக்கவே முடியலை. அந்த வெள்ளைக்காரன் அவங்க ஆள்னு நீ சொன்னதுக்கப்புறம் தான் தெரியுது."

"நீங்க ஒழுங்கா இருந்தாத்தான் அவங்களை கட்டுப்படுத்த முடியும்.  இது சக்ரவியூகம் மாதிரி. உள்ளே நுழையும்போது  சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் ஒரு தடவை மாட்டினீங்கன்னா மானம் போயிடும். ஜாக்கிரதை"

எல்லாம் புரியுதுப்பா, பார்த்துக்கலாம். நீ கூடத்தான் கேப்டனா இருந்துக்கிட்டு உன் கீழே ஆடறவங்களை உன் மார்கெட்டிங் நிறுவனத்தில் புக் பண்ணியிருக்கே, தார்மீக ரீதியா அதுவும் தான் தப்பு"

"அதுவும் இதுவும் ஒண்ணாங்க? நீங்க பண்றது துரோகம், சட்டப்படி குற்றம். நான் பண்றது சட்டத்துக்குப் புறம்பான விஷயம் கிடையாது. அப்படியே என்னை விசாரிச்சாலும் அதனால என்ன நஷ்டம் ஆச்சுன்னு யாராலும் நிரூபிக்க முடியாது.

"சரிப்பா, இனிமே பண்ணலை. மன்னிச்சிடு. போதுமா?"

"நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியது என்கிட்டே இல்லை. சென்னை மக்கள் கிட்ட. அந்த ராதே ஒரு ஓபன் டிக்கெட். எப்போ எந்த பக்கம் சாய்வான்னு சொல்ல முடியாது. நீங்க முதலாளி. நான் அதிகம் பேசக்கூடாது. பார்த்து நடந்துக்குங்க"

******************************************************************************

"இதோ பாருங்க ஷயன், நீங்க திறமைசாலி தான். ஆனால் உங்க நிர்வாகத்திறமை சரியில்லை. திடீர்னு பேட்டிங் வரிசையை எதுக்காக மாத்தினீங்க?"

"அது, ஆடுகளம் மற்றும் எதிர் டீம்ல இருந்த போலர்களை மனசில் வெச்சிக்கிட்டு அப்படி பண்ணினேன். ஆனால் அது நமக்கு எதிரா போயிடுச்சு."

"அதனால இப்போ நமக்கு தானே நஷ்டம்"

ஷயன் மௌனமாக இருந்தான்.

அதுவுமில்லாம நம்ம டீம் பசங்க சில பேர் மேல எனக்கு சந்தேகமா இருக்கு. பெட்டிங், பிக்சிங்க்னு பண்றாங்கன்னு நினைக்கறேன். நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க"

"என்ன சார் சொல்றீங்க?"

"ஆமாம்யா, அவங்க தொலைபேசி அழைப்புகளை ட்ரேஸ் பண்ண சொல்லியிருக்கேன், எவன் மாட்டுறான்னு பார்க்கலாம்"

******************************************************************************
பின் வந்த நாட்களில்...

நீதிமன்ற விசாரணைக்குப் பயந்து  லண்டன் சென்று ஒளிந்து கொண்டதால் லலித் எப்பொழுது இந்தியா வந்தாலும் கைது செய்யும் அதிகாரத்தை இந்திய கிரிக்கெட் குழு நீதிமன்றத்திடம் பெற்றுக் கொண்டதில் பத்மநாபனுக்கு ஏக சந்தோசம். அடுத்த தலைவர் பதவிக்கான  ஒரு முக்கியமான போட்டியாளர் ஆயிற்றே லலித்!!

வாக்கு அளித்தபடியே ராக்கியை திருமணம் செய்துகொண்டான் மொஹிந்தர். அவனுடன் கிசுகிசுக்கப்பட்ட அபிலாஷா போஸ் தான் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தினாள்.

6 மாதங்களுக்குப் பிறகு நடந்த சாதனையாளர் போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. மக்களே முக்கியத்துவம் கொடுக்காத போட்டி என்பதால் டேவிட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

சாதனையாளர் போட்டியைத் தொடர்ந்து தென்னாப்ப்ரிக்காவிலும் தனது  வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தான் மொஹிந்தர். ஒரு நாள் போட்டிகளில் தோற்றாலும் டெஸ்ட் போட்டிகள் டிரா, T20 வெற்றி என பெயரைக் காப்பாற்றிக் கொண்டான்.

லண்டன் சென்ற லலித், அரசியல்வாதிகள் போல் அவ்வபொழுது பத்மநாபனுக்கு எதிராக அறிககைகள் விட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் துவங்க ஒரு மாதமே இருந்த நிலையில் பாகிஸ்தான்  வெளியுறவுச் செயலர் மரியாதை நிமித்தமாக இந்தியா வந்தார். போகுமுன் பத்திரிகையாளர்களை சந்திக்கையில் "பாகிஸ்தான் வீரர்கள் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது" என எச்சரித்தார். ஆனால் வரும்போது வெறுங்கையுடன் வந்தவர்  போகும்போது பெட்டியுடன் சென்றார்.

ரகுவின் சூதாட்ட சமாசாரத்தைத் தெரிந்து கொண்ட நல்லகண்ணு அவனை மாட்டிவிட்டு அதன் மூலம் பத்மநாபனைப் பழிவாங்கக் காத்திருந்தார்.

ஏகப்பட்ட சொதப்பல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றுப் போனது. தனது கேட்சை ஏன் இவ்வளவு முறை தவறவிடுகிறார்கள் என்பது ஷயனுக்கு பெரும் புதிராகவே இருந்தது.

மொஹிந்தரின் கைவண்ணத்தில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது.

கோப்பையை வென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு தனது வீட்டில் (ஒரு மாறுதலுக்காக) உறங்கிக் கொண்டிருந்த ப்ரித்விக்குக் திடீரென குமட்டியது. கழிவறைக்குச் சென்றவன் தாங்கமாட்டாமல் வாஷ்பேசினில் வாந்தியெடுத்தான் - ரத்தமாக.

ஆட்டம் தொடரும்.....

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...