Saturday, December 6, 2014

கேடி பில்லா, கில்லாடி ரங்கா

காட்சி 1:

"திவ்யா, நான் உன்னை காதலிக்கலை, நீ அழகா இருக்கேன்னு சொல்லலை" என்று ஆரம்பித்தான் அஜய்

"ஹலோ, இந்த வசனமெல்லாம் வந்து பல வருஷம் ஆவுது. இவ்ளோ பழசா இருக்கியே" என்று கிண்டலடித்தாள் திவ்யா.

"ஓகே, நான் உன்னை காதலிக்கறேன், நீ?"

"எதுவா இருந்தாலும் எங்கப்பா கிட்ட பேசிக்கோ" என்று சொல்லிக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள்.

"எனக்கொரு பதில் சொல்லிட்டுப் போ"

"மண்டு, அதான் அப்பா கிட்டே பேசுன்னு சொல்றேன்ல" என்று கூறிவிட்டு நிற்காமல் விரைந்தாள்.

காட்சி 2:

"என்னடா மச்சான், இன்னிக்கு ஒரு பந்து கூட பேட்ல படவே இல்லையே,  எதாவது பிரச்சினையா?" கிரிக்கெட் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கணேஷிடம் கேட்டான் அஜய். இருவரும் கிரிக்கெட் நண்பர்கள்.

"இல்லடா, நாளைக்கு ஒரு பொண்ணு பார்க்க போறேன், முதல் தடவை. அதான் பரபரப்பா இருக்கு" என்று குழம்பி வழிந்தான் கணேஷ்.

"நல்ல விஷயம் தானே, இதுக்கே இவ்ளோ டென்ஷன் எடுத்தேன்னா, அப்புறம் முதல் ராத்திரி ப்ரேக் டவுன் ஆயிடும், பார்த்துக்கோ" என்று கூறி கண்ணடித்தான் அஜய்.

"ஏண்டா வேற சிந்தனையே கிடையாதா?"

"சரி சரி, ப்ரீயா விடு, ஒரு ரவுண்டு ஜாகிங் போவோம் வா, டென்ஷன் குறையும்"

காட்சி 3:


"நீ பேசாம கணேஷையே கல்யாணம் பண்ணிக்க திவ்யா" என்று கண்ணீருடன் கூறினான் அஜய்.

"அடப்பாவி, இதான் நீ லவ் பண்ணின லட்சணமா?

"வேறென்ன பண்ணச் சொல்ற? நான் வந்து உங்கப்பா கிட்ட பேசறதுக்குள்ள அவன் முந்திக்கிட்டான். அவன் உன்னை தான் பார்க்க வர்றான்னு தெரிஞ்சிருந்தா அவன்கிட்டயாவது பேசி தடுத்திருப்பேன்"

"ஓஹோ, பிரெண்டா, பிகரான்னு குழப்பமா இருக்கோ?"

"இல்ல, அது வந்து...."

"நீ உன் நட்பை கட்டிக்கிட்டு அழு, நான் உன் ப்ரெண்டை கட்டிக்கிட்டு காலம் முழுக்க அழறேன், குட் பை"

காட்சி 4:

கோவாவின் பிரபல ஹோட்டலின் டீலக்ஸ் அறை. கணேஷும் தேவிகாவும் உல்லாசமாக படுத்திருந்தனர்.

"புது மாப்பிள்ளை என்ன யோசிக்கறீங்க?" என்று அவன் முள் தாடியை வருடிக்கொண்டே கேட்டாள் தேவிகா"

"எல்லாம் வரப்போற மேட்ச் பத்தி தான். டீம்ல இருக்கேனா இல்லையான்னு கூட தெரியல"

"நான் கூட பொண்டாட்டியைப் பத்தி யோசிக்கறியோன்னு நினைச்சுட்டேன்"

"அவளே என்னை நினைக்கறதில்ல. நான் எதுக்கு அவளை நினைக்கணும்?"

"இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம காதலைப் பத்தி உங்கப்பா கிட்ட சொல்லியிருக்கலாம். இப்படி ஒளிஞ்சு ஒளிஞ்சு லவ் பண்ண வேண்டிய அவசியம் இருந்திருக்காது"

"அந்த மிலிட்டரிகிட்ட பேசறதா? வேற வினையே வேண்டாம். காதல்னாலே கடுப்பாவான் மனுஷன்"

"கேட்கறேன்னு தப்பா நினைக்காதே, பொண்டாட்டிக்கு துரோகம் பண்றோமோன்னு எப்பவாச்சும் தோனியிருக்கா?"

"அவளை நான் பொண்டாட்டியாவே நினைக்கலையே, அப்புறம் தானே துரோகம் பண்றோமா இல்லையான்னு யோசிக்கணும்?"

காட்சி 5:

"விஸ்வநாதன், உன் பையன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை. பொண்டாட்டிய வெச்சு ஒழுங்கா குடும்பம் நடத்தத் தெரியாதவனெல்லாம் என்ன ஆம்பளை? ஆறு மாசத்துலேயே என் பொண்ணு போதும் போதும்னு பிறந்த வீட்டுக்கு வந்துட்டா. ஐ ஆம் வெரி அப்செட்" என்று குமுறினார் திவ்யாவின் அப்பா ராமமூர்த்தி.

"அவங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னே தெரியலடா ராமு. ரெண்டு பேரும் ஏதோ பறிகொடுத்த மாதிரி தான் வாழறாங்க. நான் எவ்வளவோ பேச முயற்சி எடுத்தும் பிடி கொடுக்கவே மாட்டேங்கறாங்க."

"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே, வேற வழியே இல்லை, கோர்ட் படி ஏறித்தான் ஆகணும்"

காட்சி 6:

"என்ன, நான் சொன்ன மாதிரியே உங்கப்பா முன்னாடி செம பெர்பார்மன்ஸ் பண்ணிட்ட போலிருக்கு?" என்று போனில் சிரித்தபடியே கேட்டான் அஜய்.

"பின்னே, இப்போ நான் சேர்ந்து வாழறேன்னு சொன்னாலும் எங்கப்பா விடமாட்டார்" என்று சந்தோஷமாக கூறினாள் திவ்யா.

"அப்புறம் ஜீவனாம்சமா ஒரு நல்ல தொகையா கேளு. அப்போ தான் நம்ம லைப் நல்லா இருக்கும். என்ன சொல்றே?"

காட்சி 7:

"ஒரு 2 கோடி ஜீவனாம்சமா கேட்கலாமா?" என்று கணேஷிடம் போனில் கேட்டாள் தேவிகா.

"கேளு கேளு, ஏன்னா என் பொண்டாட்டி இப்போ தான் 1 கோடி கேட்டு டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பியிருக்கா.  நீ 2 கோடி கேட்டாத்தான் நமக்கு லாபம்" என்றான் கணேஷ்.

காட்சி 8:

சென்னையின் பிரபல பார்.

"இந்தா மச்சி, நாம பேசின படி உன் பங்கு 1.5C கார்ல வெச்சிருக்கேன்" என்று சூட்கேஸ் சாவியை கணேஷிடம் நீட்டினான் அஜய்.

"நம்ம அப்பன்காரங்க கிட்டேர்ந்து பணத்தைப் புடுங்கறதுக்கு எவ்ளோ பெரிய டிராமா போட வேண்டியிருக்கு பார்த்தியா? தலையெழுத்து!" என்று தலையில் அடித்துக் கொண்டான் கணேஷ்.

"நாம என்ன ஸ்டார் ப்ளேயரா மச்சி? விளம்பரம், அது இதுன்னு  கோடிக்கணக்குல சம்பாதிக்கறதுக்கு? எப்பவோ ஒரு டூர்ல சான்ஸ் கிடைக்குது. லோக்கல் டோர்னமென்ட் ஆடறதுனால கொஞ்சம் காசு வருது. அதையும் இந்த அப்பாக்கள் வாங்கி வெச்சுக்கறாங்க. சொன்ன நம்ப மாட்டே, எங்கப்பன் கிரெடிட் கார்ட் பில்லைக் கூட செக் பண்ணி கணக்குக் கேட்கறாண்டா" என்று குமுறினான் அஜய்.

"சரி விடு, அதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சுல்ல, ஒரு ஆறு மாசம் சோக கீதம் வாசிச்சிட்டு அப்புறம் நாம இஷ்டப்படி நம்ம காதலிகளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான். பாவம் பையன்னு இந்த பெரிசுங்களும் சம்மதிச்சுடும்"

அஜய், "அது சரி, திவ்யாவோட இவ்ளோ நாள் இருந்திருக்கியே, எதுவும் கசமுசா?.."

"என்ன மச்சி சந்தேகப்படறியா? நம்மள்து ஜென்டில்மேன் அக்ரீமெண்ட் மச்சி"

"சாரி, ஒரு சின்ன டவுட்டு, அதான்"

"இட்ஸ் ஓகே, லெட்ஸ் என்ஜாய், சியர்ஸ்"

 .
.
.
.
.
.


காட்சி 9:...

"இந்தாடி, நாம பேசின படி உன் பங்கு ஒரு கோடி.."என்று சூட்கேஸ் சாவியை தேவிகாவிடம் நீட்டினாள் திவ்யா.

"தேங்க்ஸ், ஆமாம் உன் பங்கு?"

"அதை நான் ஏற்கனவே எடுத்துக்கிட்டேன். ஆனால் இந்த புருஷனுங்க கிட்டேர்ந்து துட்டை கறக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. என்னல்லாம் நாடகம் போட வேண்டியிருக்கு" என்று சலித்துக் கொண்டாள் திவ்யா.

"எவ்ளோ செலவு பண்ணி நம்ம அப்பாக்கள் நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கறாங்க. இவனுங்க இவங்க அப்பாகிட்டேர்ந்து நேரடியா காசு கேட்கறதுக்கு துப்பில்லாம நம்மளை யூஸ் பண்ணுவாங்களாம், நமக்கு எதுவுமே தெரியாதாம் - லூசுப்பசங்க"

எங்கப்பாகிட்டேர்ந்து வரதட்சிணையா வாங்கின காசைத் தானே எனக்கு ஜீவனாம்சமா குடுத்தான். நியாயப்படி அது நம்ம பணம் தானே?

"சரியாச் சொன்னே"

" நானும் என் ப்ரெண்டும் சேர்ந்து பேஷன் டிசைன் கம்பெனி ஆரம்பிக்கப் போறோம்னு சொன்னேன், முதல்ல தேவையில்லாம நூறு கேள்வி கேட்டான். ஆனாலும் கடைசியில் பணம் குடுத்துட்டான்"

"எல்லாம் ஓகே, நாளைக்கு பேஷன் கம்பெனி எங்கேன்னு கேட்டா?"

"கம்பெனி கண்டிப்பா ஆரம்பிக்கத்தான் போறோம். உங்கப்பாவும் எங்கப்பாவும் தான் நடத்தப் போறாங்க. கம்பெனி ஓடிச்சுன்னா இதுங்களுக்கு லாபம்னு சொல்லி ஒரு சின்ன தொகையை கணக்கு காட்டிட வேண்டியது தான். இல்லேன்னா காந்தி கணக்கு தான். இதையெல்லாம் பார்க்கறதுக்கு இதுங்களுக்கு எங்கடி நேரம்?"

"ஆனா நான் இவன் கிட்ட பணம் கேட்டப்போ என் மாமனார் ஒண்ணுமே சொல்லலை, அதான் ஆச்சர்யம்"

"எப்படி கேட்பாரு?, ஏற்கனவே ஒரு தடவை ஸ்ட்ரிக்டா இருந்ததுனால தான் பையன் இப்படி இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கற மாதிரி ஆயிடுச்சோன்னு குற்ற உணர்ச்சி இருக்கும்ல"

"ஆளுக்கு 1.5 கோடி ஆச்சே? ஒரு கோடி தான் நமக்கு வந்திருக்கு. மிச்சம் 50 லட்சம்?

"அது ஏதோ கவுன்டி மேட்ச் ஆடப் போகணுமாம், அது போக செலெக்ஷன் கமிட்டி ஆளுங்களை கவனிக்கணுமாம், அப்போ தான் வெளி நாட்டு டூர்ல எடுப்பாங்களாம். ஒழிஞ்சுபோன்னு குடுத்துட்டேன்"

"இவனும் அதே கதையை தான் என்கிட்டே சொன்னான், ஒரு வேளை மறுபடியும் தில்லாலங்கடி வேலை எதுவும்.."

"போகட்டும் விடு . ஆயிரந்தான் இருந்தாலும் புருஷனாச்சே. என்ஜாய் பண்ணட்டும்" என்று கூறி இருவரும் சிரித்தனர்.

 .
.
.
.
.
.
.
இவ்ளோ கேவலமான கதையில முடிவா என்ன தான் சொல்ல வர்றேன்னு கேட்கறீங்களா? கருத்து சொல்லாம போவோமா?

நீதி 1 - காதலும் கக்கூசும் ஒண்ணு. உள்ளே ப்ரெஷர் வந்தா உடனே வெளிய தள்ளிடணும். இல்லேன்னா இப்படித்தான் நாறிப்போய் ஊரே மணக்கும்.

நீதி 2 - பொண்டாட்டியை விட நீங்க புத்திசாலின்னு மறந்து போய்க் கூட நினைச்சுக்காதீங்க. நினைச்சா நீங்க தான் முட்டாள்.

(கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)


ஜெயராமன்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...