Saturday, July 21, 2012

டிஜிட்டல் பக்தி!!!




கோவிலுக்குப் போய் ரொம்ப நாளாச்சே என்றெண்ணிய குமார் தன் நண்பன் சுவாமிநாதனை அழைத்துக் கொண்டு சற்றுத் தொலைவிலிருந்த புகழ்பெற்ற கோவிலுக்குச் சென்றான். கோவிலுக்குச் சென்ற அவனுக்கு மகா ஆச்சர்யம். நாதனைப் பார்த்துக் கேட்டான், "என்ன மச்சி, கோவில் வாசலில் ஒரு கடை கண்ணி ஒண்ணுத்தையும் காணோம்?"

நாதன் நக்கலாக, "நீ கோவிலுக்கு வந்து பல வருஷம் ஆச்சு போலிருக்கு. அதான் லேட்டஸ்ட் நிலவரம் தெரியல. உள்ள வந்து பாரு" இருவரும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே நுழையும்போதே ஒரு செக்யூரிட்டி செக் வருகிறது.

குமார், "அடேங்கப்பா, இங்கேர்ந்தே சோதனையா?"

நாதன், "இது பாதுகாப்பு சோதனை இல்ல. டிரஸ் கோட் சோதனை"

குமார், "டிரஸ் கோட்?"

நாதன், "பின்ன, ஒரு பப்புக்குப் போறதா இருந்தாக் கூட டிரஸ் கோட் இருக்கு. அது படி போகலேன்னா வாசல்ல இருக்கறவன் உள்ள விடமாட்டான். அப்படி இருக்கும்போது கோவில் புனிதமான இடம். இங்க இருக்கக் கூடாதா?

குமார் நக்கலாக, "ஏம்பா, கோவிலும் பப்பும் ஒண்ணா? இது மனசு சம்பந்தப்பட்ட மேட்டர்."

நாதன், "அப்படியா? நாளைக்கு உன் ஆருயிர் நண்பன் ஒருத்தன் பார்ட்டி வெச்சிருக்கான்ல. அதுக்கு பஞ்சகச்சம் கட்டிக்கிட்டு போ"

குமார் "என்னப்பா நீ, அதெல்லாம் கட்டிக்கிட்டு பார்ட்டிக்கு எப்படிப்பா?"

நாதன், "முடியாதுல்ல, அது மாதிரி தான் இங்கயும். அதுக்குத் தான் உன்னை வரும்போதே வேஷ்டி கட்டிக்கிட்டு வரச் சொன்னேன், நட"



முதலில் ஒரு கவுண்டரில் வரிசையில் நின்றனர். குமார், "இங்க எதுக்குடா நிக்கறோம்?"

நாதன், "பொறுமையா இருடா"

இவர்கள் முறை வந்தது. கவுண்டரில் இருந்தவர் கேட்டார் "எவ்வளவுக்கு சார் கார்ட் வேணும்?'

"500 ரூபாய்க்கு குடுங்க" நாதன் கார்டை ஸ்வைப் செய்தவாறே கவுண்டரில் இருந்தவரிடம், "சைட் வேலை செய்யல போலிருக்கு. ஆன்லைன்ல பே பண்ணப் பார்த்தேன். ஆனா ஆகலை"

கவுண்டரில் இருந்தவர், "ஆமாம் சார், காலையில் இருந்தே Payment Gateway Connectivity சரியா இல்லை. அதான். என்ன போன் சார் வெச்சிருக்கீங்க? டச் ஸ்க்ரீன் தானே?"

"ஆமாம்"

"குடுங்க, அப்ளிகேஷனை டவுன்லோட் பண்ணிடறேன்"

குமார் ஆச்சர்யமாக "என்னடா நடக்குது இங்க?"

நாதன், "அது மச்சி, முன்னாடியெல்லாம் கோவிலுக்கு வர்றதா இருந்தா சில்லறையை வாரிக்கிட்டு வரணும். நோட்டாப் போடறதுக்கும் நமக்கு மனசு வராது. அதனால தான் இந்த கார்ட் சிஸ்டம். இப்ப பெரிய பெரிய Food Court போனா முன்னாடியே பணத்தைக் கட்டிட்டு அப்புறம் கடை கடையாப் போய் நமக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடறோம்ல, அது மாதிரி தான் இதுவும்"

கவுண்டரில் இருந்தவர், "உள்ள எங்க pay பண்றதா இருந்தாலும் அங்க இருக்கிற ரீடர் முன்னாடி இந்த அப்ளிகேஷனை காட்டினா போதும். பணம் டிடக்ட் ஆயிடும்" குமார் வாய் பிளந்தவாறே நாதனைத் தொடர்ந்தான்



நடைபாதையின் இருபுறமும் கடைகள் வரிசையாக இருந்தன. ஒரு கடைக்குள் நுழைகின்றனர். கடைக்காரர், "வாங்க சார் என்ன வேணும்?"

"ஒரு அர்ச்சனை, மாலை"

கடைக்காரர், "அர்ச்சனையில என்ன சார் டாப்பிங் வேணும்?"

குமார் திடுக்கிட்டு, "யோவ், பிசாவா ஆர்டர் பண்றோம்? டாப்பிங் பத்திப் பேசறே"

கடைக்காரார் சிரித்தவாறே, "சார் கோவில் பக்கம் ரொம்ப வருஷம் கழிச்சு வர்றாப் போல தெரியுதே?"

நாதன், "ஆமாங்க, வாழைப்பழத்துக்குப் பதிலா ஆப்பிள் போட்டுக்கோங்க. தேங்காய் வேண்டாம். எங்க வீட்ல எல்லாருக்கும் கொலஸ்டிரால். அதுக்குப் பதிலா இளநீர் குடுத்துடுங்க. விநாயகருக்கு மட்டும் ரெண்டு தேங்காய் வாங்கிக்கறேன். அதை நீங்க நேரா அன்னதானத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுங்க.

குமார் இடைமறித்து, "விநாயகருக்கு தேங்காய் விடல் போடணும்யா, நீ என்னடான்னா அன்னதானத்துக்கு அனுப்பச் சொல்றே?"

கடைக்காரர், "தேங்காயை உடைச்சா அதிலேர்ந்து சில்லு தெறிச்சு வெளிய விழுது. யார் காலிலாவது குத்தும். அது போக அதைப் பொறுக்கறதுக்கு ஒரு கூட்டம் முண்டியடிக்கும். இதெல்லாம் தேவையா? அதான் மாத்திட்டோம்.

கடைக்காரர் எல்லாவற்றையும் கணினியில் தட்டுகிறார்.

நாதன் ரீடர் முன்னால் போனைக் காட்டி பணம் செலுத்திவிட்டுப் புறப்பட்டான்.

குமார், "ஏம்பா, காசு குடுத்தியே, பொருள் வாங்கலை?"

கடைக்காரர், "ஸ்வைப் பண்ணும்போதே உங்க ஆர்டர் நம்பர் உள்ளே போயிடுச்சு சார். அங்க எல்லாம் தருவாங்க.."

நாதன், "ஆமாம்டா, போன்ல மெசேஜ் வந்திடுச்சு"

குமார், "யப்பா, டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்"



முதலில் விநாயகர் சன்னதி.

குமார், "நல்ல வேளை, இவரை எதுவும் மாத்தலை, அப்படியே தான் வெச்சிருக்காங்க."

இருவரும் விநாயகரை கும்பிட்டுவிட்டு நகர்கின்றனர். விநாயகர் சன்னதியில் இருந்த ரீடர் முன்பு செல்லைக் காட்டி ஐந்து ரூபாய் காணிக்கை செலுத்தினான்.

குமார், "ஓஹோ, உண்டியலுக்குப் பதிலா ரீடரா? கலக்கறீங்கப்பா. ஆமாம், எங்கப்பா விபூதி?"

நாதன், "ஒரே பாக்கெட் விபூதியை வேற வேற கிண்ணத்தில வெச்சு பிரசாதம்னு ஏமாத்தறீங்கன்னு கேலி பேசறீங்க. அதுவுமில்லாம பாதியை எடுத்துட்டு மீதியை சுவற்றிலோ இல்லை கீழயோ கொட்டறீங்க. எல்லாம் வேஸ்ட் ஆவுது. அதனால ஒரே ஒரு இடத்துல மட்டும் தான் இந்த சமாச்சாரம் கிடைக்கும்."

குமார், "அட, இத பார்றா"

வரிசையாக எல்லாக் குட்டி தெய்வங்களை தரிசித்த வண்ணம் இருவரும் செல்கின்றனர். பிரகார சீலிங் மற்றும் சுவர்களில் சித்திரம் மற்றும் சிலைகளுக்குப் பதிலாக LED திரைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. அவற்றில் கடவுள்கள் மற்றும் அவர்களின் அடியார்களின் படங்களும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பும் விளம்பரங்கள் போல் சில வினாடிகள் நின்று பிறகு மாறிக் கொண்டிருக்கின்றன.

குமார், "என்னய்யா இது. சிலைகள் தானே கோவிலுக்கு அழகு. இங்க என்னடான்னா ஒரே LED திரைகளா இருக்கு"

நாதன், "இரண்டாம் நூற்றாண்டு சோழர் காலத்துச் சிலைன்னு சொன்னா மட்டும் நம்பிடப் போறியா? லாஜிக் கேட்பீங்க, ஆதாரம் கேட்பீங்க. அதான், எல்லா ஸ்க்ரீன்ஸ். குமார் திருதிருவென்று முழித்தவாறே நாதனுடன் நகர்ந்தான்.

இருவரும் மெயின் கடவுள் அருகே வருகின்றனர். அங்கே தரையில் எஸ்கலேட்டர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் நாற்காலிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.



குமார், "டேய் என்னாங்கடா இது?"

நாதன், "வரிசையில நிக்கறதுக்கு நமக்கு பொறுமையும் இல்லை, காலில் தெம்பும் இல்லை. எல்லாம் மூட்டு வலி கேஸ் ஆயிட்டோம். ஜருகண்டி ஜருகண்டி சொல்லி அவங்களுக்கும் வாய் வலிக்குது. அதான் இந்த சிஸ்டம். இப்போ இதுல ஏறி உட்கார்ந்தீன்னா ஆட்டோமேட்டிக்கா நீ போய்த் தான் ஆகணும். சுவாமி கிட்ட போகும்போது கொஞ்சம் ஸ்பீட் குறையும். நீ அப்போ அலர்ட்டா இருந்து தரிசனம் பண்ணிக்க வேண்டியது தான்.

இருவரும் இருக்கையில் அமர்கின்றனர். மெயின் கடவுள் அருகே வரும் போது வேகம் குறைகிறது.

குமார், "ஏம்பா, இது கடவுள் தானா? இல்லை, இங்கயும் எதாச்சும் கிராபிக்ஸ் பண்ணிட்டீங்களா?'

நாதன், "சேச்சே, இவரை வெச்சுத்தானே இங்க எல்லாமே ஓடிக்கிட்டிருக்கு. அதனால இவரை எதுவும் செய்ய மாட்டோம்"

குருக்கள் இடுப்பில் ஸ்டைலாக ரீடரை சொருகிய வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். நாதன் அதில் இருபது ரூபாயைத் தேய்க்கிறான்.

தரிசித்து வெளியே வந்தவுடன் பிரசாதக் கூடம் வருகிறது. அங்கே உள்ள உதவியாளரிடம் நாதன் தன் மொபைல் நம்பரைச் சொல்லவும் அவர் அவனுக்குண்டான அர்ச்சனைப் பிரசாதத்தை எடுத்துக் கொடுக்கிறார்.

நாதன், "உனக்கு வேற எதாச்சும் பிரசாதம் வாங்கணுமா குமார்?"

குமார், "புளியோதரை கிடைக்குமா?"

உதவியாளர், "அதெல்லாம் இப்பப் போடறதில்ல சார். சுகர் ப்ரீ பொங்கல், எண்ணையில பொரிக்காம நெருப்புல சுட்ட வடை, ப்ரூட் சாலட், இந்த மாதிரி ஐட்டம்ஸ் தான் இருக்கு"

குமார், "அடப்பாவிகளா, நம்மாளுங்க கோவிலுக்கு வர்றதே பொங்கலும் புளியோதரையும் சாப்பிடத்தான். அதிலயும் கட்டிங்கா?"

நாதன், "எங்க பார்த்தாலும் Sugar, Acidity, அஜீரணக் கோளாறுன்னு ஒரே வியாதி மயம். அதான் இப்படி டயட் பிரசாதம் போடறாங்க"

குமார் பெருமூச்சு விட்டபடி, "சரி, ரெண்டு சுட்ட வடை சொல்லு, எப்படி இருக்குன்னு பார்க்கலாம்"

பிரசாதக் கூடையில் ஒரு சிறிய இலையில் விபூதி, குங்குமம் மற்றும் சந்தனம் பொட்டலம் கட்டி வைக்கப் பட்டிருக்கிறது. இருவரும் நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர். பின்னர் வடை மற்றும் பிரசாதத்தில் இருந்த ஆப்பிளையும் இளநீரையும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். அப்பொழுது குமார், "அங்க என்னடா, ஏதோ கேம் ஷாப் மாதிரி இருக்கு"



நாதன், "அதுவா, கிட்டத்தட்ட கேம் ஷாப் மாதிரி தான். என்ன ஒண்ணு, கேமுக்குப் பதிலா அமர்நாத் யாத்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ் இந்த மாதிரி கோவில்களா வரும். அதுக்குப் பேரு வர்ச்சுவல் தர்ஷன். எப்படி கேம்ல பைக் ஓட்டற மாதிரி, கார் ஓட்டற மாதிரி பீல் பண்றோமோ, அதே மாதிரி இங்கயும் நேர்ல பார்க்கிற மாதிரி பீல் பண்ணலாம்"

குமார், "ஆமாம், அது என்ன ஹெட் போன்ல சில பேர் என்னமோ கேட்டுக்கிட்டிருக்காங்க?

"மியூசிக் ஷாப்ல இருக்கற மாதிரி இங்கயும் நீ சாம்பிளுக்கு சாமிப் பாட்டுக் கேட்கலாம். புடிச்சிருந்தா அங்கேயே உன் மொபைலில் டவுன்லோட் பண்ணிக்கலாம். பாட்டு மட்டுமில்லை, அங்கே சுவாமிப் படங்களுக்கும் தனியா மெனு இருக்கு. உனக்கு எதாவது சாமிப் படம் புடிச்சிருந்தா அதையும் டவுன்லோட் பண்ணிக்கலாம். இந்த அப்ளிகேஷனைக் காண்பிச்சாப் போதும். இதிலேர்ந்து பணம் போயிடும்."

குமார், "இன்னிக்கு என் ராசி பலனுக்கு அதிர்ச்சின்னு எழுதியிருக்கும் போலிருக்கு"

வழக்கம் போல பிச்சைக்காரர்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர்.

குமார், "என்ன மாறியும், இது மாறலையே"

நாதன், "இது மாறிட்டா அப்புறம் இந்தியாங்கற பீலிங் எப்படி வரும்"

பிச்சைக்காரரும் ரீடர் வைத்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறான் குமார்.

பிச்சைக்காரர், "எதுனா பார்த்துப் போடு சாமி, லோன்ல ரீடர் வாங்கியிருக்கேன். EMI கட்டணும்"

நாதன் அவரிடம் ஒரு பத்து ரூபாய்க்குத் தேய்க்கிறான்.

பிச்சைக்காரர் அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பிறகு அடுத்த ஆளை எதிர்பார்க்கிறார்.

பேசிக்கொண்டே இருவரும் முதல் கவுண்டரை வந்தடைகின்றனர். நாதன் தன் போனைக் குடுத்து மிச்சம் எவ்வளவு இருக்கிறதென்று செக் செய்கிறான்.

கவுண்டரில் இருந்தவர், "சார் மீதி 125 ரூபாய் இருக்கு. நீங்க கோவிலுக்குள்ள செலவு பண்ணின 375 ரூபாய்க்கு உண்டான Income Tax Rebate உங்க பேங்க் அகௌன்ட்ல கிரெடிட் ஆயிடுச்சு."

நாதன், "பாலன்ஸ் அப்படியே இருக்கட்டும், அடுத்த தடவை பயன்படுத்திக்கறேன்."

கவுண்டரில் இருந்தவர், "அப்படியா சார், ஒரு நிமிஷம் இருங்க, உங்க loyalty points update பண்ணிடறேன்" கணினியை சகட்டு மேனிக்குத் தட்டிவிட்டு சிறிது நேரம் திரையை உற்றுப் பார்க்கிறார். பிறகு, " சார் நீங்க இந்த தடவையையும் சேர்ந்து இந்த வருஷத்துல இது வரைக்கும் எட்டு முறை கோவிலுக்கு வந்திருக்கீங்க. மொத்தம் 2750 ரூபாய் செலவு பண்ணியிருக்கீங்க. அதுல 10%, அதாவது 275 ரூபாய் உங்களுக்கு கேஷ்பேக் ஆகியிருக்கு. இதையும் சேர்த்து உங்க அக்கௌண்ட்ல 400 ரூபாய் கிரெடிட் இருக்கு.

நாதன், "தேங்க்ஸ்" சொல்லிவிட்டு நகர்கிறான்.



குமார், "கோவிலுக்கு வந்ததுக்கு வருமான வரி விலக்கா?

"ஆமாம் மச்சி, கோவில் ஆபீஸ் ரூம் போய் செக் எழுதிக் குடுத்தாதான் தர்மமா? இப்படி கடைக்காரர் முதல் பிச்சைக்காரர் வரை எவ்ளோ பேருக்கு நாம மறைமுகமா இது நாள் வரைக்கும் உதவி பண்ணியிருப்போம்? இந்தக் கோவில் இல்லேன்னா அந்தக் கடைக்காரர் தான் இங்க கடை போடுவாரா? இல்லை அந்தப் பிச்சைக்காரர் தான் இங்க குத்த வைச்சு உட்காருவாரா? அதனால கோவில் வளாகத்திற்குள் நாம செய்யற ஒவ்வொரு செலவும் தர்மக் கணக்குல வரணும்னு வருமான வரித் துறை ரூல் போட்டிருக்காங்க. அதுக்காகத் தான் இந்த கார்ட் சிஸ்டமே. என்ன ஒண்ணு, இதுல நீ செலவு பண்ற எல்லாமே வெள்ளைப் பணமா இருக்கணும். கறுப்புப் பணம் செலவு பண்ணினா கொஞ்சம் சிக்கல் வரும். ஏன்னா உன்னோட மொத்த வரவு செலவு அரசாங்கத்தில பதிவாகிக்கிட்டிருக்கு. அப்புறம் உனக்கு நோட்டிஸ் வரும். ஆனா அதை வழக்கம் போல லஞ்சம் குடுத்து சரி பண்ணிடலாம்னு வெச்சுக்கோ"

குமார், "இதெல்லாம் ரொம்ப ஓவர்டா"

நாதன், "உலகம் அப்படி ஆயிடுச்சு மச்சி. கோவில் நடத்தறது கம்பெனி நடத்தற மாதிரி ஆயிடுச்சு. இந்த மாதிரியெல்லாம் பண்ணலேன்னா ஜனங்க வரமாட்டேங்கறாங்க."

குமார், "என்ன மச்சி சொல்றே? ஜனங்க கோவிலுக்கு வர மாட்டேங்கறாங்களா?

நாதன், "ஆமாம் மச்சி, நாட்டுல நடக்கற அநியாயம், அராஜகம், ஊழல், வறட்சி, பசி, பெருகி வரும் வியாதி, முழு வியாபாரமாகிவிட்ட கல்வி மற்றும் மருத்துவம், மகன் அப்பாவைக் கொல்றது, தாத்தாவே பேரனைக் கொல்றது, பிச்சையெடுக்க வைக்கறதுக்காக குழந்தைகளைத் திருடறது, எல்லாத்துக்கும் மேலா கடவுள் பேரைச் சொல்லி நடக்கிற கொடுமைகள் - இதையெல்லாம் பார்த்துப் பார்த்து மக்களுக்கு கடவுள் நிஜமாவே இருக்காரான்னு சந்தேகம் வந்திடுச்சு.அதனால் கோவிலுக்குப் போய் எதுக்கு நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க்கணும்னு யாரும் வர்றதில்ல. So, ஜனங்களை ரெகுலரா கோவிலுக்கு வரவழைக்கறதுக்காக இப்படி லாயல்டி பாயிண்ட்ஸ், அது இதுன்னு பண்ண வேண்டியதா இருக்கு.

குமார் வருத்தம் கலந்த புன்னகையுடன் "வாஸ்தவம் தான், இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு கோவிலுக்கு வந்த மாதிரியே இல்லை, ஏதோ ஷாப்பிங் மாலுக்கு வந்த மாதிரி இருக்கு"



நாதன், "என்னப்பா பண்றது, என்னிக்கு நாம கடவுள் கிட்ட பேரம் பேச ஆரம்பிச்சோமோ அன்னிக்கே கோவில் கடையா மாறிடுச்சு. பாஸ் பண்ணிவிடு, பத்து ரூபாய் போடறேன், சீட் வாங்கிக் கொடு, ஆயிரம் ரூபாய் தர்றேன், வேலை வாங்கிக் கொடு, மொட்டை போடறேன், கல்யாணம் பண்ணி வை, அன்னதானம் பண்றேன்னு கடவுள் கிட்ட டீல் பேசிப் பேசி நாமளும் வியாபாரியா மாறி அவரையும் வியாபாரியா மாத்திட்டோம். சரி விடு, நாம வந்த வேலை முடிஞ்சுது. வா வீட்டுக்குப் போவோம்" இருவரும் கிளம்ப எத்தனிக்கும் போது குமார் யதேச்சையாக சைடில் பார்க்கிறான். அங்கே "மண் சோறு சாப்பிடும் இடம்" என்ற போர்டு வைக்கப் பட்டிருக்கிறது. உடனே நக்கலாக, "எவ்ளோ அட்வான்சாப் போனாலும் இந்தப் பழக்கத்தையெல்லாம் விட மாட்டீங்க போலிருக்கே?"

நாதன், " உண்மை தான், ஆனா அங்க கொஞ்சம் உன்னிச்சுக் கவனி"

குமார் சற்று உன்னித்துக் கவனிக்கிறான். அங்கே பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மண் சோறு சாப்பிடுகின்றனர். சிலர் மஞ்சள் உடைகளில், பலர் மாடர்ன் உடைகளில்.

குமார்,"என்ன கொடுமை நாதன் சார் இது?"

நாதன், "அவங்கல்லாம் மென்பொருள் வல்லுனர்கள். கம்பியூட்டர் தான் உலகம்னு ஆயிட்டதால எல்லாரும் கம்பியூட்டர் பட்டதாரிங்களாயிட்டாங்க. ஆனா பாவம், வேலை தான் கிடைக்க மாட்டேங்குது. பென்ச்ல உட்கார்த்தி வைச்சது போக இப்பல்லாம் பல பேர் தரையில உட்கார்ற நிலைமைக்கு ஆளாயிட்டாங்க. அந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்கல்லாம் வேலை கிடைச்சா மண் சோறு சாப்பிடறேன்னு வேண்டிக்கறாங்க. சில பேர் முதல்ல மண் சோறு சாப்பிட்டு விட்டு அப்புறம் கடவுளை வேலை வாங்கிக் கொடுன்னு மிரட்டறாங்க.

குமார், "கம்பியூட்டருக்கும் மண் சோறு சாப்பிடறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?"

நாதன், "அட அற்பப் பதரே, நீயும் ஒரு மென்பொருள் வல்லுநர் தானே, மென்பொருள் ப்ரோக்ராமை எதுல எழுதறீங்க?

குமார் "சிலிகன் சிப்ல"

"நாதன், "அந்த சிப்பே மண்ணை கம்ப்ரெஸ் பண்ணி உருவாக்கறது தான். மண் சோறு சாப்பிட்டா அந்த மண் இவங்களுக்கு சோறு போடும்னு ஒரு லேட்டஸ்ட் ஐதீகம். இதான் கொள்கை விளக்கம், புரிஞ்சுதா?"

குமார், "அடச்சே, இது எனக்குத் தெரியாம போச்சே, சரி வந்தது வந்துட்டோம். நானும் போய் ஒரு ப்ளேட் மண் சோறு சாப்பிடறேன்."

"நீயா? எதுக்குடா?"

குமார், "இல்லை மச்சி, ரொம்ப நாளா வெளிநாட்டு அசைன்மென்ட் ஒண்ணு கைக்கும் எட்டாம வாய்க்கும் எட்டாம இழுத்தடிக்குது. அதான் மண் சோறு சாப்பிட்டா கடவுள் கருணை காட்டுவாரான்னு பார்க்கலாமேன்னு......இங்கயே வெயிட் பண்ணு மச்சி, இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு ஓடுகிறான்.

நாதன், "போடா போ, உங்களை எல்லாம் லட்சம் பெரியார் வந்தாக்கூட திருத்த முடியாது"

(ஆடி மாசம் பக்தி மாசமாச்சேன்னு நினைச்சிக்கிட்டு ஏதோ மனசில பட்டதை எழுதிட்டேன். எதாச்சும் பிழை இருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுட்டுங்க. இதையெல்லாம் மனசில வெச்சிக்கிட்டு பழிவாங்கிடாதீங்க கடவுள்களே, எதுவா இருந்தாலும் வழக்கம் போல பேசித் தீர்த்துக்குவோம்)

Jayaraman
New Delhi

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மேலே சொன்ன கற்பனைக் கதை கூடிய விரைவில் நிஜமாகவே நடக்கும் எனத் தோன்றுகிறது. எனவே, முன் அனுமதியின்றி இதை யாரும் எங்கும் எதிலும் நகலெடுக்க வேண்டாம் (அதாங்க, Control C and Control V) எனக் கேட்டுக் கொள்கிறேன் (இது அதிகப் பிரசங்கித்தனமா, தன்னம்பிக்கையா அல்லது தலைக்கனமா???). This article is owned by crazycricketlover.blogspot.com

3 comments:

  1. super. chance ye illa. nejamave nadathalum nadakum. illa idha yaaravadhu padichitu senchalum seivaanga :-)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...