Monday, October 24, 2011

நரகாசுரன் வந்தார்

(நரகாசுரன் வேடத்தில் பின்னிப் பெடலெடுத்த மறைந்த திரு ஆர் எஸ் மனோகர் எம்மை மன்னிப்பாராக)

ஸ்ரீ வைகுண்டம்.

நாரதர் உள்ளே நுழைகிறார். அங்கே விஷ்ணுவும் நரகாசுரனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

விஷ்ணு, "வா நாரதா, என்ன திடீரென்று இந்தப் பக்கம்? யாருக்கு ஆப்பு வைக்கப் போகின்றாய்?

நாரதர், "பிரபோ, என்ன பேசுகிறீர்கள்? நான் அப்படியெல்லாம் செய்வேனா? அடேடே, நரகாசுரா நீயும் இங்கு தான் இருக்கிறாயா? மிகவும் நல்லதாகப் போயிற்று"

நரகாசுரன், "பீடிகை பலமாக உள்ளதே, நான் தான் இன்றைய பலிகடாவா?"

நாரதர், "பூலோகவாசிகள் முன்பு போல் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை என்று பரவலாகக் கேள்விப்பட்டேன், அதான்..."

நரகாசுரன், "அப்படியா? என்ன காரணம்?"

நாரதர், "காரணங்கள் ஒன்றா ரெண்டா, எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதாது, நீயே ஒரு எட்டு பார்த்துவிட்டு வாயேன்"

நரகாசுரன், "நாரதரே, நீரும் எம்முடன் வாரும், ரெண்டு பேரும் சேர்ந்தே செல்வோம் "

விஷ்ணு, "ஆம் நாரதா, நீயும் கூடவே செல், இல்லையேல் நரகாசுரனை காமெடி பீசாக்கி விடுவார்கள்"

"அப்படியே ஆகட்டும் பிரபோ"

நரகாசுரன் மற்றும் நாரதர் இருவரும் வட இந்தியா வழியாக வருகின்றனர்.

"பார்த்தீரா நாரதரே, மக்கள் தத்தம் வீடுகளை எப்படி அலங்கரித்துள்ளனர்! அலங்கார விளக்குகள் என்ன, தோரணங்கள் என்ன, வண்ணமயமான கோலங்கள் என்ன - என் உள்ளம் கொள்ளை போகின்றது"

"சற்று இறங்கி விசாரியும், உண்மை புரியும்"

நரகாசுரன் அங்கே இருந்த ஒருவரைப் பார்த்து, "மிகவும் பிரமாதமான அலங்காரம், என் மனம் நெகிழ்கிறது"

"ரொம்ப நன்றி, நீங்க யாரு?

"நான் தான் நரகாசுரன், இந்த அலங்காரமெல்லாம் எனக்காகத் தானே செய்கிறீர்கள்?"

"அய்யே, யார் சொன்னா? பகவான் ராம் இன்னிக்கு அயோத்தியில் பட்டாபிஷேகம் செய்துகொண்ட நாள். அதைத் தான் நாங்க தீபாவளியா கொண்டாடறோம்"

"அப்போ இது எனக்காக இல்லையா?"

"நீ யார்னே எனக்குத் தெரியல. எனக்கு நிறைய வேலை இருக்கு, இடத்தைக் காலி பண்ணு, ஜாவோ ஜாவோ"

"நாரதரே, இது என்ன புதுக் கதை?"

"இது மட்டுமில்லை நரகா, கைலாயத்தில் சிவனும் பார்வதியும் இன்று சொக்கட்டான் ஆடுவார்கள் என்பதும் இன்றைய தினம் சூதாடினால் பணம் கொழிக்கும் என்பதும் இவர்களது ஐதீகம்"

"ஆரம்பமே அலைக் கழிப்பாக இருக்கிறதே நாரதரே?"

"மனம் தளரவிடாதே, இந்திய கிரிக்கெட் அணி போல் ஹோம் கிரௌண்டிலாவது உனக்கு செல்வாக்கு இருக்கிறதா என்று பார்ப்போம், வா"சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்:

நரகாசுரன், "அடேங்கப்பா, என்ன நாரதரே இது? ஒட்டுமொத்த சென்னை வாசிகளும் ஊரை காலி செய்து விட்டு வேறு ஊருக்குப் போகின்றனரா?"

"இல்லையப்பா, இவர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சென்னையில் வேலை செய்பவர்கள், தீபாவளிக்கு ஊருக்குச் செல்கின்றனர்."

கலக்கத்துடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் ஒருவரை பார்த்து நரகாசுரன், "ஐயா, தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா?"

"ஆமாம்"

"பட்டாசு, துணி எல்லாம் வாங்கி அமர்க்களமாகக் கொண்டாடுங்க"

"கொண்டாடறதா? நானே அம்மா கையால சோறு சாப்ட்டு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கலாம்னு ஊருக்குப் போறேன், இதுல பட்டாசு வெடிச்சு டைம் வேஸ்ட் பண்ணச் சொல்றீங்களா? போயாங்க..." சொல்லிவிட்டு வேகமாக பஸ் பிடிக்க ஓடுகிறார்.

முகம் வாடிய நரகாசுரனைப் பார்த்து நாரதர், "அவன் புக் செய்த அரசு பேருந்து இப்போதைக்கு கிளம்பாது என்று சொல்லிவிட்டார்கள். இனி அவன் தனியார் பேருந்தில் 1000 ரூபாய் செலவழித்துச் செல்ல வேண்டும், அந்த கடுப்பு அவனுக்கு. நாம் வேறு இடம் செல்வோம்"

இருவரும் வெளியே வருகின்றனர். அங்கே வாசலில் டாஸ்மாக் கடையில் கூட்டம் அள்ளுகிறது.

"அங்கே என்ன கூட்டம் நாரதரே? ஏதாகிலும் வாண வேடிக்கை நடக்கிறதா?'

"அங்கே சோம பானம் விற்கப்படுகிறது நரகா"

"சோம பானத்தை மாலையில் தானே அருந்த வேண்டும்?" அது தானே முறை"

"தயவு செய்து சத்தமாகச் சொல்லிவிடாதே, அப்புறம் உனக்கு அறை தான் விழும். நீ "மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று தானே சொன்னாய்? சோம பானம் அருந்தக்கூடாதென்று எதுவும் கண்டீஷன் போடவில்லையே!"

அதற்காக இப்படியா? இன்றாவது கடையை மூடக் கூடாதா?

நாரதர், "இன்று கடையை மூடுவது அரசாங்கத்தின் கஜானாவை மூடுவதற்குச் சமம். டாஸ்மாக் நிறுவனம் வருடா வருடம் தீபாவளி விற்பனையில் புதிய சாதனை படைத்து வருகிறது. நாம் ஏதாவது குடியிருப்புப் பகுதிக்குச் சென்று பார்ப்போம்"

மக்கள் வீடுகளில் மட்டன் குழம்புடன் இட்லியை உள்ளே தள்ளுவதைப் பார்க்கும் நரகாசுரன், "இது என்ன பழக்கம்? தீபாவளியன்று மாமிசம் சாப்பிடுகின்றனரே?"

"இது நடுவில் வந்த பழக்கம், கண்டுகொள்ளாதே.""சரி போகட்டும்" என்று சுற்றுமுற்றிப் பார்க்கிறார். சிறுவர்கள் பால்கனியில் அமர்ந்து வெடி வெடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நோக்கி,

"குழந்தைகளே, வீட்டுக்குள்ளே என்ன செய்கிறீர்கள்? வெளியே வந்து வெடியுங்கள்"

"எங்களுக்கு விளையாடவே இடமில்லை, வெடிக்கவா இடம் கிடைக்கும்?" ரோட்ல வெடிச்சா எல்லாரும் கம்ப்ளைன்ட் பண்றாங்க. அதுவுமில்லாம ராக்கெட் எல்லாம் வீட்டுக்குள்ள போயிடுது"

"அது தானே தீபாவளியின் சிறப்பு"

"நீங்க இப்படி பெருந்தன்மையா சொல்றீங்க, ஆனா இங்க இருக்கற பெரிசுங்க எங்க கேக்குது?"

"இது வேறயா? சரி, என்ன வெடி வெடிக்கிறீர்கள்?"

"பொட்டு வெடி, பிஜ்லி வெடி"

"அவ்வளவு தானா?"

"பெரிய வெடியெல்லாம் வெடிச்சா நாய்ஸ் பொல்யூஷன் ஆயிடுமாம்"

நாரதரை நோக்கி, "என்னய்யா இது? தீபாவளியே சிறுவர்களுக்காகத் தானே? இப்படி அவர்கள் கையைக் கட்டிப் போட்டால் எப்படி?"

"என்ன செய்வது நரகா, நிலைமை அப்படி"

அப்போது சில இளைஞர்களும் இளைஞிகளும் பைக்கில் ஓலமிட்டபடியே பறக்கின்றனர்

"ஆஹ், அங்கே பார்த்தீரா? இளைஞர்கள் குதூகலிப்பதை"

"உணர்ச்சிவசப்படாதே, அவர்கள் விடுமுறையைக் கழிக்க பண்ணை வீட்டுக்குச் செல்கின்றனர்"

"புரியவில்லையே?"

"தீபாவளிக்கு எல்லா நிறுவனங்களும் சேர்ந்தாற்போல் 2 -3 நாட்கள் விடுமுறை விடுகின்றனர். சிலர் சொந்த ஊருக்குப் போகின்றனர். இவர்களைப் போல இருக்கும் சில நகரத்து வாசிகள் எதாவது பண்ணை வீட்டுக்குச் சென்று குஜாலாக இருப்பது இங்கே ஒரு புதிய கலாச்சாரமாக உள்ளது."

"ஹ்ம்ம். ஆக மொத்தம் ஒருவர் கூட நான் சொன்ன தீபாவளியைக் கொண்டாடுவதில்லை போலும்"

"நரகா, அங்கே பார் ஒரு வயதான தம்பதியினர் வருகின்றனர். அவர்களிடம் பேசிப் பார்"

நரகாசுரன் அவர்களை நோக்கி, "நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாடினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?"

"காலையில 6 மணிக்கு எழுந்து வாக்கிங். அப்புறம் குளியல்.."

"எண்ணைக் குளியல் தானே?"

"சேச்சே, எனக்கு வீசிங், என் மனைவிக்கு ஆஸ்தமா பிராப்ளம், அதனால சாதாரண குளியல் தான்"

"பிறகு லேகியம் சாப்பிட்டீர்கள் தானே?"

"ஐயோ, அதுல மருந்துப் பொடி காரம் எனக்கு ஆவாது, அல்சர் இருக்கு பாருங்க"

நரகாசுரன் கடுப்பாகி, "சரி அப்புறம்.."

"அப்புறம் வழக்கம் போல பூஜை, அருகம்புல் ஜூஸ், ரெண்டே ரெண்டு இட்லி அவ்ளோ தான்"
"சொந்தக்காரங்களுக்கு தீபாவளி வாழ்த்தாவது சொன்னீங்களா இல்லையா?"

"சொல்லாம இருக்க முடியுமா? பேஸ்புக்ல போட்டுட்டேன்ல. அமெரிக்காவுல இருக்கற மகன் மற்றும் பேரன்களுக்கு சாட்ல வாழ்த்து சொல்லிட்டேன். மத்தவங்களுக்கு SMS அனுப்பிசாச்சு.

"அவ்ளோ தானா?" இந்த இனிப்பு கார வகைகள் எல்லாம்...

"அது கிட்டயே நாங்க போகக் கூடாது. வேணும்னா சர்க்கரை போடாத இனிப்பு சாப்பிடலாம் - டயட் ப்ரீ

நரகாசுரன் மனதிற்குள், "சர்க்கரை சேர்க்காமல் செய்தால் அது எப்படி இனிப்பாகும்?"

பெரியவர்,“எங்களுக்கும் நீங்க சொன்ன மாதிரியெல்லாம் செய்யணும்னு ஆசை தான். ஆனா அதெல்லாம் எங்க அப்பா காலத்தோடு வழக்கொழிஞ்சு போச்சு. இந்தக் காலத்துல வயசானவங்களை எவன் மதிக்கறான்?, அதான் காலத்துக்கு ஏத்த மாதிரி எங்களை நாங்க மாத்திக்கிட்டோம்"

"அப்படியா!!"அது சரி, நீங்க எந்த டிவிலேர்ந்து வர்றீங்க? இந்த ப்ரோக்ராம் என்னிக்கு டெலிகாஸ்ட் ஆவும்?"

நாரதர் குறுக்கே புகுந்து, "புதிதாக நாரதர் டிவி என்று ஒன்று வர உள்ளது. அதில் வரும். அப்போ பார்த்துக்கோங்க. இப்போ கிளம்புங்க"

நாரதரைப் பார்த்து, "என்ன சுவாமி இது? எங்கு போனாலும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறதே?"

"நரகா, உன் பிரச்சினை பெரும் பிரச்சினை, முதலில் எனனைக் கொஞ்சம் கவனி, பசி வயிற்றைக் கிள்ளுகிறது"

"சரி நாரதரே, அதோ அந்த வீட்டில் பந்தல் போடப் பட்டுள்ளது. கண்டிப்பாக விருந்தாகத் தான் இருக்கும். வாருங்கள்"

வீட்டு வாசலில் நின்றபடியே. "ஐயா, உள்ளே வரலாமா?"

உள்ளேர்ந்து வந்தபடியே, "என்னய்யா வேணும் உங்களுக்கு? தீபாவளி இனாமெல்லாம் ஏற்கனேவே குடுத்தாச்சு"

நாரதர், "சும்மா கோவிக்க வேண்டாம், டிவியில் விளம்பரம் தானே ஓடுகின்றது? பாஸ்கரன் படம் ஆரம்பிக்க இன்னும் 15 நிமிடங்கள் எடுக்கும்"

"யோவ், என்ன நக்கலா?"

"நாங்கள் அதுக்கு வரவில்லை. பசிக்கிறது, உங்கள் வீட்டில் தீபாவளி விருந்து நடப்பது போல் தெரிகிறது. எங்களுக்கும் கொஞ்சம்..."

"இப்படி திடீர்னு வந்து நின்னா எப்படிங்க? நாங்களே 5 பேருக்கு தான் சொல்லியிருக்கோம். எக்ஸ்ட்ரா சாப்பாடெல்லாம் கிடைக்காது. பண்டிகை தினம் பாருங்க.."

"சாப்பாடு சொல்லியிருக்கீங்களா? அப்போ வீட்ல சமைக்க மாட்டீங்களா?'

"எங்களுக்கோ எப்பவோ ஒரு நாள் தான் லீவ் கிடைக்குது. அன்னிக்கும் சமையல் கட்டில தான் டைம் வேஸ்ட் பண்ணனுமா? இப்படி வெளிய சொல்லிட்டா அப்புறம் டிவி நிகழ்ச்சிகளை நிம்மதியா பாக்கலாம் பாருங்க"

"சரி ஐயா, நாங்கள் வருகிறோம்,விளம்பர இடைவேளை முடிஞ்சு போச்சு, நீங்க கன்டினியூ பண்ணுங்க"

"பார்த்தா ஏதோ பெரிய இடத்து ஆளுங்க மாதிரி இருக்கு. கொஞ்சம் இருங்க, வரேன்" என்று சொல்லிவிட்டு, ஏதோ ஒரு பொட்டலத்துடன் வருகிறார்.

"காலையில செஞ்ச இட்லி தான், தைரியமா சாப்பிடுங்க. இன்னும் கெட்டுப் போகல"

"ரொம்ப நன்றிங்க, வருகிறோம்"இருவரும் கிடைத்த இட்லியை சாப்பிட்டுவிட்டு பூங்காவில் ஓய்ந்து போய் அமர்ந்திருக்கின்றனர். விரக்தியின் உச்சத்தில் இருக்கும் நரகாசுரனைப் பார்த்து,

"உன் நிலைமை எனக்குப் புரிகிறது நரகா, ஆனால் என்ன செய்வது? பூலோகத்தில் தீபாவளியின் நிலைமையைப் பார்த்தாயா?

நரகாசுரன், "முன்னை விட மக்கள் வசதியாகத் தான் இருக்கிறார்கள், ஆடை ஆபரணங்கள் அபரிமிதமாகக் கிடைக்கின்றன. இருந்தும் ஏன் இந்த நிலைமை?"

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு நரகாசுரா. உன்னிடம் ஒரு கேள்வி, தீபாவளி என்றால் என்ன?

நரகாசுரன்,"வெடி, துணி, விதவிதமான தின்பண்டங்கள் -மொத்தத்தில் மகிழ்ச்சி"

நாரதர், வெடி - அது பாகிஸ்தான் மாதம் ஒரு முறை இந்தியாவில் போடுவது, ரத்தக் கறையோடு; துணி - நினைத்த நேரத்தில் மக்களால் துணி வாங்க முடிகிறது; தின்பண்டங்கள் - பாதி பேர் டயட் என்ற பெயரில் அதை சாப்பிடுவதில்லை. மீதி பேர் உடம்புக்கு ஒத்துக்காது என்று தொடுவதில்லை.

நரகாசுரன், "பிறகு எங்கிருந்து வரும் மகிழ்ச்சி?"

"அது இருக்கிறது நரகாசுரா, பண வடிவில். ஏனெனில் நீ சொன்ன மூன்றையும் வாங்க பணம் மிக மிக தேவை

"ஏழ்மை என் யுகத்திலும் தான் இருந்தது. அது ஒன்றும் புதிதில்லையே?

நாரதர், " இது ஏழ்மை அல்ல. போட்டி. எல்லோரும் எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்கின்றனர். இருப்பதைத் தக்க வைத்துக்கொள்ள அவர்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை தீபாவளி என்பது அந்த வாரத்தில் கிடைக்கும் ஒரு கூடுதல் விடுமுறை நாள் அவ்வளவே. பண்டிகையன்று வேலை செய்தால் இரட்டிப்புச் சம்பளம் கிடைக்கும் என்றெண்ணி வேலைக்குப் போவோர் இங்கே ஏராளம். அது உனக்குத் தெரியுமா?"

மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு பணத்தை சம்பாதிப்பதில் என்ன லாபம்?

"இந்த கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்"

அப்படியானால் நான் கனவு கண்ட தீபாவளி இனி வரவே வராதா?

நாரதர்,"உன் கனவை மேம்படுத்திக் கொள். கண்ணனுக்கு மகனாகப் பிறந்த நீ அவர் சொன்னதை நினைவிற் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி மனம் சம்பந்தப்பட்டது. நீ சொன்ன வெடி, துணி இவை அனைத்தும் வெறும் பொருட்கள். பொருட்கள் காலத்திற்கேற்ப மாறும். மக்களுக்கு வெடியை விட, இனிப்பை விட மகிழ்ச்சி தரும் பொருட்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. நீ வீணாக துவளத் தேவையில்லை. நீ இன்று சந்தித்த நபர்கள் அனைவருமே மகிழ்ச்சியை நோக்கித்தான் பயணிக்கிறார்கள். அவர்கள் இலக்குகள் வேறு, பாதைகள் வேறு.

நாரதர், "இன்னொன்றையும் உனக்கு சொல்கிறேன். மக்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று நீ வருத்தப்படுவது போல் பொங்கலன்று யாரும் கரும்பு சாப்பிடுவதில்லை என்று சூரியனாரும் வருத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு எதிலும் எளிமை தேவை. சடங்குகள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அது நேர விரயம் என்று கருதுகின்றனர். பெரியவர்கள் தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆனால் பெரியவர்களுக்கு யார் புரிய வைப்பது?"

நாரதர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே வாண வேடிக்கைகளின் சதம் கேட்கத் தொடங்குகிறது. இருவரும் சற்றே எதிர்த் திசையில் பார்க்கின்றனர்

எதிரே ஒரு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் மக்கள் அனைவரும் கூடி நின்று புத்தாடை அணிந்து சரமாரியாக வெடிக்கத் தொடங்குகின்றனர்.நாரதர், "பார்த்தாயா நரகாசுரா, இது தான் மானிடன் இன்றைய தேதியில் தீபாவளி கொண்டாடும் முறை. இடம், பணம் இந்த ரெண்டும் அவனை நெருக்கினாலும் உன் ஆசையை அவன் நிறைவேற்றத் தவறுவதேயில்லை. ஏதோ ஒன்று அவனை தூண்டிக் கொண்டே இருக்கிறது. என்ன, செய்முறைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். நீ தான் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும். அது தான் பூவுலகின் தாரகமந்திரம்"

"மிக்க நன்றி நாரதரே, எங்கே எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுமோ என்று எண்ணியிருந்தேன், மானிடன் என்னைக் காப்பாற்றி விட்டான்"


The sensored portions:

Scene 1:நரகாசுரன் வேலாயுதம் சுவரொட்டியைப் பார்த்தவாறே, "இந்தத் தெருக்கூத்து இன்னுமா நடக்கிறது? என் காலத்தில் மிகவும் பிரபலம்"

நாரதர், "நரகா, இது புதிய திரைப்படத்தின் போஸ்டர். நீ சொன்ன தெருக்கூத்து இன்று கேலிக்கூத்தாகி விடும் நிலையில் உள்ளது"

"அப்படியா, சுவரொட்டியின் காட்சிகள் மிகவும் பழமையாக இருக்கவே, அவ்வாறு எண்ணினேன்"

Scene 2:


போகிற வழியில் நரகாசுரன் ஏழாம் அறிவு சுவரொட்டியைப் பார்க்கிறார். உடனே நாரதர், "போதி தர்மன் என்ற தமிழ் முனிவர் தான் குங்க்பூ கலையை சீனாவில் அறிமுகம் செய்தாராம். அதைப் பற்றிய திரைப்படம் தான் இது"

நரகாசுரன், "இந்த விஷயம் போதி தர்மனுக்குத் தெரியுமோ?"

நாரதர், "பூமிக்கு வந்தவுடன் உனக்கு நக்கல் அதிகமாகிவிட்டது. வாயை மூடிக் கொண்டு வா"

Jayaraman
New Delhi

1 comment:

  1. Good One...All the articles are really great...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...