பொதுவாக சூப்பர் ஸ்டார்
படத்துக்கு அதிக விமர்சனம் தேவையில்லை என்பார்கள். அதனால், விமர்சனத்திற்குப் பதிலாக இந்தப் படம் எப்படி உருவாகியிருக்கும்னு
ஒரு சின்ன கற்பனை ட்ரைலர்:
சூப்பர் ஸ்டாரை சந்தித்த
பின் தனது அலுவலகத்துக்குள் நுழைகிறார் ரவிகுமார்.
உதவி இயக்குனர் ஒருவர்
டவல் எடுத்துத் தர இன்னொருவர் குளிர்ந்த பாட்டிலை அவர் முன் நீட்டுகிறார். மடக் மடக்கென்று
தண்ணீரைக் குடித்த பின் நாற்காலியில் அமர்ந்து பெரு மூச்சு விடுகிறார்.
துணை இயக்குனர்களில் ஒருவர்,
"என்ன ஆச்சு தலைவரே?, ஏதும் பிரச்சினையா?"
ரவி, "பெரிய பிரச்சினை
தான், ஆறு மாசத்துக்குள்ள ஒரு படம் பண்ணித் தர முடியுமான்னு கேட்கறார். அதுவும் ஷங்கர்
பட ரேஞ்சுக்கு"
"நீங்க என்ன சொன்னீங்க?"
"ஒரு நாள் டைம் குடுங்கன்னு
சொல்லிட்டு வந்திருக்கேன்"
"முடிச்சுடலாம் தலைவரே,
ஒண்ணும் டென்ஷன் இல்லை"
"எப்படிடா முடியும்?
ஷங்கர் ரெண்டு வருஷம் ஷூட்டிங் பண்ணினா, அடுத்த 2 வருஷம் கம்பியூட்டர்ல படத்தைப் பாலிஷ்
பண்றான். எனக்கெல்லாம் அந்த அளவுக்குப் பொறுமை கிடையாதே?"
"ஏண்ணே, ஷங்கர் ரேஞ்சுக்குத்
தானே சொன்னாரு, அதே மாதிரின்னா சொன்னாரு?"
"கொஞ்சம் புரியற மாதிரி
சொல்றியா?"
அதற்குள் இன்னொரு உதவியாளர்
குறுக்கே புகுந்து "அந்த பீல் குடுத்தாப் போதும்ணே"
ரவி கடுப்பாகி நோட் புக்கை
விசிறி அடிக்கிறார் "சும்மா வெறுப்பேத்தாம நேரா பேசுங்க"
"முதல்ல ஷங்கர் கூட
வழக்கமா வேலை செய்யற ஆளுங்கள நம்ம படத்துல போட்டுக்கணும். அதுவே பாதி படம் முடிஞ்சா
மாதிரி"
"எப்படி?"
"ரகுமான், வைரமுத்து,
சாபு சிரில், ரத்தினவேலு இந்த மாதிரி"
"ரகுமான், வைரமுத்து
பிரச்சினையில்லை. ஏற்கனவே வொர்க் பண்ணியிருக்கோம். ஆனா மற்றவங்க பெரிய ஆளுங்களாச்சே?
டைம் குடுப்பாங்களா?"
"அண்ணே, இவங்கள்லாம்
பெரிய படங்கள்ல மட்டும் தான் வேலை செய்வாங்க. ஷங்கர் சார் இப்போ படம் எதுவும் பண்ணல.
அதனால ப்ரீயா தான் இருப்பாங்க. அதுவுமில்லாம சூப்பர் ஸ்டார் படத்தில் வேலை செய்யறதுக்குக்
கசக்குமா?"
"சரி, வேற?"
"காட்சிகள் பிரம்மாண்டமா
திரையில் தெரியணும்"
"அதுக்கு?"
"ஒண்ணு கிராபிக்ஸ்
பண்ணணும். இல்லேன்னா அந்த மாதிரி லொகேஷன் வெச்சு கதை பண்ணணும்"
"கிராபிக்ஸ் எல்லாம்
நம்ம ஸ்டைலுக்கு செட் ஆவாது. வழக்கம் போல ராஜா, அரண்மனை, யானை, குதிரைன்னு நாட்டாமை
/ முத்து ஸ்டைலில் வேணா பண்ணலாம்"
இதற்கிடையில் ஒரு உதவியாளர்
சற்றே தயங்கி, "அண்ணே, எல்லாம் சரி, ஆனா நாம இன்னும் கதையை பற்றி பேசவே இல்லையே?"
ரவி கடுப்புடன்,
"அதையும் நீயே சொல்லு".
"தமிழ்நாட்டில் என்னைக்கும்
தீராத பிரச்சினை தண்ணீர் தான். அதை வெச்சு எடுத்தா என்ன?"
உடனே இன்னொரு உதவியாளர்,
"ஆனா முருகதாஸ் கூட விஜய்யை வைச்சு இந்த சப்ஜெக்ட்ல தான் எடுக்கறதா கேள்வி"
"எடுத்துட்டுப் போட்டும்.
நாம நம்ம பாணியில் எடுப்போம்"
"ஐடியா. சமீபத்தில் ஒரு அணையை காப்பாத்தறதுக்கு மக்கள் எப்படி போராடறாங்கன்னு கதை ஒண்ணு படிச்சேன்.
அது கிட்டத்தட்ட நம்ம முல்லைப் பெரியார் மேட்டர் மாதிரியே இருந்திச்சு"
ரவி குஜாலாகி, "அப்போ
அதையே பண்ணிடுவோம். அப்படியே அதைக் கட்டினாரே பெவி கவிக்.."
"பென்னி கவிக்"
என்று இடைமறிக்கிறார் ஒரு உதவியாளர்.
ரவி பேனாவை அவர் மீது வீசியவாறே,
"பெரிய ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி, வந்துட்டாரு"
"ஆங், எங்கே விட்டேன்?
பென்னி கவிக், பேசாம அந்த ஆளையே ஹீரோவாக்கிட்டா? அவரும் கிட்டத்தட்ட அந்த ஏரியாவுல
ஹீரோ மாதிரி தான் வாழ்ந்திருக்கார்"
"பின்றீங்க தலைவரே,"
"அப்படியே பின்னணியில்
அணை வருது. ஒரு 4-5 கிரேன் காமெரா வெச்சு குறுக்கும் நெடுக்குமா ஷாட்ஸ் போட்டோம்னா
பிரம்மாண்டமாவும் தெரியும். என்ன சொல்ற?"
"சூபபர்னே, நீங்க
நீங்க தான், நாங்க நாங்க தான்"
"ஜால்ரா அடிச்சது
போதும். டீ சொல்லி அரை மணி நேரம் ஆவுது, இன்னும் வரலை"
"இதோ இப்பவே"
என்று சொல்லி வெளியே ஓடுகிறார்.
"டேய் ராமு, எங்கே
இந்த ஒரு வரியை கொஞ்சம் டெவலப் பண்ணு பாப்போம்"
"அதாவதுண்ணே, ஹீரோ
மேல் படிப்பு படிச்சிட்டு வெளிநாட்டுலேர்ந்து நம்ம ஊருக்கு வர்றார். .அதாவது படையப்பாவில் வர்ற மாதிரி. இங்க மக்கள் தண்ணியில்லாம
கஷ்டப்படறத பார்க்கறார். அவங்களுக்கு எதாவது செய்யணும்னு சொல்லி அணை கட்டலாம்னு முடிவெடுக்கறார்.
ஆனா அதை அரசாங்கம் தடுக்குது. அதை எதிர்த்து நம்ம ஹீரோ போராடறார் - இதான்
கதை"
இன்னொரு உதவியாளர்,"இதுல
ராஜா, யானைக்கெல்லாம் எங்க வேலையிருக்கு?"
ரவி, "அதை நான் சொல்றேன்.
வெளிநாட்லேர்ந்து வர்ற நம்ம ஹீரோ உண்மையிலேயே அந்த ஏரியாவோட ராஜா. ஆனால் இந்த மேட்டர் இப்ப நடக்கற மாதிரி காமிச்சா பல பிரச்சினை வரும். படம் ரிலீஸ் ஆவாது. பேசாம வெள்ளைக்காரன் காலத்தில் நடக்கற மாதிரி காட்டிட வேண்டியது தான்."
"சூப்பர் ஸ்டாரை மாணவனா
காண்பிச்சா மக்கள் ஒத்துப்பாங்களா சார்?"
"கரெக்ட், சிக்கல்
தான். பேசாம அரசு அதிகாரியா காமிச்சிடுவோம். வெள்ளைக்காரன் காலத்துல நம்மாளுங்க நிறைய
பேரு கலெக்டரா கூட இருந்திருக்காங்க"
"சூப்பர், அப்படியே
4-5 அரசியல் வசனம் கூட எழுத ஸ்கோப் கிடைக்கும்"
ரவி, "நோ நோ, அரசியலே
வரக்கூடாதுன்னு உறுதியா சொல்லிட்டார். அப்புறம் படம் ரிலீஸ் ஆகறதுல சிக்கலாயிடும்"
"அண்ணே, இது ஏதோ பீரியட்
படம் மாதிரி டெவலப் ஆகுதுண்ணே. கொஞ்சம் கரண்டாவும் விஷயம் வேணுமே?"
இன்னொருவர், "இந்த
மகதீரா மாதிரி முன்ஜென்மம், மறுஜென்மம் வெச்சா என்ன?"
ரவி, "அதெல்லாம் வேண்டாம்.
ரொம்ப பழசு. இந்த கலெக்டரை தேடி அவரோட பேரன் வர்றான். பேரன் வரும்போதும் ஊர் மக்களுக்கு
ஏதோ ஒரு பிரச்சினை அதை எப்படி தீர்த்து வைக்கறான்னு காமிச்சுக்கலாம்"
"அப்போ சூப்பர் ஸ்டார்
ரெண்டு கெட்டப்பா? உங்களுக்கும் டபிள் ஆக்ஷன் செண்டிமெண்ட் செமையா வொர்க் அவுட் ஆவும்."
"ரெண்டு ரோல்னா ரெண்டு
ஹீரோயின், ரெண்டு ரொமான்ஸ், ரெண்டு டூயட் - 4 ரீல் படம் ரெடி"
"ரோலுக்கு ரெண்டு
சண்டைன்னா, 4 சண்டை - அடுத்த 4 ரீல் ரெடி"
ரவி, "நோ, நோ, 4 சண்டையெல்லாம்
வேஸ்ட், அதுக்கு நிறைய டைம் வேற எடுக்கும். ரெண்டு சண்டை போதும். சரி, யாராவது முழுக்கதையை
சொல்லுங்க பார்ப்போம்"
"ராஜா வெளிநாடு போய்
படிச்சிட்டு கலெக்டரா ஊருக்கு வர்றாரு. வந்த பார்த்தா ஒரே வறட்சி, பஞ்சம். உடனே ஒரு
அணை முடிவெடுக்கறார். ஆனா வெள்ளைக்காரன் அனுமதிக்கல. அதனால சொந்த காசுல
காட்டறாரு. இதை தெரிஞ்சுக்கிட்ட வெள்ளைக்காரன் சூழ்ச்சி பண்றான். ராஜாவை கெட்டவனா காட்டறான்.மக்கள்
ராஜாவை ஊரை விட்டே துரத்திடறாங்க"
ரவி குறுக்கிட்டு,
"கொஞ்சம் சீரியஸா போகற மாதிரி இருக்கே. , கேரக்டர் வேற ரொம்ப முதிர்ச்சியா இருக்கே. ஆடியன்சுக்கு கொஞ்சம் யூத்தா, லைட்டா எதாவது காட்டணுமே?"
"அதுக்குத்தான் பேரன்
கேரக்டர் இருக்கே, நல்லா மாடர்னா யூத்தா காட்டிடலாம்"
"பேரன் கேரக்டரை எப்படி
காட்டறது?"
"திருடன் தான். அதானே
இப்போ பேஷன். பொண்ணுங்களுக்கும் ஹீரோ திருடனா, மொள்ளமாரியா இருந்தாத்தான் புடிக்குது"
ரவி, "சரி கதை கிட்டத்தட்ட
ஓகே. ஆர்டிஸ்ட் செலெக்ஷன் சொல்லுங்க"
"ரெண்டு ஹீரோயின் வேணும் - தீபிகா படுகோனே அப்புறம் சமந்தா ஒகேவாண்ணே?"
ரவி, "அய்யே, வேண்டாம்பா,
தீபிகா ஒரு நரம்படி, சமந்தாவுக்கு ஏதோ தோல் வியாதியாம், ஸ்பாட்டுக்கு வர்றதுக்கே ரொம்ப
கண்டீஷன் போடும்னு சொல்றாங்க. அதுவுமில்லாம இவங்க ரெண்டு பேரும் அவர் முன்னாடி குழந்தைங்க
மாதிரி இருப்பாங்க. frame
சரியா இருக்காது.
கொஞ்சம் சீனியரா சொல்லு"
"அப்போ நயன்தாரா இல்லேன்னா
அனுஷ்கா போட்டுக்கலாம். இன்னொரு ஹீரோயினா இலியானாவை
போடலாமா?
ரவி,"அந்த பொண்ணு
சோத்துக்கு செத்த மாதிரி இருக்கும்பா, அதுவுமில்லாம ரேட்டும் ஜாஸ்தி. கொஞ்சம் நம்மூர்
பொண்ணு மாதிரி புஷ்டியா சொல்லு"
"ஹிந்தியில புதுசா
வந்திருக்காங்களே சோனாக்ஷி சின்ஹா, நம்ம பிரபு தேவா கூட 2-3 படம் டைரக்ட் பண்ணியிருக்காரு.
அவங்க கொஞ்சம் நம்மூர் பொண்ணு மாதிரி தான் இருப்பாங்க."
ரவி, "சரி, காமெடிக்கு
சந்தானத்தைப் போட்டுக்கலாம். மற்ற கேரக்டர் ஆர்டிஸ்ட் மட்டும்
கொஞ்சம் பொதுவான முகங்களா போடுங்க. அப்போ தான் எல்லா மொழியிலேயும் டப் பண்ணி நிறைய
பிரிண்ட் போட முடியும். "குறிப்பா நம்ம கூட முன்னாடி வேலை செஞ்ச ஆர்டிஸ்டா இருக்கணும். விஜயகுமார் மாதிரி. அப்போ தான் முந்தைய படங்களை refer பண்ணி காமெடி சீன்ஸ் எழுத வசதியா இருக்கும்.
"சரிங்க, மெயின் பார்ட்டி
வில்லன் யாரு தலைவரே?"
ரவி, "பிரகாஷ் ராஜ்
காஸ்ட்லி, கோட்டா ஸ்ரீநிவாஸ் காமெடியன், வேற யாரைப் போடலாம்?"
"அந்த கஜபதி பாபு
பிரீயாத்தான் இருப்பாரு. அவருக்கு ஹீரோ சான்சும் இப்போ யாரும் குடுக்கறதில்ல. சீப்பா
முடிக்கலாம்."
ரவி, "கிட்டத்தட்ட
எல்லாமே ரெடி, நாளைக்கே தலைவரைப் பார்த்து ஓகே பண்ணிடறேன்"
படம் ப்ரிவியூ ஷோ முடிந்த பிறகு,
ரவி, "என்ன சார்,
படம் எப்படி வந்திருக்கு?"
சூப்பர் ஸ்டார் "எதாவது
வித்யாசமா வந்திருக்கும்னு நினைச்சா முத்து படத்தை மறுபடியும் பார்க்கற மாதிரி இருக்கேய்யா?
"இதான் சார் இன்ஸ்டன்ட்
பார்முலா. புதுசா எதாவது பண்ணனும்னா அதுக்கு நிறைய நேரம் எடுக்கும்."
எல்லாம் ஓகே தான். . ஆனா
3 மணி நேரம் ஓடுதே, மக்கள் பார்ப்பாங்களா? நடுவுலே எனக்கே கொஞ்சம் கண்ணை கட்டிடுச்சு"
"உங்களை 3 மணி நேரம்
பார்க்க கசக்குதா சார்? அதுவும் டபுள் ரோலில்? 4 வருஷம் கழிச்சு படம் பண்றீங்க. ரசிகர்களுக்கு
பெரிய ட்ரீட் சார் இது"
"இல்லப்பா, அளவுக்கு
மிஞ்சினா அமிர்தமே நஞ்சு. நானெல்லாம் எந்த மூலைக்கு?"
"அதை பத்தி கவலைப்படாதீங்க.
வேணும்னா அப்புறமா கொஞ்சம் எடிட் பண்ணிக்கலாம். ஏற்கனவே நான் 2 சண்டை 4 பாட்டு மட்டும்
தான் வெச்சிருக்கேன். சீன்ஸ் படத்துக்கு அவசியம்"
சூப்பர் ஸ்டார்,
"அந்த க்ளைமாக்ஸ் சரியில்லையே, கொஞ்சம் கார்ட்டூன் மாதிரி இருக்கே?"
"வேணும் சார். அப்போ
தான் 7-8 வயசு பசங்க படம் பார்க்க வருவாங்க.அவங்களுக்கெல்லாம் இந்த மாதிரி வீடியோ கேம்
சமாச்சாரம் அவசியம் தேவை"
"அதான் சொல்றேன்,
இந்த க்ளைமேக்ஸ் ரொம்ப குழந்தைத்தனமா இருக்கு. 80களில் வந்த ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி"
"நீங்க செய்யலாம்
சார். முதல்ல கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் பேஸ்புக் வாட்சாப்னு இவங்களே தீவிரமா பரப்பிடுவாங்க"
சூப்பர் ஸ்டார்,
"அந்த யூத் கேரக்டர் பார்க்கறதுக்கு பழைய NTR மாதிரி இருக்கே. சில டான்ஸ் ஸ்டெப்ஸ் கூட
அவரைத் தான் ஞாபகப்படுத்துது"
"ரொம்ப வசதியாப் போச்சு.
தெலுங்குல கண்டிப்பா ஹிட் ஆயிடும். ரசிகர்களுக்கு உங்க ஸ்டைலில் ஒரு பொழுதுபோக்குப்
படம் வேணும். அதுக்கு இதைவிட பெட்டர் சாய்ஸ் கிடையாது. நீங்க சொன்னதால நான் பெரிசா
பஞ்ச் டயலாக் கூட வைக்கல. அதுவுமில்லாம இன்டஸ்ட்ரிக்கு இந்த மாதிரி ஒரு மினிமம் கியாரண்டி
படம் தேவை. அப்போ தான் எல்லா தரப்பினரும் சம்பாதிக்க முடியும்."
"ரொம்ப அவசரப்பட்டு
எடுத்த மாதிரி இருக்கு. நிறைய காட்சிகளில் மேக்கப் கூட சரியா போடாத மாதிரி வருது. சிவாஜி,
எந்திரன் மாதிரி படங்கள் பண்ணிட்டு இப்படி மறுபடியும் பழைய பார்முலா பாணியில் படம்
எடுத்தது சரியாய் தப்பான்னு தெரியலை. அதுமட்டுமில்லை, பாட்டும் சுமாராத்தான் வந்திருக்கு."
"என்ன சார் இதுக்குப்
போய் இப்படிக் குழம்பறீங்க? உங்களை நான் இந்த மாதிரி பார்த்ததே இல்லையே?"
"இல்லை ரவி, கோச்சடையான்
மூலமா நான் நிறைய அடி வாங்கிட்டேன். கொஞ்சம் பண நஷ்டம், நிறைய மனக்கஷ்டம். அதான் இந்தப்
படம் வெற்றி அடையணுமேன்னு கவலையா இருக்கு. ஏன்னா பெயர், புகழ், பணம் போனா சம்பாதிசுக்கலாம்.
ஆனா நம்பிக்கை போயிடுச்சுன்னா அப்புறம் எழுந்துக்கவே முடியாது. நம்ம இண்டஸ்ட்ரியே நம்பிக்கையில்
தான் ஓடுது"
"வாஸ்தவம் தான் சார்.
ஆனா நீங்க கவலைப்படற அளவுக்கு ஒண்ணும் இல்லை. உங்களுக்குத் தான் கடவுள் நம்பிக்கை உண்டே,
எல்லாம் "அவன்" செயல்னு நினைச்சு அக்கடான்னு இருங்க"
"கரெக்ட் ரவி, ஓடினா
அடுத்த படம், ஓடாட்டி ரிடயர்மென்ட். எது எப்படியிருந்தாலும் இமயமலைக்கு பறக்காஸ் நிச்சயம்.
மேற்கண்ட உரையாடல் முழுக்க முழுக்க கற்பனையே சூப்பர் ஸ்டார் இருக்கும் வரை ரசிகர்கள் இருப்பார்கள். ரசிகர்கள் இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் இருப்பார். சினிமா என்பது இவர்களை இணைக்கும் ஒரு மீடியம். அவ்வளவே. அது எப்படியிருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை.
ஜெயராமன்
Really superb. Please write more articles.
ReplyDelete