Thursday, October 20, 2011

கிரிக்கெட் தீபாவளி

தீபாவளி வந்தாச்சு. எல்லாரும் சிறப்பு நிகழ்ச்சிகளைப் போட்டு கொல்ற நேரமிது. நம்ம பங்குக்கு நாமளும் எதாச்சும் செய்ய வேண்டாமா?

இதோ, கிரேசி கிரிக்கெட் லவ்வரின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு முன்னோட்டம் (யாரும் எழுந்து தம் அடிக்கப் போயிடாதீங்க) :

காலை 6 மணிக்கு:
அருளுரை - வழங்குபவர் ஸ்ரீ ஸ்ரீ சச்சின் டெண்டுல்கர்:



"கிரிக்கெட் விளையாட ஆத்மா, அதாவது மனசு ரொம்ப முக்கியம். பேட், பால், ஸ்டம்ப், இதெல்லாம் வெறும் கருவிகள் தான். மனசிருந்தா கையே பேட் ஆயிடும். கல்லும் பாலாயிடும்"

காலை 7.30 மணிக்கு:
சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சி - வளர்ந்து வரும் தமிழக வீரர்கள் அஷ்வின், மற்றும் முகுந்துடன் ஒரு கலகலப்பான கலந்துரையாடல்:

அஷ்வின், "சின்ன வயசுல நிறைய கலாட்டா பண்ணியிருக்கேன், ஸ்டைலா பால் போடறேன்னுட்டு தெரியாத்தனமா ஆட்டம் பாமை ஸ்பின் பண்ணி நிறைய தீபாவளிக்குக் கைய சுட்டுகிட்டிருக்கேன்"

முகுந்த், "ஒரு தடவை தூரத்தில ஒரு பொண்ணு வந்திக்கிட்டிருந்தா, அவ முன்னாடி பிலிம் காட்டறேன் பேர்வழின்னு ராக்கெட்டை கையில பிடிச்சு விட்டேன், கிட்ட வரும்போது தான் தெரிஞ்சுது அது எங்க அக்கான்னு"

9 மணிக்கு:
டென்ஷன் டென்ஷன் டென்ஷனப்பா - கிரிக்கெட்டின் மிக முக்கியமான, டென்ஷனான தருணங்கள் - ஒரு தொகுப்பு

10 மணிக்கு:
தீபாவளிச் சிறப்பு பட்டிமன்றம்:

IPL கிரிக்கெட்டுக்கு வரமா இல்லை சாபமா?



வரமே என்ற அணியில் வாதாடுவோர் - ரவி சாஸ்த்ரி, கங்குலி, மற்றும் கவாஸ்கர்

சாபமே என்ற அணியில் வாதாடுவோர் - ஹர்ஷா போக்ளே, ஜெப்ரி பாய்காட் மற்றும் நசீர் ஹுசேன்

நடுவராக திரு. ஸ்ரீநிவாசன், "வரமா அல்லது சாபமான்னு தெரியல. ஆனா கண்டிப்பா லாபம்னு மட்டும் சொல்லலாம்"

காலை 11 மணிக்கு:
சூப்பர் ஹிட் மேட்ச்:

அகமாதாபாத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டி சிறப்புத் தொகுப்பு - முன்னாள் வீரர்களின் கலந்தாய்வுடன்




சித்து, “கிரிக்கெட்டில் கங்காருகளின் கொட்டம் அடங்கிய நாள்”

கபில் தேவ், "இன்று தான் இந்தியா ஒரு சாம்பியன் அணி போல விளையாடியது"

பிற்பகல் 2 மணிக்கு:
மெகா ஹிட் அதிரடி மேட்ச்:



இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்த மேட்ச் - மொஹாலியில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி சிறப்புத் தொகுப்பு - ரசிகர்களின் அன்றைய தினத்தைப் பற்றிய சுவையான நினைவலைகளோடு

"ஆபீசுல அரை நாள் லீவ் சொல்லிட்டு ஓடியே போனேங்க"

"நான் அன்னிக்கு மட்டும் இல்ல, அடுத்த ரெண்டு நாளும் ஆபீசுக்குப் போகலீங்க, அப்படியும் டென்ஷன் குறையல"

மாலை 4 மணிக்கு:
கறை படிந்த கிரிக்கெட் - கிரிக்கெட்டைப் பாடாய் படுத்திய சில சம்பவங்கள்:
பாகிஸ்தான் வீரர்கள் கைது, பாப் வூமர் படுகொலை, லலித் மோடி மற்றும் முன்னாள் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பின்னிய ஊழல் வலை பற்றிய ஒரு நேரான பார்வை



ஒரு கிரிக்கெட் ரசிகரின் கருத்து , "இவங்க இப்படியெல்லாம் பண்ணினதால என்ன ஆயிடுச்சுன்னா இந்தியா தோத்தா காசு வாங்கியிருப்பாங்களோன்னு தோணுது, இந்தியா ஜெயிச்சா எதிரணி காசு வாங்கியிருப்பாங்களோன்னு தோணுது "

மாலை 5 மணிக்கு:
கிரிக்கெட் கசமுசா:



கிரிக்கெட் வீரர்களுடன் நெருக்கமாக உலா வரும் திரை நட்சத்திரங்கள் பற்றிய ஒரு கிளுகிளுப்பான தொகுப்பு

மாலை 6 மணிக்கு:
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல் கல் - இந்தியா உலகப் கோப்பை சாம்பியனாக மகுடம் சூடிய, மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டி - ரசிகர்களின் மெய் சிலிர்க்கும் அனுபவங்களுடன் ஒரு சிறப்புத் தொகுப்பு



"அன்னிக்கு பூரா அழுதேங்க, ஆனந்தக் கண்ணீருக்கு அர்த்தம் அன்னிக்கு தான் தெரிஞ்சுது"

"ஐயோ அதை ஏன் கேக்கறீங்க, கார் மேல நின்னு டான்ஸ் ஆடினதுல கால் வலி பிச்சிடுச்சு. அது போக வண்டி டாப் சரி பண்ண சில ஆயிரங்கள் செலவு வேற, ஆனாலும் கப் வாங்கிட்டோம்ல"



"இந்தியா ஜெயிச்சா திருப்பதிக்குப் போய் மொட்டை போடறேன்னு வேண்டிக்கிட்டிருந்தேன், மேட்ச் முடிஞ்சவுடனே பஸ் பிடிச்சு திருப்பதி போயிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது தோனியும் அதே மாதிரி வேண்டிக்கிட்டிருந்திருக்காருன்னு"

நேயர்களே, தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள். கிரிக்கெட்டைப் போற்றுங்கள்!!

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...