(இது உண்மைக்கதை அல்ல)
“ஏம்பா, உங்க மாப்பிள்ளை எந்நேரமும் சும்மா கோல்ப் விளையாடிக்கிட்டும், பைக் ஓட்டிக்கிட்டும் டைம் பாஸ் பண்றாரே, அவருக்கு எதாச்சும் செய்யக் கூடாதா?” டைனிங் டேபிளில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தொழிலதிபர் பத்மநாபனின் கவனத்தைக் கலைத்தாள் அவரது மகள் பாரு எனும் பார்வதி.
பத்மநாபன் எதிரில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை ரகுநாத்தைப் பார்த்து, "என்னப்பா, நம்ம கம்பெனியில் ஜாயிண்ட் டைரக்டர் போஸ்ட் காலியா இருக்கு, வர்றியா?”
ரகுநாத், "ஏற்கனவே சொன்ன பதில் தான் அங்கிள். உங்க ஆபீஸ் செம போர் . என்னால 10 நிமிஷம் கூட அங்க உட்கார முடியாது. நமக்கு அப்படியே ஜிவ்வுன்னு வேலை செய்யணும் - ரேஸ் மாதிரி பரபரன்னு இருக்கணும். உங்களுக்குக் கம்பெனி குடுக்கத்தான் என் பொண்டாட்டி ஆபீஸ் வராளே, அது போதும். நான் வேற எதுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்?"
பாரு, "அதுக்காக இப்படியே எவ்ளோ நாள் தான் வெட்டியா வண்டி ஓட்டுவீங்க? இரண்டு குழந்தைங்களுக்கு அப்பா வேற ஆயாச்சு"
ரகு, "எனக்குப் பிடிக்காத வேலையை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன். அதுவுமில்லாம என் உடம்புல ஓடறது சினிமா ரத்தம். என்னால ஒரு இடத்துல உட்கார்ந்து வேலை செய்ய முடியாது"
பத்மநாபன், "அப்போ எதாச்சும் சினிமா எடு. உங்க குடும்பத்துக்கு தான் பெரிய ஹீரோவேல்லாம் தோஸ்த் ஆச்சே"
ரகு, "ஐயோ, அது ரொம்ப ரிஸ்க் அங்கிள். நீங்க சொல்ற அந்த பெரிய ஹீரோக்களுக்கு சம்பளம் குடுத்தே போண்டி ஆயிடுவோம். என் குடும்பம் சினிமா எடுக்கறதை விட்டதே அதனால தான்"
பாரு முணுமுணுத்தவாறே, "வேலை செய்யாம இருக்கறதுக்கு எதுக்கெடுத்தாலும் ஒரு சாக்கு. வீட்டோட மாப்பிள்ளையா இருக்கோமேன்னு கொஞ்சமாச்சும் வெட்கம் இருக்கா பாரு, ஏன் தான் லவ் பண்ணித் தொலைச்சேனோ!"
ரகு, "சத்தமாவே சொல்லு, எனக்கு பழகிப் போச்சு. பொண்டாட்டி காசுல சாப்பிடறதுல எனக்கு எந்த அவமானமும் இல்லை. உனக்கு அவமானமா இருந்தா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது, நான் வர்றேன்" என்று சொல்லிவிட்டு விருட்டென்று கிளம்பினான்.
பாரு விசும்ப ஆரம்பிக்கவும், பத்மநாபன், "விடும்மா, இதுக்கெல்லாம் போய், அவனைச் சொல்லியும் தப்பில்லை, அப்படியே வளர்ந்துட்டான். அன்னிக்கே சொன்னேன், இது நமக்கு சரியா வராது, என்ன தான் தெய்வீகக் காதலா இருந்தாலும் நாம வேற அவன் வேறன்னு. நீ பிடிவாதமா நின்னு கல்யாணம் பண்ணிண்டே. இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்? கவலைப்படாதே, நான் எதாவது பண்றேன், நீ ஆபீசுக்கு கிளம்பு" என்று மகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பிரீப்கேசை எடுத்துக் கொண்டு இருக்கையை விட்டு எழவும் செல்போனில் SMS ஒளிர்ந்தது - "10 மணிக்கு அவசர போர்ட் மீட்டிங், உடனே வரவும்".
"இருக்கற பிரச்சினை போதாதென்று இது வேறயா" என்று நினைத்தவர், அடுத்த நொடியே மீட்டிங்கைப் பற்றி யோசித்தவாறே காரை நோக்கி நடந்தார்.
ஆட்டம் தொடரும்....
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment