Wednesday, December 25, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 20


ஜெய்ப்பூர் மைதானம்.

ஜெய்ப்பூர் வீரர்கள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஷீலாவும் ஸ்வராஜும் மடிக்கணினியை பார்த்த வண்ணம் எதைப்பற்றியோ ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு கைகளிலும் இனிப்பு டப்பாக்களை ஏந்தியபடி ஓடி வந்தான் ஸ்ரீகாந்த்.

"நண்பர்களே, எல்லாரும் ஒரு நிமிஷம் வாங்க. மேடம், நீங்களும் வாங்க.". எல்லாரும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அவனை சூழ்ந்தனர்.

"ஒரு வழியா போராடி கீதா அப்பா கிட்ட சம்மதம் வாங்கியாச்சு. இன்னும் இரண்டு நாள் கழிச்சு நிச்சயதார்த்தம். " என்று மூச்சு விடாமல் ஒப்பித்தான்.

அனைவரும் சந்தோஷத்தில் "ஹுர்ரே..."என்று உற்சாகக் குரல் எழுப்பி அவனை அலாக்காகத் தூக்கி இறக்கினர்.

கோகுல் அவனருகே வந்து "வாழ்த்துக்கள் ஸ்ரீ," என்று ஒரு இனிப்பை அவன் வாயில் ஊட்டினான்.

ஷீலா, "இதெல்லாம் சரி தான். அதுக்காக பயிற்சிக்கு வராம இருக்கறது தப்பு ஸ்ரீ. நீ ஒரு முக்கியமான பௌலர். அதை மறந்துடாதே" என்று அவளும் தன் பங்குக்கு அவன் வாயை இனிப்பால் அடைத்தாள்.

"அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவேன் மேடம்"

**************************************************************************************

"என்ன தலைவரே, அவசரமா வரச் சொன்னீங்க?" என்று கேட்டான் ராத்தோர்.

"இந்த பத்மநாபன் சரியில்லை. அவ்ளோ சொல்லியும் மேலே யார் கிட்டேயோ பேசி தேர்தலல்ல நிக்கறான். "

"நீங்க மேலிடத்தில் பேச வேண்டியது தானே?' உங்க பேச்சை அவங்களால மீற முடியுமா? பாதி விவசாய மார்க்கெட்டே உங்க கிட்ட தான் இருக்கு. அதிலும் குறிப்பா வெங்காயம்"

"பேசினேன், ஆனால் சரியான பதில் வரலை. நம்ம பையன் வேற இந்த செல்லையா ஏர்லைன் விவகாரத்தில் கொஞ்சம் மாட்டியிருக்கான். அதனால நானும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கு. வேற விதமாத் தான் கையாளணும்"

"ராதேவை மடக்கிடவா?'

"மடக்கணும், ஆனால் இப்ப இல்லை. இந்த வருஷ போட்டி நடக்கும்போது கொஞ்சம் சாட்சிகளை உருவாக்கணும். எல்லாரும் மாட்டணும். ஆனால் ரொம்பவும் மாட்டக் கூடாது - சொல்றது புரியுதா?"

"கவலையை விடுங்க. நான் பார்த்துக்கறேன்"

***************************************************************************************
"மாப்ளே, இந்த வருஷம் எந்த டீலிங்கும் பண்ணாதீங்க. பெரிய சிக்கலாயிடும்" என்று கவலையுடன் எச்சரித்தார் பத்மநாபன்.

"ஏன் மாமா?" என்று அப்பாவியாகக் கேட்டான் ரகு.

"காரணமெல்லாம் கேட்காதீங்க. ரொம்ப பெரிய ஆளுங்க இதுக்குப் பின்னாடி இருக்காங்க. இந்த வருஷம் விஜிலன்ஸ் அதிகமாயிருக்கு. அவ்ளோ தான் சொல்வேன்"

"ஆனால் இந்த பாலா பய..."என்று கூறி முடிக்கும் முன்,

"டீமுக்கு அவன் மேனேஜரா இல்ல நீங்களா? சொன்னதை செய்ங்க" என்று உச்சச்த்தாயியில் கத்தினார் பத்மநாபன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் நடையைக் கட்டினான் ரகு.

**************************************************************************************

முதலாளி ராவின் முன்பு அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தான் நரேந்தர்.

"இத பாருங்க நரேந்தர், ஏதோ நீங்க டெல்லி லோக்கல்னு நினைச்சுத்தான் உங்களை எடுத்தோம். ஆனால் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா உங்க பொழைப்பு ஆயிடுச்சு."

"
அது...இன்னும் பார்ம் செட் ஆகலை சார்"

"4 வருஷமாவா? உங்களுக்கு காது கூட சரியா கேட்கறதில்லையாமே? அப்படியா?"

"அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. இதெல்லாம் என்னோட எதிரிங்க பண்ற சதி வேலை"

"சதியோ, உண்மையோ - எங்களுக்கு பெர்பார்மன்ஸ் வேணும். இதான் உங்களுக்கு கடைசி சான்ஸ். சொதப்பினீங்கன்னா நீங்களாவே போயிடுங்க"

தொங்கிய தலையுடன் எழுந்தான் நரேந்தர்.

**************************************************************************************

"தம்பி, உள்ளே போகாதீங்க. அப்பா கடுப்பா இருகாரு" என்றார் செல்லையாவின் உதவியாளர்.

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்" என்று உள்ளே நுழைந்தான் அவரது மகன்.

"என்ன மகனே? என்ன விஷயம்" என்று அவனைப் பார்த்துக் கேட்டார் செல்லையார்.

"ஏதோ மூட் அவுட்டாமே நீங்க?"

"ஆமாம், கம்பெனில கொஞ்சம் ஷேர்ஸ் விக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். நீ வந்த விஷயத்தைச் சொல்லு"

"டீமுக்கு இந்த வருஷச் செலவுக்குப் பணம் கொடுக்கணும். மார்க்கெட்டிங் பொருட்கள் எல்லாம் வந்திடுச்சு. பேமென்ட் பண்ணலேன்னா நாறடிச்சிடுவாங்க"

"நம்ம அக்கௌண்ட்ல இருக்குமே?"

"எந்த அக்கௌண்ட்ல? உங்க பர்சனல் அக்கௌண்ட் தவிர எல்லாம் காலி"

"சரி சரி, தர்றேன்.." என்று செக்கை எடுத்து கையொப்பமிட்டு குடுத்தார்.

"இந்த உலகத்திலேயே சாராய கம்பெனி நடத்தி நாசமாப் போன ஒரே தொழிலதிபர் நீங்களாத் தான் இருப்பீங்க" என்பர் கூறிவிட்டு காசோலையுடன் வெளியேறினான் அவரது மகன்.

"என் கணக்கு உனக்குப் புரியாதுடா, போடா போடா" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் செல்லையா.

************************************************************************************

"யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தே?" என்று மனைவியைப் பார்த்துக் கேட்டான் மொஹிந்தர்.

"நம்ம ராதே தான். இந்த வருஷம் மேட்ச் பார்க்க கொஞ்சம் ஸ்பெஷல் பாஸ் வேணுமாம். நம்ம காலரியில் உட்கார்ந்து பார்க்க அனுமதி கிடைக்குமான்னு கேட்கறான்"

"நீ என்ன சொன்னே?"

"ஓகேன்னு சொல்லிட்டேன்."

"என்கிட்டே ஒரு வார்த்தை கேட்க மாட்டியா?"

"எதுக்கு கேட்கணும்? நமக்குத் தான் எல்லா மேட்ச்சுக்கும் 10 பாஸ் கிடைக்குதே?'

"அதுக்காக? எவனை வேணும்னாலும் உட்கார வைப்பியா?"

"ஹலோ, அவன் நம்ம நண்பன்"

"அதெல்லாம் அப்போ, இப்ப அவன் நடவடிக்கை ஒண்ணும் சரியில்லை. அவனோட ஜாஸ்தி வெச்சுக்காதே"

மொஹிந்தர் சொல்வது விளங்காமல் அவனை முறைத்தாள் ராக்கி.
*****************************************************************************
"டேய், மாமனார் செம கடுப்புல இருக்கார். அதனால் இந்த வருஷம் அடக்கித் தான் வாசிக்கணும்" என்று பாலாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் ரகு.

"மச்சி, போன தடவையே சொல்லிட்டேன். ஏகப்பட்ட கமிட்மென்ட் ஆயிருக்கு இந்த தடவை. அப்படியெல்லாம் பின் வாங்க முடியாது" என்று உறுதியாகக் கூறினான் பாலா.

"அப்போ எதுவானாலும் நீயே பண்ணிக்க, என்கிட்டே எந்த உதவியும் எதிர்பார்க்காதே"

"ஒரு நிமிஷம் இரு மச்சி. ராதேவுக்கு போன் போடறேன், நீயே சொல்லிடு"

எதிர் முனையில் ராதே வந்தான். "சொல்லுங்க பாலா ஜி, என்ன விஷயம்?"

"ராதே பாய், ரகு இந்த வருஷம் நமக்கு சப்போர்ட் பண்ண மாட்டாராம், அதை உன் கிட்ட சொல்றதுக்குத் தான் போன் பண்ணினேன். அவரும் இங்க தான் இருக்கார்"

"க்யா ரகு ஜி, என்ன ஆச்சு?"

"ராதே, இந்த வருஷம் ஏதோ விஜிலன்ஸ் அதிகமாயிருக்காம். அதனால இந்த வருஷம் எதுவும் பண்ணி மாட்டிக்க வேண்டாம்னு மாமனார் சொன்னார்"

"அதெல்லாம் வருஷா வருஷம் நடக்கறது தான் ரகு ஜி. "

"என்னால முடியாது ராதே. அவருக்கு என் மேல வெறுப்பு உண்டே தவிர என்கிட்டே இந்த மாதிரி கடுமையா பேசினதே கிடையாது. என்னை தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு என்ன ஆளா இல்லை? என்னை மாதிரி நிறைய பேரு உங்க கூட டச்ல இருக்காங்கன்னு எனக்குத் தெரியும்."

"அதெல்லாம் தேங்காய் மூடி அணி ரகு ஜி. உங்களது தான் ஹாட் பேவரிட் - முடிவா என்ன தான் சொல்றீங்க?""

"முடியாது"

"ஓஹோ, அப்போ போன மாசம் கோவா போனப்போ ஒரு நடிகையோட எக்குத் தப்பா இருந்தீங்களே, அந்த வீடியோவை உங்க பொண்டாட்டிக்கு அனுப்பிடவா? பாவம் அவங்க வேற முழுகாம இருக்காங்க"

"சும்மா மிரட்டாதே, அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை."

"அப்படியா, சரி நான் யூடுப்ல போடறேன். நீங்களே பார்த்து அடையாளம் கண்டுக்கோங்க"

"ராதே"

******************************************************************************

மகேஷின் முன் அழாத குறையாக சோகத்துடன் அமர்ந்திருந்தான் கலிங்கா. எதிரே மேஜையில் சிதறிய செல்போன்கள்.

"சார் இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க" என்று மன்றாடினான் கலிங்கா. மகேஷின் பார்வையில் அனல்.

"மன்னிப்பா? உன்னையெல்லாம் ஓட ஓட அடிச்சு விரட்டணும்யா"

"தம்பி, உங்களுக்கு இங்கே என்ன குறைச்சல்? மத்த டீம் மாதிரியா நாங்க உங்களை நடத்தறோம்?" என்று விளக்க ஆரம்பித்தார் சுக்லா..

"நீங்க என்னண்ணே இவன் கூட பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டிருக்கீங்க? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அப்படியே.."

கலிங்கா தெனாவட்டாக," என்ன சார் ரொம்ப தான் பேசறீங்க? கிரிக்கெட்னா மேட்ச் பிக்சிங் இருக்கத்தான் செய்யும். நீங்கள்லாம் மட்டும் ரொம்ப யோக்கியமோ? உங்களுக்குள்ளேயே பேசி இந்த வருஷம் இவங்க தான் ஜெயிக்கணும்னு முடிவு பண்றதெல்லாம் எங்களுக்கும் தெரியும் சார். உங்களால என்ன செய்ய முடியும்? போலீசுக்குப் போவீங்களா? போங்க. "

மகேஷ் "போலீசுக்கு நான் எதுக்குப் போகணும்? டேய், நானெல்லாம் பூமிக்குள்ள குழாய் போட்டு எண்ணெய் எடுக்கறவன், அதுலேயே உன்னைப் போட்டு புதைச்சுட்டு, காணவில்லைன்னு FIR பைல் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன். உன் ஜட்டி கூட கிடைக்காது"

கலிங்கா வெலவெலத்துப் போனான்.

********************************************************************************

"இருக்கற தலைவலி போதாதுன்னு இது வேறயா?" என்று தலையலிடித்துக் கொண்டார் பத்மநாபன். கையில் தமிழக அரசாணையின் காப்பி.

"என்ன சார் இது?" என்று வாங்கிப் படித்தார் அவரது உதவியாளர். பிறகு, "ரொம்ப அநியாயமா இருக்கே? பக்கத்துக்கு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் சென்னையில் நடக்கும் போட்டியில் பங்கெடுக்கக் கூடாது. அப்படிப் பங்கெடுத்தால் பாதுகாப்பு தரமாட்டோம்னு சொல்லியிருக்காங்களே"

"நடுவர் கூட இருக்கக் கூடாதாம்."

"இதனால நம்ம டீமுக்கு ஒண்ணும் பெரிய பாதிப்பு இல்லையே சார்"

"அங்க தான்யா பிரச்சினையே, இந்த மாதிரி ஒண்ணு கிளம்பும்னு தெரிஞ்சு தான் நான் நம்ம டீமை பார்த்து பார்த்து எடுத்தேன். ஆனா மத்த டீம் ஆளுங்க புலம்புவாங்களே, அந்த டீம்ல இந்தப் பசங்க தான் முக்கிய பங்கு வகிக்கறாங்க, நான் ஏதோ வேணும்னே பண்ணிட்டதா கதை கட்டுவாங்க, அதை சமாளிக்கணுமே?"

"எதுவும் பேசிப் பார்க்க முடியாதா?"

"அந்த அம்மாவுக்கும் எனக்கும் தான் ஆகாதே, என்னத்தப் பேசறது? அதுமட்டுமில்லை, மாணவர்கள் போராட்டம் வேற ரொம்ப பலமா ஓடிக்கிட்டிருக்கு. இந்த நேரத்தில் அவங்க எதுவும் செய்ய மாட்டாங்க"

**************************************************************************************

"என்ன பாலா, நம்ம மாப்ள என்ன சொல்றான்?" என்று நக்கலடித்தார் நல்லகண்ணு.

"பய ஆடிப் போயிட்டான் மாமா. வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான்"

"ஆமாம், நிஜமாவே கோவாவில் அப்படி எதுவும் நடந்ததா?"

"நீங்க வேற, இவனெல்லாம் பெனாட்ரில் குடிச்சாலே போதையாகிடுவான். அங்க போய் டக்கிலா ஷாட்ஸ் எடுத்தா என்னாவான்? அந்த நடிகையோட தான் ரூமுக்குப் போனான். ஆனால் பாதி வழியிலேயே வாந்தி எடுத்து அவுட் ஆயிட்டான். அவன் பேரைச் சொல்லி நாங்க நல்லா என்ஜாய் பண்ணோம்"

"பிரமாதம் மாப்ளே, நம்ம லிங்க் பத்தி அவனுக்கு ஏதும் தெரியுமா?"

"தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? செய்யறது என்னமோ நானா இருந்தாலும் மாட்டினா அவன் தான் மாட்டுவான். இது சம்பந்தப்பட்ட எல்லாமே அவன் பேர்ல தான் இருக்கு - அவன் கொடுத்த லேப்டாப் உள்பட.

"மாட்டுவான் மாப்ள, பத்மநாபன் குடும்பத்தைப் பார்த்து இந்த ஊரே சிரிக்கணும்"

"கூல் டவுன் மாமா. கால் முடமா இருக்கற என் தங்கச்சியை நம்ம ஜாதிப் பழக்கத்தை மீறி 10 பைசா வரதட்சணை வாங்காம உங்க அண்ணன் பையனுக்கு முடிச்சிருக்கீங்க. உங்க உர கம்பெனிக்கு வேற என்னை முதலாளியா ஆக்கியிருக்கீங்க. உங்க நல்ல மனசுக்காக எது வேணும்னாலும் செய்யலாம்"

இதுல என் சுயநலமும் இருக்குன்னு வெச்சுக்கோங்க. எனக்குன்னு யார் இருக்கா சொல்லுங்க? பெத்தது இரண்டு. அதுல ஒண்ணை நெருப்புக்குக் குடுத்துட்டேன். இன்னொண்ணு படிக்கறேன் பேர்வழின்னு அமெரிக்காவிலேயே டேரா போட்டிடுச்சு. எனக்கோ என் பொண்டாட்டிக்கோ எதாவது ஆச்சுன்னா எங்க பிணத்தைப் பார்க்கக் கூட வருமான்னு தெரியலை. மனுஷனுக்கு வயசாகும்போது தான் சாயறதுக்குத் தோள் தேவைப்படுது.

உங்க நிலைமை எனக்குப் புரியுது மாமா"

"நம்மளோட இந்த உறவினால உங்க நட்பு கெட்டுடப் போகுது மாப்ள. பதவிசா நடந்துக்குங்க"

"நண்பன்னு அவன் தான் மாமா சொல்லிக்கிட்டுத் திரியறான், நான் சொல்றதே இல்லை" என்று கூறிச் சிரித்தான் பாலா.



ஆட்டம் தொடரும்.......


ஜெயராமன்
டெல்லி

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...