நமது இந்த வார விமர்சகர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்:
விளையாட்டை கவர்ச்சியாகவும், கவர்ச்சியை விளையாட்டாகவும் ,இவ்விரண்டையும் சரிவரக் கலந்து அதை கவர்ச்சிகரமான வணிகமாக்கி வெற்றி நடை போடும் IPLலின் ஆறாவது வருடாந்திரப் போட்டிகள் செவ்வனே நடை பெற்று வருகின்றன. விளையாடத் தெரிந்தவர்களும் பிறர் வாழ்க்கையில் விளையாடத் தெரிந்தவர்களும் சமபங்கு வகிக்கும் போட்டி என்று கூறினால் அது மிகையாகாது. ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களுடன் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் பரபரப்பையும் தொடர்ந்து அளித்து வருகிறது இந்த வருடப் போட்டிகள்.
பெங்களுரு:தமிழகத்திற்கு தண்ணீர் தராத மாநிலத்தைச் சேர்ந்த அணி. ஊரை விட்டு வெளியே போனால் உதை வாங்கி வரும் அணி. பஞ்சாப்பிடம் வாங்கிய உதையை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பொங்கி வரும் காவேரி போன்ற கெயிலின் ஆட்டம் அவ்வப்பொழுது மேட்டூர் அணை போல் வறளுவது வருத்தமான விஷயம்.
சன்ரைசர்ஸ்:கடுமையாகப் போராடி வெற்றி முரசு கொட்டி வரும் கலாநிதியின் அணி. முதலாளி மாறியதும் அணியின் முறைகேடுகள் நீங்கி விட்டன. இதை எனது கழகத்தின் அணி என்று சிலர் கேலி பேசி வருவது வேடிக்கை. தலை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் இந்த அணி.
பூனே வாரியர்ஸ்:பாவம் பரிதாபத்திற்குரியவர்கள். அனைத்து முயற்சிகளும் வீண் முயற்சிகளாகிப் போய் நிர்க்கதியாய் நிற்பவர்கள். ஊத்தப்பாவைத் தவிர அனைவரும் அவநம்பிக்கையுடன் ஆடி வருவது கண்கூடாகத் தெரிகிறது. அடுத்த முறை பார்க்கலாம்.
டெல்லி:இவர்களை அடுத்த முறை கூட பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. கலிங்கத்துப்பரணி பாட வேண்டியவர்கள் பரண் ஏறிப் படுத்திருக்கிறார்கள். தனது விளையாட்டுக்கு தொடர்ந்து தொடரும் போட முயற்சித்து வரும் செஹ்வாக்கிற்கு மிகப் பெரிய முற்றுப்ப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
பஞ்சாப்:தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எல்லோரையும் தவிக்க வைக்கும் அணி - சில சமயங்களில் பரிதவித்து நிற்கும் அணி. அணித்தலைவி ப்ரீத்தி வீரர்களுக்கு உறுதுணையாக நின்று உற்சாகமூட்டி வருவது பாராட்டுவதற்குரியது.மில்லர் அடித்தது சதமல்ல, வதம்.
ராஜஸ்தான்:மூத்த வீரர் திராவிட் அணியை செம்மையாக வழி நடத்துகிறார். ஜெய்ப்பூரை விட்டு வெளியூர் சென்றால் இவர்கள் முகம் வெளிறிப் போவது முன்னேறி வரும் அணிக்கு அழகல்ல.தகுதிச் சுற்றுக்கு இவர்கள் தகுதி பெறவில்லையெனில் அது திறமை வாய்ந்தவர்கள் போட்டியிடத் தகுந்த சுற்றாக இருக்காது என்பது திண்ணம்
சென்னை:தொடர் வெற்றி, நடுவே சில தோல்வி என சமநிலையில் உள்ள அணி. தமிழகத்தின் தன்னிகரில்லா அணி. ஹஸ்சி எனும் பேரலை, ராயினா எனும் தொடரலை, தோனி என்றொரு சுனாமி, பிராவோ எனும் புயல், ஜடேஜா எனும் சுழல், - மொத்தத்தில் CSK ஒரு பெருங்கடல். இவர்களின் தொடர் வெற்றிக்குக் காரணம் மஞ்சள் நிறமல்ல என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மும்பை & கொல்கத்தா:நட்ச்சத்திர வீரர்களும் பணபலமும் நிறைந்த, நீயா நானா என்று இழுபறியில் இருக்கும் அணிகள். ஒருவர் சாவின் விளிம்பிலும் மற்றொருவர் வாழ்வின் நுனியிலும் இருக்கின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது, வயதானாலும் வீரம் குறையாது - ஆம் சச்சினின் ஆட்டத்தைத் தான் சொல்கிறேன். இவரை ஓய்வெடுக்கச் சொல்பவர்கள் தான் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளனர். மேக்ஸ்வெல் என்றொரு பத்து கோடி பெறுமானமுள்ள மனிதர் வெறுமனே தொடர்ந்து பந்து பொறுக்கிப் போட்டு வருவது வேதனை.
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment