Monday, January 2, 2012

2012 - உறுதிமொழிகளும் / வேண்டுதல்களும்

சச்சின்:
எப்படியும் நூறு அடிக்கலாம்னு நம்பி ஆடினேனே, பய புள்ள இப்படியா பௌலிங் போடுவான்!!. இந்த வருஷத்துலயாச்சும் எப்படியும் அந்த கர்மம் புடிச்ச நூறை அடிச்சே தீரணும். இல்லேன்னா 22 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெரிய கரும் புள்ளி வெச்சா மாதிரி ஆயிடும்.

தோனி:
ச்சே, எவ்வளவோ முயற்சி பண்ணியும் பழக்க தோஷத்துல அதே மாதிரி அவுட் ஆயிட்டேனே. இனிமேலாச்சும் ஒழுங்கா பேட் பிடிக்க கத்துக்கணும். இல்லேன்னா பிசிசிஐ கிட்ட சொல்லி சப்-காண்டினென்ட்ல மட்டும் கிரிக்கெட் மேட்ச் வெச்சுக்க சொல்லணும்.

விக்ரம்:
ஜனங்க பாக்கற மாதிரி அட் லீஸ்ட் ஒரு படமாச்சும் பண்ணணும். அதுலயும் குறிப்பா தயாரிப்பாளருக்கு கொஞ்சமாச்சும் காசு கிடைக்கணும். ஷங்கர் / ஹரி கூட ஒரு படம் பண்ணி நம்ம மார்கெட்ட சரி பண்ணிக்கணும். இல்லேன்னா மறுபடியும் மலையாளப் படங்கள்ல ஹீரோவுக்கு எடுப்பா போற மாதிரி ஆயிடப் போவுது.

விஜய்:
நண்பன் படம் எப்படியாச்சும் கிளிக் ஆயிடணும். இல்லேன்னா சங்கரால கூட விஜய்யை காப்பாத்த முடியலைன்னு விமர்சனம் எழுதிடுவாங்க. மதுரை கோயம்புத்தூர் கவர் பண்ணியாச்சு. அடுத்த பட ஆடியோ லாஞ்ச் திருச்சி இல்லேன்னா திருநெல்வேலி மாவட்டத்துல தான் வைக்கணும். இல்லேன்னா ரசிகர்கள் / தொண்டர்கள் கோவிச்சுக்குவாங்க.

சூர்யா:
இனி வரும் படங்கள்ல உடம்பை மட்டுமில்ல, கொஞ்சம் நடிப்பையும் காட்டணும். அப்புறம் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில ஜெயிக்கறவங்களை எப்படியாச்சும் அகரம் நிறுவனத்துக்கு டொனேட் பண்ண வெச்சிடணும்.

கமல்:
வேறென்ன? "விஸ்வரூப" பிரச்சினை சுமுகமா தீர்ந்து படம் வெளிய வந்தாப் போதும்.

விவேக் / வடிவேலு:
எங்களுக்குப் படம் எப்படியிருந்தாலும் பரவால்ல, சான்ஸ் கிடைச்சாப் போதும். நாங்களும் எவ்ளோ நாள் தான் பிசியா இருக்கற மாதிரியே நடிக்கறது?

பான்டிங்:
நல்ல வேளை, இந்தியா வந்தாங்க, இல்லேன்னா என் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்? ஆண்டவா, போன டெஸ்ட் மாதிரி அடுத்தடுத்த டெஸ்டுகளிலும் சராசரியா 50௦ அடிச்சுட்டா தேவலை.

தமிழக முதல்வர்:
தலைமைச் செயலகம், நூலகம்னு ஒவ்வொரு இடமா தனித்தனியா மாத்தறது ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம முழு தமிழ்நாட்டையும் கர்நாடகாவுக்கு மாத்திடணும். நமக்கும் கோர்ட் போய் வர ஈசியா இருக்கும்.

கலைஞர்:
கனிமொழி வெளிய வந்ததுக்கு சந்தோஷப்படலாம்னு பார்த்தா இந்த அம்மா ஸ்டாலினை உள்ளே தள்ளப் பாக்கறாங்களே? குடும்பத்துல எவனாச்சும் கம்பி எண்ணிக்கிட்டே இருக்கற மாதிரி ஆயிடுச்சே? இந்த வருஷமாச்சும் இந்த நிலைமை மாறணும்

ஹாரிஸ் ஜெயராஜ்:
ஒரு பாட்டாவது முந்தைய பாடல்களை ஞாபகப்படுத்தாத மாதிரி போடணும். மக்கள் ரொம்ப கேவலமா திட்டறாங்க.

சிம்பு:
தனுஷுக்குப் போட்டியா நாமளும் ஒரு பாட்டு போட்டாச்சு. இனிமே சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியா ஒரு 4D படம் எடுத்துட வேண்டியது தான். இப்படி எதாச்சும் பண்ணினாத் தான் நாமளும் பீல்ட்ல இருக்கோம்னு பசங்களுக்குத் தெரியுது.

மன்மோகன் சிங்:
போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் வாயை மூடிக்கிட்டு கம்முனு இருந்துடணும். எவன் கறுப்புக் கொடி காட்டினா நமக்கென்ன, காறித் துப்பினா நமக்கென்ன!!

சல்மான் கான்:
தமிழ் மற்றும் தெலுங்குல நிறைய மசாலாப் படங்கள் வரணும். அது எல்லாத்தையும் நானே ஹிந்தியில பண்ணி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திடணும்

ஷாருக் கான்:
கோச்சடையான் ஹிந்தி ரைட்ஸ் எனக்கே கிடைக்கணும். அவர் பேர் சொன்னாத் தான் இனிமே வண்டி ஓடும் போலிருக்கு.

சாதாரண குடிமகன்:
2012ல உலகம் கண்டிப்பா அழிஞ்சு போயிடணும். பின்னே என்னங்க? பெட்ரோல் விலை ஏறிப் போச்சுன்னு பஸ்ல ஏறினா பஸ் டிக்கெட் விலையை ஏத்தறாங்க, விலைவாசி ஏற்றம், அரசியல்வாதிங்க பண்ற ஊழல், அதுக்கு விசாரணைன்ற பேர்ல அவங்க அடிக்கற கூத்து, சுகாதாரக் கேடு. ஒரு போன் கூட நிம்மதியா வாங்க முடியலைங்க, ஒண்ணு வாங்கறதுக்குள்ள அதோட அடுத்த வெர்ஷன் வந்துடுது. குடிக்கற தண்ணியிலேயும் கலப்படம், சாராயத்திலேயும் கலப்படம், ஊர் பேர் தெரியாத வியாதிங்க, அதுக்கு வைத்தியம் பண்ணலாம்னு போனா போலி டாக்டர் போலி மருந்தை எழுதித் தர்றான், வீடு வாங்க முடியலை, வாங்கின வீட்டை விக்க முடியலை, அரிசி மூட்டையை வாங்கறவனால அதைத் தூக்க முடியறதில்ல, அதை தூக்கறவனால வாங்க முடியறதில்லை - அந்த அளவுக்கு நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு.

நல்ல படம் வராதான்னு ஏக்கம் ஒரு பக்கம், வந்துட்டா அதை தியேட்டர்ல போய் பாக்க முடியாத அளவுக்கு டிக்கெட் விலை ஏறிப்போச்சேன்னு வருத்தம் மறு பக்கம், தண்ணிக்காக குழாயடிலேர்ந்து பக்கத்து ஸ்டேட்காரன் வரைக்கும் எல்லார் கூடவும் சண்டை போட வேண்டியிருக்கு. IPL பார்த்தா கிரிக்கெட் அழிஞ்சு போயிடும்னு ஒருத்தன் சொல்றான், பார்க்கலேன்னா வளரும் கிரிக்கெட்டர்ஸ் அழிஞ்சு போயிடுவாங்கன்னு இன்னொருத்தன் சொல்றான் அரசாங்க அதிகாரி லஞ்சம் வாங்கறார்னு போலீஸ்ல புகார் குடுத்தா அவர் புகார் எழுதிக்கவே லஞ்சம் கேக்கறார்.

குழந்தைகளை படிக்க வைக்கறது பெரிய ப்ராஜக்டா ஆயிடுச்சு. அவன் படிச்சு வெளிய வந்தாலும் வேலை கிடைக்க மாட்டேங்குது. வேலை கிடைச்சவனுக்கு அவன் எவ்ளோ நாள் அந்த வேலையில இருப்பான்னு தெரியமாட்டேங்குது. மொத்ததுல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அன்னா ஹஜாரே அணின்னு ஆளாளுக்கு மாத்தி மாத்தி ரேப் பண்ணின லோக்பால் மசோதா மாதிரி நாறிப் போய் கிடக்குது நம்ம வாழ்க்கை.இப்படி ஒரு கேவலமான நிலைமையில வாழறது ரொம்ப தேவையா?

சுனாமியோ, பூகம்பமோ எதாச்சும் ஒண்ணு வந்து குடும்பத்தோட தூக்கிடணும். அப்போ தான் அடுத்தவனுக்குத் தொந்திரவு இல்லாம மேல போயிடலாம். காரியம் பண்ற செலவாச்சும் மிச்சமாவும்.

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...