Friday, May 17, 2013

IPL 6 | டரியல் - 5

பிக்சிங் மாதிரி பரபர மேட்டர் வந்ததிற்குப் பிறகு இனிமே மேட்சை எவன் பார்ப்பான்? இதோ, அதிரடி புலன் விசாரணை தொடங்குகிறது:

சாண்டிலா:

அதிகாரி,"ஏன்?"

சாண்டிலா, “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - பிடிக்கல, சுத்தமா பிடிக்கல"

அதிகாரி, "எங்களுக்கும் பிடிக்கல. சம்பந்தமே இல்லாம பாரதியார் கவிதை சொல்றது சுத்தமா பிடிக்கல."

சாண்டிலா "எல்லாரும் நிறுத்தணும், எல்லாத்தையும் நிறுத்தணும்"

அதிகாரி,"எதுக்கு? எப்படி?"

"அப்போ அவங்க?"

"யாரு?"

சாண்டிலா "அவங்களையும் இதே மாதிரி அடைச்சு வெச்சு கேள்வி கேட்பீங்களா?,

அதிகாரி,"யாரை? என்ன கேட்கணும்?"

"குறுந்தாடி வெச்சிருந்த மால்யா திடீர்னு ஷேவ் பண்ணிட்டு வந்தாரே, ஏன்? முகேஷ் அம்பானி ஒரு மேட்ச் கூட மைதானத்துக்கு வரலியே, ஏன்? சென்னை மேட்ச்ல RP சிங் கடைசியில நோ பால் போட்டானே, ஏன்? போலார்ட் சொல்லி வெச்ச மாதிரி ஹஸ்சி கேட்சை மூணு தடவை விட்டானே, ஏன்? செஹ்வாக் ஒரு மேட்ச் கூட உருப்படியா ஆடலையே, ஏன்? நல்லா ஆடிக்கிட்டிருந்த சாஹாவை ஓரங்கட்டிட்டு முரளி விஜய்க்கு சான்ஸ் குடுக்கறாங்களே, ஏன்?  சுமாரா ஆடிக்கிட்டிருந்த ரிக்கி பாண்டிங் திடீர்னு டீம் நன்மைக்காகன்னு சொல்லிட்டு ஓரமா உட்கார்ந்து காத்து வாங்கிக்கிட்டிருக்காரே ஏன்? எங்கேயோ போகற பாலுக்கு அப்பீல் கேட்கறதுக்கு முன்னாடியே அவுட் குடுத்து திராவிடை வெளியே அனுப்பினாங்களே, ஏன்? ஹர்பஜன் சிங் ஒரு தடவை கூட நீதா அம்பானியை அலாக்கா தூக்கலியே , ஏன்? நல்லா ஆடிக்கிட்டிருந்த டெண்டுல்கர் திடீர்னு கையில் அடின்னு சொல்லிட்டு உள்ளே போய் போலார்டை இறங்க வெச்சாரே, ஏன்? எல்லாரையும் பொளந்து கட்டிய CSK மும்பை கிட்ட 80 ரன்னுக்கு சுருண்டாங்களே, ஏன்? சுருதி ஹாசன் மேட்ச் பாக்க வந்தா மட்டும் ராயினா நல்லா ஆடறாரே, ஏன்? கவுதம் கம்பீர் பேடை கழட்டறதே இல்லை, விராட் வாயை மூடறதே இல்லை, ஏன்? ஏன்? ஏன்?

இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சிக்கிட்டு வந்து என் சட்டையை பிடிங்க, பதில் சொல்றேன்


சவான்:
அதிகாரி, "ச்சே, இப்படி பண்ணிட்டீங்களே, நம்ம நாட்டோட மானமே போச்சு. அப்படி என்னய்யா காசு மேல ஆசை?"

சவான்," உயிர் மேல ஆசை சார்.

ஒத்துழைக்கலேன்னா உயிரை வாங்கிடுவோம்னு மிரட்டினா நாங்க என்ன சார் செய்ய முடியும்?"

"அதுக்காக, என்ன வேணா செய்வீங்களா? அவங்களுக்கு காசு கிடைச்சிடுச்சு, உனக்கு வாழ்க்கை போச்சு, உன் குடும்பத்துக்கு மானம் போச்சு, நம்ம நாட்டு மேல இருந்த நம்பிக்கை போச்சு"

"போச்சு போச்சுன்னு சொல்றீங்களே, எல்லாம் இப்போ தான் முதல் முறையா போவுதா?"

"என்ன சொல்ல வர்றே?"

அசாருதீன் மாட்டினாரே அப்போ போகலியா? நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்கினாங்களே, அப்போ போகலியா? இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படும்போது ராஜபக்சேவுக்கு ஆயுத சப்ளை பண்ணிட்டு வாய் மூடி இருந்தாங்களே, அப்போ போகலியா? சீனாக்காரன் நம்ம நாட்டு எல்லைக்குள்ள வந்தது கூடத் தெரியாம தூங்கிக்கிட்டிருந்தீங்களே, அப்போ போகலியா?பாகிஸ்தான் சிறையில் இந்தியக் கைதியை கொன்னுட்டு கலவரத்தில் செத்துட்டான்னு சொன்னாங்களே, அப்போ போகலியா? சராசரியா ஒரு நாளைக்கு 10 விவசாயிங்க தற்கொலை பண்ணிக்கறாங்களே, அப்போ போகலியா? தலைநகர் தில்லியில் தினம் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப் படறாளே, அந்த வழக்கெல்லாம் அப்படியே முடங்கிப் போகுதே, அப்போ போகலியா? ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் கேம்ஸ் ஊழல், நிலக்கரி ஊழல், ரயில்வே ஊழல், இன்னும் என்னன்னவோ!!! கரெண்ட் எப்போ வரும்னு தெரியல, தண்ணி எப்போ போகும்னு தெரியல, மழை பெய்யுமான்னு தெரியல, வேலை இருக்குமான்னு தெரியல, வெளிய போற பொண்ணு நல்லபடியா திரும்பி வீட்டுக்கு வருவாளான்னு தெரியல - இதுல எல்லாம் போகாத நம்ம நாட்டு மானம் நான் பிக்சிங் பண்ணினதால போயிடுச்சுன்னா நான் நிஜமாவே வருத்தப்படறேன். தாராளமா என் போட்டோவுக்கு செருப்பு மாலை போடுங்க, என் உருவ பொம்மையைக் கொளுத்துங்க, நான் வெளியே வந்தா என்னை பிஞ்ச செருப்பாலேயே அடிங்க.

அதிகாரி, "இப்படியெல்லாம் வசனம் பேசி உன் தப்பை நியாயப்படுத்த முடியாது"

"சரி அப்போ உண்மையை சொல்றேன். முகேஷ் அம்பானி தான் எனக்குப் பணம் குடுத்தார். சூதாட்டத்தில் ஈடுபடலேன்னா இந்தியன் டீம்ல எடுக்க மாட்டேன்னு தோனி என்னை மிரட்டினார், எவ்ளோ ஜாஸ்தியா பிக்சிங் பண்றியோ,அதுக்கேத்த மாதிரி அதிக விலை குடுத்து அடுத்த ஏலத்தில் டீம்ல சேர்த்துக்கறேன்னு ஷாருக் கான் சொன்னாரு -இவங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ற தைரியம் உங்களுக்கு இருக்கா?


ஸ்ரீசாந்த்:
அதிகாரி சற்று நேரம் ஸ்ரீசாந்தை உற்று நோக்குகிறார்.

ஸ்ரீசாந்த் கடுப்பாகி "என்னவோ தாவூத் இப்ராஹிமை அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கற மாதிரி பெருமையா பார்க்கறீங்க? நானே ஒரு காமெடி பீசு. எனக்கெல்லாம் பெட்டிச் செய்தியே அதிகம். என்னைப் போய் தலைப்புச் செய்தியில் போடறதெல்லாம் ரொம்பவே ஓவர் சார்"

அதிகாரி, "சொல்லு, மூணாவது ஓவர்ல 20 ரன் குடுத்தியே, ஏன்?

ஸ்ரீ, "அடிச்சவனைப் போய்க் கேளுங்க, 36 ரன் குடுக்கறதாத்தான் பேச்சு. அந்த நாதாரிக்கு எவ்ளோ பழமாப் போட்டுக் குடுத்தாலும் அடிக்கத் தெரியல, நான் என்ன பண்றது?

"ரெண்டாவது பால் போடும்போது மூக்கை சொரிஞ்சே, அப்புறம் நாலாவது பால் போடும்போது தாடையை சொரிஞ்சே, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?"

"அங்கெல்லாம் அரிக்குதுன்னு அர்த்தம், என்னய்யா கேள்வி கேட்கறீங்க?"

"முதல் பால் போடும்போது உன் துண்டு இடுப்புல இருந்திச்சு, மூணாவது பால் போடும்போது அதை தோள்பட்டையில் சொருகி வெச்சிருந்தியே, எதுக்காக?

"ஹெஹெ, நான் துண்டை இடுப்புல சொருகியிருந்தா கோவிலுக்குப் போறேன்னு அர்த்தம், அதையே தோள்ல போட்டா தீர்ப்பு சொல்லப் போறேன்னு அர்த்தம் - நான் என்ன சின்னக் கவுண்டரா? போயாங்க...

"அது போகட்டும் அஞ்சாவது பால் போடும்போது தலை முடியை ரெண்டு தடவை கோதி விட்டியே ஏன்?"

"தலை முழுக்க ஒரே பேன் ஈறு தொல்லை. பப்ளிக்கா சொறிய முடியுமா? அதான் ஸ்டைலா கோதி விட்டேன், இது ஒரு குத்தமா?

"இதெல்லாம் விடு. ஆறாவது பால் போட்ட பிறகு புஸ்ஸு புஸ்ஸுனு மூச்சு விட்டியே, அது எதுக்கு?"

ஸ்ரீ, "யோவ், வேகாத வெயில்ல வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து போலிங் போட்டா மூச்சு வாங்காதா? இதுக்கெல்லாமா புதுசு புதுசா அர்த்தம் கண்டுபிடிப்பீங்க?

இத பாருங்க அதிகாரிங்களே, ஒரு 60 லட்ச ரூபாய் பிக்சிங் மேட்டருக்கு பிளைட் புடிச்சு மும்பை வந்து எங்களை ரவுண்டு கட்டி அரெஸ்ட் பண்ணி மறுபடியும் ப்ளைட்ல டெல்லிக்கு எங்களை கூட்டிட்டு வந்து, கோர்ட்ல நிறுத்தி இப்போ கஸ்டடியில் வெச்சு விசாரணை பண்ணிக்கிட்டு.. - உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?

உன்னோட 60 லட்சத்துக்குப் பின்னாடி 600 கோடி இருக்கு தெரியுமா?

இப்போ தாவூத் இப்ராகிம் தான் என்னை பிக்சிங் பண்ணத் தூண்டினார்னு நான் சொன்னா உடனே பிளைட் புடிச்சு துபாய் போய் அவரை அரெஸ்ட் பண்ணிடுவீங்களா? தாவூத் வீட்டு வேலைக்காரனைக் கண்டு பிடிக்கறதுக்கே பல வாரங்கள் ஆகும் சார், பெரிசா வந்துட்டாங்க.போங்கய்யா, கோடை விடுமுறை ஆரம்பிச்சிடுச்சு. புள்ளகுட்டிங்கள கூட்டிக்கிட்டு சிம்லா, கொடைக்கானல்னு குளுகுளு சுற்றுலா போங்க, ஷாப்பிங் பண்ணிட்டு வாங்க, அதை விட்டுட்டு இங்க வந்து கப்பித் தனமா பேசிக்கிட்டு!!!

"ஓவராப் பேசாதே, நட கோர்ட்டுக்கு"

"இன்னமுமா? ஒண்ணும் தேறாதுங்க "

உனக்கு தண்டனை வாங்கிக் குடுத்துட்டுத் தான் மறு வேலை"

"அப்போ எங்க ஊர் மினிஸ்டர் A K அந்தோணியை கூப்பிடுங்க. நான் அவர் கிட்ட பேசிக்கறேன்"








ஐந்து வருடங்களுக்குப் பிறகு:

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்

காங்கிரஸ் கட்சி சார்பில் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீசாந்த் அவருக்கு அடுத்த வேட்பாளரை விட 50000 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சாண்டிலா மற்றும் சரத் பவார் கட்சி சார்பில் போட்டியிட்ட சவான் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று அவர்கள் சொந்தத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் சாண்டிலாவுக்கு கேபினட் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.



Jayaraman
New Delhi

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...