Wednesday, January 18, 2012
தோனியின் ராஜவேட்டை: இந்தியாவின் ஆஸ்திரேலியப் படையெடுப்பு (பாகம் 4)
இன்றைய தேதியில் மிகவும் பரிதாபத்துக்கும் கேலிக்கும் உரியவர்கள் யாருன்னா நம்ம இந்தியன் கிரிக்கெட் அணி வீரர்கள் தான். ஏதோ தேசத்ரோகம் பண்ணிட்டா மாதிரி மீடியாவும் மக்களும் இவங்களைப் போட்டு கிழிக்கறாங்க. இதுக்கு நடுவுல இன்னொரு பிரஸ் மீட்டுக்கு தோனியை கூப்பிடறாங்க. வைரத்தை வைரத்தால தான் அறுக்கணும்னு சொல்ற மாதிரி, இந்தியன் டீமை வெச்சு காமெடி பண்ற மீடியாவுக்கும் மக்களுக்கும் நம்ம காமெடியன்கள் பதில் சொல்லப் போறாங்க. இதோ, ஒரே மேடையில நம்ம கவுண்டர், வடிவேலு அண்ட் விவேக்:
கவுண்டமணி வழக்கம் போல கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு முன்னே போகிறார், பின்னால் வடிவேலு விவேக் இருவரும் வருகின்றனர். வடிவேலு விவேக்கைப் பார்த்து, "இந்தாளுக்கு குசும்பைப் பார்த்தியா, எப்படி நடந்து போறான் பாரு"
கவுண்டர் திரும்பி, "ஏண்டா, இன்னும் நீங்க திருந்தவே இல்லையா? எதுவா இருந்தாலும் முன்னாடி வந்து பேசுங்கடா"
இதற்கிடையில் இவர்கள் மூவரையும் பார்த்து மீடியா மக்கள் சலசலக்கின்றனர். அவர்களிலிருந்து ஒருவர் எழுந்து, "எங்க சார் தோனி? நீங்கல்லாம் யாரு?"
விவேக் , "respected sir, as i am suffering from "pressophobia", kindly grand me ban from one test match. yours faithfully, MSD"
மீடியா நண்பர், "அடடா, என்னமா இங்கிலீஷ் பேசறீங்க, நீங்களே எங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க"
மூவரும் அமர்கின்றனர்.
முதல் கேள்வி "இப்படி தொடர்ந்து தோத்துக்கிட்டே வர்றோமே...?"
கவுண்டர் குறுக்கே புகுந்து,"வெயிட் மேன்", கூட்டத்தைப் பார்த்தவாறே, "ஆமாம், ஏன் லேடீஸ் எல்லாம் பின்னாடி உக்காந்திருக்காங்க? காஞ்சு போன மண்டையனுங்க எல்லாம் முன்னாடி இருக்கீங்க? லேடீஸ் பர்ஸ்ட்னு தெரியாது உங்களுக்கு? கண்ட்ரீ ப்ரூட்ஸ்"
விவேக், "யா யா, மெல்போர்ன் மலர்கள் எல்லாம் முன்னாடி வாங்க, பாஸ்டர் பீர் எல்லாம் பின்னாடி போங்க"
எல்லோரும் மாறி அமர்ந்த பிறகு,
மீண்டும் அதே நிருபர், "என் கேள்விக்கு பதில் சொல்லுங்க, இப்படி தொடர்ந்து தோத்துக்கிட்டே வர்றோமே...?
வடிவேலு, “அப்போ விட்டு விட்டு தோத்தா பரவாயில்லையா?"
"அட அது இல்லை சார், அதுக்கு என்ன காரணம்னு கேக்கறேன்!"
வடிவேலு, "யோவ், நீ தான் எல்லா மேட்சும் பார்த்தீல்ல, அப்புறம் என்ன எல்லா பிரஸ் மீட்லயும் இதே கேள்வியைக் கேக்கறே?"
இன்னொரு பத்திரிகையாளர், "இதனால நம்ம நாட்டுக்கு எவ்ளோ அவமானம் தெரியுமா?”
விவேக், "ஏன்யா, இருபது வருஷமா ஒலிம்பிக்ல ஒரு மெடல் வாங்கறதுக்கு போராடறோம். அப்படியே தப்பித் தவறி எதாவது போட்டியில வாங்கினாலும் ஊக்க மருந்து அது இதுன்னு சொல்லி தட்டிக் கழிச்சிடறாங்க. அதெல்லாம் உங்களுக்கு அவமானமா தெரியலை, இது உங்களுக்கு அவமானமா இருக்கா? அவன் ஊர்ல அவன் ஜெயிக்கறான். நம்ம ஊர்ல நாம ஜெயிக்கறோம். வெளியூர்ல தோத்தாலும் திட்டறீங்க, உள்ளூர்ல ஜெயிச்சாலும் திட்டறீங்க. அப்போ உள்ளூர்ல தோத்து வெளியூர்ல ஜெயிச்சா பரவாயில்லையா?"
கவுண்டர், "யோவ் விவேக்கு, நீ என்னப்பா இவனுக்கு விளக்கம் குடுத்துக்கிட்டு இருக்கே? இவனுங்க வேர்ல்ட் கப் ஜெயிச்சதுக்கே உள்ளூர்ல ஆடி ஜெயிச்சுட்டாங்கன்னு குறை சொன்னவங்க."
அடுத்த கேள்வி, "எல்லாம் பெரிய ஸ்டார் வீரர்கள்னு சொல்றீங்க, ஒருத்தர் கூட ஷைன் ஆகலையே?"
வடிவேலு, "இந்தியாவுலேர்ந்து கிளம்பும்போது பாலிஷ் கொண்டு வர மறந்துட்டோம். அதான் ஷைன் ஆக மாட்டேங்கறாங்க. நல்லாக் கேக்கறாங்க கேள்வி"
கவுண்டர், "நாங்கல்லாம் எவ்ளோ நல்ல மாதிரியா பௌலிங் போட்டோம், அதே மாதிரி ஆஸ்திரேலியா போட்டாங்களாய்யா?"
விவேக், "கிளார்க் மாதிரி மொக்கை ஆளுங்களை எல்லாம் முன்னூறு அடிக்க விட்டோமே, அந்த நன்றி உணர்ச்சி கொஞ்சமாச்சும் வேண்டாம் அவங்களுக்கு? அட மற்றவங்களை விடுங்க, கிரிக்கெட்டின் தெய்வம் சச்சின், அவருக்காச்சும் ஒழுங்கா போட்டிருக்க வேண்டாம்? அவர் உங்களுக்கெதிரா செஞ்சுரி அடிச்சா உங்களுக்குத் தான்யா பெருமை. சும்மா பிராட்மேன் வாரிசுன்னு சொன்னா மட்டும் போதாது, அதை செயல்லயும் காட்டணும்."
வடிவேலு விவேக்கைப் பார்த்து, "ரொம்ப தம் கட்டிப் பேசிட்டே, தண்ணி குடி"
விவேக், "தேன்க் யூ,"
அடுத்த கேள்வி வருகிறது, "செஹ்வாக் ஒரு மேட்ச்லயும் சரியாவே ஆடலையே?"
கவுண்டர், " ஏன்யா, அந்தாள் இந்தியாவுல இருநூறு அடிக்கும்போதே உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வேண்டாம், இனி அடுத்த பத்து மேட்சுக்கு ஆட மாட்டான்னு. நாங்க அவனை சும்மா ஆஸ்திரேலியாவுக்கு பயம் காட்டறதுக்காக கூட்டியாந்தோம். அவர் ஆடுவார்னு எதிர்பார்த்தது உங்க தப்பு"
இன்னொரு நிருபர், "இளைய தலைமுறைக்கு சரியான வாய்ப்பு குடுக்காதது தான் காரணும்னு ஒரு பேச்சு அடிபடுதே?"
விவேக், "யாருக்கு வயசாயிடுச்சு? டீம்ல எல்லோரும் யூத்து தான்"
கவுண்டர், "யா, ஸ்டில் ஐ ஆம் யங்"
வடிவேலு, "சச்சின் டிராவிட் இவங்களையெல்லாம் விட்டுட்டு ஆட வந்தா பெரிசுங்களை விட்டுட்டு சில்வண்டுங்களை வெச்சு ஆட வந்துட்டோம்னு சொல்வீங்க. பெரிசுங்க சரியா ஆடலேன்னா சிறுசுங்களை ஆட விடறதில்லைன்னு சொல்றீங்க. என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு ராஸ்கல்!!"
அடுத்த கேள்வி வருகிறது, "இந்த டூருக்குப் பிறகு அணியில நிறைய மாற்றங்கள் இருக்கும்னு சொல்றாங்களே, என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பாக்கலாம்?"
விவேக், "நல்ல கேள்வி, அதாவது சார், வெளியூருக்கு விளையாட வந்தாலே நம்ம பசங்களுக்கு வீட்டு ஞாபகம் வந்திடுது. வீட்டு சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படறாங்க. அதனால இனிமே எங்க டூர் போனாலும் பொண்டாட்டிங்க வர்றாங்களோ இல்லையோ, அம்மாவோ இல்லை சமையல்காரியோ கண்டிப்பா கூட
வரணும்னு உத்தரவு போடப்போறோம்"
கவுண்டர், "என்னைக் கேட்டா பொண்டாட்டீங்களை ஊர்லயே விட்டுட்டு வரணும்னு சொல்வேன், அவளுங்க இங்க வந்தா அங்கே கூட்டிட்டுப் போ, இதை வாங்கித்தான்னு ஒரே நச்சரிப்பு, வீட்ல பொண்டாட்டி தொல்லை பண்ணினா உங்களால ஆபீஸ்ல வேலை செய்ய முடியுமா சார்? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க"
இன்னொரு நிருபர், "இப்படியெல்லாம் பண்ணினா இப்ப நடந்த அவமானம் சரியாயிடுமா?"
வடிவேலு, "வேர்ல்ட் கப் காலிறுதிப் போட்டியில நாம தான் ஜெயிச்சோம், அந்த நன்றிக் கடனுக்காகத் தான் இந்த டூர். என்ன ஒண்ணு, அவங்க கேவலமா ஆடினாங்க, நாம ரொம்பக் கேவலமா ஆடறோம், அவ்ளோதான் வித்யாசம். இப்போ நாங்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தோட பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டிருக்கோம். அவங்களை எப்படியாச்சும் இந்த வருஷம் இந்தியாவுக்கு வரவழைச்சு பழிக்குப் பழி வாங்கறதுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துட்டு வர்றோம்.
விவேக், "வாழ்க்கை ஒரு சர்கிள், தோக்கறவன் ஜெயிப்பான், ஜெயிக்கறவன் தோப்பான்னு எங்க திருமலை சொல்லியிருக்கார். Its all right, இன்னும் ரெண்டு மாசத்துல IPL வரப்போவுது. IPL வந்தவுடனே இதெல்லாம் மறந்துட்டு நல்லா ரெண்டு மாசம் டைம் பாஸ் பண்ணுவீங்க. அப்புறம் இந்திய கிரிக்கெட் அழியறதுக்குக் காரணம் IPL தான்னு ஆர்டிகிள் வேற போடுவீங்க"
இன்னொரு நிருபர், "சீனியர் ப்ளேயர் யாரவது ரிடையர் ஆவாங்களா சார்?"
வடிவேல், "எதுக்கு ரிடையர் ஆகணும்?"
"அவங்க யாருமே சுத்தமா ஆடலையே? டீமுக்கு பெரும் சுமையா ஆயிட்டாங்களே!"
விவேக், "வயசாயிட்டா, உடனே தூக்கி வீசிடுவீங்களா? அது சரி, பெத்தவங்களையே முதியோர் இல்லத்துல விடறவங்க தானே நீங்க"
கவுண்டர், "டேய் மண்டையா, உனக்கு கூடத் தான் 40 வயசாயிடுச்சு, பாரு, பேனாவே புடிக்க முடியல, அதுக்காக உன்னை வேலையை விட்டுத் தூக்கினா நீ சும்மா இருப்பியா? நாங்க யாரையும் போகச் சொல்லமாட்டோம், அவங்களாப் போனா அதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது. அந்த பாவத்துக்கெல்லாம் நாங்க ஆளாகவே மாட்டோம்"
மற்றொரு நிருபர், "வாங்கற காசுக்குக் கொஞ்சமாச்சும் ஆட வேண்டாம்?"
கவுண்டர், "வாடி வா, இதான் மேட்டரா? விவேக், நான் சொல்லலை? இவனுங்க சுத்தி சுத்தி இங்க தான் வருவாங்கன்னு, ஏண்டா டேய், என்னமோ நீங்கல்லாம் வாங்கற சம்பளத்துக்கு வக்கணையா ஆபீஸ்ல வேலை செய்யற மாதிரியும் நாங்கல்லாம் ஏதோ உங்க வரிப்பணத்தை வாங்கி ஏப்பம் விட்டுட்ட மாதிரியும் சவுண்ட் குடுக்கறீங்களே?"
வடிவேலு, "பாருங்கப்பு, வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம், சும்மா எதாச்சும் கேள்வி கேக்கணுமேன்னு கேக்காதீங்க. நாங்க இன்னும் நாலு இடம் போக வேண்டியிருக்கு. சட்டுபுட்டுன்னு சோலிய முடிங்க"
"ரொம்ப அவமானமா இருக்குங்க, வெளிய தலை காட்ட முடியல"
கவுண்டர், "அப்போ காலை காட்டுடா, அவமானம் போயிடும்"
இதற்கிடையில் ஒரு நிருபர் வடிவேலு அருகே வந்து காறி உமிழ்கிறார். கவுண்டர் அவர் சட்டையைத் தன் ஸ்டைலில் பிடிக்கிறார். "டேய் இப்போ எதுக்குடா காறித் துப்பினே?"
"உங்களை அவமானப் படுத்தத்தான்"
விவேக், "ஏண்டா, இங்க வந்தும் இந்த பழக்கத்தை விடமாட்டீங்களாடா?"
வடிவேலு, "அட விடுங்கண்ணே, நாம பாக்காததா?" பிறகு அந்த நிருபரைப் பார்த்து, "இன்னும் துப்பணும்னாலும் நல்லாத் துப்பிக்கடா"
அவர் மீண்டும் ஒரு முறை துப்புகிறார்.
வடிவேலு, "வெரி குட், அப்படித் ஒழுங்கா துப்பிட்டு வேற வேலை வெட்டி இருந்தா போய்ப் பாருங்க, புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்க. அதை விட்டுட்டு கப்பித்தனமா பேசிக்கிட்டு..."
கவுண்டர் உணர்ச்சிவசப்பட்டு "எப்படி ராஜா உன்னால மட்டும் இப்படியெல்லாம் முடியுது?"
விவேக், "நீங்க பீல்ட்ல இல்லாத இந்த பத்து வருஷத்துல நம்ம நண்பர் அடி வாங்காத ஆளும் கிடையாது, அவமானப்படாத ஏரியாவும் கிடையாது - "என் பிரெண்டைப் போல யாரு மச்சான்" என்று பாட ஆரம்பிக்கறார்.
வடிவேலு, "விளையாட்டை விளையாட்டாப் பாருங்க, ரெண்டு நாட்டுக்கு நடுவுல நடக்கற போர் மாதிரி பார்க்காதீங்க. அவங்களும் மனுஷங்க தான். சரியா விளையாடலேன்னா உங்களை விட அவங்களுக்குத் தான் அவமானம், நஷ்டம் எல்லாம் அதிகம். அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க. இன்னொரு முக்கியமான விஷயம், 99 செஞ்சுரி அடிச்ச மனுஷனுக்கு நூறாவது செஞ்சுரி அடிக்கத் தெரியும். அதை நீங்க ஞாபகப்படுத்த வேண்டியதில்ல.”
கவுண்டர், "இவனுங்களா ஆளாளுக்கு மனசுல ஒண்ணு நினைசுக்கறாங்க. அது நடக்கலைன்னா நம்மளைத் திட்டறாங்க. வேர்ல்ட் கப் ஜெயிச்சவன் எல்லாம் புலியும் இல்லை, பாதியில தோத்தவனெல்லாம் எலியும் இல்லை. இதை இப்பவாவது புரிஞ்சுக்கங்கடா".
இதற்கிடையில் தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் கிடைக்காதென்று தெரிந்து கொண்ட நிருபர்கள் கடுப்பாகி வெளியேறுகின்றனர். கடைசியாக ஒருவர் மட்டும் வந்து கவுண்டரைப் பார்த்து, "உங்களுக்கெல்லாம் வெக்கமே கிடையாதா?"
கவுண்டர் சற்றே சீரியசாகிறார். பிறகு சிரித்துக் கொண்டே, "கிரிக்கெட்ல இதெல்லாம் சாதாரணமப்பா"
Jayaraman
New Delhi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment