Saturday, December 28, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 21

"என்ன அஜய், சௌக்கியமா?" என்று டெல்லி போலிஸ் கமிஷனரை போனில் நலம் விசாரித்தார் பத்மநாபன்.

"என்ன சார் திடீர்னு எனக்கு போன் பண்ணியிருக்கீங்க?"

"எல்லாம் காரணமாத்தான்"

"என்ன விஷயம் சார்?"

"சில பேரை கைது பண்ண வேண்டியிருக்கு?"

"யாரை? எதுக்கு?"

"எல்லாம் மேட்ச் பிக்சிங் தான். இந்த ஜெய்பூர் டீம்ல 2-3 பசங்க இருக்காங்க. அவங்களை புடிச்சு உள்ளே போடணும்"

"மேட்ச் பிக்சிங் நமக்கு ஒண்ணும் புதுசு இல்லை. ஆனால் என்கிட்டே எதுக்கு சொல்றீங்க? சென்னை இல்லேன்னா மும்பை போலீஸ்ல சொல்லியிருக்கலாமே?"

"நீங்க நம்ம ஆளு. நீங்க ஆக்ஷன் எடுத்தா கேஸ் நம்ம கட்டுப்பாட்டில் இருக்கும். அதுவுமில்லாம மும்பை போலிஸ் பெரியவர் பக்கம் சாஞ்சுட்டாங்க. என்னால எதுவும் செய்ய முடியாது. "

"பண்ணிடலாம். ஆனால் நான் விசாரிச்ச வரைக்கும் உங்க மாப்பிள்ளை கூட இதுல ஈடுபட்டிருக்கறதா பேச்சு."

"அதுக்குத் தான் உங்களை நடவடிக்கை எடுக்கச் சொல்றேன். அப்புறம் விசாரணை கமிஷன் வெச்சு எப்படி வெளியே கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும். ஆனால் நீங்க சீக்கிரம் நடவடிக்கை எடுக்கணும்"

"சொல்லிட்டீங்கள்ல? நான் பார்த்துக்கறேன் சார்"

*************************************************************************************

"பெரியவரே, நேரம் கனிஞ்சு வந்திருக்கு. நீங்க பார்த்து எதாவது செஞ்சீங்கன்னா.." என்று குழைந்தார் நல்லகண்ணு. எதிர் முனையில் முன்னாள் தலைவர்.

"சொல்லிட்டேன் ஜி. பிகர் மத் கரோ"

"என்னால முடிஞ்ச வரைக்கும் சாட்சிகளை ரெடி பண்ணிட்டேன். அவன் மட்டும் உள்ளே போனான்னா வெளியே வரவே முடியாது"

"அர்ரே, இது என்ன கொலைக் குற்றமா? பொருளாதாரக் குற்றம் தானே? அதெல்லாம் ஜாமீனில் வெளியே வந்திடுவான். உங்க மீடியா ஆளுங்க கிட்ட சொல்லி கிழிக்கச் சொல்லுங்க"

"அப்படியா ஜி? சரிங்க ஜி" என்று போனை வைத்தார். சிறிது நேர யோசனைக்குப் பின் போனில் எண்களை அமுக்கினார். அது பாரத் டைம்ஸ் நியூஸ் சானலின் எடிட்டர் நம்பர்.

"ஹலோ, வினோத் ஜி? எப்படி இருக்கீங்க?...ஒண்ணும் இல்லை.. ஒரு வேலை ஆகணுமே"

**************************************************************************************

"ஹெலோ ஸ்வராஜ்"

"மாமா ஜி? எப்படி இருக்கீங்க? லண்டன்ல என்ன விசேஷம்?"

"லண்டனை விடு. அங்கே நம்ம டீம்ல சில பேரை கைது செய்யப் போறதா தகவல் கிடைச்சிருக்கு"

"உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"உன்னை மாதிரி மக்குன்னு நினைச்சியா? எல்லாம் அங்கங்க ஆளுங்களை வெச்சிருக்கேன்"

"யாருன்னு தெரியுமா மாமாஜி?"

"யாருன்னு சரியாத் தெரியல. எதுக்கும் பசங்களை உஷாரா இருக்கச் சொல்லு"

போன் துண்டிக்கப்பட்டவுடன் ஸ்வராஜ் கோகுலை தொலைபேசியில் அழைத்தான். "கோகுல், ஒரு முக்கியமான விஷயம். உடனே என் ரூமுக்கு வாங்க"

**************************************************************************************

"பிரவீன், காமத் - உடனே என் ரூமுக்கு வாங்க" என்று தன் சகாக்களை அவசரமாக அழைத்தார் ராத்தோர்.

இருவரும் ராத்தோர் முன் ஆஜரானார்கள்.

"பாய்ஸ், மேட்ச் பிக்சிங் சம்பந்தமா நாம சில பேரை அரெஸ்ட் பண்ண வேண்டியதா இருக்கு. டீடெயில்ஸ் இந்த பைலில் இருக்கு. இதுல முக்கியமான ஆளு அந்த ராதே தான்.

"அவன் நம்ம ஆள் ஆச்சே சார்?"

"இங்க யாரும் நம்ம ஆள் கிடையாது. அண்டர் வேர்ல்ட் பத்தி நமக்கு சில தகவல்கள் குடுத்துக்கிட்டிருந்தான். அவ்ளோ தான்"

பிரவீன், "ஒரு விஷயம் புரியலை சார். துபாய் டேவிட் வரைக்கும் இதுல கனெக்ஷன் இருக்குன்னு தெரியுது. ஆதாராங்களும் இருக்கு. அப்புறம் ஏன் நாம இன்னும் எந்த வித நேரடி நடவடிக்கையும் எடுக்காம இந்த ராதே மாதிரி ஆளுங்க மூலமா ட்ராக் பண்ணிக்கிட்டிருக்கோம்?"

"நீங்க நினைக்கற மாதிரி டேவிட்டை அவ்ளோ சீக்கிரம் அரெஸ்ட் பண்ண முடியாது. அவன் பாகிஸ்தான்ல இருக்கறவரைக்கும் தான் அவனுக்கு பாதுகாப்பு. எப்போ அவன் வெளியே வர்றானோ அன்னிக்கு அவனுக்கு கடைசி நாள். ஏன்னா அவனோட முன்னாள் கூட்டாளிங்க ஹாங்காங் மற்றும் கென்யாவுக்கு தப்பிச்சுப் போகும்போது என்ன நடந்ததுன்னு அவனுக்கு நல்லாத் தெரியும். அதனால அவன் வெளிய வரமாட்டான். ஆனால் அவனோட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது ரொம்ப அவசியம். அவன் இந்தியாவுக்கு ரகசியமா வர்றதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. அதுக்கு இந்த மாதிரி சில தப்புகளை அனுமதிக்க வேண்டியிருக்கு."

"சரி இப்போ எதுக்கு ராதேவை கைது பண்றோம்? இதுல நமக்கு என்ன லாபம்?"

"இது வேற மேட்டர்ப்பா. பெரிய இடத்து சமாச்சாரம்"

"நம்மளை டைம் பாசுக்குன்னே வெச்சிருக்கானுங்க"

"இப்போ அதெல்லாம் பேசறதுக்கு நேரமில்லை. ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க"

அப்பொழுது உதவி ஆய்வாளர் ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார். "சார், டெல்லி போலிஸ் மும்பை வந்திருக்காங்க. அந்த ஜெய்பூர் வீரர் ஸ்ரீகாந்த் இங்க ஏதோ ஹோட்டலில் தங்கியிருக்கானாம். அவனை கைது செய்யப் போறாங்களாம்"

ராத்தோர் பிரவீன் மற்றும் காமத்தைக் கேவலமாகப் பார்த்தார். "சீக்கிரம் போங்கய்யா, முதல்ல அந்த ராதேவை அரெஸ்ட் பண்ணுங்க"

************************************************************************************

"என்ன அஜய் ஜி, இப்படி கோட்டை விட்டுட்டீங்களே?"

"சாரி சார். மும்பை போலிஸ் எங்களுக்கு முன்னாடியே அந்த ராதேவை கைது பண்ணிட்டாங்க."

"அவன் தான்யா துருப்புச் சீட்டு. அதுவுமில்லாம அவன் அந்த ராத்தோர் ஆளு. ராத்தோர் ஒண்ணும் கேட்காமலேயே எல்லாத்தையும் உளறிடுவான்"

"நீங்க வேணா பெரியவர் கிட்ட பேசுங்க"

"பிரச்சினையே பெரியவரால தான்யா"

"இப்போ என்ன சார் பண்ணலாம்?"

"முடிஞ்சவரைக்கும் இந்த நெட்வர்க்ல இருக்கற ஆளுங்களை கைது பண்ணி உங்க கஸ்டடியில் வெச்சுக்கோங்க. மும்பை போலீஸ் கிட்ட அதிகம் பேர் மாட்டக் கூடாது"

"ஓகே சார்"
**********************************************************************************

"நாடெங்கும் பரபரப்பு. பிரீமியர் லீக் ஆட்டங்களில் மேட்ச் பிக்சிங் செய்தது தொடர்பாக ஜெய்ப்பூர் வீரர்கள் கைது. முக்கியப் புள்ளி ராதேவும் கைது - சென்னை அணிக்குத் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது - பத்மநாபன் தார்மீக ரீதியாக பதவி விலகுவாரா?" என்று அலறிக் கொண்டே இருந்தார் பாரத் டைம்ஸ் சானலின் முன்னணி செய்தித் தொகுப்பாளர்.

செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரகுவுக்கு அந்த கொடைக்கானல் குளிரிலும் வியர்த்தது.

"இப்போ பயந்து என்ன பிரயோஜனம்? வேண்டாம் வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். இப்போ அவஸ்தைப் படுங்க" என்று கோபமும் அழுகையுமாக வெடித்துக் கொண்டிருந்தாள் பாரு.

ரகு பேசாமல் இருந்தான்.

"இப்போ மானம் போச்சு, மரியாதை போச்சு, எல்லாம் போச்சு."

"இதெல்லாம் மீடியா ஹைப் பாரு. கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் கத்துவாங்க. எல்லாத்துக்கும் சாட்சிகள் வேணும். புரிஞ்சுக்க"

"அந்த ராதேவை கைது பண்ணியிருக்காங்களே? அது போதாதா? போதாதகுறைக்கு உங்க மொஹிந்தர் பொண்டாட்டி பக்கத்திலேயும் நம்ம டீம் ஆளுங்க கூடவும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துக்கிட்டிருக்கான். காசுக்காக எதையும் பண்ணக் கூடிய ஆளு. கூடுதலா 100 ரூபாய் குடுத்தா என்னையும் போட்டுக் குடுத்துடுவான்"

"சரி விடு. பார்த்துக்கலாம்"

"நீங்க என்ன பார்க்கறது? அதான் ஊரே பார்த்து சிரிக்குதே?"

அங்கே ஹாலில் பாரத் டைம்ஸ் நிருபரின் தொலைபேசிக் கேள்விகளுக்கு கழுவுற மீனில் நழுவுற மீனாக பதிலளித்துக் கொண்டிருந்தார் பத்மநாபன்.

பின் வந்த சில மணி நேரங்களில் டெல்லி மற்றும் மும்பை போலிஸ் இடையே யார் அதிக நபர்களைக் கைது செய்வது என்ற போட்டி துவங்கியது. அகமதாபாத், பூனே, நாசிக், உதய்ப்பூர், சண்டிகர், சென்னை என்று சகட்டுமேனிக்கு கைது செய்து தள்ளினர். ரகுவைக் கைது செய்ய சென்னை வந்த மும்பை ஸ்பெஷல் போலீஸ் வெறுங்கையுடன் திரும்பியது.

***************************************************************************************

"நல்ல கண்ணு ஜி. சும்மா சொல்லக் கூடாது. நான் ஒரு நூல் தான் குடுத்தேன். நீங்க அதை வெச்சு ஒரு சட்டையே தெச்சுட்டீங்க" என்று புகழ்ந்தார் தலைவர்.

"10 வருஷ நெருப்பு தலைவரே. இன்னிக்குத் தான் கொழுந்து விட்டு எரிஞ்சு உஷ்ணம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு." என்று கொதிப்புடன் பேசினார் நல்லகண்ணு.

"சரி சரி. ஆனால் என் விஷயத்தை மறந்துடாதீங்க"

"அந்த உர டெண்டர் தானே? நீங்க சொன்ன விலைக்கே உங்க மச்சான் கம்பெனிக்கு மாத்திடறேன். நீங்க சொன்ன மாதிரி 20% பங்குக்கும் டாகுமெண்ட் ரெடி பண்ணிட்டேன். நீங்களாப் பார்த்து எதாவது குடுத்தா சந்தோஷமா வாங்கிக்கறேன்"

************************************************************************************

"மாப்ளே, எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். முடியலை. நீங்க சரண்டர் ஆகித் தான் ஆகணும்"

"என்னப்பா சொல்றீங்க?" என்று அதிர்ந்தாள் பாரு.

"ஆமாம்ம்மா, அந்த ராதே மாப்பிள்ளையோட பேசின தொலைபேசி ரிகார்டுகளை எல்லாம் பக்காவா எடுத்து வெச்சிருக்காங்க. குறைந்தபட்ச விசாரணையாவது பண்ணிட்டுத் தான் ஜாமீன்ல விடுவாங்க"

"நீ கவலைப்படாதேம்மா, மாப்பிள்ளை கூட நானும் போய் எல்லாம் முடிச்சிக் குடுத்துட்டுத் தான் வருவேன்" என்று உறுதியளித்தார் அவரின் குடும்ப வக்கீல் சதாசிவம்.

பத்மநாபன் "அந்த பாலா எங்க இருக்கான்னு விசாரிச்சீங்களா?

"அவன் மலேசியாவுக்கு ஓடிட்டான் மாமா. அதுவுமில்லாம பாலா பேர்ல எதுவுமே இல்லை. எல்லாமே என் பேர்ல தான் இருக்கு"

"திருட்டு ராஸ்கல்"

"அது மட்டுமில்லை மாமா, அந்த நல்ல கண்ணு வீட்ல அவன் தங்கச்சிக்கு சம்பந்தம் வேற பேசியிருக்காங்க. இப்போ தான் கதிர்வேல் விசாரிச்சுச் சொன்னான்".

"துரோகி. இதுக்குப் பின்னாடி நல்லகண்ணு தான் இருக்கானா? நான் பார்த்துக்கறேன்" என்று இன்னமும் ஆவேசமானார் பத்மநாபன்.

"சரி மாமா, நான் எப்போ போகணும்?"

"கார் ரெடியா இருக்கு. 5 மணிக்கு பிளைட். இன்னும் 15 நிமிஷத்தில கிளம்பணும்" என்றார் சதாசிவம்.

***********************************************************************************

"என்ன அஜய் ஜி, தொடர்ந்து விக்கெட் எடுத்துக்கிட்டே இருக்கீங்க?" என்று நக்கலுடன் தொலைபேசியில் கேட்டார் ராத்தோர்.

"நீங்க மட்டும்? சிக்ஸரா அடிச்சு நொறுக்கறீங்களே? அந்த ராதேவை எங்களுக்கு முன்னாடியே கைது பண்ணிட்டீங்களே?"

"பின்னே? 10 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு முன்னாடி நீங்க தென்னாப்பிரிக்கா போய் கைது பண்ணலியா? இப்போ எங்க நேரம்"

"அது சரி, இப்படி மேல இருக்கறவங்களுக்காக எல்லாரையும் சும்மா கைது பண்ணி என்ன பிரயோஜனம்? இதுல நமக்கு என்ன லாபம்?"

"கேம் அவங்களது.. நமக்கு கூலி மட்டும் தான் உண்டு. கொஞ்சம் வெயிட்டான கூலி"

"என்னவோ போங்க ஜி. ஒரு விறுவிறுப்பே இல்லை"

"சும்மா வேடிக்கை பார்த்து என்ஜாய் பண்ணுங்க ஜி. இவனுங்க எப்படி அடிச்சுக்கறாங்கன்னு பார்க்கலாம்"

************************************************************************************

"இப்போ என்ன பண்றது மொஹி.."என்று அழ ஆரம்பித்தாள் ராக்கி.

"அன்னிக்கே சொன்னேன். நீ கேட்கலை. இப்போ அழுது என்ன பிரயோஜனம்? - கொடைக்கானலில் நடந்த அதே காட்சி. அங்கே மனைவி கேட்ட கேள்விகளை இங்கே கணவன் கேட்டான்.

"ரகு ஜி இப்படி பண்ணுவார்னு நான் எதிர்பார்க்கலை"

"என் பயமெல்லாம் இப்போ என்னோட பர்சனல் பிசினெசைப் பற்றித் தான்.

"புரியலை"

"நம்ம டீம் வீரர்கள் என் கம்பெனில ஒப்பந்தம் பண்ணியிருக்கறது இந்த விசாரணையில் வெளியே வரும். அது இவங்க கண்ணை உறுத்தும்" என்று மொஹிந்தர் கூறும்போதே டெலிபோன் ஒலித்தது.

"சொல்லுங்க பத்மநாபன் ஜி. இப்போ தான் நியூஸ் பார்த்தேன்"

"அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மீடியா முன்னாடி சாமர்த்தியமா பேசிக்கோ. உனக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி காமி. எதையாவது விளையாட்டாப் பேசி சொதப்பிடாதே"

"அப்படியெல்லாம் செய்வேனா? தொடர்ந்து 8 தடவை தோத்து அவமானப்பட்ட கூட நான் நல்லாதானே சமாளிச்சேன்?

"தெரியும். சொல்ல வேண்டியது என் கடமை. ஜாக்கிரதை"

************************************************************************************

மீடியா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சென்னை அணி தனது அணி அல்ல என்றும், அது தனது சிமெண்ட் நிறுவனத்தின் சொத்து என்றும் ரகுவிற்கு எவ்விதப் பொறுப்பும் கிடையாது என்றும் திரும்பத் திரும்ப பதிலளித்துக் கொண்டே இருந்தார் பத்மநாபன். அதே வேளையில் விசாரணைக்காக மும்பை சென்ற ரகுவை மும்பை போலீஸ் ஒரு வார ரிமாண்டில் வைத்துக் கொண்ட செய்தி திரையின் கீழே பிரேக்கிங் நியூசாக பளிச்சிட்டது..

தன் 8 மாதக் குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருந்த பாரு சுக்கு நூறாக உடைந்து அழ ஆரம்பித்தாள்.


*************************************************************************************


 6 மாதங்களுக்குப் பிறகு....

உள்ளே சென்ற அனைவரும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு வெளியே வந்தனர்.

ரகுவிற்கும் ராதேவிற்கும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது. அருகே உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தினமும் கையெழுத்திட வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.

உப்புக்குச் சப்பாக நடந்த இறுதிப் போட்டியில் மும்பை சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது. மொஹிந்தர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

பத்மநாபன் தற்காலிகமாக பதவி விலகி தனக்கு வேண்டியவர்கள் மூலம் விசாரணை கமிஷன் அமைத்தார். தான் குற்றவாளியல்ல என்று தனக்குத் தானே அறிவித்துக் கொண்டு மீண்டும் பதவிக்கு வந்தார். ஆனால் அவர் அமைத்த விசாரணைக் குழு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பாரு முழு நேரமாக தொழிலையும் குழந்தைகளையும் மட்டும் பார்த்து வந்தாள்.

ரகு பேச்சை சுத்தமாக குறைத்திருந்தான். சமீபத்தில் நடந்த பிரிமியர் லீக் அணிகளுக்கான கூட்டத்தில் கூட தான் பேசாமல் இருப்பதற்கான உரிமையை பயன்படுத்திக் கொண்டான்.

உள்ளே சென்ற ராஜஸ்தான் வீரர்கள் இருவரும் தத்தம் கிராமங்களுக்குச் சென்றனர். அதில் நிச்சயிக்கப்பட்ட படி ஒருவருக்குக் கோலாகலமாக திருமணம் நடந்தது.

ஸ்ரீகாந்த் சமீபத்தில் தன் காதலி கீதாவைத் திருமணம் செய்து கொண்டான். இந்திய கிரிக்கெட் குழு தன்னை நிரந்தரமாக விளையாடத் தடை செய்து விட்டதால் மீண்டும் தன் சினிமாக் கனவுகளுக்கு உயிர் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஸ்வராஜ் சில தகவல்களை அளித்ததுடன் பெட்டிங் சட்டமாக்கப் பட வேண்டுமென்று நியாயம் பேசினான்.

பத்மநாபன் லலித்தையும் நிரந்தரமாகத் தடை செய்து விட்டார். ஆனால் லலித் ஜெய்ப்பூர் மாநில கிரிக்கெட் சங்கத் தேர்தலில் போட்டியிடத் தயாராகிக் கொண்டிருந்தான்.

ஷயன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றுக் கொண்டான் - நாடே அழுதது.

ஆரம்பத்தில் மீடியா முன் சற்றுத் தடுமாறிய மொஹிந்தர் தன் இளமைப் பட்டாள அணியின் மூலம் சில்வண்டு அணிகளுடன் விளையாடி தொடர் வெற்றி பெற்று அவர்கள் வாயை அடைத்தான்.

சென்னை அணியின் தற்காலிக மேலாளராக கதிர்வேல் நியமிக்கப் பட்டான்.

தன் மகன் செய்த துரோகத்திற்கு பாலாவின் தாயார் பத்மநாபனிடம் மன்னிப்புக் கேட்டார். எவ்வளவோ முயன்றும் பாலாவுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் வருந்தினார்.

டெல்லி கமிஷனர் அஜய்யும், ராத்தோரும் தாங்கள் சமீத்தில் "வாங்கிய" பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழித்தனர்.

பெரியவர் வழக்கம் போல் வியாபாரிகளுக்கு ஏற்றுமதி லாபம் வரவேண்டி வெங்காயத்தைப் பதுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.


அப்புறம்... ஆங்,....பாவம் ரசிகர்கள். அவர்களுக்கு அடிக்கடி "மெடுலா ஒம்ப்லகட்டாவில்" அடிபடுவதால் எல்லாவற்றையும் மறந்து வெங்காய விலையேற்றத்தைக் கண்டித்துக் கொண்டே கிரிக்கெட்டை ரசித்தனர்.
ஆட்டம் தற்காலிகமாக முடிந்தது....

 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...