Monday, January 23, 2012
நண்பன் - ரீமிக்ஸ்
நண்பன் - ரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல எல்லோரும் பார்க்கும்படியான ஒரு படம். ஒரிஜினல் படத்துக்குக் கொஞ்சமும் பங்கம் விளைவிக்காம அப்படியே நகல் எடுத்திருக்காரு ஷங்கர். இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கும், ஷங்கர் ரசிகர்களுக்கும் இந்தப் படம் அவ்வளவா திருப்தி அளிக்கலைன்னு ஒரு பேச்சு அடிபடுது. ஸோ, அந்தக் குறையைப் போக்க, நண்பன் ரீமிக்ஸ்:
முதல்ல, ஷங்கர் அவர் ஸ்டைலில் படம் எடுத்திருந்தா எப்படி வந்திருக்கும்? ஷங்கரும் விஜய்யும் டிஸ்கஸ் பண்றாங்க:
ஓபனிங் சீன் பிரேசில் அமேசான் காடு. இதுவரைக்கும் டிஸ்கவெரில கூட காட்டாத அபூர்வ விலங்கினங்களைக் காட்டிக்கிட்டே வர்றோம், அதை ஸ்ரீகாந்த் சூட் பண்ணிக்கிட்டு இருக்கார். அப்படியே டைட்டிலும் ரோல் ஆவுது.
விஜய், "சார், ஆனா ஹிந்தில ரொம்ப சாதாரணமா காட்டியிருக்காங்களே?"
ஷங்கர், "அதெல்லாம் நம்ம சினிமாவுக்கு சரிப்படாது. வைல்ட் லைப் போட்டோக்ராபர்னு சும்மா நாலு புஸ்தகத்தைக் காட்டினா சரியாப் போச்சா?"
விஜய், "சரி மேல சொல்லுங்க"
அப்படி ஸ்ரீகாந்த் காட்டில பிசியா இருக்கும்போது அவரோட ஐபோன்ல மெசேஜ் வருது,”want to meet Pari? come to our college – by silencer”
இதைப் படிச்சிட்டு ஸ்ரீகாந்த் உடனே ஜீவாவுக்கு வீடியோ கால் பண்றாரு. ஜீவா சென்னையில பிளாஸ்டிக்லேர்ந்து மின்சாரம் உற்பத்தி பண்ற பிளாண்ட்ல சீப் என்ஜினியரா வேலை பார்க்கறார். ஸ்ரீகாந்த் அவருக்கு தகவல் சொல்றாரு. அடுத்த சீன்ல ஸ்ரீகாந்த் லேண்ட் ஆகறார். ஜீவா அவரை ரிசீவ் பண்றாரு, ரெண்டு பேரும் காலேஜ் போறாங்க. அங்க சத்யனை மீட் பண்றாங்க.
விஜய் மனசுக்குள் "அப்பாடா, சீக்கிரம் சென்னை வந்துட்டாரு, எங்க அமெரிக்காவுக்கு டைவர்ட் பண்ணிடுவாரோன்னு பயந்துட்டேன்"
ஷங்கர் தொடர்கிறார், "இதுக்கு அப்புறம் வர்ற சீன்ஸ் எல்லாம் அப்படியே ஒரிஜினல்ல வர்ற மாதிரி வெச்சுக்கலாம், லொகேஷன் மட்டும் ஊட்டிக்குப் பதிலா சிட்னி வெச்சுக்கலாம்"
விஜய் சற்றே அதிர்ச்சியாகி, "எது, இந்த ஆஸ்திரேலியாவுல இருக்கே அதுவா??"
ஷங்கர், "அதே தான், ஏன்னா நம்ம ஹீரோ பேரு வந்து பர்மிய மற்றும் இலங்கைத் தமிழர்கள் வைக்கற பேர் மாதிரி இருக்கு. ஸோ, இந்த மாதிரி ஒரு வெளிநாட்டுப் பின்னணி தேவை. அப்போதான் ஒரு நேட்டிவிட்டி கிடைக்கும்."
விஜய், "இந்த மலேசியா சிங்கப்பூர் பக்கம் போகக் கூடாதா?"
"அதெல்லாம் எல்லா படத்துலயும் தான் காட்டறாங்க. ஸீன் வித்யாசமா இருக்கணும்னா ஹெவியா இருக்கணும். ஹெவியா ஸீன் வேணும்னா இந்த மாதிரியெல்லாம் காட்டணும்."
விஜய் முகத்தைத் துடைத்தவாறே, "சரி சொல்லுங்க"
ஷங்கர், 'சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் மூணு பேரும் குவாண்டாஸ் ப்ளைட்ல உக்காந்திருக்காங்க. பிளைட் டேக் ஆவுது, பிளாஷ்பேக்கும் ஸ்டார்ட் ஆவுது"
விஜய், "இங்க எதாச்சும் மாறுதல் இருக்கா?'
ஷங்கர், "இல்லை இல்லை, இங்க நான் எதுவும் பண்ணலை, அதே மாதிரி ஒரு சாங், ராகிங் ஸீன், உங்க என்ட்ரி, எல்லாம் அப்படியே காட்டறோம்.
ஹீரோயினையும் அதே மாதிரி அவங்க அக்கா கல்யாணத்துல இன்ட்ரோ பண்றோம், அவங்களுக்கு நிச்சயம் பண்ணியிருக்கற பையன், அங்க நடக்கற காமெடி, எல்லாம் அப்படியே வெச்சுக்கலாம். இதுக்கப்புறம் நீங்க காலேஜ் ஜிம்ல உடற்பயிற்சி பண்றீங்க, அங்க அந்த நிச்சயம் பண்ணின பையன் சில ஆளுங்களை அனுப்பி உங்களை மிரட்டறான். போன சீன்ல நீங்க அவனை கிண்டல் பண்ணினீங்க இல்லையா? அதுக்கு ரிவென்ஜ் எடுக்கற ஸீன் இது. இங்க ஒரு சண்டை வருது. சாபு சிரில் கிட்ட சொல்லி நேரு இண்டோர் ஸ்டேடியம்ல லேட்டஸ்ட் கருவிகளோட ஒரு புல் ஜிம் செட் போட்டுக்கலாம். இந்த ஸீன் முடிஞ்சவுடனே ஜீவாவோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு உங்களுக்கு போன் வருது. எப்படிப் போறதுன்னு தெரியாம நீங்க யோசிக்கும்போது அங்கே யதேச்சையா சத்யராஜைப் பார்க்க இலியானா வர்றாங்க. அவங்களை வலுக்கட்டாயமா அழைச்சிக்கிட்டு நீங்க போறீங்க, மருத்துவமனையில சேர்க்கறீங்க. அது முடிஞ்சதும் அப்படியே ட்ரீம் சாங். கிராபிக்ஸ் வேலையெல்லாம் பிராங்கி பாத்துக்குவாரு. ஏன்னா சிச்சுவேஷன் கேக்குது. அனிமேட்டராநிக்ஸ்ல லேட்டஸ்ட் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் ஒண்ணு வந்திருக்கு. அதை இந்தப் பாட்டுல பயன்படுத்தப் போறோம்.
விஜய், "சார், எனக்கு லூஸ் மோஷன் வர்ற மாதிரி இருக்கு, கொஞ்சம் வேகமா கதைய நகர்த்துங்க"
ஷங்கர், " இதுக்குப் பிறகு வர்ற ஸீன் எல்லாம் அப்படியே ஒரிஜினல்ல வர்ற மாதிரி வெச்சுக்கலாம். மூணு பேரும் சிட்னில இறங்கறாங்க. அங்க இருக்கற இந்தியன் எம்பஸி, தமிழ்ச்சங்கம்னு எல்லா இடத்துலயும் விசாரிக்கறாங்க. நடுநடுவுல போன்ல கூகிள் மேப்ஸ் எல்லாம் காட்டறோம். ஒரு வழியா வீட்டைக் கண்டுபிடிக்கறாங்க. அங்க சூர்யா இருக்கறதைப் பார்த்து அதிர்ச்சி ஆகறாங்க - இண்டர்வல் போட்டுக்கலாம். இந்த சீன்களுக்கு நடுவுல சத்யன் அப்பப்போ உங்க ஒரிஜினல் பேரைச் சொல்லிக்கிட்டே இருப்பாரு. ஜீவாவும் இந்த பேரை நானும் எங்கயோ கேள்விப்பட்ட மாதிரியே இருக்குன்னு சொல்றாரு. அந்த சஸ்பென்ஸ் ட்ராக் அப்படியே சைடுல போவும்"
விஜய் மனசுக்குள், "பாதிக்கிணறு தாண்டினதுக்கே ஆஸ்திரேலியா வரைக்கும் வந்துட்டோம். இனிமே என்ன ஆவுமோ?"
ஷங்கர் தொடர்கிறார், "அப்புறம் அவங்க சூர்யாவை மீட் பண்றாங்க, மிரட்டல், ரகளை எல்லாம் நடக்குது, சூர்யா உங்களைப் பத்தி சொல்றாரு. எல்லாரும் நீங்க எங்க இருக்கீங்கன்னு அவர்கிட்ட கேக்கறாங்க, அதுக்கு சூர்யா "நம்ம தமிழ்நாட்டு பாட புத்தக கமிஷன் தலைவரே அவன் தாம்பா" என்று ஷாக் குடுக்கிறார்.
விஜய், "எனக்கும் ஷாக்காத் தான் சார் இருக்கு"
போற வழியில ஜீவா ஹீரோயினுக்குப் போன் போடறாங்க. அவங்களுக்கு மலேசியாவுல கல்யாணம்னு தெரிய வருது. அப்படியே மலேசியா போறோம். பிளாஷ்பேக்கும் தொடருது. ஹீரோயின் அவங்கப்பா ஆபீஸ் சாவியை திருடிக்கிட்டு வந்து உங்க கிட்ட குடுக்கறாங்க. அப்படி வரும் போது அவங்களுக்கு லேசா அடிபட்டுடுது. நீங்க அவங்களுக்கு மருந்து போடறீங்க. அப்படியே ஒரு ட்ரீம் சாங் வெச்சுக்கலாம். ஒரு பாதி முழுக்க எஞ்சினியரிங் செட், இன்னொரு பாதி முழுக்க மருத்துவமனை செட் போட்டுக்கலாம். "ட்ரீட்மென்ட் குடுக்க வந்தேன் எனக்கு ட்ரீட் கிடையாதா?" அப்படின்னு வார்த்தைகளைப் போட்டுடலாம். அப்புறம் கல்யாண மண்டபத்துல கலாட்டா பண்ணி ஹீரோயினைப் பிக்கப் பண்ணிக்கிட்டு மறுபடியும் சென்னைக்கு வர்றாங்க. அங்கே நண்பர்களுக்குள்ள ஒரு நெகிழ்வான சந்திப்பு. இந்த இடத்துல ஒரு சின்ன சஸ்பென்சும் வெச்சிருக்கேன். செத்துப்போன சத்யராஜ் பையனும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். அவர் சாகும் தருவாயில அப்பாவைத் திருத்தச் சொல்லி உங்க கிட்ட வேண்டிக்கறார். இனி ஒருத்தனும் என்னை மாதிரி சாகக் கூடாது, அதுக்கு நீ தான் எதாச்சும் பண்ணனும்னு சொல்றார். அதனால தான் நீங்க அந்த காலேஜிலேயே சேரறீங்க. இதை சத்யராஜ் உங்களை காலேஜை விட்டு துரத்தும்போது அவர் கிட்ட சொல்றீங்க. ஆனா இந்த உண்மை வேற யாருக்கும் தெரியாது - ஹீரோயின் உள்பட. நண்பர்கள் உங்களை நோக்கி வர்றாங்க, நீங்க அவங்களை நோக்கிப் போறீங்க. பின்னணியில இந்த பிளாஷ்பேக் ஓடும்.
உங்களுக்கும் ஹீரோயினுக்கும் ஒரு சின்ன மோதல் அப்புறம் காதல், பின்னாடியே சத்யன் வர்றார், அவரையும் கிண்டல் பண்றீங்க. கடைசியில நீங்க ஒரு சோஷியல் மெசேஜ் சொல்றீங்க, "சிஸ்டம் மாறணும்னு சொன்னா மட்டும் போதாது, இறங்கி வேலை செய்யணும். அதான் நான் இந்த பதவிக்கு வந்துட்டேன். இனிமே தமிழ்நாட்டு சிலபஸ் எல்லாத்தையும் மாத்தப் போறேன். படிக்கறது, வேலைக்குப் போறதை விட ஒரு சுமையான விஷயமா மாறிடுச்சு. இனிமே ஒரு மாணவனும் தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடாது" அப்படின்னு சொல்றீங்க. அப்புறம் சத்யனுக்கு நீங்க தான் அந்த விஞ்ஞானின்னு தெரிய வருது. அதுக்கு நீங்க“நான் இப்போ விஞ்ஞானி இல்லை, முழு நேர அரசாங்க ஊழியன், என் பேடன்ட் எல்லாம் இந்திய அரசாங்கத்துக்குத் தான் சொந்தம் எந்த கம்பெனிக்கும் விக்கமாட்டேன்னு” சொல்றீங்க. நீங்க ஓட, அவர் உங்க பின்னாடி ஓட, படம் முடியுது.
விஜய், "முடிஞ்சிடுச்சா, அப்பாடா!"
ஷங்கர், "இதுல சிட்னி, மலேசியா இங்கெல்லாம் டாப் ஆங்கிள் தான் காட்டறோம். அப்போதான் பிரம்மாண்டம் தெரியும். அதுலயும் குறிப்பா மலேசியாவுல பெட்ரோனாஸ் டவர் மேலேர்ந்து கீழ அப்படியே ஜூம் போட்டு இறக்கறோம். கிரேன், ஹெலிகப்ட்டர் அப்புறம் ஒரு 10 காமெரா எல்லாத்துக்கும் சொல்லிடுங்க.
இவ்ளோ நேரம் அப்பாவியாய் வாய் மூடி இருந்த தயாரிப்பாளர், "அப்படியே என் சொந்தக்காரங்களுக்கும் சொல்லிடுங்க – I QUIT”
அடுத்தது, விஜய்யும் பேரரசுவும் டிஸ்கஸ் பண்றாங்க:
பேரரசு, "சார், இந்த ஹிந்திப் படத்துல ஒரு மாணவன் தற்கொலை பண்ணிக்கறான் பார்த்தீங்களா, அந்த ஸீனை முதல்ல காட்டறோம். அப்புறம் டைட்டில் போடறோம். ஒரிஜினல் படத்துல வர்ற மாதிரி நாம பிளாஷ்பேக் எல்லாம் சொல்லப் போறதில்ல. டைரக்டா கதை தான். காலேஜில ராகிங் நடக்குது. மாணவர்கள் எல்லாம் யாராச்சும் வந்து நம்மளைக் காப்பாத்த மாட்டாங்களான்னு ஏங்கறாங்க. அந்த இடத்துல நீங்க என்ட்ரீ ஆகறீங்க. உங்களைப் பார்த்ததும் சீனியர் ஸ்டூடெண்ட்ஸ் வம்பு பண்றாங்க. அந்த இடத்துல ஒரு பைட். அதுக்கப்புறம் பாதிக்கப் பட்ட மாணவர்கள் எல்லாம் உங்களைத் தூக்கிக் கொண்டறாங்க. இங்க ஒரு பாட்டு, "நான் உன் தோழன், நீ என் தம்பி" அப்படின்னு வார்த்தைகளைப் போட்டுக்கலாம். முடிஞ்சா கேரள நடிகர்கள் யாரையாச்சும் கெஸ்ட் அப்பியரன்ஸ் பண்ண வைக்கலாம். உங்களுக்குத் தான் கேரளாவுல ரசிகர்கள் அதிகம் ஆச்சே!"
விஜய், "பலே பலே, நான் எதிர்பார்த்த மாதிரியே நல்லா வருதே"
பேரரசு, "அதுக்கப்புறம் வர்ற காட்சிகள் எல்லாம் ஒரிஜினல் மாதிரியே வருது. இங்க உங்களுக்கு ரெண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்காங்க. ஸ்ரீகாந்த் மற்றும் உங்க பிரெண்ட் சஞ்சய் இவங்களைப் போட்டுக்கலாம். சீப்பா முடிஞ்சிடும். ஏன்னா காலேஜ் கலாட்டா சீனுக்கெல்லாம் இவங்க பயன்படுவாங்க. நடுவுல அந்த மாணவன் தற்கொலை பண்ணிக்கிட்ட ரூமை அடிக்கடி விஜய் பார்க்கறார். அது ஏன்னு அப்புறமாத் தான் சொல்லப் போறோம். அப்புறம் ஹீரோயினை கல்யாணத்துல சந்திக்கறீங்க. அங்க அவருக்கு நிச்சயம் பண்ணியிருக்கற பையன் அவங்களை குடிக்கச் சொல்லி வற்புறுத்தறான். கேட்டா இதெல்லாம் நாகரீகம்னு சொல்றான். ஹீரோயின் மறுக்கறாங்க. நீங்க புகுந்து தடுக்கறீங்க, அவன் ஆளை வெச்சு அடிக்கறான், இங்க ஒரு பைட். அப்புறம் ஹீரோயின் நன்றி சொல்றாங்க. கேரளாவுல ட்ரீம் சாங். எல்லா முக்கியமான இடங்களையும் கவர் பண்றோம்.
விஜய் உற்சாகமாகி, "அப்புறம்?"
"அப்புறம் உங்களுக்கும் சத்யராஜுக்கும் நிறைய என்கவுன்டர் சீன்ஸ் வருது. அவர் உங்களை பெயிலாக்கப் பாக்கறாரு. நீங்க எஸ்கேப் ஆவுறீங்க. நீங்க அவர் பொண்ணை டாவடிக்கறது அவருக்குப் பிடிக்கல. என்னல்லாமோ செய்யறாரு. நீங்க எல்லாத்தையும் வெற்றிகரமா சமாளிக்கறீங்க. கடைசியில வெறுத்துப் போய் ஏன் என்னை இவ்ளோ டார்ச்சர் பண்றே அப்படின்னு உங்க கிட்ட கேக்கறாரு. "நான் யாருன்னு தெரியுமா?" அப்படின்னு சொல்லி பிளாஷ்பேக் ஆரம்பிக்கறீங்க.
பேரரசு தொடர்கிறார்,, "முதல்ல ஒரு மாணவன் தற்கொலை பண்ணிக்கறானே, அவரோட தம்பி தான் நீங்க. அண்ணனோட ஆசையை நிறைவேத்தறதுக்காக நீங்க படிக்க வந்திருக்கீங்க. அவங்க கிராமத்துல வாழற வாழ்க்கை, குடும்பத்தோட ஜாலியா இருக்கறது, ஒரு குடும்பப் பாட்டுன்னு ரொம்ப செண்டிமெண்டாக் காட்டிடலாம். இந்த உண்மை தெரிஞ்ச சத்யராஜ் இன்னும் கோபமாகி "அவனே ஒரு உதவாக்கரை, சொன்னதைத் தவிர மற்றது எல்லாம் செய்வான், அவனால அந்த வருஷம் எனக்கு ரேங்கிங் போச்சு, அவனை ஒழிச்ச மாதிரி உன்னையும் ஒழிச்சுக் கட்டறேன்னு சபதம் போடறார். நீங்களும் சவால்னு சொல்றீங்க" - இண்டர்வல் போடறோம்
விஜய், "ண்ணா, பின்றீங்கண்ணா "
பேரரசு உற்சாகமாகி, ""இதுல முதல் பாதியில உங்க கூட படிக்கற ஒரு பொண்ணு இல்லேன்னா ஒரு இளமையான ஆசிரியர் உங்களை கவர்ச்சியா சீண்டிகிட்டே இருக்கற மாதிரி நிறைய சீன்கள் வருது. அப்போத்தான் கிளாமர் கிடைக்கும். அந்த மில்லிமீட்டர் கதாப்பாத்திரத்தை ஆபீஸ் பியூனாக் காட்டிக்கலாம். சந்தானத்தைப் போட்டுக்கலாம். காமெடி டிராக் கிடைக்கும். நீங்க, சந்தானம் அப்புறம் அந்த கவர்ச்சிப் பொண்ணு மூணு பேரு வர்ற மாதிரியா சீன்கள் வெச்சா கதை கொஞ்சம் கிளுகிளுப்பாவும் காமெடியாவும் நகரும். அதை ஒரு சைடு டிராக்கா கட்டறோம்"
விஜய், "மேல சொல்லுங்க"
"இண்டர்வல் முடிஞ்ச உடனே ஒரு கிளாஸ் ரூம் ஸீன். அங்க அந்த கவர்ச்சி லேடி உங்க கிட்ட வம்பு பண்றாங்க. நீங எஸ்கேப் ஆகறீங்க. அவங்க உங்களையே நினைச்சு அப்படியே ட்ரீம் சாங்குக்குப் போறாங்க. சிம்பிளா எங்கயாச்சும் செட் போட்டு எடுத்துக்கலாம். எல்லா முயற்சியிலும் தோல்வி அடைந்த சத்யராஜ் கடைசியா உங்க நண்பரை வெச்சு உங்க மேல பொய் கேஸ் போடச் சொல்றாரு. அதுக்கு மறுக்கற உங்க நண்பர் தற்கொலை பண்ணிக்கறாரு. அதுக்குக் காரணம் நீங்கதான்னு உங்க மேல பழி விழுது. ஹீரோயின் உங்க மேல வெறுப்பு அடையறாங்க. ஆனா இதெல்லாம் சத்யராஜ் வேலைன்னு உங்களுக்குத் தெரியும். ஆனாலும் பொறுமையா இருக்கீங்க. இங்க ஒரு சோகப் பாட்டு வருது - முதல்ல பாடின டுயட்டோட சோக வெர்ஷன்.
"அப்புறம் நீங்க உண்மையைக் கண்டு பிடிக்கறீங்க. இங்க நிறைய ட்விஸ்ட் வருது. ஒரு பைட்டும் வருது. ஹீரோயினுக்கு உண்மை தெரிய வருது. அப்படியே கிராமத்துப் பின்னணியில குத்து டூயட் - அப்படிப் போடு மாதிரி"
விஜய், "இது ரொம்ப முக்கியம், இல்லேன்னா ரசிகர்கள் கோச்சுக்குவாங்க"
உண்மை தெரிஞ்ச ஹீரோயின் சத்யராஜை வெறுக்க ஆரம்பிக்கறா. இதனால ஆத்திரமடையற சத்யராஜ், ரவுடிகள் மூலமா கல்லூரிக்குள்ள ஒரு கலவரத்தை உண்டு பண்றாரு. அதுக்கு நீங்க தான் காரணம்னு ஸீன் உருவாக்கறார். ஆனா அவர் வெட்டற குழியில அவரே விழற மாதிரி அவர் பண்ற கலவரம் அவர் பெரிய பொண்ணு பிரசவத்தை பாதிக்குது. நீங்க கலவரத்தையும் சமாளிச்சு அந்தப் பொண்ணையும் மருத்துவமனையில கொண்டு போய் சேர்க்கறீங்க. சத்யராஜ் திருந்தி உங்க கிட்ட மன்னிப்பு கேக்கறார். தான் செஞ்ச தப்புக்கு பரிகாரமா தன் கல்லூரி முதல்வர் பதவியை ராஜினாமா பண்றாரு. நீங்க அந்தக் கல்லூரிக்கு முதல்வராகறீங்க.
விஜய், "இந்த ஸீனை ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணுங்க, இல்லேன்னா நான் ஏதோ பெரிசா ஆசைப்படற மாதிரி அம்மா நினைச்சுக்கப் போறாங்க"
பேரரசு, "கடைசியில ஹிந்திப் படத்துல வர்ற அந்த ஸ்கூல் மாதிரி பிராக்டிகலா படிப்பு சொல்ற இடமா நீங்க கல்லூரியை மாத்திடறீங்க - சுபம்"
விஜய், "ப்ராக்டிகலான படிப்புன்னா?"
பேரரசு, "பால் கறக்கறது, டூ வீலர் ரிப்பேர் பண்றது, ஆட்டோ ஓட்டறது, இந்த மாதிரி"
தயாரிப்பாளர் "ஏங்க, ஹிந்தியில எவ்ளோ அமைதியா எடுத்திருப்பாங்க. நீங்க என்னடான்னா ஒரே அதிரடியா பண்ணிட்டீங்களே?"
பேரரசு, "விஜய்னாலே அதிரடி சரவெடி தாங்க. ஒரிஜினல் மாதிரியே எடுத்தோம்னு வெச்சுக்கோங்க, அப்புறம் ஜெமினி பொம்மை மாதிரி நீங்களும் நிர்வாணமா ரோட்ல நிக்க வேண்டியது தான், கையில பீப்பியோட"
விஜய், "அது சரி, இதுல எனக்கு பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாதா?"
பேரரசு, "பருப்பில்லாம கல்யாணமா? நிறைய இருக்கு. "நான் நண்பன் - நல்லவங்களுக்கு மட்டும்", "உயிரைக் குடுத்து படிக்கணும். ஆனா அந்தப் படிப்பு யார் உயிரையும் எடுத்துடக் கூடாது" "எப்பவும் அறிவுப் பசியோட இரு, வயிற்றுப் பசி தானா அடங்கும்" இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்,
இதையெல்லாம் கேட்ட விஜய் உணர்ச்சிப் பெருக்கெடுத்து பேரரசை கட்டித் தழுவிக் கொள்கிறார். "வாசல்ல இருக்கற ஹோண்டா சிட்டி உங்களுக்குத் தான். என்னமா கதை சொல்லியிருக்கீங்க!"
Jayaraman
New Delhi
Labels:
Jai's Comedy Bazaar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment